search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    Hamza Bin Laden
    X

    உயிருடன் இருக்கும் ஹம்சா பின்லேடன்: மீண்டும் தாக்குதலுக்கு தயாராகிறாரா ஒசாமா மகன்?

    • ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படை 2011, மே 2-ம் தேதி சுட்டுக் கொன்றது.
    • ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் தெரிவித்தால் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்றது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடத்தின் மீதும், ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் அல்-கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 3,000 கொல்லப்பட்டனர்.

    இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-கொய்தா இயக்க தலைவரான ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தீவிரமாக தேடியது.

    10 ஆண்டு தேடுதல் வேட்டைக்கு பிறகு பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் 2011, மே 2-ம் தேதி சுட்டுக்கொன்றனர்.

    ஒசாமா மகன் ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது. அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பை குறிவைத்து அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹம்சா பின்லேடன் 2019-ம் ஆண்டில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.

    இந்நிலையில், ஒசாமா மகன் ஹம்சா பின்லேடன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தி மிர்ரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் தான் உள்ளான் என ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் எதிர்ப்பு ராணுவ அமைப்பான என்.எம்.எப். என்ற அமைப்பு தெரிவிக்கிறது.

    2021 ஆப்கானிஸ்தானில் அதிபர் ஆட்சி முடிவுக்கு வந்து தலிபான்கள் கைப்பற்றியபோது பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கான பயிற்சி மையம் அமைத்து 450 பாகிஸ்தானியர்கள் ஹம்சா பின்லேடனுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகின்றனர்.

    அவனது கட்டளையின் கீழ், அல்-கொய்தா மீண்டும் ஒருங்கிணைந்து வரும் காலங்களில் மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல்களுக்கு தயாராகி வருகிறது.

    ஒசாமா பின்லேடனுக்கு பிறகு அல்-கொய்தா விவகாரங்களை கவனித்து வரும் அய்மன் அல்-ஜவாஹிரியுடன் ஹம்சா பின்லேடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×