என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
10-வது நாளாக போர் நீடிப்பு: இஸ்ரேலின் தரை வழி தாக்குதல் இன்று தொடக்கம்?
- இந்தியா தொடர்ந்து தனது நாட்டு மக்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
- குடிநீர், உணவு இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் காசா தெற்கு பகுதி மக்களில் 10 லட்சம் பேர் இடம் பெயர்ந்தாலும் மீதமுள்ளவர்கள் இன்னமும் அங்கேயே இருக்கிறார்கள்.
டெல்அவிவ்:
இஸ்ரேல், ஹமாஸ் படையினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்று (திங்கட்கிழமை) 10-வது நாளை எட்டி உள்ளது.
கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் தெற்கு பகுதியில் திடீர் தாக்குதலை தொடங்கிய ஹமாஸ் படையினர் தொடர்ந்து நவீன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
ஹமாஸ் படையினரை முற்றிலுமாக ஒழிப்போம் என்ற சபதத்துடன் இஸ்ரேலும் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் படையினர் ஆட்சி நடத்தி வரும் காசா பகுதிக்குள் தரை வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக காசாவின் வடக்கு பகுதியில் உள்ள 10 லட்சம் மக்கள் வெளியேற வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் உத்தரவிட்டது.
அந்த கெடு முடிந்த நிலையில் காசா மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். அவர்கள் காசாவின் தெற்கு பகுதிக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். ஆனால் காசாவின் தெற்கு பகுதியிலும் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசுவதால் அங்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் காசா பகுதி மக்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதையடுத்து எகிப்து நாட்டுக்குள் காசா மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் எகிப்து எல்லையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது. சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதற்கிடையே காசா மீது நேற்று இரவும் இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசின. 250 இடங்களை குறி வைத்து குண்டுகள் வீசப்பட்டதாக இன்று காலை இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியிட்டது. என்றாலும் ஹமாஸ் படையினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
காசாவின் வடக்கு பகுதியில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி இருப்பதாக ஐ.நா. சபை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தரை வழி தாக்குதலை தொடங்குவதற்கு நேற்று முதல் இஸ்ரேல் தயாராகி வருகிறது. தரை வழி தாக்குதலுக்காக சுமார் 4 லட்சம் வீரர்களை இஸ்ரேல் தயாராக வைத்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இரவு இஸ்ரேல் பிரதமருடனும், பாலஸ்தீன பிரதமருடனும் அடுத்தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஜோ பைடன் பேசியதாக தெரிகிறது.
இதையடுத்து அமெரிக்கா சார்பில் திடீர் எச்சரிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "போரை இரு தரப்பினரும் மேலும் நீடிக்க விடாமல் தடுப்பது பற்றி ஜோ பைடன் பேசியுள்ளார். காசா மக்களுக்கு குடிநீர், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு இஸ்ரேல் மனிதாபிமானத்துடன் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்கு இரு நாடுகளும் சாதகமான பதில் அளித்துள்ளன" என்றார்.
இந்த நிலையில் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜோ பைடன் நேற்று இரவு பேட்டியளித்தார். அப்போது அவர் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து தரைவழி தாக்குதல் பற்றி இஸ்ரேல் பிரதமர் உடனடி ஆலோசனை நடத்தினார்.
காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ஹமாஸ் படை மீது தரை வழி தாக்குதல் நடத்தி பேரழிவை ஏற்படுத்த வேண்டும் என்பதில் இஸ்ரேல் தீவிரமாக உள்ளது. அமெரிக்கா, ஈரான் உள்பட பல நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும் ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவம் முனைப்புடன் உள்ளது.
இஸ்ரேல் ராணுவம் காசா மக்களுக்கு விடுத்திருந்த கெடு முடிந்த நிலையில் திட்டமிட்டபடி தரை வழி தாக்குதலை இன்று (திங்கட்கிழமை) இஸ்ரேல் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதை உறுதி செய்வது போல இன்று காசா அருகே தனது படைகளை இஸ்ரேல் மேலும் நகர்த்தியது.
இன்று அதிகாலை முதல் காசா எல்லை அருகே நிறைய வீரர்களை இஸ்ரேல் விமானங்கள் தரைஇறக்கி வருகின்றன. எனவே எந்த நேரத்திலும் தரைவழி தாக்குதலை தொடங்கலாம் என்ற நிலை நிலவுகிறது.
ஏற்கனவே குடிநீர், உணவு இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் காசா தெற்கு பகுதி மக்களில் 10 லட்சம் பேர் இடம் பெயர்ந்தாலும் மீதமுள்ளவர்கள் இன்னமும் அங்கேயே இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் தங்கள் மீது குண்டு வீசப்படலாம் என்று அவர்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
நேற்று இரவு காசா தெற்கு பகுதியில் 250 இடங்களை குறி வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் அழித்துள்ளன. இதில் ஹமாஸ் படையின் மூத்த கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதற்கிடையே இன்று காலை 9 மணிக்கு எகிப்து தனது எல்லையை கடந்தது. இதனால் காசா மக்கள் அந்த வழியாக அகதிகளாக வெளியேற தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு உதவ ஐ.நா. சபை குழுக்களை அனுப்பி உள்ளது.
மேலும் பிணை கைதிகளாக இருப்பவர்களை ஹமாஸ் படையினர் விடுவிக்க வேண்டும் என்றும் ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில் இந்தியா தொடர்ந்து தனது நாட்டு மக்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இன்று இந்தியாவின் 5-வது விமானம் டெல்அவ்வில் இருந்து புறப்பட்டு உள்ளது.
இன்று மதியம் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், "காசாவின் அனைத்து முனைகளிலும் இஸ்ரேல் தரைப்படை தயார் நிலையில் உள்ளது. மிகப்பெரிய போரை நடத்தப் போகிறோம்" என்று அறிவித்துள்ளது.
இதனால் இஸ்ரேல் ராணுவம் இன்று இரவு மிகப்பெரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தினால் காசாவில் உயிரிழப்பு மிகப்பெரிய அளவில் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்