search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
    • இந்த குழுவில் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது சட்டவிரோத செயல் ஆகும்.

    ரஷியாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படை, உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்று ரஷிய ராணுவத்துக்கு உதவியது. இதற்கிடையே ரஷிய அரசுக்கு எதிராக வாக்னர் குழு திடீரென்று கிளர்ச்சியில் ஈடுபட முயன்று பின்னர் அதை கைவிட்டது.

    இந்த நிலையில் வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இது போன்ற அறிவிப்பை வெளியிடப் போவதாக பிரிட்டன் அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இது பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

    இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதை தொடர்ந்து வாக்னர் குழுவுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதோடு, இந்த குழுவில் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது சட்டவிரோத செயல் ஆகும்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 368 ரன்கள் சேர்த்தது.
    • அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் 182 ரன்கள் குவித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 2-2 என சமனிலை ஆனது.

    அடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தும், 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி லண்டனில் இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி 124 பந்தில் 182 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டேவிட் மலான் 96 ரன்னில் அவுட்டானார். ஜோஸ் பட்லர் 38 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட்டும், பென் லிஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. கிளென் பிலிப்ஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 72 ரன் சேர்த்தார். ரச்சின் ரவீந்திரா 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், நியூசிலாந்து 39 ஓவரில் 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 181 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் ஒருநாள் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை பெற்றது. பென் ஸ்டோக்சுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    • உலகின் எந்த நாடு, மொழியை சேர்ந்த படைப்புகளாக இருந்தாலும் அவை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு இங்கிலாந்தில் வெளியிடப்படும்.
    • 2023-ம் ஆண்டு பிரிட்டிஷ் அகாடமி விருதுக்கு 6 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    லண்டன்:

    உலகளாவிய கலாசாரத்துக்கு சிறந்த பங்களிக்கும் கதைகளுக்கு பிரிட்டிஷ் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உலகின் எந்த நாடு, மொழியை சேர்ந்த படைப்புகளாக இருந்தாலும் அவை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு இங்கிலாந்தில் வெளியிடப்படும். பின்னர் அவற்றில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அதன் எழுத்தாளருக்கு சுமார் ரூ.25 கோடி பரிசாக வழங்கப்படுகிறது.

    இந்தநிலையில் 2023-ம் ஆண்டு பிரிட்டிஷ் அகாடமி விருதுக்கு 6 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதில் `கோர்டிங் இந்தியா' என்ற கதைக்காக இங்கிலாந்தில் வசிக்கும் நந்தினி தாஸ், `தி லாங் டெத் ஆப் எம்பயர்' கதை எழுதிய அமெரிக்காவில் உள்ள கிரிஸ் மஞ்சப்ரா என இரு இந்தியர்களது பெயரும் இடம்பெற்றுள்ளது.

    அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் இதன் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். மேலும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் சுமார் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிரிட்டிஷ் அகாடமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

    • மாதம் ரூ.10 லட்சம் வீதம் 30 ஆண்டுகளுக்கு கிடைக்கும்.
    • பரிசு தொகை மூலம் பழமையான எங்கள் வீட்டை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    லாட்டரி எடுக்கும் எல்லோருக்குமே அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. ஒருசிலருக்கு மட்டுமே எதிர்பாராத பம்பர் பரிசுகள் கிடைக்கும். அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவருக்கு லாட்டரியில் மெகா பம்பர் பரிசு கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள டோர்கிங் பகுதியை சேர்ந்தவர் டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் என்ற பெண் தனது 70-வது பிறந்த நாளையொட்டி நேஷனல் லாட்டரியில் பரிசுசீட்டு வாங்கி கொண்டாடியுள்ளார். அவருக்கு அந்த லாட்டரி சீட்டில் மெகா பம்பர் பரிசாக ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10.37 லட்சம்) வீதம் 30 ஆண்டுகளுக்கு கிடைக்கும் என்ற வகையில் மெகா பம்பர் பரிசு கிடைத்துள்ளது.

    இது தொடர்பான இ-மெயில் அவருக்கு வந்துள்ளது. முதலில் அந்த மெயிலை பார்த்த போது அவர் 10 பவுண்டுகள் மட்டுமே பரிசு வந்ததாக நினைத்துள்ளார். ஆனால் தொடர்ந்து அந்த மெயிலை வாசித்த போது தான் அவருக்கு 30 ஆண்டுகளுக்கு மாதம் 10 ஆயிரம் பவுண்டுகள் வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

    இந்த அதிர்ஷ்டத்தை தன்னால் நம்ப முடியவில்லை என கருதிய அவர் தனது மருமகனிடம் மெயிலை காட்டி பரிசு விழுந்ததை உறுதி செய்தார். மேலும் நேஷனல் லாட்டரியில் இருந்தும் அதிகாரபூர்வமாக அவருக்கு பரிசு விழுந்ததை உறுதிபடுத்திய டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார். இதுகுறித்து டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் கூறுகையில், இந்த பரிசை பற்றி நினைக்கும் போதெல்லாம் விசித்திரமாக தோன்றுகிறது. 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் அந்த பணத்தை நான் பெறுவேன். இது எனக்கு 100 வயது வரை இருப்பதற்கான காரணத்தை அளிக்கிறது. இந்த பரிசு தொகை மூலம் பழமையான எங்கள் வீட்டை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    • முதலில் அக்டோபர் முதல் வாரத்தில் இப்பணி தொடங்குவதாக இருந்தது
    • தகுதியுள்ளவர்கள் தாங்களாக முன்வர வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்

    இங்கிலாந்தில், கொரோனா பெருந்தொற்றின் அடுத்த மாறுபாடு (BA.2.86) பரவுவதாக அந்நாட்டு சுகாதார துறை கண்டறிந்தது. இதனையடுத்து அத்துறை, குளிர்காலத்தில் எளிதாக வைரஸ் தொற்றால் பாதிக்க கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை இன்றே துவங்கி விட்டது. இது முன்னதாக அக்டோபர் முதல் வாரத்தில் துவங்குவதாக இருந்தது.

    "முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும், வீட்டிலேயே இருந்து வருபவர்களுக்கும் இந்த வாரத்தில் இருந்து, அதிக பாதிப்புக்குள்ளாக கூடிய மற்றவர்களுக்கு அக்டோபர் மாதத்திலும் தடுப்பூசி செலுத்தப்படும்" என பிரிட்டனின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    பெரியவர்களுக்கான கொரோனா தடுப்பூசியும், வருடாந்திர ஃப்ளூ தொற்றிற்கான தடுப்பூசியும் ஒரே சமயத்தில் செலுத்த தொடங்கி விட்டதாக தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    "கொரோனா வைரஸ் BA.2.86 மாறுபாட்டின் பரவும் தன்மை, தாக்கும் தீவிரம் மற்றும் மருந்துகளுக்கு எதிராக போரிடும் சக்தி ஆகியவை குறித்து போதுமான தரவுகள் இல்லாததால், இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து இப்போது உறுதியாக கூற முடியாது," என பிரிட்டனின் தேசிய சுகாதார பாதுகாப்பு முகமையின் மருத்துவர் ரேணு பிந்த்ரா கூறியுள்ளார்.

    "வைரஸ்-இன் புது மாறுபாடு குறித்து பரவும் கவலை கொள்ள செய்யும் தகவல்களால், தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் தாங்களாகவே அதனை செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்" என தேசிய சுகாதார சேவை அமைப்பின் தடுப்பூசி திட்ட இயக்குனர் டாக்டர். ஸ்டீவ் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.

    "வயதானவர்களும், நோய் தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடியவர்களும், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலைக்கு தள்ளப்படாமல் இருக்க தடுப்பூசி தொடர்ந்து சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. எனவே, அப்படிப்பட்டவர்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டு, தகுதியுள்ள தங்களின் அன்புக்குரியவர்களையும் செலுத்திக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்" என பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் நோய் எதிர்ப்பு சக்தித்துறை தலைவர் டாக்டர். மேரி ராம்சே கூறினார்.

    இரு தினங்களுக்கு முன் இங்கிலாந்தின் நார்ஃபோல்க் பகுதியில் உள்ள ஒரு பாதுகாப்பு இல்லத்தில் வசித்து வந்த 38 பேரில் 33 பேருக்கு இந்த புது தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒருவருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டது. இருப்பினும், இதுவரை இப்புது தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

    கொரோனா பெருந்தொற்றை இந்தியா சிறப்பாக கையாண்டதற்காக உலக சுகாதார அமைப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 226 ரன்கள் சேர்த்தது.
    • அந்த அணியின் லிவிங்ஸ்டோன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சவுத்தாம்ப்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 2-2 என சமனிலை ஆனது.

    அடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 34 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 34 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்தது. லிவிங்ஸ்டோன் மட்டும் அதிரடியாக ஆடி 95 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். சாம் கர்ரன் 42 ரன், மொயீன் அலி 33 ரன்கள் எடுத்தனர்.

    இதையடுத்து, 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. டேரில் மிட்செல் நிதானமாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 57 ரன் சேர்த்தார். வில் யங் 33 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், நியூசிலாந்து 26.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 79 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இதன்மூலம் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது. லிவிங்ஸ்டோனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 291 ரன்கள் சேர்த்தது.
    • அந்த அணியின் கேப்டன் உள்பட4 பேர் அரை சதமடித்தனர்.

    கார்டிப்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.

    முதலில் நடைபெற்ற டி20 தொடர் 2-2 என சமனிலை ஆனது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கார்டிப்பில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜோஸ் பட்லர் 72 ரன்னும், மலான் 54 ரன்னும், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் தலா 52 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே நியூசிலாந்து அதிரடியில் மிரட்டியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் கான்வே பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    அவருக்கு டேரில் மிட்செல் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவரும் சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், நியூசிலாந்து 45.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கான்வே 111 ரன்னும், மிட்செல் 118 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதன்மூலம் ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது. டேவன் கான்வேக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    • லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனைக்கான முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டது.
    • "லியோ" திரைப்படம் வாரிசை விட பன்மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெளியீட்டு தேதி நெருங்க.. நெருங்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம், வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

    லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனைக்கான முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டது. இங்கிலாந்தில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன்னதாக விநியோகம் செய்த "வாரிசு", திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் முன்பதிவு ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2000 டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்தது.

    இந்நிலையில் "லியோ" திரைப்படம் அதை விட பன்மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்று சாதனை  படைத்துள்ளது.

    அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இது குறித்து கூறும்போது, " லியோ படத்திற்கு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலமான கூட்டணியால், மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்கள் மிகப்பெரும் ஆதரவை தந்து வருகிறார்கள். இங்கிலாந்தில் இந்தியப் படமொன்றின் மிகப்பெரிய வெளியீடாக இப்படத்தை  உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்" என்றது.

    • அதிகாரிகள் தரப்பில் 12 சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது
    • இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக்

    அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா உட்பட 19 நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் வரும் 9, 10 தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் (43) இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.

    இதற்கிடையே, இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்குமிடையே ஒரு தாராள வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) ஏற்படுத்தும் முயற்சியில் இரு நாடுகளின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தற்போது வரை அதிகாரிகள் தரப்பில் 12 சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது.

    இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து இங்கிலாந்து பிரதமரின் கருத்தாக அந்நாட்டிலிருந்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதில் தெரிவிக்கப்படுவதாவது:

    பொருளாதார வகையில் மட்டுமின்றி அனைத்து ஜனநாயக நாடுகளும் சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்வதிலும் மற்றும் அனைத்து வகையிலான இரு தரப்பு உறவிலும், இங்கிலாந்திற்கு இந்தியா ஒரு தவிர்க்க இயலாத முக்கியமான வர்த்தக பங்காளி. தற்போது நடைபெறும் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னேறி வருகிறது.

    பிரிட்டன் முழுவதிற்கும் பலனளிக்க கூடிய ஒரு ஒப்பந்த முயற்சிக்குத்தான் பிரதமர் ஒப்புதல் அளிக்க விரும்புகிறார்.

    வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியாவுடன் நீடித்து நிற்கும் ஒரு உறவுமுறையை ஏற்படுத்த தாம் விரும்புவதாக கேபினெட் சந்திப்பில் பிரதமர் தெரிவித்தார்.

    இவ்வாறு அந்த தகவல்கள் கூறுகின்றன.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கிற்கு இந்திய வருகையின் போது, சிறப்பான வரவேற்பளிக்க இந்திய அரசு தயாராகி வருகிறது.

    இந்திய மென்பொருள் துறையின் முன்னணியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனரான இந்தியாவின் முன்னணி கோடீசுவரர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷரா மூர்த்தி, ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 174 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்து 179 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

    முதல் இரு டி20 போட்டியில் இங்கிலாந்தும், 3வது டி20 போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோவ் 41 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே நியூசிலாந்து அதிரடியில் மிரட்டியது.

    தொடக்க ஆட்டக்காரர் சைபர்ட் 32 பந்தில் 48 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 25 பந்தில் 42 ரன்னும், சாப்மேன் 25 பந்தில் 40 ரன்னும் குவித்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து 17.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரை 2-2 என சமனிலைப்படுத்தியது.

    நியூசிலாந்து சார்பில் 3 விக்கெட் வீழ்த்திய மிட்செல் சான்ட்னருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. பேர்ஸ்டோவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

    • இளநிலை டாக்டர்கள் தங்களுக்கு 35 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனஅரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • 35 சதவீத சம்பள உயர்வு வழங்கினால் அது பணவீக்கத்தை இன்னும் அதிகரித்து விடும்.

    லண்டன்:

    பிரிட்டனில் உள்ள இளநிலை டாக்டர்கள் தங்களுக்கு 35 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனஅரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால் அவர்கள் கடந்த பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி ரெயில்வே, விமான போக்குவரத்து உள்பட பல்வேறு துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபடும்போது பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்ற கொள்கையில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

    கொரோனா தொற்று, உக்ரைன் போர், பிரெக்சிட் அமைப்பில் இருந்து வெளியேற்றம் போன்றவற்றால் ஏற்கனவே பிரிட்டனின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் உள்ளது. இந்தநிலையில் 35 சதவீத சம்பள உயர்வு வழங்கினால் அது பணவீக்கத்தை இன்னும் அதிகரித்து விடும். இதனால் ஏழைகள் பெரும் இன்னலுக்குள்ளாக நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தனர்.

    எனினும் நாடு முழுவதும் உள்ள இளநிலை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு நோயாளிகளின் காத்திருப்பு பட்டியல் நீண்டது. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்தநிலையில் தற்போது முதலாம் ஆண்டு பயிற்சி டாக்டர்களுக்கு 10.3 சதவீதமும், இளநிலை டாக்டர்களுக்கு 8.8 சதவீதமும், மருத்துவ ஆலோசகர்களுக்கு 6 சதவீதமும் சம்பள உயர்வு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

    இதன்மூலம் அவர்களுக்கு கணிசமாக சம்பளம் உயர்வதோடு பணவீக்கமும் ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என கருதப்படுகிறது. அரசின் இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் இளநிலை டாக்டர்கள் பயன்பெறுவார்கள் என பிரிட்டன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 202 ரன்கள் குவித்தது.
    • அந்த அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

    முதல் மற்றும் 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.

    அதிரடியாக விளையாடிய பின் ஆலன் 53 பந்துகளில் 83 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 34 பந்துகளில் 69 ரன்னும் சேர்த்தனர்.

    இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், இங்கிலாந்து அணி 18,3 ஓவரில் 128 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால் நியூசிலாந்து 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் இஷ் சோதி, கைல் ஜேமிசன் தலா 3 விக்கெட்டும், டிம் சவுதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் விருது பின் ஆலனுக்கு அளிக்கப்பட்டது.

    ×