search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 339 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் வார்னர், ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அரை சதம் கடந்தனர்.

    லண்டன்:

    ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

    அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 17 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய டேவிட் வார்னர் அரை சதம் கடந்து 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லாபுசேன், ஸ்மித் ஜோடி 102 ரன்களை சேர்த்தது. அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லாபுசேன் 47 ரன்னில் வெளியேறினார்.

    ஸ்டீவன் ஸ்மித் அரை சதம் அடித்தார். அடுத்து இறங்கிய டிராவிஸ் ஹெட் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்கள் சேர்த்தது. ஹெட் 77 ரன்னில் அவுட்டானார். கிரீன் டக் அவுட்டானார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 85 ரன்னும், அலெக்ஸ் கேரி 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டங், ஜோ ரூட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • மக்கள் தங்கள் அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
    • இதற்கு காரணம் பல்பொருள் அங்காடிகளின் பேராசை என்று தொழிற்சங்கங்கள், அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    உலகெங்கிலும் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை.

    உயர்ந்து வரும் பணவீக்கத்தின் காரணமாக, பிரிட்டனில் கடந்த ஆண்டு 7 பேரில் ஒருவர், உணவு வாங்க போதிய பணமில்லாததால் பசியுடன் இருந்ததாக உணவு வங்கி தொண்டு நிறுவனமான, "ட்ரஸ்ஸல் டிரஸ்ட்" எனும் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

    இந்த புள்ளி விவரத்தின்படி, அந்நாட்டின் மக்கள் தொகையில் 11.3 மில்லியன் மக்கள் பசியால் வாடி வருவதாகவும், இந்த நிலை ஒரு செயலிழந்த சமூகப் பாதுகாப்பு முறையாலும், வாழ்வதற்கான செலவுகள் உயர்வதனாலும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கிறது.

    பிரிட்டனின் பொருளாதாரம் உலகில் 6வது இடத்தில் உள்ளது. ஆனால், ஒரு வருடத்திற்கும் மேலாக அதிகரித்து வரும் பணவீக்கம், தொழிலாளர்களின் ஊதிய உயர்வை விட மிக அதிகமாக உள்ளதால், அனைத்து தொழிலாளர்களுமே மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    ட்ரஸ்ஸல் டிரஸ்ட் அமைப்பின் உணவு வங்கிகளை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஐந்தில் ஒருவர், வேலை செய்யும் குடும்பத்தில் இருப்பதாகவும், மக்கள் தங்கள் அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1950களில் பதிவுகள் தொடங்கியதில் இருந்து, பிரிட்டனின் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்து வரும் உணவு விலைகள் தற்போதுதான் மிக பெரிய அழுத்தத்தை தருகின்றது.

    இந்த நிலைக்கு யார் பொறுப்பு என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இதற்கு காரணம் பல்பொருள் அங்காடிகளின் பேராசை என்று தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், பல்பொருள் அங்காடிகளின் நிர்வாகிகள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

    பிரிட்டன் முழுவதும் உள்ள 1,300 உணவு வங்கி மையங்களை கொண்ட ட்ரஸ்ஸல் டிரஸ்டின் நெட்வொர்க், 3 மில்லியன் உணவுப் பொட்டலங்களை வழங்கி சாதனை புரிந்துள்ளது. இது 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய சுகாதார சேவை அமைப்பு அறிவித்த 5% சம்பள உயர்வை மருத்துவர்கள் ஏற்கவில்லை.
    • சம்பளத்தை 35% அதிகரிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் கோரியுள்ளது.

    பிரிட்டனில் உள்ள மருத்துவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், இளநிலை மருத்துவர்கள் ஆவர். இவர்கள் ஜூலை 13ம் தேதி தொடங்கி 5-நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

    அதிக சம்பளம் கோரி நடக்கும் இப்போராட்டத்தில் பிரிட்டன் முழுவதும் 46000க்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவர்கள் இணைவார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் உறுதி செய்துள்ளது. இப்போராட்டத்தால் மருத்துவ சேவைகள் முடங்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

    தேசிய சுகாதார சேவை அமைப்பு, சம்பள உயர்வாக 5% உயர்த்தி அறிவித்திருந்தும், பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் அதை நிராகரித்துவிட்டது. இந்தச் சலுகை மிகவும் குறைவு என்றும், இது நாட்டில் தற்போது நிலவி வரும் பணவீக்க உயர்வை ஈடுகட்டாது என்றும் மருத்துவர் அமைப்பு கூறியுள்ளது. ஆனால் அரசாங்கம் தனது சலுகையை நியாயமானது என்று கூறி வருகிறது.

    நாட்டில் நிலவும் பணவீக்கத்திற்கும் குறைவான அளவிலேயே 15 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஈடு செய்யும் விதமாக சம்பளத்தை 35% அதிகரிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் கோரியுள்ளது.

    சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்து இளநிலை மருத்துவர்கள் நடத்தும் 4வது வேலை நிறுத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் இளநிலை மருத்துவர்கள் குழுவின் இணைத்தலைவர்களான டாக்டர். ராபர்ட் லாரன்சன் மற்றும் டாக்டர். விவேக் திரிவேதி ஆகியோர் இப்போராட்டம் குறித்து கூறுகையில், தேசிய சுகாதார சேவை அமைப்பு வரலாற்றில் இது மிக நீண்டதொரு வேலை நிறுத்தமாக அமையலாம் என்றனர். ஆனால், இது தேசிய சுகாதார சேவை அமைப்பின் வரலாற்றில் செல்ல வேண்டிய சாதனை அல்ல. நம்பகமான சலுகையை வழங்குவதன் மூலம் அரசாங்கம், இளநிலை மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறினர்.

    முன்னதாக, பிரிட்டிஷ் மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ஃபில்பன்பீல்ட், பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இளநிலை மருத்துவர்களுடனான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டாரா என்பதை தெளிவுபடுத்துமாறு கூறியுள்ளார். இளநிலை மருத்துவர்களுக்கு குறைந்தளவே ஊதியம் வழங்கப்படுவதாக சுகாதார செயலாளர் ஒப்புக்கொண்ட பிறகும், 5% மட்டுமே சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக ஃபில்பன்பீல்ட் தெரிவித்தார்.

    தேசிய சுகாதார சேவை என்பது பிரிட்டனில் அரசு நிதியுதவி பெறும் சுகாதார அமைப்பாகும். இது 1.2 மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ளது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தரமான இலவச சுகாதாரத்தை உறுதி செய்யவதே இந்த அமைப்பின் அடிப்படை கொள்கை. பிரேசில் நாட்டிற்கு பிறகு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் இரண்டாவது சுகாதார அமைப்பு இதுவாகும்.

    ஸ்காட்லாந்தில் இரண்டு ஆண்டுகளில் 14.4% சம்பள உயர்வு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அனைவரின் நலனுக்காக முருகனிடம் வேண்டிக் கொண்டதாக அண்ணாமலை தகவல்.
    • லண்டனில் உள்ள தமிழர்களை சந்தித்து மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்குகிறார்.

    மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து 9 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் பா.ஜ.க. சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தமிழக பா.ஜ.க சார்பிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்து வருகிறார்கள்.

    வெளிநாடுகளில் வாழும், பணியாற்றி வரும் இந்தியர்களுக்கும் மத்திய அரசின் சாதனைகளை கொண்டு செல்வதற்கு பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

    அந்தவகையில், தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கும் கே.அண்ணாமலை 5 நாட்கள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.

    அதன்படி, இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு, அண்ணாமலை சென்னையில் இருந்து நேற்று புறப்பட்டார். இந்நிலையில், லண்டன் சென்றடைந்த அண்ணாமலை அங்குள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலைக்கு அங்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    மேலும், அனைவரின் நலனுக்காக முருகனிடம் வேண்டிக் கொண்டதாகவும் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, லண்டனில் உள்ள தமிழர்களை சந்தித்து மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்குகிறார். இதேபோல, பிர்மிங்காமில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளார். இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற வார்விக் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் அண்ணாமலை கலந்துரையாடுகிறார். அரசியல் உள்பட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.

    • ஓவியத்தை வரைந்தது ஓவியர் ரூபன்ஸ் என கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதனை விற்பதற்கான முதல் முயற்சி இது.
    • இந்த ஓவியம் 1730களில் காணாமல் போய், பின்பு 1963ம் வருடம் மிசௌரியில் மீண்டும் கண்டறியப்பட்டது

    கலைப்பொருட்களை சேகரித்து ஏலம் மூலம் விற்பனை செய்யும் உலகின் பிரபலமான நிறுவனமான சோத்பி நிறுவனம், நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கலைப்பொருட்கள் இந்த நிறுவனம் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், நூற்றுக்கணக்கான வருடங்களாக தவறாக அடையாளம் காணப்பட்ட, "பீட்டர் பால் ரூபன்ஸ்" வரைந்த ஓவியம் ஒன்று, லண்டனில் உள்ள சோத்பி ஏல நிறுவனத்தில் அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது. இது ஏலத்தில் கிட்டத்தட்ட 7.7 மில்லியன் டாலருக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஓவியத்தை வரைந்தவரின் உண்மையான ஓவியர் ரூபன்ஸ் என கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதனை விற்பதற்கான முதல் முயற்சி இதுதான். கடைசியாக அந்த ஓவியம் 2008ம் வருடம் 40000 மில்லியன் டாலருக்கு விற்பனை ஆனது. அப்பொழுது அந்த ஓவியத்தை வரைந்தது பிரான்ஸ் நாட்டு ஓவியரான "லாரண்ட் டி லா ஹைர்" என்பவர் என தவறுதலாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

    அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்ட இந்த ஓவியத்தை, ஓவியர் ரூபன்சின் காணாமல் போன ஓவியம் என்பதை நிபுணர்கள் உறுதி செய்தனர்.

    இதற்கு முன்பு, இத்தாலி நாட்டின் ரோம் நகரிலுள்ள "கேலரியா கோர்ஸினி" எனும் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு ஓவியத்தின் பெயர், "செயிண்ட் செபஸ்டியன் டெண்டட் பை ஏஞ்சல்ஸ்" என்று தவறுதலாக கண்டறியப்பட்டிருந்தது. ஜெர்மனியில் 2021ம் வருடம் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் இரண்டு ஓவியங்களும் அருகருகே வைக்கப்பட்ட பொழுது, தற்பொழுது ஏலத்திற்கு வந்திருக்கும் ஓவியம்தான் அசல் ரூபன்ஸ் ஓவியம் என்றும் "கேலரியா கோர்ஸினி" அரங்கில் உள்ளது அதனுடைய நகல் என்றும் உறுதிபட தெரிவித்தனர்.

    ஓவியம் மற்றும் கலைப்பொருட்களுக்கான வரலாற்று நிபுணர் அன்னா ஓர்லேண்டோ 2021ம் வருடம் ஸ்டுட்கார்ட் கண்காட்சியில் இரண்டு ஓவியங்களும் அருகருகே காட்சிக்கு வைக்கப்படுவதால் இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்பது எளிதாக இருக்கும். ஓவியத்திலிருக்கும் உயர்தர வேலைப்பாடு தெரிய வரும், என முன்பு கூறியிருந்ததாக சோத்பி தனது குறிப்பில் தெரிவிக்கிறது.

    எக்ஸ்-ரே கதிரியக்க பரிசோதனை மூலமாக அசல் எது என தெரியவந்துள்ளதாகவும் தெரிகிறது.

    ரோமானிய வீரர் செபஸ்டியன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக அம்புகளால் துளைக்கப்பட்டு குற்றுயிராக விடப்படுகிறார். ஆனால், தேவதைகள் அதிசயிக்கத்தக்க விதமாக அவரை காப்பாற்றி விடுகிறது. இந்த ஓவியம் வரையப்பட்டிருப்பதற்கான பின்னணி கதை இதுதான்.

    நிபுணர்களின் கருத்துக்களின்படி, ராணுவ தளபதியும், பிரபுவுமாகிய இத்தாலி நாட்டின் "அம்ப்ரோஜியோ ஸ்பினோலா", இந்த ஓவியத்தை வரையுமாறு ரூபன்சை பணித்திருக்கிறார் என்றும் 1600ம் ஆண்டு ஆரம்பத்திலேயே இது வரைந்து முடிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

    சோத்பி ஏல நிறுவனத்தின் பண்டைய கால சிறப்புமிக்க ஓவியங்கள் பிரிவின் இணை தலைவரான ஜார்ஜ் கோர்டான் மீது இந்த ஓவியம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் இதுகுறித்து கூறும்போது, "பிரஷ்ஷின் கைவண்ணம் துடிப்பாக தெரிகிறது. ஓவியரின் வேகத்தையும், சுறுசுறுப்பையும் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. ஓவியர் ரூபன் அவர்களின் பிரஷ் என்னோடு நன்றாக பேசுவது போலிருந்தது" என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த ஓவியம் 1730களில் காணாமல் போய், பின்பு 1963ம் வருடம் மிசௌரியில் மீண்டும் கண்டறியப்பட்டது என ஏல நிறுவனம் தெரிவிக்கிறது.

    • இங்கிலாந்து அணி 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • ஐந்தாவது நாள் ஆட்டம் இடைவிடாத மழை காரணமாக தாமதமாக தொடங்கியது.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.

    இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 393 ரன்களும், ஆஸ்திரேலியா 386 ரன்களும் எடுத்தன.

    7 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது நாளில் பெரும்பகுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டன. 32.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.

    இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இங்கிலாந்து தொடர்ந்து பேட்டிங் செய்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இறுதியில் இங்கிலாந்து அணி 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 281 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டம் காலை 11:00 மணிக்கு (பிற்பகல் 3:30 மணி ) தொடங்குவதாக இருந்தது. ஆனால் இடைவிடாத மழை காரணமாக, ஆடுகளம் முழுமையாக மூடப்பட்டது.

    இதையடுத்து மதிய உணவுக்குப் பிறகு போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கியது.

    இந்த ஆட்டத்தில் முதலில் உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இதில், டேவிட் வார்னர் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பின்னர் இறங்கிய மார்னஸ் 13 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்களும், ஸ்காட் போலாந்து 20 ரன்களும், டிராவிஸ் ஹெட் 16 ரன்களும், கேமரூன் கிரின் 28 ரன்களும் எடுத்தனர்.

    ஆட்டத்தின் தொடக்கம் முதல் விளையாடிய உஸ்மான் கவாஜா 197 பந்துகளில் அரை சதம் அடித்து 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பின்னர், அப்ரம் அலெக்ஸ் கேரி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். 87 ஓவரில் பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் களத்தில் இருந்தனர்.

    87.3 ஓவரில் 15 ரன்கள் எடுத்தார் வெற்றி என்ற இலக்குடன் இருவரும் விளையாடினர்.

    இதில், பேட் கம்மின்ஸ் 44 ரன்களும், நாதன் லயன் 16 ரன்களும எடுத்தனர்.

    இறுதியில், 92.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.

    • உக்ரைன் அதிபர் கடந்த மாதம் இங்கிலாந்து சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • எனது அம்மா கொஞ்சம் இந்திய இனிப்புகளை (பர்பி) தயாரித்து எனக்காக வைத்திருந்தார்.

    லண்டன் :

    இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக், இந்திய வம்சாவாளியை சேர்ந்தவர் ஆவார். இவரது தாய் உஷா தயாரித்த இந்திய இனிப்புகளை (பர்பி) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் ஒன்றை ரிஷி சுனக் தற்போது வெளியிட்டு உள்ளார். உக்ரைன் அதிபர் கடந்த மாதம் இங்கிலாந்து சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இதுதொடர்பாக ரிஷி சுனக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கடந்த மாதம் எனது சொந்த ஊரான சவுதாம்டனுக்கு சென்றிருந்தேன். இது குறித்து எனது பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் இதை அறிந்து அவர்கள் வருத்தமடைந்தனர். என்னை பார்க்க வர முயன்றனர், ஆனால் முடியவில்லை.

    எனது அம்மா கொஞ்சம் இந்திய இனிப்புகளை (பர்பி) தயாரித்து எனக்காக வைத்திருந்தார். ஆனால் அப்போது தர முடியவில்லை. பின்னர் கால்பந்து போட்டி ஒன்றை பார்க்க சென்றபோது, அதை என்னிடம் கொடுத்தார்.

    இதில் விந்தை என்னவென்றால், அதன்பிறகு நான் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தேன். நானும், அவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு பசி எடுத்தது. அதனால், நான் அவருக்கு என் அம்மாவின் பர்பியில் சிலவற்றைக் கொடுத்தேன். அதைப்பார்த்து அம்மா சிலிர்த்து போனார்.

    இவ்வாறு ரிஷி சுனக் அந்த வீடியோவில் தெரிவித்து உள்ளார்.

    • இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 273 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • 4ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் சதமடித்து 118 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. உஸ்மான் கவாஜா 141 ரன்னும், அலெக்ஸ் கேரி 66 ரன்னும், டிராவிஸ் ஹெட் 50 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராடு, ஒல்லி ராபின்சன் தலா 3 விக்கெட்டும், மொயீன் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    7 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி இன்று 4-ம் நாள் ஆட்டத்தின்போது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் தலா 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினர். பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள், ஒல்லி ராபின்சன் 27 ரன்கள் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் ஜோடி நிதானமாக ஆடியது.

    அணியின் எண்ணிக்கை 61 ஆக இருக்கும்போது வார்னர் 36 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய லாபுசேன் 13 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கடைசி நாளான இன்று ஆஸ்திரேலியா வெற்றி பெற 174 ரன்கள் தேவை. இங்கிலாந்து வெற்றிபெற 7 விக்கெட் தேவை. எனவே இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கியது.
    • அதன் சிதைந்த பாகத்தை காண சுற்றுலா பயணிகளுடன் சென்ற நீர்முழ்கி கப்பல் மாயமானது.

    லண்டன்:

    உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் 1912-ம் ஆண்டு இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் சவுதாம்டனிலிருந்து, நியூயார்க்கிற்கு பயணித்தது. அப்போது அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 1,600 பேர் பலியாகினர்.

    பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பின்னர் 1985-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 4 கி.மீ. ஆழத்தில் சிதைந்து போயிருந்த கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது.

    இந்நிலையில், டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தைப் பார்வையிட சில சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கி கப்பல் திடீரென மாயமானதாக பி.பி.சி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    நீர்மூழ்கி கப்பலில் 5 சுற்றுலா பயணிகள் சென்றிருக்கலாம் என தகவல் வெளியானது. மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    • இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்கள் எடுத்தது.

    7 ரன்கள் முன்னிலையுடன் 2ம் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி இன்று 4-ம் நாள் ஆட்டத்தின்போது சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. ஒல்லி போப் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் தலா 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினர். உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள், பேர்ஸ்டோ 20 ரன்கள், மொயீன் அலி 19 ரன், ஒல்லி ராபின்சன் 27 ரன்கள், ஜேம்ஸ் ஆண்டர்சன் 12 ரன் என ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. 

    • பிரித்விகால் அந்த பெண்ணை கைத்தாங்கலாக வெளியில் அழைத்து வந்தார்.
    • தனது கையில் அந்த பெண்ணை சிறிது தூரம் தூக்கியபடி தான் தங்கியிருந்த அறைக்கு சென்றார்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருபவர் பிரித் விகால் (வயது 20) இந்தியாவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு அங்கு நடந்த ஒரு விருந்தில் பங்கேற்றார்.

    அப்போது இதில் 20 வயது இளம்பெண் ஒருவரும் கலந்து கொண்டார். அவர் நன்றாக மது அருந்தினார். போதை தலைக்கேறியதால் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. இதை பார்த்த பிரித்விகால் அந்த பெண்ணை கைத்தாங்கலாக வெளியில் அழைத்து வந்தார். பின்னர் தனது கையில் அந்த பெண்ணை சிறிது தூரம் தூக்கியபடி தான் தங்கியிருந்த அறைக்கு சென்றார்.

    அங்கு போதையில் இருந்த பெண்ணை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரித் விகால் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து அந்த பெண் எழுந்தார். அப்போது தான் உடுத்தியிருந்த உடைகள் களைந்து கிடப்பதையும், உடலில் ரத்த காயங்கள் இருந்தது கண்டும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் பிரித் விகாலை கைது செய்தனர்.

    இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று அவர் போதையில் இருந்த இளம்பெண்ணை கையிலும், தோளிலும் தூக்கி சென்ற காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இது தொடர்பான விசாரணை இங்கிலாந்து கோர்ட்டில் நடந்தது.இந்த வழக்கில் பிரித்விகாலுக்கு 6 ஆண்டு 9 மாதங்கள் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    • பிரதமர் ரிஷி சுனக் சட்ட விரோத குடியேற்றத்தை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.
    • அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் சட்டவிரோதமாக குடியேறியவர்களை தேடிப்பிடித்து கைதுசெய்தார்.

    லண்டன்:

    இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமரானது முதல் சட்டவிரோத குடியேற்றத்தை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். சட்ட விரோதமாக வரும் அகதிகளுடனான விசாரணையும், அவர்களுக்கான சட்ட திட்டங்களையும் கடுமையாக்கினார்.

    இந்நிலையில், தற்போது புல்லட் புரூப் ஆடையுடன் களத்தில் இறங்கிய பிரதமர் ரிஷி சுனக் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் சட்ட விரோதமாக குடியேறியவர்களை தேடிப்பிடித்து கைதுசெய்தார்.

    அதிகாலையில் அதிகாரிகளுடன் புறப்பட்ட ரிஷி சுனக் ஹோட்டல்கள், மதுபான விடுதிகள், சலூன்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் அலசி ஆராய்ந்தார்.

    இந்த தேடுதல் வேட்டையில் சட்ட விரோதமாக குடியேறிய சுமார் 20 நாடுகளை சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை டுவிட்டரில் பகிர்ந்த ரிஷி சுனக், இந்த நடவடிக்கைக்கு பலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், அப்பாவி அகதிகளை சிரமத்திற்கு ஆளாக்குவதாக எதிர்மறையான கருத்துக்களும் பலதரப்பில் எழுகின்றன.

    ×