search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை பார்க்கும் திட்டத்தை பெரும்பாலான நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏற்று கொண்டுள்ளனர்.
    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட சோதனை முயற்சியில் சுமார் 2,900 பணியாளர்கள் பங்கேற்றனர்.

    லண்டன்:

    வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை பல நாடுகள் அமல்படுத்த முயற்சித்து வருகின்றன.

    வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வை ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டது.

    இங்கிலாந்தில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன. இந்த திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.

    இத்திட்டத்தை மிகப்பெரிய அளவில் இங்கிலாந்து நடைமுறைப்படுத்தியது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட சோதனை முயற்சியில் சுமார் 2,900 பணியாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் சராசரியாக 4 நாட்களில் 34 மணி நேரம் வேலை பார்த்தனர்.

    இந்த நிலையில் இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை பார்க்கும் திட்டத்தை பெரும்பாலான நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏற்று கொண்டுள்ளனர். சோதனை முயற்சியில் ஈடுபட்ட 61 நிறுவனங்களில் 92 சதவீதம் பேர் அத்திட்டத்தை தொடர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதன் மூலம் இங்கிலாந்தில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம் வெற்றி அடைந்துள்ளது. இந்த திட்டம் மூலம் சிறந்த வேலை, வாழ்க்கை சம நிலை ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சிட்டிசன்ஸ் அட்வைஸ் கேட்ஸ்ஹெட்டின் தலைமை அதிகாரி பால் ஆலிவர் கூறும்போது, இந்த திட்டத்தால் வேலை தக்க வைத்தல், ஆள் சேர்ப்பு மேம்பட்டுள்ளது. நோய் நிலைகள் குறைந்துள்ளது. குறைந்த நேரத்தில் அதிக வேலைகளை ஊழியர்கள் செய்து வருகிறார்கள் என்றார்.

    • தொல்லியல் ஆய்வாளர்கள் இது டைனோசரின் இடது கால் தடம் என்று கூறியுள்ளனர்.
    • கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் கால்தடம் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யோர்க்ஷிர்:

    இங்கிலாந்தில் சுமார் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் 3 அடி நீள கால் தடம் கண்டறியப்பட்டுள்ளது. பழமையான யோர்க்ஷிர் மாவட்டத்தில் இருக்கும் கடற்கரை பகுதியில் பாறை துண்டின் மீது டைனோசரின் கால் தடம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    இது குறித்து பேசிய தொல்லியல் ஆய்வாளர்கள், கண்டெடுக்கப்பட்டது டைனோசரின் இடது கால் தடம் என்றும், அதன் அளவு 3.3 அடி நீளம் இருப்பதாகவும், இந்த உயிரினம் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளர்.

    மேலும், கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் கால்தடம் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராணி எலிசபெத் அணிந்திருந்த கிரீடம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.
    • இந்த வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது

    லண்டன் :

    மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கிரீடம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்த கிரீடத்தின் மையப்பகுதியில் 21 கிராம் எடையுள்ள 105 கேரட் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டிருந்தது.

    இந்த வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது, இதுவரை உலகளவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிக விலை உயர்ந்தது இந்த வைரம்தான் என சொல்லப்படுகிறது.

    இந்த வைரத்தை இந்தியா மீட்டெடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்ததும் உண்டு. ஆனால் அதை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து ஏற்கனவே கூறி விட்டது. இதையொட்டிய சர்ச்சை இன்னும் தொடர்கிறது.

    தற்போது இந்த வைரம் பதித்த கிரீடத்தை ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு பிறகு அந்த நாட்டின் புதிய ராணியாக மகுடம் சூட்டப்போகும் கமிலா பார்க்கர் அணிவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அப்படி இல்லை.

    மே மாதம் 6-ந்தேதி கணவர் மன்னர் மூன்றாம் சார்லசுடன் மகுடம் சூடப்போகும் ராணி கமிலா பார்க்கர், தனது மாமியார் ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்த அந்த கிரீடத்தை அணியப்போவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதற்கு பதிலாக ராணி மேரி அணிந்த கிரீடத்தைத்தான் கமிலா தேர்ந்தெடுத்துள்ளார் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதில் கோஹினூர் வைரம் கிடையாது. அதே போன்ற வேறொரு வைரம்தான் அதில் பதிக்கப்பட்டுள்ளது,

    ராணி கமிலாவின் தலையை அலங்கரிப்பதற்காக அந்த கிரீடம் தற்போது, லண்டன் டவர் கோட்டை கண்காட்சியில் இருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளது.

    சமீபத்திய வரலாற்றில் ராணி மேரியின் கிரீடத்தை புதிய ராணி ஒருவர் மகுடம் சூட்டுவதற்கு தேர்ந்தெடுத்திருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

    முதலில் மன்னர் சார்லஸின் பாட்டியின் கிரீடத்தைத்தான் ராணி கமிலா பார்க்கர் அணிவார் என ஊகங்கள் எழுந்தன.

    ஆனால் கடைசியில் ராணி மேரியின் கிரீடத்தை ராணி கமிலா பார்க்கர் தேர்ந்தெடுத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    • இங்கிலாந்து ராணி கமிலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • ராணி கமிலா கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். இளவரசியாக இருந்து வந்த சார்லசின் மனைவி கமிலா ராணி (குயின் கன்சார்ட்) பட்டம் பெற்றார்.

    இந்நிலையில். மன்னர் 3-ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த சூழலில் ராணி கமிலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணி கமிலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் செல்லும் அவரது பயணத்தை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கு நடக்கும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்காக ராணி வருத்தம் தெரிவித்தார் என கூறப்பட்டுள்ளது.

    ராணி கமிலா கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார் என்பதும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளானதும் குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இயான் மோர்கன் அறிவித்துள்ளார்.
    • இவர் தலைமையிலான இங்கிலாந்து அணி 2019-ம் ஆண்டு உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    லண்டன்:

    இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் இயான் மோர்கன். இயான் மோர்கன் 16 டெஸ்ட்களில் விளையாடி 700 ரன்களும், 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,701 ரன்களும், 115 டி20 போட்டிகளில் விளையாடி 2,458 ரன்களும், 83 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2,458 ரன்களும் எடுத்துள்ளார்.

    இதற்கிடையே, இயான் மோர்கன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும், உள்ளூர் போட்டிகள், பிற லீக் கிரிக்கெட்டுகளில் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இயான் மோர்கன் அறிவித்தார்.

    இவர் தலைமையிலான இங்கிலாந்து அணி 2019-ம் ஆண்டு உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    • சந்திரனின் விட்டத்தில் 3-ல் ஒரு பங்கை விட சற்று குறைவாக உள்ளது.
    • ஒரு குள்ள கிரகம் என்றும் சொல்லலாம்.

    லண்டன்:

    சூரிய குடும்பத்தை பற்றிய ஆய்வுகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் உலகின் மிகப்பெரிய ஆப்டிக்கல் தொலை நோக்கியான 10.4 மீட்டர் விட்டம் கொண்ட கிரேன் டெலஸ்கோப்பியோ கனரி யாசில் பொருத்தப்பட்ட இங்கிலாந்தின் ஷெபீல்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டஅதிநவீன கேமிராவை பயன்படுத்தி சர்வதேச வானியலாளர்கள் குழு ஒரு ஆய்வை ஸ்பெயினில் நடத்தியது.

    இந்த ஆய்வின் கண்டுபிடிப்பு குறித்த தகவல்கள் வெளியானது. ஆய்வின்படி, வளைய அமைப்பு குவாவர் என்று பெயரிடப்பட்ட ஒரு குள்ள கிரகத்தை சுற்றி உள்ளது. குவாவர் புளூட்டோவின் விட்டத்தில் பாதியை கொண்டுள்ளது என்று சொல்லலாம்.

    அதுபோல் சந்திரனின் விட்டத்தில் 3-ல் ஒரு பங்கை விட சற்று குறைவாக உள்ளது. எனவே இதை ஒரு குள்ள கிரகம் என்றும் சொல்லலாம். ஈர்ப்பு விசையால் வட்ட வடிவில் இழுக்கப்படும் குள்ள கிரகம் இது.

    இதுவரை அறியப்பட்ட அனைத்து அடர்த்தியான வடிவங்களும் ரோச் எல்லைக்குள் இருப்பதால் அவற்றின் அடிப்படை கிரகத்திற்கு அருகில் அமைந்திருந்ததாக ஆய்வு குறிப்பிடுகிறது.

    • இந்தியா-இங்கிலாந்து இணைந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.
    • இந்திய மாணவர்களின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

    லண்டன் :

    இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தகத்துறை ஆகியவை இணைந்து இந்தியா-இங்கிலாந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.

    இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படித்த இந்திய மாணவர்களின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அதோடு இருநாடுகளிலும் கல்வி, அரசியல், பொருளாதாரம் போன்ற பல துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்வோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் வாழ்வில் ஆற்றிய பங்களிப்பிற்காக மன்மோகன் சிங்குக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்பட்ட இந்த விருது, தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தால் விரைவில் டெல்லியில் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில், "நமது நாட்டின் எதிர்காலம் மற்றும் நமது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் கீழ் இளைஞர்களிடம் இருந்து வரும் அர்த்தமுள்ள இந்த விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா-இங்கிலாந்து உறவு உண்மையில் நமது கல்விக் கூட்டாண்மை மூலம் வரையறுக்கப்படுகிறது. நமது தேசத்தை நிறுவிய மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், சர்தார் படேல் மற்றும் பலர் இங்கிலாந்தில் படித்து, சிறந்த தலைவர்களாக மாறினர். பல ஆண்டுகளாக எண்ணற்ற இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

    • போரிஸ் ஜான்சன் கடந்த வாரம் திடீர் பயணமாக உக்ரைன் சென்றார்.
    • புதினிடம் மேற்கத்திய நாடுகள் எவ்வாறு போராடியது என்பதை காட்டும் ஆவணப்படத்தை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது.

    லண்டன் :

    உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக வலுவாக குரல் கொடுத்து வரும் உலக தலைவர்களில் ஒருவர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

    இவர் பிரதமராக இருந்தபோது போருக்கு மத்தியில் 3 முறை உக்ரைனுக்கு பயணம் செய்து அந்த நாட்டுக்கு இங்கிலாந்தின் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தினார். பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் போரிஸ் ஜான்சன் கடந்த வாரம் திடீர் பயணமாக உக்ரைன் சென்றார்.

    இந்த நிலையில் போர் தொடங்குவதற்கு முன், அதை தடுக்க ரஷிய அதிபர் புதினிடம் மேற்கத்திய நாடுகள் எவ்வாறு போராடியது என்பதை காட்டும் ஆவணப்படத்தை பிபிசி செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டது. இதில் பேசியுள்ள போரிஸ் ஜான்சன், புதின் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    போருக்கு முன்னர் என்னிடம் தொலைபேசியில் உரையாடிய புதின், என்னை மிரட்டும் தொனியில் பேசினார். ஒரு கட்டத்தில் "போரிஸ், நான் உன்னை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால் ஏவுகணை மூலம், அது ஒரு நிமிடத்தில் நடக்கும் அல்லது அதுபோல வேறு ஏதும் நடக்கும்" என மிரட்டினார்.

    இவ்வாறு போரிஸ் ஜான்சன் கூறினார்.

    • நாதிம் ஜகாவி வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    • ஈராக்கைப் பூர்வீகமாகக் கொண்ட நாதிம் நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

    பிரிட்டன்:

    பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், அமைச்சராகவும் பணியாற்றிய நாதிம் ஜகாவி வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    ஈராக்கைப் பூர்வீகமாகக் கொண்ட நாதிம் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு அவர் வருவாய் மற்றும் சுங்கத்துறைக்கு அபராதம் கட்ட ஒப்புக் கொண்டதையடுத்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நாதிம் மீது வைக்கப்பட்டன.

    பிரதமரின் தனிப்பட்ட ஆலோசகர் இது குறித்து விசாரணை நடத்திய நிலையில் குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து நாதிம் ஜஹாவிவை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அரசு பதவியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    • இங்கிலாந்தில் போதைபொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • காரில் வந்த ஒருவன் திடீரென கீழே இறங்கி வந்து போலீசாரிடம் தனது காரில் போதைப்பொருட்கள் உள்ளதாகவும், தான் அணிந்து உள்ள பூட்சில் கொகைன் மறைத்து வைத்து உள்ளதாகவும் தெரிவித்தான்.

    பொதுவாக தாங்கள் செய்யும் தவறுகளை யாரும் ஒப்புக்கொள்வது இல்லை. ஆனால் கடத்தல்காரன் ஒருவன் தானாகவே முன்வந்து தான் போதைப்பொருட்கள் கடத்துவதாக கூறி போலீசாரை அதிர வைத்தான். இங்கிலாந்தில் போதைபொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்த ஒருவன் திடீரென கீழே இறங்கி வந்து போலீசாரிடம் தனது காரில் போதைப்பொருட்கள் உள்ளதாகவும், தான் அணிந்து உள்ள பூட்சில் கொகைன் மறைத்து வைத்து உள்ளதாகவும் தெரிவித்தான்.

    இதனால் போலீசார் ஒரு கணம் திகைத்தனர், அவனை சந்தேக கண்ணோடு மேலும் கீழும் பார்த்தனர். உடனே அவன் நான் உண்மையயை தான் சொல்கிறேன் சார். வேண்டுமென்றால் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறினான். இதையடுத்து போலீசார் அவன் வந்த காரை சோதனை செய்தனர். அப்போது காரில் 2 பைகளில் கொகைன் போதை பொருட்கள் இருந்தது. அவன் காலில் போட்டு இருந்த பூட்சை பிரித்து பார்த்த போது அதிலும் போதைபொருட்கள் மறைத்து வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசார் அவனை கைது செய்து 19 கிலோ எடைகொண்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    அதன் சர்வதேச மதிப்பு ரூ. 20 கோடியாகும். விசாரணையில் கடத்தல்காரன் பெயர் கியாரன் கிரான்ட் என்பது தெரியவந்தது. போலீசார் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

    • பேச்சுவார்த்தையில் உடன்பாட்டை எட்ட முடியவில்லை.
    • போராட்டத்தை தொடர உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

    லண்டன்:

    இங்கிலாந்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் அமைப்புகள் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்தில் 5-ல் ஒரு பங்கு ரெயில்கள் மட்டுமே இயங்கி வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    குறிப்பாக ஸ்காட்லாந்து, வேல்ஸ், இங்கிலாந்தின் கிராமப் பகுதிகள் பலவற்றிலும் ரெயில் சேவை முடங்கியுள்ளது. அதே சமயம் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் நியாயமான உடன்பாட்டை எட்ட முடியாததால் தங்கள் போராட்டத்தை தொடர உள்ளதாக தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அரசு தங்களது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், இல்லாவிடில் ஜனவரி மாத கடைசியில் வேல்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரியும் 2,600 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் தொழிற்சங்க அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

    • பொது இடத்தில் மன்னர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
    • கைது செய்யப்பட்ட வாலிபர் மீது வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வடக்கு இங்கிலாந்து பகுதியில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மன்னர் சார்லஸும், ராணி கமிலாவும் பங்கேற்றனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களை நோக்கி மன்னரும், ராணியும் கையசைத்து உரையாடியபடி நடந்து சென்றனர். அப்போது, கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் மன்னர் சார்லஸை நோக்கி மூன்று முட்டைகளை வீசினார். அவை மன்னர் மீது விழவில்லை. தரையில் விழுந்து உடைந்தன. 'இந்த நாடு அடிமைகளால் உருவாக்கப்பட்டது. நீங்கள் மன்னர் அல்ல...' என்று அந்த நபர் கோஷமிட்டார். மன்னர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    மன்னர் மீது முட்டைகளை வீசிய ஹாரி மே (வயது 21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, அந்த வாலிபர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு 100 பவுண்டுகள் அபராதம் மற்றும் வழக்கு செலவுக்காக 85 பவுண்டுகள் செலுத்தும்படி நிதிபதி உத்தரவிட்டார்.

    ஒருவருடன் உங்களுக்கு என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும், அதைத் தீர்ப்பதற்கான வழி, இதுபோன்று பொருட்களை வீசுவது அல்ல என நீதிபதி கண்டித்தார்.

    ×