search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • பால்மோரல் அரண்மனையில் இருந்து வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
    • 19-ந் தேதி ராணியின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு.

    ஸ்காட்லாந்து:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) உடல் நலக்குறைவால் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். அவர் ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் தங்கியிருந்த போது உயிர் பிரிந்தது.

    இந்நிலையில் ராணி எலிசபெத்தின் உடலை லண்டனுக்கு கொண்டு இறுதி ஊர்வலம் இன்று தொடங்கியது. முதலில் அவரது உடல் ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் இருந்து வாகனம் மூலம் ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைக்கு இன்று பிற்பகல் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

    சுமார் 6 மணி நேரம் இந்த பயணம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழி நெடுகிலும் காத்திருக்கும் மக்கள் ராணியின் உடல் கொண்டு செல்லும் வாகனத்திற்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் வரை ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் உடல் வைக்கப்பட்டு பின்னர் செயின்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.

    அங்கு ராணி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஸ்காட்லாந்து மக்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதன்பின் ராணி உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டி அரசு குடும்ப உறுப்பினர்கள் பெற்றுக் கொள்வார்கள். 13-ந்தேதி பிற்பகலில் எலிசபெத் உடல், எடின்பர்க் விமான நிலையத்தில் இருந்து விமானப்படை விமானம் மூலம் எடுத்து செல்லப்பட்டு மாலை இங்கிலாந்தின் நார்த்டோல் விமான தளத்தை வந்தடையும்.

    அங்கிருந்து சாலை மார்க்கமாக ராணி உடல் லண்டன் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன் பின் 14-ந்தேதி உள்ளூர் நேரப்படி மதியம் முதல் எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் வைக்கப்படும். ராணி உடலுக்கு லண்டன் மக்கள் 4 நாட்கள் அஞ்சலி செலுத்தலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

    அஞ்சலி நிகழ்ச்சிகள் முடிந்தபின் 19-ந்தேதி காலை ராணியின் உடல் அடங்கிய பெட்டி ஊர்வலமாக வெஸ்ட் மின்ஸ்டர் அப்பேவுக்கு எடுத்து செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும். அதன்பின் வின்ட்சர் கோட்டைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு ராணியின் கணவர் பிலி பின் கல்லறைக்கு அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வாறு பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 118 ரன்களில் சுருண்டது.
    • இங்கிலாந்தின் ஒல்லி ராபின்சன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றன.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 36.2 ஓவரில் 118 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் ஜேன்சன் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 5 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதிகபட்சமாக ஒல்லி போப் 67 ரன்கள் எடுத்தார்.

    தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஜேன்சன் 4 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
    • ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் (96), உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    ராணி எலிசபெத் மறைவு குறித்த செய்தி அறிந்ததும் இங்கிலாந்து மக்களும், உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது. லண்டனில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டுள்ளனர்.

    இந்நிலையில், ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

    • 73 வயதான சார்லஸ் மறைந்த ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார்.
    • கரன்சியில் இனி அரசர் 3-ம் சார்லஸ் புகைப்படம் அச்சிடப்பட்டு வெளியிடப்படும்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்நாட்டு அரசராக சார்லஸ் அறிவிக்கபட்டார். 73 வயதான சார்லஸ் மறைந்த ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார்.

    புதிய அரசரான சார்லஸ் நேற்று தனது மனைவி கமீலாவுடன் தனி விமானத்தில் லண்டன் வந்தார். பின்னர் அவர் காரில் பக்கிம்காம் அரண்மனை சென்றார். ராணி எலிசபெத் தங்கி இருந்த ஸ்காட்லாந்து அரண்மனைக்கு இளவரசராக சென்ற சார்லஸ் தனது தாயார் ராணி மறைவுக்கு பிறகு அரசராக பக்கிம்காம் அரண்மனைக்கு திரும்பி உள்ளார்.

    புதிய மன்னரை பார்த்ததும் அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் வரவேற்று வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இங்கிலாந்து தேசிய கீதம் பாடி அவருக்கு வரவேற்பு கொடுத்து ராணியின் மறைவுக்கு ஆறுதலும் கூறினார்கள். சார்லசுக்கு சிலர் கைகளில் முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பொதுமக்களின் அன்பை கண்டு சார்லஸ் நெகிழ்ந்து போனார்.

    இங்கிலாந்து புதிய அரசராக இன்று சார்லஸ் முறைப்படி பதவி ஏற்றார். இதற்கான நிகழ்ச்சி லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவரது மனைவி கமீலா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சார்லஸ் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது ராணி எலிசபெத் மறைவு குறித்து அறிவித்ததுடன், தான் அரச பாரம்பரியத்தை காப்பாற்றுவதாக உறுதி அளித்தார்.

    மறைந்த ராணி எலிசபெத் பாஸ்போர்ட் இல்லாமல் எந்த நாட்டிற்கும் செல்லக்கூடிய அதிகாரம் பெற்று இருந்தார். அதே போல் லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்ட கூடிய அதிகாரமும் அவருக்கு உண்டு. இந்த அதிகாரங்கள் எல்லாம் தற்போது புதிய அரசர் சார்லசுக்கு கிடைக்கும். இனி சார்லஸ் பாஸ்போர்ட் இல்லாமல் எந்த நாட்டுக்கும் பயணிக்கலாம். இங்கிலாந்து கரன்சியில் ராணி எலிசபெத் புகைப்படம் இடம் பெற்று இருக்கும். இனி அரசர் 3-ம் சார்லஸ் புகைப்படம் அச்சிடப்பட்டு புதிய கரன்சி வெளியிடப்படும்.

    அதே சமயம் பழைய கரன்சியும் புழக்கத்தில் இருக்கும். இங்கிலாந்து தேசிய கீதத்தில் ராணியை குறிக்கும் வகையில் அவள் என்ற வார்த்தை நீக்கப்பட்டு சார்லசை குறிக்கும் வகையில் அவர் என மாற்றம் செய்யப்படும்.

    சார்லஸ் இதுவரை இந்தியாவுக்கு 15 முறை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராணி எலிசபெத் மகன் சார்லஸ் நாளை அந்நாட்டின் மன்னராக அதிகாரபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட உள்ளார்.
    • வாழ்நாள் முழுதும் மக்களுக்காக சேவை ஆற்றுவேன் என இங்கிலாந்து மன்னர் சார்லஸ் தெரிவித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக நாளை அதிகாரபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட உள்ளார் என தகவல் வெளியானது.

    மகாராணி எலிசபெத் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இதையடுத்து மகாராணி ராணி எலிசபெத்தின் மூத்த மகனும், நீண்ட கால அரச குடும்ப வாரிசான 73 வயது சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராகிறார்.

    இங்கிலாந்து அரசு மரபுப்படி ராணி எலிசபெத் இறந்த முதல் 24 மணி நேரத்தில், சார்லஸ் அடுத்த மன்னர் என லண்டன் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை அக்சஷென் கவுன்சில் நாளை அதிகாரபூர்வ பிரகடனம் வெளியிடுகிறது.

    இந்நிலையில், நாட்டு மக்களிடம் மன்னராக பதவியேற்க உள்ள சார்லஸ் முதன்முறையாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    ராணி எலிசபெத்தை இழந்து தவிக்கும் மக்களி்ன் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன். மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர்.

    அன்பு, விசுவாசம், மரியாதையோடு என் வாழ்நாள் முழுதும் மக்களுக்காக சேவை ஆற்றுவேன். நான் விரும்பி செய்யும் சமூக சேவை பணிகளில் என்னால் அதிக நேரம் செலவிட முடியாத நிலை உள்ளது. இங்கிலாந்து இளவரசராக வில்லியம் செயல்படுவார் என தெரிவித்தார்.

    • 1979-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந்தேதி ராணியின் மகன் சார்லசுக்கும், டயானாவுக்கும் இடையே திருமணம் நடந்தது.
    • திருமணத்தை உலக அளவில் 700 மில்லியன் பொதுமக்கள் டி.வி. மூலம் பார்த்து ரசித்தனர்.

    இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ராணி எலிசபெத் கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்:-

    * 1926-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி லண்டனில் உள்ள மேபேரில் ஆறாம் ஜார்ஜ்-எலிசபெத் தம்பதிக்கு ராணி எலிசபெத் பிறந்தார். இவரது முழு பெயர் எலிசபெத் அலெக்சான்ட்ரா மேரி ஆகும்.

    * 1936-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்தில் நெருக்கடி நிலை ஏற்பட்ட போது ராணி எலிசபெத் தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னரானார்.

    * 1947-ம் ஆண்டு இந்தியாவில் இங்கிலாந்து ஆட்சி முடிவுக்கு வந்ததும் நவம்பர் மாதம் 20-ந்தேதி ராணி எலிசபெத் பிலிப் மவுண்ட் பேட்டனை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சார்லஸ், ஆண்ட்ரூ, எட்வர்டு ஆகிய மகன்களும் ஆன் என்ற மகளும் உள்ளனர்.

    * 1952-ம் ஆண்டு தந்தை ஜார்ஜ் மரணம் அடைந்தார், இதையடுத்து பிப்ரவரி 6-ந்தேதி ராணி எலிசபெத் இங்கிலாந்து ராணியாக முடிசூட்டப்பட்டார். அப்போது அவருக்கு 25 வயதுதான் ஆனது. இந்த விழா உலக அளவில் டி.வி.யில், ஒளிபரப்பப்பட்ட முதல் பிரமாண்ட நிகழ்ச்சி என்ற பெருமையை பெற்றது.

    * 1977-ம் ஆண்டு ராணி எலிசபெத் பதவி ஏற்று 25 ஆண்டுகள் ஆனதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

    * 1979-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந்தேதி ராணியின் மகன் சார்லசுக்கும், டயானாவுக்கும் இடையே திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை உலக அளவில் 700 மில்லியன் பொதுமக்கள் டி.வி. மூலம் பார்த்து ரசித்தனர்.

    * 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராணியின் மகன் சார்லஸ் 2-வதாக கமீலா பர்கரை திருமணம் செய்து கொண்டார்.

    * 2011-ம் ஆண்டு பேரன் இளவரசர் வில்லியம், கேத்ரின் மிடிலேட்டனை திருமணம் செய்து கொண்டார்.

    * 2012-ம் ஆண்டு ராணி தான் பதவி ஏற்ற 50-வது வைர விழாவை கொண்டாடினார்.

    * 2015-ம் ஆண்டு ராணி எலிசபெத் இங்கிலாந்தில் அதிக வருடம் மகாராணியாக இருந்த பெருமையை பெற்று சாதனை படைத்தார்.

    * 2018-ம் ஆண்டு பேரன் ஹாரி மேகன் மார்கலேவை திருமணம் செய்து கொண்டார்.

    * கடந்த ஆண்டு ( 2021) ஏப்ரல் 9-ந்தேதி ராணியின் கணவர் பிலிப் தனது 99 வயதில் மரணம் அடைந்தார். இவர் 73 ஆண்டுகள் ராணியுடன் திருமண வாழ்க்கை வாழ்ந்தார்.

    * இந்த ஆண்டு (2022) பிப்ரவரி 6-ந்தேதி ராணி அரியணைக்கு வந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்தையொட்டி ஜூன் மாதம் முழுவதும் பல்வேறு பவள விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    * 2022-ம் ஆண்டு (நேற்று) செப்டம்பர் மாதம் 8-ந்தேதி ராணி எலிசபெத் மரணம் அடைந்தார்.

    • ராணி எலிசபெத் மரணம் தொடர்பான நிகழ்ச்சிகள் சுமார் ஒரு மாதம் வரை நடக்கும் என்று கூறப்படுகிறது.
    • 10 நாட்கள் ராணி எலிசபெத் உடலுக்கு உலக தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நீண்ட காலம் அரசியாக இருந்தவர் என்ற சாதனையை படைத்தவர் ராணி எலிசபெத்.

    இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகாலம் இவர் ஆட்சி செய்துள்ளார். தனது தந்தை 6-ம் ஜார்ஜ் மன்னரின் மறைவைத் தொடர்ந்து 1952-ம் ஆண்டு இவர் அரியணை ஏறினார்.

    96 வயதான அவர் முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் இருந்து அவர் வெற்றிகரமாக மீட்டு இருந்தார்.

    இதையடுத்து ஓய்வு எடுப்பதற்காக அவர் லண்டனில் உள்ள தனது அரண்மனையான பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து ஸ்காட்லாந்தில் உள்ள பால்மரால் அரண்மனைக்கு சென்று இருந்தார். அங்கு அவர் ஓய்வு எடுத்து வந்தார். அவருடன் அவரது மகள் இளவரசி ஆனும் உடன் இருந்தார்.

    கடந்த செவ்வாய்க்கிழமை இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ்டிரசை நேரில் அழைத்து பேசினார். இதுதான் அவர் மேற்கொண்ட கடைசி அரசு நிகழ்ச்சியாகும். மறுநாள் புதன்கிழமை முதல் அவரது உடல்நலத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 24 மணி நேரமும் அவரை டாக்டர்கள் குழு கண்காணித்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும் அவர் மரணமடைந்தார்.

    ராணி எலிசபெத்துக்கு உடல்நலக்குறைவு தீவிரமானதால் நேற்று முன்தினத்தில் இருந்தே அவரது குடும்பத்து உறுப்பினர்கள் பால்மரால் அரண்மனைக்கு சென்றனர். இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் பால்மரால் அரண்மனைக்கு விரைந்தார். அவர் சென்ற சிறிது நேரத்தில் ராணி மரண செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இங்கிலாந்து நாட்டின் அரச குடும்ப வழக்கப்படி, அரசி அல்லது மன்னர் மரணமடைந்தால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் வாரிசு பதவி ஏற்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    மரணமடைந்த ராணி எலிசபெத் உடல் இன்று அல்லது நாளை லண்டன் எடுத்துவரப்பட இருக்கிறது. லண்டனில் அவருக்கு அரச குல வழக்கப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை இங்கிலாந்து அரச குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக இங்கிலாந்து புதிய மன்னர் சார்லஸ் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது ராணி எலிசபெத் இறுதி சடங்குகள் பற்றி முழு விவரங்கள் தெரியவரும்.

    முதல் கட்டமாக இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்றாலும், ராணி எலிசபெத் மரணம் தொடர்பான நிகழ்ச்சிகள் சுமார் ஒரு மாதம் வரை நடக்கும் என்று கூறப்படுகிறது. என்றாலும், 10 நாட்கள் ராணி எலிசபெத் உடலுக்கு உலக தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

    ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குகள் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ராணியின் உடல் 3 நாட்களுக்கு வைக்கப்பட்டு இருக்கும். அந்த 3 நாட்களும் பொதுமக்கள் தினமும் 23 மணி நேரம் அஞ்சலிசெலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்பிறகு ராணியின் உடல் வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10-வது நாள் இறுதி சடங்குகள் நிகழ்ச்சி நடைபெறும்.

    அரசு முறைப்படியான இறுதிச் சடங்குகள் வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் நடக்கும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு ராணியின் உடல் வின்ட்சர் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு ராணி குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்வார்கள்.

    10-வது நாள் அரண்மனையில் இருந்து ராணியின் உடல் பிரமாண்டமான ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். லண்டனில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் ஆராதனைகள் செய்யப்பட்ட பிறகு அடக்கம் செய்வதற்காக உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.

    லண்டனில் இங்கிலாந்து அரச குடும்பத்து உறுப்பினர்கள் மரணமடைந்தால் அவர்களது உடலை நல்லடக்கம் செய்ய பிரத்யேக கல்லறை தோட்டம் உள்ளது. அங்கு ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்த இங்கிலாந்து மக்கள் லண்டனுக்கு திரண்டு வந்தபடி உள்ளனர். அவர்கள் அரண்மனை வாசலில் பூங்கொத்துகளை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி சென்றபடி உள்ளனர்.

    ராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாட்டு தலைவர்கள் இரங்கல் வெளியிட்டு உள்ளனர்.

    • இளவரசர் 3-ம் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ராணி எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார். சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    2005-ம் ஆண்டு கமிலா என்பவரை சார்லஸ் 2-வது திருமணம் செய்துகொண்டார். இங்கிலாந்தின் புதிய ராஜாவாக சார்லஸ் அரியணை ஏற உள்ள நிலையில் ராணியாக கமிலா அரியணை ஏறுகிறார்.

    • இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார்.
    • ராணி எலிசபெத் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி அந்நாட்டுடன் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இரு நாடுகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது.

    இந்நிலையில், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் மரணம் அடைந்ததையடுத்து இன்று நடைபெறவிருந்த இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆட்டம் மீண்டும் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இங்கிலாந்து மகாராணி எலிசெபத் (96) இன்று காலமானார்.
    • அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார்.

    இந்நிலையில், ராணி எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக் குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராணி எலிசபெத் காலமானார்.

    இங்கிலாந்து மகாராணி எலிசெபத் காலமானது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    • நெருக்கடியை சமாளிக்கவே கூடுதல் கவனம் செலுத்தவிருப்பதாக பிரிட்டன் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் தெரிவித்தார்.

    லண்டன்:

    பிரிட்டனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து போரிஸ் ஜான்சன் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து தன் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார்.

    அதன்பின்னர் லிஸ் டிரஸ், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார். அப்போது, ராணி எலிசபெத் லிஸ் டிரசை பிரதமராக நியமனம் செய்தார். பின்னர் லண்டன் திரும்பியபிறகு 3வது பெண் பிரதமரான லிஸ் டிரஸ், நாட்டு மக்களுக்கு தனது முதல் உரையை நிகழ்த்தினார்.

    அப்போது, தனது கவனம் முழுவதையும் முக்கியமான 3 விஷயங்களில் செலுத்தவிருப்பதாக கூறினார். அதாவது தேசிய சுகதார சேவையை மேம்படுத்துவது, மக்களின் மீது உள்ள வரி சுமையை குறைப்பது மற்றும் ரஷியா இடையிலான போரினால் எழுந்திருக்கும் எரிசக்தி பிரச்சனையை சமாளிப்பது ஆகியவற்றில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தவிருப்பதாக குறிப்பிட்டார்.


    • தற்போது இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரசை ராணி இரண்டாம் எலிசபெத் நியமித்துள்ளார்.
    • ராணி இரண்டாம் எலிசபெத் பதவிக்காலத்தில் இங்கிலாந்து 3 பெண் பிரதமர்களைக் கண்டிருக்கிறது.

    லண்டன்

    இங்கிலாந்து நாட்டில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது, அந்த நாட்டின் ராணியாக ஆனவர், அவரது மகள் எலிசபெத். இரண்டாம் எலிசபெத் என அழைக்கப்படுகிற அவருக்கு அப்போது வயது 25. அப்போது இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில், அதன் பின்னர் சர் ஆண்டனி ஈடன் தொடங்கி போரிஸ் ஜான்சன் வரை 13 பிரதமர்களை அவர் நியமித்து அவர்களோடு பணியாற்றி உள்ளார்.

    தற்போது இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரசை ராணி இரண்டாம் எலிசபெத் நியமித்துள்ளார்.

    அந்த வகையில் ராணி இரண்டாம் எலிசபெத் கண்ட இங்கிலாந்தின் 15-வது பிரதமர் என்ற சிறப்பை லிஸ் டிரஸ் பெறுகிறார்.

    ராணி இரண்டாம் எலிசபெத் பதவிக்காலத்தில் இங்கிலாந்து 3 பெண் பிரதமர்களைக் கண்டிருக்கிறது. அவர்கள், மார்கரெட் தாட்சர், தெரசா மே, லிஸ் டிரஸ் ஆவார்கள்.

    11 பிரதமர்கள் கன்சர்வேடிவ் கட்சியினர். 4 பேர் மட்டுமே தொழிற்கட்சியை சேர்ந்தவர்கள்.

    ×