search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்க அதிபர் தேர்தல்: நாளை வாக்குப்பதிவு..  ஏற்கனவே 7 கோடி வாக்குகள் பதிவு - களம் யாருக்கு சாதகம்?
    X

    அமெரிக்க அதிபர் தேர்தல்: நாளை வாக்குப்பதிவு.. ஏற்கனவே 7 கோடி வாக்குகள் பதிவு - களம் யாருக்கு சாதகம்?

    • மொத்தம் 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்
    • சாமானிய மக்களும் முன்கூட்டியே வாக்கு செலுத்தும் வசதி உள்ளது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை [நவம்பர் 5] நடைபெற உள்ளது. களத்தில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் [60 வயது] மற்றும் குடியரசு கட்சி சார்பில் டொனல்டு டிரம்ப் [78 வயது] போட்டியிடுகின்றனர்.

    மொத்தம் 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் சுமார் 7 கோடிக்கும் அதிகமானோர் தபால் வாக்கு, வாக்குப் பெட்டி உள்ளிட்ட வசதிகள் மூலம் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர்.

    இந்தியாவில் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையில் அதிக கட்டுப்பாடுகள் இருக்கிறது. தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே தேர்தல் நாளுக்கு முன்பு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். ஆனால் அமெரிக்காவில் சாமானிய மக்களும் முன்கூட்டியே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது.

    வேலை, உடல்நல பிரச்சினைகள், பயணம் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் நாளில் வாக்களிப்பதில் சிரமத்தை எதிர்கொள்பவர்கள் இந்த நடைமுறை பயன்படுத்துகின்றனர்.

    அந்த வகையில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது. பெரும்பாலான மாகாணங்களில் மக்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். அதன்படி இதுவரை கிட்டத்தட்ட 7 கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எஞ்சியவர்கள் 50 மாகாணங்களில் நாளை வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். இழுபறி ஏற்படாவிட்டால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது தெரிந்துவிடும்.

    தேர்தல் களத்தை பொறுத்தவரை சமீபத்திய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ்க்கு அவருக்கு 47 சதவீத ஆதரவும், டிரம்புக்கு 44 சதவீத ஆதரவும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×