search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வந்ததா? நேரடி ஆதாரம் இல்லை என்கிறது அமெரிக்க அறிக்கை
    X

    சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வந்ததா? நேரடி ஆதாரம் இல்லை என்கிறது அமெரிக்க அறிக்கை

    • கொரோனா தாக்கத்தால் எண்ணிலடங்கா உயிரிழப்பும், தொழில் முடக்கமும், அளவிட முடியாத பொருளாதார இழப்பும் ஏற்பட்டது.
    • ஆய்வகத்திலிருந்துதான் வந்தது என கூறும் சாத்தியக்கூறுகளை உளவுத்துறை அமைப்புகளால் இன்னும் நிராகரிக்க முடியவில்லை.

    சீனாவின் வுஹான் மாகாணத்தில் 2019ம் வருட இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா (Corona) எனப்படும் வைரஸ் தொற்று, மிக அதிக வேகத்துடன் உலகம் முழுவதும் பரவி, பல லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இதனால், பல நாடுகள் லாக்டவுன் எனப்படும் பொது முடக்கம் அறிவிக்கும் சூழ்நிலை உருவானது. கொரோனாவின் தாக்கத்தால் எண்ணிலடங்காத உயிர்ப்பலியும், தொழில் முடக்கமும், அளவிட முடியாத பொருளாதார இழப்பும், பல துறைகளின் வீழ்ச்சியும் ஏற்பட்டது.

    இதற்கு காரணம் சீனாவிலிருந்து அந்த வைரஸ் உருவானதுதான் என பல நாடுகள் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள பரிசோதனை நிலையத்தில் இருந்து இந்த வைரஸ் உருவானதா எனும் குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்கா விசாரணை செய்து வருகிறது.

    இந்நிலையில், சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் நடத்திய ஆய்வுகளிலிருந்து அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் நான்கு பக்க அறிக்கை வெளியாகி உள்ளது.

    அதில், "கொரோனா வைரஸ், இந்த ஆய்வகத்திலிருந்துதான் வந்தது என கூறும் சாத்தியக்கூறுகளை உளவுத்துறை அமைப்புகளால் இன்னும் நிராகரிக்க முடியவில்லை. இருப்பினும், தொற்றுநோயின் தோற்றத்தையும் கண்டறிய முடியவில்லை. மத்திய புலனாய்வு முகமை மற்றும் வேறொரு நிறுவனத்தால் கோவிட்-19 வைரஸின் துல்லியமான தோற்றத்தை தீர்மானிக்க முடியவில்லை, ஏனெனில் இரண்டு (இயற்கை மற்றும் ஆய்வக) அனுமானங்களை இந்த கருத்துகள் நம்பியுள்ளன. மேலும், முரண்பட்ட அறிக்கைகளுடன் சவால்களையும் இந்த கருத்துகள் எதிர்கொள்கின்றன" என்று கூறியிருக்கிறது.

    வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி நிறுவனம், கொரோனா வைரஸ்கள் தொடர்பாக விரிவான ஆய்வுகள் நடத்தியிருந்தாலும், கொரோனா வைரஸ் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில், அங்கிருந்துதான் கசிந்துள்ளது என்பதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை.

    "வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜியின் தொற்றுநோய் பரவலுக்கு முந்தையகால ஆராய்ச்சியானது, ஸார்ஸ்கோவ்-2 அல்லது அதன் முன்னோடியை உள்ளடக்கியதுதான் என்பதற்கு எந்த அறிகுறியும் எங்களிடம் இல்லை. கோவிட் தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வகையில் வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி நிறுவன பணியாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சி தொடர்பான சம்பவம் அங்கு நிகழ்ந்தது என்பதற்கான நேரடி ஆதாரமும் இல்லை" என அந்த அறிக்கை கூறியிருக்கிறது.

    Next Story
    ×