search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி வெடித்து சிதறியது- அரிய வகை மீன்கள் துடிதுடித்து செத்தன
    X

    உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி வெடித்து சிதறியது- அரிய வகை மீன்கள் துடிதுடித்து செத்தன

    • ‘அக்வாடோம்' என பெயரிடப்பட்ட இந்த மீன் தொட்டியில் சுமார் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு 100 வெவ்வேறு இனங்களை சேர்ந்த 1,500 மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தன.
    • பாதுகாப்பு நடவடிக்கையாக ஓட்டலில் இருந்த விருந்தினர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    பெர்லின்:

    ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் 'ராடிசன் புளூ' என்கிற பிரபல நட்சத்திர ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலின் மையப்பகுதியில் 52 அடி உயரம் கொண்ட கண்ணாடியால் ஆன ராட்சத மீன் தொட்டி இருந்தது. இது உலகின் மிகப்பெரிய நிற்கும் உருளைவடிவிலான மீன் தொட்டியாக அறியப்பட்டது.

    'அக்வாடோம்' என பெயரிடப்பட்ட இந்த மீன் தொட்டியில் சுமார் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு 100 வெவ்வேறு இனங்களை சேர்ந்த 1,500 மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை இந்த ராட்சத மீன் தொட்டி உடைந்து, சிதறியது. அதை தொடர்ந்து தொட்டியில் இருந்து வெளியேற தண்ணீர் ஓட்டலுக்கு வெளியே வந்து சாலையில் ஆறாக ஓடியது.

    தொட்டியில் இருந்த நூற்றுக்கணக்கான அரியவகை மீன்கள் தரையில் விழுந்து துடிதுடித்து செத்தன. மின்தொட்டி உடைந்து கண்ணாடிகள் சிதறியதில் 2 பேர் காயம் அடைந்தனர். பாதுகாப்பு நடவடிக்கையாக ஓட்டலில் இருந்த விருந்தினர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    இதற்கிடையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஓட்டலுக்குள்ளும், வெளியிலும் தரையில் கிடந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த டஜன் கணக்கான மீன்களை மீட்டனர். அவை பல்வேறு மீன் தொட்டிகளில் விடப்பட்டன.

    1,500 மீன்களில் எத்தனை மீன்கள் செத்தன, எத்தனை மீன்கள் காப்பாற்றப்பட்டன என தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் பெரும்பாலான மீன்கள் இறந்துவிட்டதாக ஓட்டல் ஊழியர் ஒருவர் கூறினார்.

    ஓட்டலுக்குள் வெப்பநிலை, மைனஸ் 6 டிகிரிக்கும் குறைவாக சென்றதால் மீன் தொட்டியின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு வெடித்ததாக கூறப்படுகிறது.

    Next Story
    ×