search icon
என் மலர்tooltip icon

    சுவிட்சர்லாந்து

    • பாராளுமன்ற கட்டிடம், அரண்மனையில் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு கட்டிடங்கள், அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
    • வெடிகுண்டுடன் சிக்கிய நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்னேவில் உள்ள பாராளுமன்றத்தின் நுழைவு வாயில் அருகே ஒரு வாலிபர் சுற்றி கொண்டிருந்தார். இதையடுத்து அந்த நபரிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரை சோதனை செய்தபோது குண்டு துளைக்காத ஆடை அணிந்திருந்தார். மேலும் அவரிடம் வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாராளுமன்ற கட்டிடம், அரண்மனையில் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு கட்டிடங்கள், அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டுடன் சிக்கிய நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் காரில் வந்தது உறுதிபடுத்தப்பட்டதையடுத்து அந்த வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் வெடிகுண்டு இல்லை.

    பிடிபட்ட நபர் யார்? எந்தவித வெடிகுண்டு வைத்திருந்தார் போன்ற தகவல்களை போலீசார் வெளியிடவில்லை. பாராளுமன்றத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

    • 7 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளின் இறப்புகள் பதிவாகி உள்ளன.
    • மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த தரம் குறைந்த இருமல் மருந்து குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.

    ஜெனீவா :

    குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைக்கால் அதிகளவு இருந்ததால், அவற்றை கடந்த 4 மாதங்களில் சாப்பிட்ட குழந்தைகள் இறந்திருப்பது அதிர வைத்துள்ளது.

    இப்படி 7 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளின் இறப்புகள் பதிவாகி உள்ளன.

    அரியானாவை சேர்ந்த மெய்டன் பார்மசியூடிக்கல் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து குறித்து கடந்த அக்டோபர் மாதம் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நவம்பரில் இந்தோனேசிய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகள் மீதும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.

    இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த தரம் குறைந்த இருமல் மருந்து குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. இந்த மருந்து குடித்து உஸ்பெகிஸ்தானில் 8 குழந்தைகள் இறந்துள்ளன.

    இந்த நிலையில் தரம் குறைந்த இருமல் மருந்துகளை தயாரித்து அளித்த மருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.

    • உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா பிரகாசமாக உள்ளது.
    • உலகில் பிரதமர் மோடியின் தலைமை முக்கியமானது என உலக பொருளாதார மன்றம் கூறியது.

    டாவோஸ்:

    உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வருகிறது இந்த மாநாட்டில் 130 நாடுகளைச் சேர்ந்த 2,700 தலைவர்களும், இந்தியாவில் இருந்து 100 உயரதிகாரிகள் உள்பட தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

    புவிசார் அரசியல் மோதல்கள், உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகள் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய அக்கறையுள்ள விஷயங்களைப் பற்றி விவாதிக்க தலைவர்கள் கூடி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து உலக பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் செயல் தலைவருமான கிலாஸ் ஸ்வாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்திய மந்திரிகள் குழுவையும், மிக முக்கிய இந்திய தொழிலதிபர்கள் குழுவையும் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உலக சுகாதாரம், பெண்கள் தலைமையிலான பொருளாதார முன்னேற்றம், டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான பொது கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

    புவிசார் பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் ஆகியவற்றில் இந்தியா ஒளிபொருந்திய நாடாக திகழ்கிறது. உலக பொருளாதார மன்றம் இந்தியாவுடன் 38 ஆண்டுகாலமாக நல்லுறவைக் கொண்டிருக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கும் இந்த தருணத்தில் அதனுடனான உலக பொருளாதார மன்றத்தின் நல்லுறவு தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    ஜி20-யின் இந்திய தலைமையின் கீழ் உலகம் வளர்ச்சி காணும். பலவாறாக பிரிந்து கிடக்கும் இன்றைய உலகில் ஜி20 கூட்டமைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை ஏற்றிருப்பது மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.

    • இந்தியா வளர்ந்து வருகிறது.
    • மேலும் வளர வாய்ப்பு இருக்கிறது.

    டாவோஸ் :

    சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேட்டி அளித்தார்.

    அப்போது, சர்வதேச பொருளாதார வளர்ச்சியை தீர்மானிப்பதில் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா என்று இப்போதே சொல்ல முடியாது. ஏனென்றால், தற்போதைய நிலையில் இந்தியா மிகவும் சிறிய பொருளாதாரத்தை கொண்டது. இருப்பினும், அது உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருப்பதால், நிலைமை மாறலாம். இந்தியா வளர்ந்து வருகிறது. மேலும் வளர வாய்ப்பு இருக்கிறது.

    சீன பொருளாதாரம் இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மீண்டு எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், சர்வதேச பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
    • அறிகுறி இல்லாதவர்களுக்கு 5 நாள் போதும்.

    ஜெனீவா :

    உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டால், 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது. அறிகுறி இல்லாவிட்டால், 5 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க விரைவு ஆன்டிஜென் பரிசோதனை செய்யுமாறும் தெரிவித்துள்ளது.

    • சீனாவில் தொற்று பரவல் மிகவும் அதிகரித்துள்ளது.
    • அங்கிருந்து வரும் தரவுகள் முழுமையாக இல்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

    ஜெனீவா:

    சீனாவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் தங்கள நாட்டில் இந்த தொற்று மீண்டும் எழுச்சி பெற்று விடக்கூடாது என கருதி முன் எச்சரிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

    சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் ஆக்கி உள்ளன. இதை உலக சுகாதார நிறுவனம் நியாயப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஜெனீவாவில் காணொலிக் காட்சி வழியாக பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், சீனாவில் தொற்று பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. அங்கிருந்து முழுமையான தரவுகள் இல்லை. இந்த நிலையில் சில நாடுகள் தங்கள் குடிமக்களைப் பாதுகாக்கும் என்று நம்பி எடுக்கிற நடவடிக்கைகள் சரியானவை, புரிந்துகொள்ளத் தக்கவை என்றார்.

    • கொரோனா வைரசால் உலக அளவில் இதுவரை 66.79 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
    • உலக அளவில் கொரோனா வைரசால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 66 கோடியைத் தாண்டியது.

    ஜெனீவா:

    சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    கொரோனா வைர்ஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.

    இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 கோடியைக் கடந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.29 கோடியைத் தாண்டியது.

    மேலும், கொரோனா வைரசால் உலக அளவில் இதுவரை 66.79 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    • தடுப்பூசி செலுத்துவதில் சீனா கவனம் செலுத்த வேண்டும்.
    • சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

    ஜெனீவா:

    சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் புதுவகை கொரோனா பரவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.

    இந்தியாவிலும் ஆலோசனை கூட்டம் நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்ற உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரயஸ், சீனா தடுப்பூசிகள் போடுவதை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், தற்போது சில நாடுகளில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. சீனாவில் உள்ள நிலைமை கவலை அளிக்கிறது. சீனாவின் கொரோனா பாதிப்பு பற்றிய விபரங்களை பகிர்ந்து ஆய்வுகள் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தடுப்பூசி செலுத்துவதில் சீனா கவனம் செலுத்தவேண்டும். சீனாவுக்குத் தேவையான உதவிகளை செய்ய உலக சுகாதார நிறுவனம் தயாராக உள்ளது என தெரிவித்தார்.

    • குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
    • குரங்கு அம்மை நோய் பரவல் சர்வதேச சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

    ஜெனீவா:

    உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது.

    குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக பதிவாகின.

    இந்நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்தலாக குரங்கு அம்மை நோய் பரவல் இருந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    பல நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய் பரவல் குறித்த அவசரக் குழுவின் 3-வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டப்பட்டது. கமிட்டியின் 15 உறுப்பினர்களில் 11 பேரும், 9 ஆலோசகர்களில் 6 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பேசுகையில், உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவலில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், சில நாடுகளில் சரிவைச் சந்தித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்தியங்களில் சில நாடுகளில் நோய் தொற்று அபாயம் அதிகரித்து வருகின்றன. மேலும் சில நாடுகளில் குறைவாக பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.

    • இலங்கை அரசுடனும், சர்வதேச சமூகத்துடனும் இந்தியா இணைந்து செயல்படும்.
    • இலங்கையின் அமைதி, நல்லிணக்கத்துக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்களின் உணர்வுகளை ஆதரித்தல் என்ற கொள்கைப்படி இந்தியா செயல்படும்.

    ஜெனீவா:

    இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள்.

    இதுதொடர்பாக இலங்கை அரசை ஐ.நா.வும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கடுமையாக விமர்சித்தன. இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2012, 2013, 2014, 2015, 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இருப்பினும், இலங்கை அரசிடம் மாற்றம் ஏற்படாததால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மீண்டும் இத்தகைய வரைவு தீர்மானத்தை உருவாக்கின. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 51-வது கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

    அதில், அந்த வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை பொறுப்புக்கு உள்ளாக்க வேண்டும். இலங்கையில் மனித உரிமைகளையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்த வேண்டும்.

    மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அரசு தீர்வு காண வேண்டும். இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும். ஊழலில் ஈடுபட்ட முன்னாள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்கு தொடர வேண்டும். பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணைக்கு நாங்கள்உதவுவோம்.

    இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானம் மீது நேற்று வாக்கெடுப்பு நடந்தது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மொத்தம் 47 நாடுகள் உள்ளன. வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 20 நாடுகளும், எதிராக சீனா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகளும் வாக்களித்தன.

    இந்தியா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது. இந்தியா, ஜப்பான், நேபாளம், கத்தார் உள்பட 20 நாடுகள் புறக்கணித்தன.

    பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

    வாக்கெடுப்புக்கு இடையே இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் இந்திரா மணி பாண்டே ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இலங்கையில் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்துதல், மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துதல் ஆகிய வாக்குறுதிகளை இலங்கை அரசு அளித்திருப்பதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் போதுமானது அல்ல.

    இந்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற இலங்கை பாடுபட வேண்டும். இலங்கை தமிழர்களின் சட்டபூர்வ உணர்வுகளை நிறைவேற்றுதல், அனைத்து இலங்கை மக்களின் வாழ்க்கையை செழிப்பாக்குதல் ஆகியவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவற்றை அடைய இலங்கை அரசுடனும், சர்வதேச சமூகத்துடனும் இந்தியா இணைந்து செயல்படும்.

    இலங்கையின் அமைதி, நல்லிணக்கத்துக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்களின் உணர்வுகளை ஆதரித்தல் என்ற கொள்கைப்படி இந்தியா செயல்படும்.

    இலங்கையின் அண்டை நாடு என்ற முறையில், 2009-ம் ஆண்டுக்கு பிறகு அங்கு மறுவாழ்வு பணிகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் உதவி செய்துள்ளது.

    இவ்வாறு இந்திய தூதர் கூறியுள்ளார்.

    • மூன்று நாடுகளின் கால்பந்து கூட்டமைப்பு தலைவர்கள் உலக கோப்பை போட்டிக்கான பிரசாரத்தை முன்வைத்தனர்,
    • போட்டியை நடத்தும் நாடு குறித்து 2024-ல் பிபா வாக்கெடுபபு நடத்தும்.

    நியோன்:

    உக்ரைனில் தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், போரின் பயங்கரத்தை முறியடிக்கவும், அதன் தாக்கத்தில் இருந்து மீண்டுள்ள மக்களின் கனவை நிறைவேற்றும் வகையிலும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு உக்ரைன் அரசு ஆயத்தமாகி வருகிறது. 2030ல் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியை ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்துவதற்கான கூட்டு முயற்சியை உக்ரைன் தொடங்கி உள்ளது.

    மூன்று நாடுகளின் கால்பந்து கூட்டமைப்பு தலைவர்களும் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் (உபா) தலைமையகத்தில் இணைந்து இதற்கான பிரச்சாரத்தை முன்வைத்தனர், இது விளையாட்டு உலகிற்கு அப்பால் மக்களை இணைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உக்ரைன் கால்பந்து கூட்டமைப்பு தலைவர் ஆண்ட்ரி பாவெல்கோ, இது லட்சக்கணக்கான உக்ரைன் ரசிகர்களின் கனவு என்றார். மேலும் போரின் பயங்கரத்தில் இருந்து மீண்டவர்கள் அல்லது இனனமும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களின் கனவு என்று கூறிய அவர், விரைவில் உக்ரைன் கொடி பறக்கும் என்றார். உலககோப்பை போட்டியை நடத்தும் திட்டத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி ஆதரவு தெரிவித்திருப்தாகவும் கூறினார்.

    மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பெயின்-போர்ச்சுகல் ஏலம், முன்னர் உபாவின் விருப்பமான போட்டியாளராக மாற்றப்பட்டது. போட்டியை நடத்தும் நாடு குறித்து 2024-ல் பிபா வாக்கெடுபபு நடத்தும். போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைத்தால் உக்ரைனில் எத்தனை ஆட்டங்கள் நடைபெறும்? என்ற விவரம் ஏதும் வெளியாகவில்லை.

    • சர்வதேச டென்னில் போட்டிகளில் இருந்து சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஓய்வு பெற்றார்.
    • தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் ரோஜர் பெடரர்.

    பெர்ன்:

    சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அண்மையில் ஓய்வு முடிவை அறிவித்தார்.

    20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அவருக்கு பல்வேறு நபர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏடிபி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.

    அந்த வீடியோவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ரோஜர் பெடரருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் டென்னிஸ் விளையாடுவதை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின்போது கிடைத்தது. டென்னிஸ் விளையாட்டில் நீங்கள் ஒரு சிறந்த வீரர். உங்களுடைய வாழ்வில் அடுத்த பயணத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், விராட் கோலியின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்ட ரோஜர் பெடரர், நன்றி விராட் கோலி.. விரைவில் இந்தியா வருவேன் எனத் தெரிவித்துள்ளார். விராட் கோலிக்கு டென்னிஸ் வீரர் பெடரர் நன்றி தெரிவித்தது வைரலாகி வருகிறது.

    ×