search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு தட்டுப்பாடு"

    • பாகிஸ்தானில் வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • 22 நாடுகளில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு குறைந்து வருவதால் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மேலும் கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பும் நிலவி வருவது அந்நாட்டை மேலும் சிக்கலில் தள்ளி உள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தானில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பு தீவிரமடைந்துள்ளதால் கடுமையான உணவு பாதுகாப்பின்மை அடுத்த மாதங்களில் உயரக் கூடும்.கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவுகளால் நிலைமை மோசமாசி உள்ளது. இது விவசாய துறையில் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. உணவு உற்பத்தி, உணவு கிடைப்பது, வாழ்வாதார சாத்தியக் கூறுகளை பாதித்தது.

    பொருளாதார நெருக்கடியால் உணவு மற்றும் பிற முக்கிய பொருட்களை குடும்பங்கள் வாங்கும் சக்தி குறைந்து இருக்கின்றன. வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை, பணத்தின் மதிப்பு குறைந்து வருவது ஆகியவை நாட்டின் முக்கிய உணவு மற்றும் எரிசக்தி விநியோகங்களை இறக்குமதி செய்வதற்கான திறனை குறைக்கின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கை வருகிற ஜூன் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தை உள்ளடக்கியது. ஏற்கனவே பாகிஸ்தானில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்று ஐ.நா. சபை தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    அதே போல் ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான், ஏமன், ஹைட்டி, சூடான் புர்கினா பாசோ, மாலி உள்பட 22 நாடுகளில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.

    • டான்பாஸ் பகுதியை கைப்பற்ற ரஷிய படைகள் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
    • உக்ரைன் போரால் பல நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் உக்கிரமான தாக்குதலால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, உலக தானிய சந்தையில் முக்கிய இடம்பிடித்துள்ள உக்ரைனில், தற்போது நடத்தப்படும் தாக்குதல்களால் உணவு தானியங்கள் அழிந்து வருகின்றன. ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட கோதுமை, மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில், தற்போது அறுவடை செய்யப்படும் தானியத்தை சேமிக்கவும் இடமில்லாத நிலை உள்ளது. உக்ரைன் போரால் பல நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், உக்ரைனில் உள்ள உணவு தானிய கிடங்குகள் அழிக்கப்படும் அவலமும் அரங்கேறுகிறது.

    உக்ரைனில் விவசாயம் செழிக்கும் கிழக்கு பகுதியில் தற்போது போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டான்பாஸ் பகுதியை கைப்பற்றுவதற்காக ரஷிய படைகள் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. கருங்கடல் துறைமுக பகுதியான மைகோலைவில் உணவு தானிய கிடங்கை ரஷிய ஏவுகணைகள் தகர்த்துள்ளன.

    இந்த தானிய கிடங்கில் மட்டும் 3 லட்சம் டன் கோதுமை, மக்காச்சோளம், சூரியகாந்தி விதைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. அவை முற்றிலும் நாசமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வயல்களில் குறுக்கும் நெடுக்கும் செல்லும் டாங்கிகள் மற்றும் ஏவுகணைகளால் டான்பாஸ் கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் ஆங்காங்கே தீப்பற்றி எரிகிறது.

    தீயை அணைக்க முயற்சிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் என்ன செய்தோம்? வயல்களை எரிப்பதால் என்ன கிடைக்கப்போகிறது? என அவர்கள் கண்ணீர்மல்க கூறுகின்றனர்.

    இதுபோன்ற நிலை தொடர்ந்தால் விலைவாசி உயர்வு தொடரும், பட்டினிச்சாவு அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

    வடகொரியா எப்போதுமே உணவு பொருட்கள் பற்றாக்குறையால் தத்தளித்து வந்தாலும் கொரோனா பெருந்தொற்று நிலைமையை மிக மோசமாக்கி உள்ளது.
    சியோல் :

    உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் கண்டுகொள்ளாமல் 2006-ம் ஆண்டு முதல் வடகொரியா அணுக்குண்டுகளை சோதித்து வந்துள்ளது. அத்துடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவி பரிசோதித்து வருகிறது.

    இதன் காரணமாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

    இதனால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.

    இந்த சோதனைக்கு மத்தியில் அங்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. உணவுப்பொருட்கள் வினியோகச்சங்கிலி முறிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    தற்போதையை நிலைமையை வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன், 1990-களில் அங்கு நிலவிய பஞ்சத்துடன் ஒப்பிட்டுள்ளார். ‘ஆர்டியஸ் மார்ச்’ என்று அழைக்கப்பட்ட அந்த பஞ்சத்தில் லட்சக்கணக்கானோர் செத்து மடிந்தது வரலாற்றின் கரும்புள்ளியாக பதிவாகி உள்ளது.

    இந்த நிலையில் பொதுமக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று கிம் ஜாங் அன் சமீபத்தில் உத்தரவிட்டது, மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

    அங்கு குளிர்காலம் வருகிற நிலையில் இப்போதே மக்கள் பட்டினி கிடப்பதாகவும், பட்டினிச்சாவுகள் நேரிடுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    வடகொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு தாவி உள்ள குடும்பங்கள், தங்கள் குடும்பத்தினர் வடகொரியாவில் பட்டினியால் தவிக்கின்றனர் என கூறி உள்ளனர்.

    ‘டெய்லி என்.கே.’ பத்திரிகை ஆசிரியர் லீ சாங் யாங் இதுபற்றி குறிப்பிடுகையில், “தெருக்களில் அனாதை குழந்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பட்டினியால் இறப்பது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து தெரிவிக்கப்படுகின்றன. அடித்தட்டு மக்கள் மென்மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு பொருட்கள் பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது” என தெரிவித்தார்.

    வடகொரியா எப்போதுமே உணவு பொருட்கள் பற்றாக்குறையால் தத்தளித்து வந்தாலும் கொரோனா பெருந்தொற்று நிலைமையை மிக மோசமாக்கி உள்ளது.

    வரக்கூடிய அறுவடையை வட கொரிய மக்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    அறுவடை மூலம் கிடைக்கிற ஒவ்வொரு அரிசியையும் சோளத்தையும் பத்திரமாக சேகரிக்குமாறு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் வயல்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

    அறுவடையின்போது இழப்புகளை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ‘டெய்லி என்.கே.’ பத்திரிகை ஆசிரியர் லீ சாங் யாங் தெரிவித்துள்ளார்.

    அறுவடையின்போது திருட்டு போனாலோ, ஏமாற்றினாலோ கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் வடகொரியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    ×