search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா தலம்"

    தமிழ்நாட்டில் உள்ள 300 சுற்றுலாத்தலங்களை சர்வதேசதரத்திற்கு இணையாக மாற்ற முடிவு செய்து சுற்றுலா பெருந்திட்டத்தை தயாரிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் தனித்துவத்தை நிலைப்படுத்துதல், சுற்றுலாத்தலங்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுலாப் பயணிகள் தங்கும் காலத்தினை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசின் சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

    தனியார் மற்றும் அந்நிய முதலீட்டை உருவாக்குதல், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுற்றுலா பெருந்திட்டத்தை ஏற்படுத்த தமிழக அரசு சுற்றுலாத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

    தமிழ்நாட்டின் கலாச் சாரம், வரலாறு மற்றும் பாரம் பரிய உணவுமுறையை பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகளை அதிகளவு ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

    இவை அனைத்தையும் 300 சுற்றுலாத்தலங்களில் செயல்படுத்தி சர்வதேச தரத்துக்கு இணையாக மாற்றும் விதமாக சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

    இதையும் படியுங்கள்... மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

    சுற்றுலா தலங்களில் ‘செல்பி’ எடுப்பதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. #SelfieZone #TourismSpots
    புதுடெல்லி:

    நீர் வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் செல்போனில் ‘செல்பி’ புகைப்படம் எடுத்து வருகிறார்கள். படம் சிறப்பாக அமைய வேண்டி, அவர்கள் செய்யும் தவறுகளால் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கிறார்கள்.

    இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், இவற்றை தடுக்க மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் அகிர் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கூறியதாவது:-

    சுற்றுலா தலங்களில் ‘செல்பி’ எடுக்கும்போது ஏற்படும் விபத்துகள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்தகைய விபத்துகளை தடுத்து சுற்றுலா பயணிகளை பாதுகாப்பதற்காக எண்ணற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில, யூனியன் பிரதேச அரசுகளை மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

    ‘செல்பி’ விபத்து ஏற்படும் பகுதிகளை முதலில் அடையாளம் கண்டறிய வேண்டும். அந்த இடங்களில் ‘செல்பி’ எடுக்க ‘தடை விதிக்கப்பட்ட பகுதி’ என்ற எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். அந்த இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்லாத வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும். இவையெல்லாம் மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் முக்கிய பொறுப்பாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SelfieZone #TourismSpots
    சுற்றுலா தலங்களை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் கூறினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் தூய்மை இந்தியா இயக்க திட்டத்தின் கீழ் தூய்மை சேவை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, தூய்மை பணிகளை தொடங்கி வைத்து, அதற்கான உபகரணங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் சுற்றுலாத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியதன் பயனாக இந்தியாவில் சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    இத்தகைய சிறப்புமிக்க சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், அனைத்து சுற்றுலா தலங்களும் தொடர்ந்து தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா தலங்களில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பில் தூய்மைப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல், குடுமியான்மலை, நார்த்தாமலை, ஆவுடையார்கோவில், குன்றாண்டார்கோவில், கொடும்பாளூர், திருக்கோகர்ணம், திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புகழ் பெற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. சுற்றுலா தலங்களில் பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில் அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் தூய்மையாக பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சுற்றுலா தலங்களுக்கு வரும் பொதுமக்கள் இதன் மூலம் உரிய விழிப்புணர்வு பெற்று சுற்றுலா தலங்களில் தேவையற்ற குப்பைகள் போடுவதை தவிர்த்து தூய்மையாக பராமரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொண்டனர். இதில் மாவட்ட சுற்றுலா அதிகாரி இளங்கோவன், மன்னர் கல்லூரி பேராசிரியர் வேலு, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    மெக்சிகோவில் உள்ள சுற்றுலா தலத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். #MexicoFiring
    மெக்சிகன் சிட்டி:

    மெக்சிகோவில் உள்ள கரிபால்டி சுற்றுலா தலத்தில் ஏராளமானோர் நேற்று திரண்டிருந்தனர். அங்கு வார விடுமுறையை உற்சாகமாக கழித்துக் கொண்டிருந்தனர்.
     
    அப்போது அங்கு ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் பைக்கில் வந்தது. அவர்கள் இசைக்கலைஞர்கள் போன்று வேடமணிந்திருந்தனர்.

    அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கிகளால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இந்த திடீர் தாக்குதலில் ஒரு பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். என்ன காரணத்துக்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #MexicoFiring
    ஊட்டியில் சுற்றுலா தலங்கள் குறித்த புதிய வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஊட்டி:

    ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கப் படுகிறது. ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், தேயிலை பூங்கா உள்ளிட்டவை இருக்கின்றன. சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கடந்த ஆண்டு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர். ஆண்டுக்கு ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து கொண்டே செல்கிறது.

    ஆனால் புதிதாக வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் எந்தெந்த இடங்களில் சுற்றுலா தலங்கள் இருக்கின்றன என்பது தெரியாமல் வாகனங்களில் தேடி அலையும் நிலை இருந்தது. இதனால் சிலர் திட்டமிட்டபடி சுற்றுலா தலங்களை காண முடியாமல் தவித்தனர். மேலும் சிலர் சுற்றுலா வழிகாட்டிகளின் உதவியோடு சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சுற்றுலா பயணிகள் எளிதில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வகையில் புகைப்படங்களுடன் கூடிய வழிகாட்டி பலகைகள் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டன.

    அவை வைக்கப்பட்டு பல மாதங்களை கடந்ததாலும், முறையாக பராமரிக்காததாலும் வழிகாட்டி பலகைகளில் குறிப்பிடப்பட்டு இருந்த சுற்றுலா தலங்கள், அவற்றுக்கு செல்லும் தூரம்(கிலோ மீட்டரில்) குறித்த விவரங்கள் அழிய தொடங்கி விட்டன. மேலும் இரும்பு பலகைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் துருப்பிடித்தன. இதையடுத்து வழிகாட்டு பலகைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நீலகிரி மாவட்ட வரைபடத்துடன் சுற்றுலா தலங்கள் குறித்த புதிய வழிகாட்டி பலகைகள் ஊட்டியில் வைக்கப்பட்டு உள்ளன. ஊட்டி மத்திய பஸ் நிலையம் எதிரில், சேரிங்கிராஸ், ஊட்டி படகு இல்லம், பிங்கர்போஸ்ட், தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரம் சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி ஏரி, ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, கர்நாடகா பூங்கா, அரசு அருங்காட்சியகம், வேலிவியூ, தொட்டபெட்டா மலைச்சிகரம், காமராஜ் சாகர் அணை, கல்லட்டி நீர்வீழ்ச்சி, பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், அவலாஞ்சி, அப்பர்பவானி, கூடலூர் பஸ் நிலையத்தில் இருந்து தொரப்பள்ளி தொங்கு பாலம், ஊசிமலை காட்சிமுனை, தவளைமலை காட்சிமுனை, தெப்பக்காடு, சேரம்பாடி, கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து நேரு பூங்கா, கேத்ரின் நீர்வீழ்ச்சி, கோடநாடு காட்சிமுனை, குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து சிம்ஸ் பார்க், லேம்ஸ் ராக், காட்டேரி நீர்வீழ்ச்சி, காட்டேரி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல எத்தனை கிலோ மீட்டர் தூரம் உள்ளது என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சுற்றுலா வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    ஊட்டியின் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க உதவியாக புதிய வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அவற்றில் சில சுற்றுலா தலங்களுக்கு செல்லும் கிலோ மீட்டர் தூரம் குறைவாகவும், கூடுதலாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்பாக பைக்காரா நீர்வீழ்ச்சிக்கு 23 கிலோ மீட்டர் எனவும், பைக்காரா படகு இல்லத்துக்கு 21 கிலோ மீட்டர் எனவும் இருக்கிறது. பைக்காரா நீர்வீழ்ச்சியை அடுத்து தான் பைக்காரா படகு இல்லம் இருக்கிறது. எனவே குழப்பம் அடைய வேண்டிய நிலை உள்ளது. எனவே தவறாக இடம்பெற்றுள்ள தூர விவரத்தை சரியாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து ஊட்டி படகு இல்லம் மூடப்பட்டது. பல்வேறு சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
    ஊட்டி:

    தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி மறைவை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கி வரும் ஊட்டி படகு இல்லத்தின் நுழைவு வாயில்கள் நேற்று மூடப்பட்டு பூட்டு போடப்பட்டு இருந்தது. அதில் ஒரு நுழைவுவாயிலில் கருணாநிதி உருவப்படம் வைக்கப்பட்டு கருப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது.



    ஊட்டி படகு இல்லத்தில் வார விடுமுறை இல்லாத நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும். ஆனால், நேற்று படகு இல்லத்தின் உள்பகுதியில் மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. வளாகத்தில் உள்ள பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஊட்டி படகு இல்ல சாலையில் குதிரை சவாரி ரத்து செய்யப்பட்டது. ஊட்டி படகு இல்லம் மூடப்பட்டதால், அங்கு கார்களில் வந்த சில சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    தோட்டக்கலைத்துறை மூலம் செயல்பட்டு வரும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய சுற்றுலா தலங்கள் திறந்து இருந்தன. ஆனால் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி இருந்ததை காண முடிந்தது. சில சுற்றுலா பயணிகள் மட்டும் கொட்டும் மழையில் குடைகளை பிடித்தபடி பூங்காவில் வலம் வந்தனர்.

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க வருகை தருவார்கள். இதனால் ஊட்டியில் முக்கிய சந்திப்பு பகுதியான சேரிங்கிராஸ் பகுதியில் எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டு இருக்கும். ஆனால், நேற்று வாகன போக்குவரத்து இன்றி சேரிங்கிராஸ் பகுதி வெறிச்சோடியது.

    அதேபோல் ஊட்டி-கோத்தகிரி சாலை, ஊட்டி-குன்னூர் சாலையில் குறைந்த எண்ணிக்கையிலேயே வாகனங்கள் சென்றன. கமர்சியல் சாலை, மாரியம்மன் கோவில் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது. 
    ஊட்டி அருகே பைன்பாரஸ்ட் சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. அங்கு பூங்கா மற்றும் காட்சி முனை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. மலைப்பிரதேசமாக உள்ளதால், ஊட்டி நகரை சுற்றிலும் வனப்பகுதிகள் உள்ளன. ஊட்டியை சுற்றி பல இடங்கள் மரங்கள் இல்லாமல் வெட்ட வெளியாக காட்சி அளித்தது. அந்த இடங்களை அழகுப்படுத்துவதற்காக வனத்துறை சார்பில், வெளிநாட்டில் இருந்து பைன் மரக்கன்றுகள் இறக்குமதி செய்யப்பட்டது. ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தலைகுந்தா பகுதி மற்றும் சோலூர் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் பைன் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

    ஊட்டி தலைகுந்தா அருகே பைன்பாரஸ்ட் (பைன் மரக்காடுகள்) சுற்றுலா தலம் உள்ளது. இங்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சினிமா படப்பிடிப்புகள் நடைபெறுவது வழக்கம். இங்கு ஒரு நபருக்கு ரூ.5 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பைன் மரக்காடுகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சரிவுகளில் உயரமாக வளர்ந்து உள்ள பைன் மரங்களை கண்டு ரசிப்பதுடன், செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். அங்கு கீழே விழுந்த மரங்கள் இருக்கைகளாக மாற்றப்பட்டு உள்ளது. அந்த இருக்கைகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து கண்டு களிக்கின்றனர். மேலும் பைன் மரக்காடுகளின் கீழ்பகுதியில் காமராஜ் சாகர் அணையில் எழில்மிகு தோற்றம், இயற்கை அழகை காணலாம்.

    ஊட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. அப்போது பைன் மரக்காடுகளில் கீழே நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் வழுக்கி விழும் அபாயம் இருந்தது. சிலர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். மேலும் மழையின் போது சுற்றுலா பயணிகள் ஒதுங்கி நிற்க போதுமான வசதிகள் இல்லை. இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில், பைன் மரக்காடுகளில் சுற்றுலா பயணிகளுக்காக மேம்பாட்டு பணிகளை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து பைன்பாரஸ்ட் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பைன்பாரஸ்ட் மூடப்பட்டு இருப்பதை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பைன் மரக்காடுகளுக்கு வருகின்றனர். வார விடுமுறை, சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நடைபாதையுடன் கூடிய படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஊட்டி-கூடலூர் சாலையில் பைன்பாரஸ்ட் முன்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளது. கீழ்பகுதியில் பல்வேறு மலர் செடிகளை கொண்டு பூங்கா அமைத்து, சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை ரசிக்கும் வகையில் காட்சி முனை அமைக்கப்பட உள்ளது. அந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. மேம்பாட்டு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பைன் பாரஸ்ட் மீண்டும் திறக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார். 
    ராமேசுவரத்தை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றிடும் வகையில் ரூ. 31 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவில் கிழக்கு கோபுரவாசல் அருகே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மேளா நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர் மணிகண்டன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவுப் பொருட்களை வழங்குவது குறித்து உணவு வணிகர்களுக்கும், உணவு விடுதிகள் மற்றும் குளிர்பான கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கி உட்கொள்ளும் போது விழிப்புடன் கவனிக்க வேண்டிய வி‌ஷயங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதுதொடர்பாக விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும் பொதுமக்கள் மற்றும் உணவு வணிகர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பாக 94440 42322 என்ற “வாட்ஸ்அப்” எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புகார் எண் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பாதுகாப்பான உணவு மற்றும் பாதுகாப்பற்ற உணவு மாதிரிகள் குறித்து பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் செயல்முறை விளக்க அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு அரங்குகளை அமைச்சர் மணிகண்டன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமேசுவரம் பழைமை வாய்ந்த புனித தலமாகவும், சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்த்திடும் சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. ராமேசுவரத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், அருகே உள்ள தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கும் குடும்பத்தினருடன் சென்று மகிழ்ச்சியாக பொழுது போக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது.

    அதன் அடிப்படையில் ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்த்திடும் வகையில் மத்திய அரசின் சுவதேஷ் தர்‌ஷன் திட்டத்தின் கீழ் ரூ. 15.86 கோடி மதிப்பில் ராமேசுவரம் நகராட்சியின் மூலம் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

    குறிப்பாக ஜெ.ஜெ. நகர் பகுதியில் ரூ. 1.51 கோடி மதிப்பில் வாகன நிறுத்துமிடம், சங்கு அணி கலன்கள் கடை அமைத்தல் போன்ற பணிகளும், வாகன நிறுத்துமிட வளாகத்தில் ரூ. 65 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறைகளும், அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் ரூ. 37.15 லட்சம் மதிப்பில் எல்.இ.டி. பல்புகளுடன் தெரு மின் கம்பங்கள் மற்றும் ரூ. 35.45 லட்சம் மதிப்பில் நவீன ஒளிரும் தகவல் பலகைகள் அமைத்தல், ரூ. 20.90 லட்சம் மதிப்பில் உடை மாற்றும் அறைகள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதேபோல் தனுஷ்கோடி பகுதிகளில் உள்ள புராதன கட்டிடங்களை அதன் பழைமை மாறாமல் புனரமைத்திட ரூ.1.37கோடி மதிப்பிலும், இ-சைக்கிள், இ-ரிக்ஷா, மினி பஸ் என வாகன வசதிகளுக்கு ரூ.95 லட்சம் மதிப்பிலும், எம்.ஆர்.சத்திரம் பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பில் மொபைல் டாய்லெட் மற்றும் ரூ.80 லட்சம் மதிப்பில் பொருட்கள் வைப்பு அறை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.4.37 கோடி மதிப்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

    இது தவிர தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக ரூ.4.52 கோடி மதிப்பில் ஒளி-ஒலி காட்சிகள் அமைத்திடவும், ரூ.6.18 கோடி மதிப்பில் ராமாயண சுற்றுத்தொடர் பணிகள் என மொத்தம் ரூ.30.93 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளும் செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

    விரைவில் தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெற்று, ராமேசுவரத்தை சிறந்த சுற்றுலா தலமாக ஏற்படுத்திடும் வகையில் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×