search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் நிறுவனம்"

    மேட்டுப்பாளையத்தில் தனியார் நிறுவன காவலாளி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    திருச்சியை சேர்ந்தவர் மணி (வயது 69). இவர் கடந்த 20 ஆண்டுகளாக புதுவையில் நண்பருடன் தங்கி மேட்டுப்பாளையத்தில் பாலிதீன் பை தயாரிக்கும் தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 24-ந்தேதி தவறி விழுந்ததில் மணிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஆனால், இதற்கு எதுவும் சிகிச்சை பெறாமல் மறு நாள் 25-ந்தேதி வழக்கம் போல் தொழிற்சாலைக்கு பணிக்கு வந்தார்.

    அப்போது திடீரென மணி மயங்கி விழுந்தார். உடனே தொழிற்சாலையில் இருந்த மற்ற ஊழியர்கள் மணியை மீட்டு சிகிச்சைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை மணி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து மணியின் மகன் கதிரேசன் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    நெட்டப்பாக்கத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியர் திடீரென மயங்கி விழுந்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    சேதராப்பட்டு:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கீழ் வெள்ளைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வைரசாமி. இவரது மகள் நீலவேணி (வயது 19). இவர், புதுவை நெட்டப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப ஊழியராக கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிந்து வந்தார்.

    அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி தினமும் பணிக்கு சென்று வந்தார். இன்று காலை முதல் ஷிப்டு பணிக்கு காலை 5.30 மணிக்கு சென்றார். அங்குள்ள கேண்டீனில் காலை சிற்றுண்டி சாப்பிட சென்ற நீலவேணி திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனடியாக சக ஊழியர்கள் அவரை மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நீலவேணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நீலவேணியின் மர்ம மரணம் குறித்து அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்துக்கு சென்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பெண் ஊழியர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களிடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    சென்னை விமான நிலையத்தில் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த கார் பார்க்கிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. #ChennaiAirport #AAI
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தை நிர்வகித்து, வாகனங்களிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கு எஸ்.எஸ். என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்கப்பட்டிருந்தது. இதற்காக ஆண்டிற்கு ரூ.200 கோடி என்ற அடிப்படையில் பார்க்கிங் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இந்த ஒப்பந்தம் போட்டு சுமார் ஓராண்டு ஆன நிலையில், ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்த நிறுவனம் போலியான வங்கி உத்தரவாதம் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பார்க்கிங் ஒப்பந்தத்தை இந்திய விமானநிலைய ஆணையம்  ரத்து செய்தது.

    இன்று நள்ளிரவு வரை மட்டுமே எஸ்.எஸ்.எண்டர்பிரைசஸ் நிறுவனம் பார்க்கிங் பகுதியை நிர்வகித்து கட்டணம் வசூலிக்க முடியும். அதன்பின்னர் பார்க்கிங் பகுதி இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு வரும்.



    விரைவில் புதிய டெண்டர் கோரப்பட்டு பார்க்கிங் ஒப்பந்தம் வழங்கப்படும். அதுவரை 3 மாதத்திற்கு குறுகியகால ஒப்பந்தம் போடவும் விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது.

    பார்க்கிங் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களை குறைப்பதற்காக விமான நிலைய ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக வெள்ளிக்கிழமை முதல் சாப்ட்வேர் மற்றும் பிற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கார்களுக்கு டோக்கன் வழங்க திட்டமிட்டுள்ளது. #ChennaiAirport #AAI
    அன்னவாசல் அருகே தனியார் நிறுவனத்தை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் அருகே ஆரீயூரில் தனியாருக்கு சொந்தமான தார் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது. இதில் இருந்து வெளியேறும் கரும் புகைகள் மற்றும் தூசிகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்வதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதார சீர்கேடு உருவாகிறது எனவும், சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் கூறி அந்த நிறுவனத்தை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த தனியார் நிறுவனத்தை நேற்று முற்றுகையிட்டனர். 

    இதையடுத்து அந்த நிறுவன அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் சான்றிதழ் அச்சடிப்பில் ரூ.62 கோடி ஊழல் நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக தனியார் நிறுவனத்திடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். #AnnaUniversity #RevaluationScam
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு மே-ஏப்ரல் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வின் போது தேர்வுத்தாள் மறு மதிப்பீடுகள் நடந்தபோது பணம் வாங்கிக் கொண்டு மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

    ஒரு தேர்வுத்தாளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வாங்கிக் கொண்டு கூடுதல் மதிப்பெண் அளித்துள்ளனர். சுமார் 45 ஆயிரம் மாணவர்களிடம் இப்படி பணம் வாங்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இது தொடர்பாக 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். அவர்களது முதல் கட்ட விசாரணையில் 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 6 செமஸ்டர்களில் சுமார் ரூ.200 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்து இருப்பதாக கருதப்படுகிறது.



    இந்த கால கட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்தவர் உமா. இவரை தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் உமா அதிகாரியாக இருந்த அதே காலக்கட்டத்தில் மதிப்பெண் பட்டியல் அச்சிட்டு தயாரிப்பதிலும் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மதிப்பெண் சான்றிதழ் அச்சடிப்பதற்காக ரூ.84.71 கோடியை அண்ணா பல்கலைக்கழகம் செலவு செய்துள்ளது. இதில் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதிப்பெண் சான்றிதழ் அச்சிட ரூ.62.34 கோடி கொடுத்துள்ளனர்.

    இதற்கு அனுமதி கொடுத்தது, பணம் கைமாறியது உள்பட எதிலும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்காக மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்க 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து குறைந்த செலவில் பாதுகாப்பு அம்சங்களுடன் மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து வழங்க முடியுமா? என்று தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, 9 நிறுவனங்களுக்கு கடிதம் எழுதினார்.

    அந்த 9 நிறுவனங்களும் எவ்வளவு தொகைக்கு அச்சிட்டு தர முடியும் என்பதை 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் தர வேண்டும் என்று அவர் தேதி நிர்ணயம் செய்திருந்தார். செப்டம்பர் மாதம் 15-ந்தேதி வரை 3 நிறுவனங்கள் மட்டுமே இதற்கு பதில் அளித்திருந்தன.

    ஆனால் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா அந்த 3 நிறுவனங்களுக்கும் மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து தரும் ஒப்பந்தத்ததை கொடுக்கவில்லை. அதற்கு பதில், “இன்காக்னிடோ போரன்சிக் பவுண்டே‌ஷன்” எனும் பெயர் கொண்ட ஒரு நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்கினார். அந்த நிறுவனம் ஒப்பந்தம் பெற விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் அந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டே 15 நாட்கள் தான் ஆகியிருந்ததாம். இதுபற்றி செப்டம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக உயர்மட்டக் குழு அதிகாரிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, “5 நிறுவனங்கள் பதில் அளித்தன. 4 நிறுவனங்கள் பதில் அளிக்கவில்லை” என்றார்.

    ஆனால் அவர் குறிப்பிட்ட 9 நிறுனங்களின் பெயர்களும் ஏற்கனவே ஒப்பந்தத்துக்காக விண்ணப்பித்த நிறுவனங்களுடன் ஒத்துப் போகவில்லை.

    இதற்கிடையே 2016-ம் அண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி மதிப்பெண் சான்றிதழ் அச்சடிப்புக்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்கள் குறிப்பிட்டிருந்த தொகையை ஒப்பிட்டு ஒரு விபர அறிக்கையை தயாரித்தார். விண்ணப்பித்திருந்த எந்த நிறுவனத்துக்கும் அவர் ஒப்பந்தத்தை வழங்கவில்லை. அதற்கு பதில் புதிய நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்தார்.

    அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்ட சமயத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிரேடு மதிப்பெண் சான்றிதழ்கள், புரவி‌ஷனல் சர்டிபிகேட், டிகிரி சர்டிபிகேட் போன்றவை தயாரிக்க 2 லட்சம் சான்றிதழ்களே தேவைப்பட்டன. ஆனால் 20 லட்சம் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிப்பதற்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். கூடுதலாக 18 லட்சம் சான்றிதழ்களை ஒரு புதிய நிறுவனம் மூலம் இவ்வளவு கோடி செலவழித்து அச்சடிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் உயர் கல்வித்துறை செயலாளர் சுனீல் பாலிவால் தலைமையிலான குழு இதுபற்றி ஆய்வு செய்தபோது ரூ.62 கோடி முறைகேடு அம்பலமானது.

    இதையடுத்து உயர் கல்வித்துறை செயலாளர் சுனீல்பாலிவால் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அனுப்பினார். 6 பக்கங்களில் அவர் மிக விளக்கமாக இந்த முறைகேடுகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

    இது குற்றவாளிகளை உடனே நெருங்குவதற்கு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உதவியாக இருந்தது. தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுகுறித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். எனவே அடுத்தக்கட்டமாக கைது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AnnaUniversity #RevaluationScam

    மராட்டியத்தில் நிலக்கரி ஊழல் வழக்கில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.101 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர்.
    மும்பை:

    மராட்டியத்தை சேர்ந்த தனியார் நிலக்கரி சுரங்க நிறுவனம் சட்டவிரோதமாக தனது நிலக்கரி சுரங்கத்தை சத்தீஷ்கர் மாநிலத்தில் விரிவுபடுத்தியது. அந்த நிறுவனம் நிலக்கரி ஊழலில் ஈடுபட்டு பணமோசடி செய்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.101 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி உள்ளனர்.

    இதன்படி சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் உள்ள ரூ.80 கோடி மதிப்பிலான தொழிற்சாலை மற்றும் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ரூ.21 கோடி நிலம் ஆகியவை முடக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.


    சோழத்தரம் அருகே டிராக்டரை தனியார் நிறுவனத்தினர் எடுத்து சென்றதால் மனமுடைந்த விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள கருணாகரநல்லூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 45). விவசாயி. இவர் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு தனியார் நிறுவனத்திடம் இருந்து டிராக்டர் ஒன்று விலைக்கு வாங்கி இருந்தார். அதற்கு மாதந்தோறும் தவணை தொகை செலுத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழரசனால் தவணை தொகையை கட்ட முடியவில்லை. இதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தினர், தவணை தொகையை உடனே செலுத்துங்கள் என்று கூறியுள்ளனர். ஆனாலும் அவர் பணத்தை செலுத்தாமல் இருந்துள்ளார்.

    மேலும் அவர் டிராக்டரை ஒரு மறைவான இடத்தில் பதுக்கி வைத்திருந்தார். இது பற்றிய தகவல் அறிந்த தனியார் நிறுவனத்தினர் நேற்று தமிழரசனின் வீட்டுக்கு வந்தனர்.

    வீட்டின் அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த டிராக்டரை எடுத்து சென்று விட்டனர். இதனால் தமிழரசன் மனஉளைச்சல் அடைந்தார்.

    பின்னர் அவர் தவணை தொகையை தன்னால் கட்ட முடியவில்லையே என வேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்தார்.

    வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம் பரம் ராஜாமுத்தையா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழரசன் இன்று பரிதாபமாக இறந்தார்.

    தவணை தொகையை செலுத்த முடியாததால் தனியார் நிறுவனத்தினர் டிராக்டர் எடுத்து சென்றதால் விவசாயி மனம் உடைந்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.

    வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தமிழரசனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    ஆக்ராவில் சாலைப் பணி மேற்கொண்ட தனியார் நிறுவனம் நாயைக் கொன்று புதைத்ததாக அளித்த புகாரைத் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #RoadOverDog
    ஆக்ரா:

    உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் சாலை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம் சார்பில் பரேபூர் சாலையில் வேலை நடந்தபோது, ஒரு நாயைக் கொன்று புதைத்து அதன் மீது சாலை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    போலீசில் இதுபற்றி  புகாரும் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், மனுதாரர் குறிப்பிட்ட சாலைக்கு சென்று நாயின் உடலை தோண்டி எடுத்து அப்புறப்படுத்தினர்.

    மேலும், சாலைப் பணி மேற்கொண்ட தனியார் நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  சாலைப் பணிக்காக நாயை பலி கொடுத்தார்களா? அல்லது இறந்து கிடந்த நாயை அப்புறப்படுத்தாமல் அப்படியே சாலை போட்டார்களா? என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும். #RoadOverDog
    தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது தந்தை பெருந்துறை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    பெருந்துறை:

    கடலூர் மாவட்டம், புவனகிரி, அரகஆலம்பாடி, முகந்தரியான் குப்பம் பகுதியைசேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் தேன்மொழி (வயது 19). இன்னும் திருமணமாகாத பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், புலவர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

    கம்பெனி வளாகத்தில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி வேலைபார்த்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து 9 மணியளவில் ஹாஸ்டல் வளாகத்தில் துணிமணிகள் துவைக்கும் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதனைக்கண்ட ஹாஸ்டல் வார்டன் தேன்மொழியின் பெற்றோருக்கு அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக தகவல் கொடுத்துள்ளார். இதனால் அலறியடித்து ஊரில் இருந்து தேன்மொழியின் தந்தை கோவிந்தராஜ் கம்பெனிக்கு வந்துள்ளார். அங்கு பணிபுரிந்து வரும் கடலூர் பகுதியை சேர்ந்த தேன்மொழியின் தோழியான தமிழ் என்பவரிடம் விசாரித்த போது, தேன் மொழி நேற்று இரவு துணி துவைப்பதற்காக ரூமில் இருந்து சென்றதாகவும், அங்குள்ள இரும்பு தூணை பிடித்த போது அதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

    இதனை கேட்ட கோவிந்தராஜ் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் இறந்த தேன்மொழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார்.

    ×