என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருப்பரங்குன்றம் முருகன்"
- 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
- மாவிளக்கு எடுத்து தங்களது கந்த சஷ்டி விரதத்தை முடித்துக் கொண்டனர்.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு சண்முகார்ச்சனைகள் நடைபெற்றன.
விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியாக கடந்த 6-ந்தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மாலை 6 மணி அளவில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழை யையும் பொருட்படுத்தாமல் சூரசம்கார லீலையை கண்டு களித்தனர். தொடர்ந்து கோவிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.
இதையடுத்து பூ சப்பரத்தில் எழுந்தருளி சுப்ரமணிய சுவாமி தெய்வானை உடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் நிறைவு நாளான இன்று காலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் சிறிய சட்டத்தேரில் எழுந்தருளினார். காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து கிரிவலப் பாதை வழியாக இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இன்று மாலை 3 மணி அளவில் பாவாடை தரிசனமும் அதனைத் தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவச அலங்காரமும் நடைபெறுகிறது.
காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அதிகாலையில் மாவிளக்கு எடுத்து தங்களது கந்த சஷ்டி விரதத்தை முடித்துக் கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் அறங்கா வலர் குழு தலைவர் சத்திய பிரியா பாலாஜி, அறங்கா வலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- முருகப்பெருமான் தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார்.
- பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டார்.
திருப்பரங்குன்றம்:
மதுரையில் மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு சென்ற திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பூப்பல்லக்கில் ஊர் திரும்பினார். தங்கை மீனாட்சிக்கு, சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்துக் கொடுத்த பவளக்கனி வாய்பெருமாளும் தன் இருப்பிடம் வந்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 12-ந்தேதி முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 21-ந் தேதி மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடந்தது. அதில் மீனாட்சி அம்மனின் அண்ணனாக பவளக்கனிவாய் பெருமாள் இருந்து சுந்தரேசுவரருக்கு மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுத்தார்.
இதனையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து கடந்த 20-ந்தேதி மாலை 5 மணியளவில் மேள தாளங்கள் முழங்க பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.
இதேவேளையில் முருகப்பெருமான் தனது தாய், தந்தை (மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்காக) புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.
பின்னர் 21-ந் தேதி நடைபெற்ற திருக்கல்யாணம் வைபவத்தில் பங்கேற்று அருள்பாலித்தனர். நேற்று மாலை 5 மணி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் மதுரை நகைக்கடை வீதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க வாசனை கமழும் வண்ண மலர்களான பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார்.
இதே வேளையில் பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டார். மீனாட்சி பள்ளம், ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம், பைக்கரா பசுமலை வழியாக வழிநெடுகிலுமாக அமைக்கப்பட்டு இருந்த திருக்கண் மற்றும் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தப்படியே இரவில் திருப்பரங்குன்றம் வந்தடைந்து தன் இருப்பிடம் சென்றார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.
- இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர விழா இன்று நடக்கிறது
- அம்பாளுக்கு நெய்வேத்தியம் படைத்து சிறப்பு பூஜை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் "பூரம்"விழா விசேஷமாகும். ஒவ்வொரு ஆண்டும ஐப்பசி மாதத்தில் ஐப்பசி பூரம் விழாவும், ஆடிமாதத்தில் ஆடிப்பூர விழாவுமாக ஒரு ஆண்டிற்கு 2 பூர விழா கொண்டாடப்படுகிறது. ஐப்பசி பூர விழாவில் தெய்வானை அம்பாளும், ஆடிப்பூர விழாவில் கோவர்த்தனம்பிகையும் எழுந்தருளி நகர் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர விழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி மாலை 6.30 மணியளவில் மேளதாளங்கள் முழங்க கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் இருந்து திருவாட்சி மண்டபத்திற்கு சர்வ அலங்காரத்தில் கோவர்த்தனாம்பிகை எழுந்தருளுகிறார். அங்கு கோவர்த்தனாம்பிக்கைக்கு நெய்வேத்தியங்கள் படைத்து சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடக்கிறது.
பின்னர் திருவாட்சி மண்டபத்தில் அம்பாள் புறப்பட்டுநகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கடந்த காலங்களில் ஆடிப்பூரத்தன்று உற்சவர் சன்னதியில் இருந்து அம்பாள் புறப்பட்டு நேரடியாக நகர் உலா வந்து அருள்பாலித்தார். ஆனால் இந்த ஆண்டில் முதல்முறையாக உபயதாரர் மூலமாக திருவாட்சி மண்டபத்தில் மண்டகப்படி அமைத்து அம்பாளுக்கு நெய்வேத்தியம் படைத்து சிறப்பு பூஜை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- கோவிலில் உள்ள மற்ற விக்ரகங்களுக்கும் முப்பழம் படையல் நடக்கிறது.
- தெய்வானையுடன் முருகப்பெருமான் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு கொண்ட திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஊஞ்சல் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான ஆனி ஊஞ்சல் திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது. திருவிழாவையொட்டி தினமும் மாலை 6 மணியளவில் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு தயாராக உள்ள ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இதனையடுத்து ஆஸ்தான மண்டபத்தை 3 முறை வலம் வருகிறார். அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள்(3-ந்தேதி) முப்பழ பூஜை நடக்கிறது. விழாவையொட்டி பகல் 12 மணியளவில் உச்சிக்கால வேளையில் கோவிலின் கருவறையில் உள்ள முருகப்பெருமான், சத்யகிரீஸ்வரர், கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்பாள் ஆகிய 5 சன்னதிகளிலுமாக சுவாமி, அம்பாளுக்கு வாழை, மா, பலா, ஆகிய முப்பழங்கள் படைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இதேபோல கோவிலில் உள்ள மற்ற விக்ரகங்களுக்கும் முப்பழம் படையல் நடக்கிறது. விழாவின் முத்தாய்ப்பாக இரவு 7 மணியளவில் சிம்மாசனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் மற்றும் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- 3-ந்தேதி முப்பழ பூஜை நடக்கிறது.
- இன்று முதல் 3-ந்தேதி வரை தங்க ரதம் உலா ரத்து செய்யப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு கொண்ட திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஊஞ்சல் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆனி ஊஞ்சல் திருவிழா இன்று சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவையொட்டி உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது.
பின்னர் அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு தயாராகும் ஊஞ்சலில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 2-ந்தேதி வரை 9 நாட்கள் தினமும் 6 மணிக்கு ஊஞ்சலில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 3-ந்தேதி முப்பழ பூஜை நடக்கிறது. விழாவையொட்டி கோவிலின் கருவறையில் உள்ள முருகப்பெருமான், சத்யகிரீஸ்வரர், கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்பாள் ஆகிய 5 சன்னதிகளிலுமாக சுவாமி, அம்பாளுக்கு வாழை, மா, பலா, ஆகிய முப்பழங்கள் படைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் மற்றும் சிவாச்சாரிகள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சித்திரை திருவிழாவில் திருக்கல்யாணத்தின்போதும், ஆவணி மாதத்தில் நடைபெறும் புட்டுத்திருவிழாவின் போதும் உற்சவர், தெய்வானையுடன் கோவிலுக்கு சென்று வருவதால் திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் தங்கரதம் உலா நடைபெறுவதில்லை. ஆனி ஊஞ்சல் திருவிழாவின்போது கோவிலுக்குள்ளே சுவாமி இருந்த போதிலும் தங்க ரதம் வலம் வரக்கூடிய திருவாச்சி மண்டபத்தில் ஊஞ்சல் அமைக்கப்படுவதால் இன்று முதல் 3-ந்தேதி வரை 10 நாட்கள் தங்க ரதம் உலா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
- சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலின் கருவறையில் எங்கும் காணக்கிடைக்காத அற்புதமாக 5 சன்னதிகள் தனித்தனியாக அமைந்து உள்ளன. அதில் ஒன்றாக சத்தியகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஆகவே கம்பத்தடி மண்டபத்தில் சத்தியகிரீஸ்வரரின் வாகனமான நந்தி (பெரியவிக்ரம்) அமைந்துள்ளது. பிரதோஷ தினத்தில் நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும்.
இதேபோல இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை அன்று தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதி உலா நடந்துவருகிறது. வைகாசி மாதத்தில் நேற்று ஒரே நாளில் சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷமும், முருகப்பெருமானுக்கு உகந்த கார்த்திகையும் ஒன்றாக வந்தது. இதனையொட்டி கோவிலின் கருவறையில் சத்தியகிரீஸ்வரருக்கும், கம்பத்தடி மண்டபத்தில் உள்ள மகாநந்திக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மாத கார்த்திகையையொட்டி உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. தங்க மயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- மொட்டையரசு திடலை 7 முறை சுற்றி வந்த பஞ்ச உபசார நிகழ்வு நடந்தது.
- பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 3-ந்தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி கடந்த 9 நாட்களாக தினமும் இரவு 7 மணி அளவில் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முன்தினம் விசாக விழா விசேஷமாக கொண்டாடப்பட்டது. திருவிழாவின் நிறைவாக நேற்று மொட்டையரசு உற்சவம் நடந்தது. இதனையொட்டி முருகப்பெருமான் தெய்வானையுடன் தங்கக்குதிரையில் அமர்ந்து கோவில் வாசலில் இருந்து புறப்பட்டு என்ஜினீயர் கல்லூரி வளாகத்தில் உள்ள மொட்டையரசு திடலுக்கு வந்தார்.
இதனை தொடர்ந்து மொட்டையரசு திடலை சேர்ந்து உள்ள 70 மண்டபங்களிலும் முருகப்பெருமான் எழுந்தருளினார். ஒவ்வொரு மண்டபத்திலும் சுவாமிக்கும், அம்பாளுக்குமாக சிறப்பு பூஜையும், தீப, தூப, ஆராதனையும் நடந்தது. காலையில் இருந்து இரவு வரை மொட்டையரசு திடலிலே சுவாமி தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அங்கு ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் மதிய வேளையில் கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக வெள்ளரி, பானக்கரம், நீர்மோர் மற்றும் பாகற்காய் குழம்பு படைத்து நெய்வேத்தியம் நடைபெற்றது. இதனையடுத்து மொட்டையரசு திடலை 7 முறை சுற்றி வந்த பஞ்ச உபசார நிகழ்வு நடந்தது. மேலும் பவுர்ணமியையொட்டி நிலா சோறு வைபவம் நடந்தது.
இதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் மொட்டையரசு திடலில் இருந்து கோவில் இருப்பிடம் வரை பூப்பல்லக்கில் சுவாமி வலம் வந்தார். சுவாமி புறப்பாட்டில் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையம், மதுரைமாநகர் உதவி கமிஷனர் அலுவலகம் என்று பல இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த திருக்கண்களில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.
- மொட்டையரசு திடலை சுற்றி பக்தர்கள் சுமார் 100 மண்டகப்படிகள் அமைத்து சுவாமியை வரவேற்றனர்.
- வழிநெடுகிலும் ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப்பெருமானை வழிபட்டனர்.
அறுபடைவீடுகளில் முதற்படைவீடு கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழா தொடங்கி நடைபெற்றது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் 2-ந்தேதி விசாக விழா கோலாகலமாக நடந்தது. திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று மொட்டையரசு உற்சவம் நடந்தது.
இதனையொட்டி கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசாமி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு ஆஸ்தான மண்டபத்தில் தயாராக இருந்த தங்க குதிரையில் எழுந்தருளினார்.
இதனை தொடர்ந்து கோவிலில் இருந்து தங்க குதிரையில் அமர்ந்தபடி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு சன்னதி தெருவழியாக என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மொட்டையரசு திடலுக்கு வந்தார்.
மொட்டையரசு திடலை சுற்றி பக்தர்கள் சுமார் 100 மண்டகப்படிகள் அமைத்து சுவாமியை வரவேற்றனர். காலை 11 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒவ்வொரு மண்டகப்படியாக முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 100 மண்டகப்படியிலும் முருகப்பெருமானுக்கு பல்வேறு நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை, மகாதீப, தூப ஆராதனை நடந்தது.
கோவிலில் இருந்து மொட்டையரசு திடலுக்கு தங்கக்குதிரையில் வந்த முருகப்பெருமான், வாசனை கமழும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த பூப்பல்லக்கில் தன் இருப்பிடம் திரும்பினார். மொட்டையரசு திடலில் இருந்து கோவில் வரை வழிநெடுகிலும் ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப்பெருமானை வழிபட்டனர்.
- பக்தர்கள் எழும்பிய அரோகரா கோஷம் மலையில் எதிரொலித்தது.
- நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளுடன் பூக்குழி இறங்கினார்கள்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் வைகாசி விசாகமும் ஒன்றாகும்.
இந்த திருவிழா 10 நாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
வைகாசி விசாகமான நேற்று விழாவின் சிகர நாள் ஆகும். இதையொட்டி அதிகாலை 5 மணி அளவில் சண்முகர் சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க அங்கிருந்து சண்முகப் பெருமான் புறப்பட்டு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார். பாலாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது.
இதனையடுத்து அதிகாலை 5.45 மணியில் இருந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த பால் கொண்டு வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடந்தது. இது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
இதனையொட்டி மதுரை, திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து கூட்டம், கூட்டமாக, சாரை, சாரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்து கோவிலில் குவிந்தனர்.
பன்னீர் காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி, மற்றும் பறவை காவடி என விதவிதமான காவடிகளுடன் வந்தும், 10 அடி, 15 அடி, 25 அடி நீளமுள்ள அலகு குத்தி வந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.. அப்போது பக்தர்கள் எழும்பிய அரோகரா கோஷம் மலையில் எதிரொலித்தது.
திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் 16 கால் மண்டபம் அருகே அக்னி வார்த்து பூக்குழி தயாராக இருந்தது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள வெயிலு உகந்த அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளுடன் பூக்குழி இறங்கினார்கள். பின்னர் அவர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் சென்று பாலாபிஷேகம் செய்து சண்முகப் பெருமானை வழிபட்டனர்.
திருப்பரங்குன்றம் கோவிலைப் பொறுத்தவரை மலையை குடைந்து கருவறை அமைந்து இருப்பதால் இங்கு விக்ரங்களுக்கு அபிஷேகம் இல்லை. அதேசமயம் முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்கவேலுக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி செவ்வாய்க்கிழமை தோறும் பெரும்பாலான பக்தர்கள் வேலுக்கு பாலாபிஷேகம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத்திருவிழா நாளில் சண்முகப் பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெறுவது தனி சிறப்பாகும்.
விசாக திருவிழாவையொட்டி நேற்று காலை 5.45 மணியில் இருந்து மதியம் 3.45 வரை இடைவிடாது 10 மணிநேரம் சண்முக பெருமானுக்கு பாலாபிஷேகம் நடந்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக சுமார் 2 மணிநேரம் பாலாபிஷேகம் நடந்தது குறிப்பிடத்தக்கது
- இன்று வைகாசி விசாகத்தையொட்டி அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
- அதிகாலை 6 மணி முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாக பெருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டுக்கான விசாக திருவிழா, கடந்த மே 24-ந் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகன்-தெய்வானையுடன் உற்சவர் சன்னதியில் இருந்து கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்திற்கு வந்து அங்கு நீர் நிரப்ப்பட்ட தொட்டியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளினார். 9-ம் நாளான நேற்று வசந்த உற்சவத்தின் நிறைவு விழா நடைபெற்றது.
10-ம் நாளான இன்று வைகாசி விசாகத்தையொட்டி அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடைபெற்றது. 6 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினர்.
அங்கு காலை முதல் மாலை வரை, பக்தர்கள் கொண்டுவந்த பாலில் சண்முகருக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது. பின்னர் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வைகாசி விசாகத்தையொட்டி மதுரை மற்றும் பல்வேறு பகுதியில் இருந்தும் பாத யாத்திரையாக வந்திருந்த பக்தர்கள் திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பினர். பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
விசாகத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக இந்த ஆண்டு அதிக அளவு வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் சன்னதி தெரு மற்றும் கோவில் வாசல் பகுதியில் முழுவதும் தேங்காய் நார் விரிப்புகள் போடப்பட்டிருந்தது.
மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்குள் பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுக்கு தனி வரிசை, சுவாமி தரிசனம் செய்ய வருபவர்களுக்கு தனி வரிசை என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.
கோவிலுக்குள் கூடுதலாக மின்விசிறி மற்றும் ஏர்கூலர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் அதிகாலை 6 மணி முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
முருகனின் 6-வது படை வீடான அழகர்மலையில் அமைந்துள்ள பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலிலும் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் வெள்ளத்தில் சிறப்பாக நடைபெற்றது. மலையடிவாரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பல்வேறு காவடிகள் எடுத்து மலைமேல் உள்ள நூபுர கங்கை புனித தீர்த்தத்தில் நீராடி பின்னர் பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு உற்சவர் மற்றும் அம்பாளுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
இதேபோல் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி கோவில், பூங்கா முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.
- சண்முகப் பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெறும்.
- நாளை 3-ந்தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 24-ந் தேதி காப்புகட்டுதலுடன் வைகாசி விசாகத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி கடந்த 8 நாட்களாக தினமும் இரவு 7 மணியளவில் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக விசாக விழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி மதுரை நகர் பகுதியில் இருந்தும், திருப்பரங்குன்றத்தை சுற்றில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்தும், மயில்காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி, பறவை காவடி எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துகிறார்கள்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சண்முகர் சன்னதியில் இருந்து விசாக கொறடு மண்டபத்திற்கு வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமான் இடம் பெயருகிறார். இதனையடுத்து அதிகாலை 5.30 மணியிலிருந்து பக்தர்கள் நேர்த்திக்காக கொண்டு வரும் பாலில் சண்முகப் பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெறும். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நாளை 3-ந்தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது.
விசாக திருவிழாவையொட்டி பால் குடங்கள், காவடிகள் எடுத்து வரும் பக்தர்கள் வெயிலின் தாக்கத்தால் தங்களது பாதம் சுடமால் கோவிலுக்குள் செல்வதற்கு வசதியாக இந்த ஆண்டு முதல் முறையாக கோவில் நிர்வாகத்தின் கீழ் ஒரு உபயதாரர் மூலமாக சோழவந்தானில் இருந்து தென்னைநார்கள் வரவழைக்கப்பட்டு கோவில் வாசலில் இருந்து சன்னதி தெரு நெடுகிலுமாக தென்னை நார் விரிப்பான் வசதி செய்யப்பட்டுள்ளது.
- 2-ந்தேதி விசாக விழா கொண்டாடப்படுகிறது.
- பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்துவார்கள்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந் தேதிகாப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் இரவு 7 மணியளவில் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளுதல் நடந்து வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 2-ந்தேதி விசாக விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்துவார்கள். கோவிலுக்குள் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் காலை 5 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை இடைவிடாது சண்முகப் பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கும்.
அதன் பால் பெரிய சில்வர் தொட்டியில் விழும். பிறகு அங்கு இருந்து கோவில் வெளிப்புறமான சஷ்டி மண்டப வளாகம் வரை குழாய் வழியாக அபிஷேகம் கொண்டுவரப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக விசாக கொறடு மண்டபத்தில் இருந்து சஷ்டி மண்டபம் வளாகம் வரை 100 அடி நீளத்திற்கு புதியதாக குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பக்தர்கள் பாட்டில் மற்றும் பாத்திரங்கள் மூலம் அபிஷேக பால் பெற்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விசாக கொறடு மண்டபத்தில் தற்காலிகமாக மின்விசிறிகள் பொருத்தப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்