search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி போராட்டம்"

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.#Sterlite #thoothukudiProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாப்பிள்ளை யூரணி ஜெ.ஜெ.நகர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் தலைவர் முருகேசன் தலைமையில் பொது மக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் ஊரில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகிறோம். இங்குள்ள மக்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நடமாடும் மருத்துவ வாகனம் மூலமாக தேவையான மருத்துவ வசதிகள் தவறாமல் செய்து கொடுக்கப்பட்டு வந்தது.

    மேலும் எங்கள் பகுதியிலுள்ள மிகவும் கஷ்டப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, அடிப்படை வசதிகள், கோவிலுக்கான நிதியுதவி என பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் செய்து வந்தனர்.இதனால் எங்கள் பகுதி மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் பயன் அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் சிலரது சூழ்ச்சியாலும், தேவையில்லாத வதந்தியாலும் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான பொய்பிரச்சாரம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினைகளால் தமிழக அரசு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்துவிட்டது.

    ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டு விட்டதால் அதனை நம்பி வாழ்ந்து வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு எங்களைப் போன்ற பல்வேறு பகுதி கிராம மக்களுக்கும் கிடைத்து வந்த அனைத்து வசதிகளும், நலத்திட்ட உதவிகளும் தடைபட்டு முடங்கியுள்ளது.

    எனவே ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீண்டும் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Sterlite #thoothukudiProtest
    மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்கவேண்டும் என அதிமுக நிர்வாகி தலைமையில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். #Sterlite #ThoothukudiProtest
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22‍-ந்தேதி பொது மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் கலவரம் வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

    இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்ப‌ட்டது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மனு அளித்து வருகிறார்கள். இதனிடையே தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம், டி.குமாரகிரி மக்கள் சார்பாக முன்னாள் அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் பொன்ராஜ் தலைமையில் ஏராளமானோர் சென்னை தலைமை செயலகத்துக்கு வந்தனர்.



    முதலமைச்சரின் தனிப்பிரிவில் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை சில சமூக விரோதிகளின் பொய் பிரசாரத்தால் மக்களின் எண்ணத்தை பாதிக்கும் வகையில் எங்கள் கிராம மக்களின் கருத்துக்கு மாறாக மூடப்ப‌ட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் எங்கள் பகுதியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைகளை இழந்து அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்ப‌ட்டு உள்ளது.

    நாங்கள் விவசாயம் செய்யும் சூழ்நிலையும், வசதியும் இல்லாததால் உணவுக்கே வழியின்றி தவிக்கிறோம். இந்த தொழிற்சாலையை திறக்க அனுமதிப்பதன் மூலம் எங்களது உணவு தேவையும், அடிப்படை தேவையும் நிறைவேறும். எனவே எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க இந்த தொழிற்சாலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Sterlite #ThoothukudiProtest
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை கலவர வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஜாமீனில் விடுதலையானார். thoothukudiProtest #Sterlite
    நெல்லை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசுவை கைது செய்தனர்.

    கைதான வியனரசு 55 நாட்களுக்கு மேலாக பாளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு தூத்துக்குடி கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்தது. இதையடுத்து அவரது தரப்பில் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டில் அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டது.

    இன்று காலை வியனரசு ஜாமீனில் விடுதலையாகி பாளை சிறையில் இருந்து வெளியில் வந்தார். அவரை நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழ் அமைப்பினர் வரவேற்றார்கள். thoothukudiProtest #Sterlite
    மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. #ThoothukudiProtest #Sterlite
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறி பொதுமக்கள் 100 நாட்களாக போராட்டம் நடத்தினார்கள்.

    போராட்டத்தின் முடிவில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள மாசு பாதிப்புகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், நிலத்தடி நீர் ஆய்வு வாரியம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆய்வு நடத்தி வருகின்றன.

    இதில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    டெல்லி மேல்-சபையில் எம்.பி.க்கள் கேட்ட கேள்விகளுக்கு மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மேஹ்வால் பதில் அளிக்கையில் கூறியதாவது:-



    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய நிலத்தடி நீர் வாரிய அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அங்குள்ள நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவில் காட்மியம், குரோமியம், மெக்னீசியம், இரும்பு, ஆர்சேனிக் ஆகிய உலோக மாசுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

    அதே போல் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள ஆய்வறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரில் இரும்பு, நிக்கல், காட்மியம், புளோரைடு ஆகிய உலோக மாசுக்கள் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அர்ஜுன் ராம் மேஹ்வால் தெரிவித்தார். #ThoothukudiProtest #Sterlite
    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி 2 கிராம பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். #thoothukudiProtest #Sterlite
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

    இதனால் அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை.ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்த பணியாளர்கள், லாரி உரிமையாளர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    இந்நிலையில் இன்று தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வேலையில்லாமல் வருமானமின்றி தவிப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். #thoothukudiProtest #Sterlite
    ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டு இரு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அந்த ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் ஆலை நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக ராமதாஸ் கூறியுள்ளார். #ThoothukudiProtest #Sterlite
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடியில் சுற்றுச் சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டு இன்றுடன் இரு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அந்த ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் ஆலை நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இந்த சதிக்கு அரசும், காவல்துறையும் மறைமுகமாக துணை நிற்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்திய அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தங்களது போராட்டத்தின் நூறாவது நாளையொட்டி, கடந்த மே 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்ற போது, காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தி 13 அப்பாவிகளை படுகொலை செய்தது.

    இதைத் தொடர்ந்து எழுந்த மக்கள் எழுச்சிக்கு பணிந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த மே 24ஆம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆணையிட்டது. அன்றே ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு மே 28ஆம் தேதி வெளியிட்டது. தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    தூத்துக்குடி மாவட்ட மக்களின் இடைவிடாத போராட்டமும், தமிழகம் முழுவதும் எழுந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பலையும் தான் தாமிர உருக்காலை மூடப்படுவதற்கு காரணம் என்பதை உணர்ந்து கொண்ட ஆலை நிர்வாகம், இப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மக்கள் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறது.

    இதற்கான பிரச்சாரத்தை பலநூறு கோடி ரூபாய் செலவில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தொடக்கத்திலிருந்தே தங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஒரு பிரிவினர் மூலம், தூத்துக்குடி மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்கும், வேலைவாய்ப்புக்கும் ஸ்டெர்லைட் ஆலை அவசியம் என்பதால் அதை மீண்டும் திறக்க ஆணையிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைக்கும் நாடகம் வாரந்தோறும் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

    அவ்வாறு மனு கொடுப்பவர்கள் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் தான்; அவர்களைத் தவிர வேறு யாரும் அல்ல.

    ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவுகளால் தூத்துக்குடி நகரத்தையும், புறநகரையும் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளாமானோர் தங்கள் உறவுகளை புற்றுநோய்க்கு பலி கொடுத்துள்ளனர். கருச்சிதைவு, உடல் உறுப்பு செயல்பாடு பாதிப்பு என ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட தீய விளைவுகளுக்கு வாழும் எடுத்துக்காட்டுகளாக ஆயிரக்கணக்கான மக்கள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளனர்.

    22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களால் இனியும் பொறுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது தான் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடினார்கள்.



    ஆலைக்கு எதிராக இருமுறை நடந்த ஒன்று கூடல்களில் யாரும் அழைக்காமலேயே லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். ஒன்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்... இல்லாவிட்டால் தங்களைக் கருணைக்கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் முழங்கினார்கள். அப்படிப்பட்டவர்கள் இப்போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும்படி மனு கொடுக்கிறார்கள் என்று கூறுவதை நம்ப முடியாது.

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு விட்டதால் தாமிரம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; தாமிரத்தின் விலை உயர்ந்து விட்டது; எனவே, ஆலையை திறக்க ஆணையிட வேண்டும் என்று வணிகர்களைக் கூற வைத்து ஒரு நாடகத்தை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நடத்தியது.

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தாமிரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதும், அதன் விலை அதிகரித்ததும் உண்மை தான். இப்போது இறக்குமதி மூலம் நிலைமை சீராகி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் மனிதகுல பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது இது பொருட்படுத்தக்கூடிய வி‌ஷயமே இல்லை.

    தாமிர உருக்காலையால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும்; இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படும்; ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடுவோர் அனைவரும் சீனாவின் கைக்கூலிகள் எனக் குற்றஞ்சாற்றும் வகையில் அவதூறு கருத்துக்களைக் ஒரு காணொலி வைரலாக்கப்பட்டு வருகிறது.

    அதை தயாரித்து வழங்கியது யார்? என்ற விவரம் அதில் இல்லை என்பதிலிருந்தே அது யாரால், எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும்? என்பதை மக்களால் மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

    ஸ்டெர்லைட் ஆலையின் இத்தகைய நாடகங்களுக்கு தமிழக அரசும், காவல்துறையும் மறைமுகமான ஆதரவை அளித்து வருகின்றன என்பது தான் வேதனையளிக்கும் வி‌ஷயமாகும். ஸ்டெர்லைட் ஆலையால் கடந்த 22 ஆண்டுகளாக ஏற்பட்ட அழிவுகளை நினைத்துப் பார்த்தால் ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் திறக்கக்கூடாது என்பதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள முடியும். எனவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அதன் நிர்வாகத்தால் தொடர்ந்து அளிக்கப்படும் அழுத்தங்களுக்கு தமிழக அரசு பணிந்து விடக்கூடாது.

    ஆலையை மூட ஆணை பிறப்பித்து விட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடாமல், பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையில் அசைக்க முடியாத ஆதாரங்களை முன்வைத்து, வழக்கை முறியடித்து நாசகார ஆலை நிரந்தரமாக மூடப்பட்டிருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #ThoothukudiProtest #Sterlite
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்ட வேண்டும் என போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiProtest #Sterlite
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

    வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச். அரவிந்த் பாண்டியன் ஆஜராகி வாதாடுகையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் தாக்கப்பட்டனர். உயிரைப் பணயம் வைத்து பொதுமக்களை பாதுகாத்தனர்.

    இது தொடர்பான வீடியோவை பார்த்தால் தூத்துக்குடி போராட்டத்தில் போலீசார் கையாண்ட விதம் சரியானது என்பது தெரியவரும் என்றார்.

    பின்னர் அவர் நீதிபதியைப் பார்த்து, உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அந்த வீடியோவை பார்க்கலாம், அன்றைய தினம் போலீசாரின் நிலையைப் பார்த்தால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. கலவரக்காரர்களால் சூழப்பட்டனர். இந்த வீடியோவை மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகளுக்கு வருகிற திங்கட்கிழமை போட்டு காண்பிக்கப்படுகிறது என்று கூறினார்.



    உடனே நீதிபதி கிருபாகரன் கூறுகையில், அந்த வீடியோவை பொதுமக்களுக்கு போட்டுக் காட்டுங்கள், பொதுமக்கள் பார்க்கட்டும், அதன் பிறகு நாங்கள் பார்த்து என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்கிறோம். முதலில் மக்கள் உண்மையை புரிந்து கொள்ளட்டும். போலீசார் அத்து மீறினார்களா? அல்லது போராட்டக்காரர்கள் அத்து மீறினார்களா? என்பதை தெரிந்து கொள்ளட்டும். அதற்கு முன் நாம் வெளிப்படையாக எதையும் தெரிந்து கொள்ள முடியாது என்றார். #ThoothukudiProtest #Sterlite
    தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களை மீண்டும் அழைத்தது ஏன்? என்பது குறித்து ஆலை நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது. #ThoothukudiProtest #sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தபோது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியாயினர். இதை தொடர்ந்து மே 28-ந் தேதி தமிழக அரசு உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனால் அந்த ஆலையில் பணிபுரிந்து வந்த பெரும்பாலான ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.

    இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஊழியர்களை சந்திக்க முடிவு செய்தது. அதன்படி அனைத்து ஊழியர்களுக்கும் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஊழியர்கள் பலர் மீண்டும் தங்களது குடியிருப்புக்கு நேற்று திரும்பினர். இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு ஏற்பட்டு உள்ள கஷ்டமான சூழ்நிலையில் ஊழியர்கள் தொடர்ந்து எங்களுடன் இருப்பது பெருமையாக உள்ளது. அதே நேரத்தில் ஆலை தொடர்பாக தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து ஊழியர்களுக்கு தெரிவிப்பது எங்கள் கடமை. இதனால் அனைத்து ஊழியர்களையும் வரவழைத்து உள்ளோம். இது வழக்கமான ஒரு நிகழ்வுதான்.

    தற்போது அரசு உத்தரவுப்படி ஆலையில் இருந்து ரசாயன பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுகுறித்தும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் நிரந்தர ஊழியர்கள் யாரையும் பணியில் இருந்து நீக்கம் செய்யவில்லை. அது எங்கள் கொள்கையும் அல்ல. அவர்கள் பணியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மாத சம்பளம் வழங்கி வருகிறோம். எங்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. எனவே தூத்துக்குடியில் பணியாற்றும் ஊழியர்களை வேறு நிறுவனங்களில் பணியமர்த்தி வருகிறோம்.

    ஆலையை சுத்தம் செய்யும் பணிக்காக தான் தற்போது ஊழியர்களை அழைத்து இருக்கிறோம். உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து ஆலையில் உள்ள தேவையில்லாத ரசாயன பொருட்கள், கழிவுகளை அகற்ற உதவும்படி எங்கள் ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiProtest #sterlite
    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லெட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என கலெக்டரிடம் லாரி உரிமையாளர்கள் மற்றும் பெண்கள் மனு அளித்துள்ளனர். #sterlite #ThoothukudiProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் மற்றும் அதனை சார்ந்த சிறு,குறு தொழிலாளர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள், டேங்கர் லாரிகள் தினசரி தாமிரதாது, ராக் பாஸ்பேட், நிலக்கரி, தாது மணல், அமிலங்கள், இதர மூலப்பொருட்களை கையாள பயன்படுத்தப்பட்டு வந்தன. இதன்மூலம் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், கண்காணிப்பாளர்கள், அதனுடன் தொடர்புடைய லேத் பட்டறைகள், மெக்கானிக், லாரிக்கு பெயிண்ட் அடிப்போர், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் எங்கள் தொழில் நலிவடைய தொடங்கியுள்ளது. இதனால் தனியார் வங்கிகளில் கடன் தவணை செலுத்த முடியாமல் அவதிப்படுகிறோம். மாத வருமானமின்றி அன்றாட வாழ்க்கையை நடத்தவே சிரமப்படுகிறோம். வீட்டு வாடகை செலுத்த முடியாமலும், குழந்தைகளின் படிப்பு செலவை சமாளிக்க முடியாமலும் அவதிப்படுகிறோம். எனவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து செயல்பட செய்யவேண்டும்.



    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல தூத்துக்குடி பகுதி கிராமங்களை சேர்ந்த பெண்களும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககோரி கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள். #sterlite #ThoothukudiProtest
    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு 45 நாட்களுக்கு பின்னர் ஊழியர்களுக்கு ஆலை நிர்வாகம் அவசர அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ThoothukudiProtest #sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது கடந்த மே மாதம் 22-ந்தேதி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடி சீல் வைத்தது. ஆலையை நிரந்தரமாக மூடவும் அரசு நடவடிக்கை எடுத்தது.

    ஆலையில் இருக்கும் அமிலங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே ஆலை மூடப்பட்டதால் ஏராளமான தொழிலாளர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், எனவே ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆலையை மீண்டும் இயக்க அனுமதி கேட்டு பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மனு கொடுத்துள்ளது.

    மேலும் ஒப்பந்ததாரர்களும் ஆலையை திறக்க‌ வலியுறுத்தி மனுக்கள் கொடுத்து வருகின்ற‌னர். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவது குறித்தும் அரசு ஆலோசனை நடத்தியது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க தனி இணையதளத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியது.

    ஸ்டெர்லைட் ஆலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பிற மாவட்டத்தினர், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என 2 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் பலரும் குடியிருப்பை காலி செய்து சென்றுவிட்டனர். உள்ளூர் ஊழியர்கள் மாற்றுப்பணிக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளனர். மும்பை, பெங்களூரில் இருந்து பணியாற்றியவர்கள் தூத்துக்குடியில் இருந்து ஊருக்கு சென்றுவிட்டார்கள்.



    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களை இன்று உடனே பணிக்கு திரும்புமாறு ஆலை நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. ஆலையில் வந்து ஊழியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்யவும் நிர்வாகத்தினர் அறிவுறித்தி உள்ளனர். ஆலையில் இருந்து வாகனங்கள் மூலமாக ஊழியர்களை அழைத்துவரவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    அனைத்து ஊழியர்களையும் ஆலை குடியிருப்பு பகுதிக்கு வருமாறு கூறினர். இதையடுத்து ஆலைக்கு பல்வேறு பகுதியில் உள்ள ஊழியர்கள் இன்று காலை வர தொடங்கினர். ஆலை வாகனங்கள் மூலமாகவும் ஊழியர்கள் அழைத்து வரப்பட்டார்கள். ஆலை குடியிருப்பு பகுதிக்கு வந்த அவர்களிடம் ஊழியர்களின் வருகை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆலையை மீண்டும் இயக்கச்செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று ஆலையை திறக்க வலியுறுத்தி மனு கொடுக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஆலை மூடப்பட்டு 45 நாட்களுக்கு பின்னர் ஊழியர்களுக்கு ஆலை நிர்வாகம் அவசர அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். #ThoothukudiProtest #sterlite
    தொழிற்சாலைகளை மூடுவது பொருளாதார தற்கொலை என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஜக்கிவாசுதேவ் கருத்து கூறியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். #Sterlite #jaggivasudev
    சென்னை:

    தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

    இந்நிலையில், சமீபத்தில் லண்டனுக்கு சென்ற யோகா குரு பாபா ராம் தேவ் வேதாந்தா குழுமத்தின் தலைவரும், ஸ்டெர்லைட் ஆலையின் நிறுவனருமான அனில் அகர்வாலையும், அவருடைய மனைவியையும் நேரில் சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் பாபா ராம்தேவ் ஸ்டெர்லைட் ஆலையின் பெயரைக் குறிப்பிடாமல் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

    இதற்கிடையே, கோவை மாவட்டத்தில் ஈஷா அறக்கட்டளை நடத்தி வரும் சத்குரு ஜக்கி வாசுதேவ், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் தாமிரம் உருக்கும் தொழிலில் வல்லுநர் இல்லை. ஆனால், இந்தியாவில் தாமிரத்தின் பயன்பாடு அதிகம் என்பதால், அதன் தேவையும் அதிகம் என்பது மட்டும் எனக்கு தெரியும். நாம் சொந்தமாக தாமிரம் உற்பத்தி செய்யாமல் இருந்தால், சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியது இருக்கும்.



    சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் குறித்து சட்டப்பூர்வமாகவே அணுக வேண்டும். மிகப்பெரிய தொழில்களை அடித்துக்கொல்வது என்பது பொருளாதார தற்கொலையாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஜக்கி வாசுதேவ் கருத்துக்கு நடிகர் சித்தார்த் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Sterlite #jaggivasudev
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த விவகாரம் தொடர்பாக மேலும் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #Thoothukudi #SterliteProtest #Arrest
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டது.

    வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்கள் தூத்துக்குடி சிப்காட், தென்பாகம், மத்தியபாகம், வடபாகம், முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்குகளில் மொத்தம் 197 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இவர்களில் 173 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். கைதானவர்களில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கலில் ரகுமான், முகமது யூசுப், முகமது இசரத், வேல்முருகன், சோட்டையன், சரவணன் ஆகிய 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

    கலவர வழக்குகள் தொடர்பாக நேற்று அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகேஷ், நாம்தமிழர் கட்சி நிர்வாகி இசக்கிதுரை உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தார்கள். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் கல் வீசியதாக தூத்துக்குடி 3ம் மைல் பகுதியை சேர்ந்த அக்பர் (வயது 47) என்பவரை சிப்காட் போலீசாரும், கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் (29), சிலுவைபட்டியை சேர்ந்த சுரேஷ் (29) ஆகியோரை வடபாகம் போலீசாரும் கைது செய்தனர்.

    மேலும் 4 பேரையும் போலீசார் இன்று கைது செய்தார்கள். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. போலீசாரின் கைது நடவடிக்கை காரணமாக தூத்துக்குடியில் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும் கலக்கத்தில் உள்ள‌னர். #Thoothukudi #SterliteProtest #Arrest
    ×