search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய நெடுஞ்சாலை"

    சென்னை- பெங்களூர் இடையே எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணியை தீவிரப்படுத்த தேசிய நெடுஞ்சாலை முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    சென்னை-சேலம் இடையே போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரத்தை குறைக்கும் வகையில் புதிதாக 8 வழி பசுமைச்சாலை அமைக்க மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.

    இதற்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த சாலை 277 கி.மீ தூரம் கிராமங்கள், காடுகள், வயல்கள் வழியே அமைக்கப்படுகிறது.

    இதேபோல் சென்னை- பெங்களூர் இடையே எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணியை தீவிரப்படுத்தவும் தேசிய நெடுஞ்சாலை முடிவு செய்துள்ளது. தற்போது சென்னையில் இருந்து வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் சாலையில் வாகன நெருக்கடி உள்ளது. நீண்ட தூரம் சுற்றிச்செல்வதால் காலதாமதம் ஏற்படுகிறது.

    இதை தவிர்க்க புதிதாக சென்னை-பெங்களூர் இடையே 6 வழி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க சில வருடங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. முதலில் இதன் தூரம் 240 கி.மீ ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நிலப் பிரச்சனை காரணமாக கர்நாடகத்தில் சில இடங்களில் மாற்றி அமைக்கப்பட்டு 265 கி.மீ ஆக இறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த சாலைப்பணியை துரிதப்படுத்தவும் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டுள்ளது.

    பெங்களூர் ஒசகோட்டையில் இருந்து தொடங்கும் இந்த சாலை கர்நாடகத்தின் கோலார், ஆந்திராவின் சித்தூர், தமிழகத்தின் வேலூர், வாலாஜாபேட்டை வழியாக ஸ்ரீபெரும்புதூரில் இணைகிறது. இந்த சாலை அமைக்கப்படுவதன் மூலம் வாகனங்கள் ஆம்பூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி என சுற்றிச் செல்வது தவிர்க்கப்பட்டு நேரடியாக சித்தூர், கோலார் வழியாக பெங்களூர் சென்றடையலாம்.

    இந்தச்சாலைக்கான நிலம் எடுப்பு பணி கர்நாடகத்தில் தொடங்கிய போது எதிர்ப்பு கிளம்பியதால் நிறுத்தப்பட்டது. தற்போது நிலம் எடுப்பு பணி மீண்டும் தொடங்கி உள்ளது.

    இந்த சாலைக்காக தமிழகத்தில் வேலுர் மாவட்டம் ஆற்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட மகி மண்டலம் வனப்பகுதியில் 5.42 ஹெக்டேர் நிலம் எடுக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதன் அனுமதி கிடைத்ததும் நிலம் எடுக்கும் பணிகள் தொடங்கும்.

    சமீபத்தில் வனத்துறை சம்பந்தமான உயர் அதிகாரிகளும் நிபுணர்களும் இந்தப் பகுதியை பார்வையிட்டனர். அப்போது அடர்ந்த வனங்களில் மரங்களை அழிக்காமல் வனப்பகுதியையொட்டி மாற்று வழியில் சாலையை அமைக்க ஒப்புதல் அளித்தனர்.
    இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திண்டிவனம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைக்கு ரூ.268 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
    சென்னை:

    திண்டிவனம்- கிருஷ்ணகிரி இடையே திருவண்ணாமலை, செங்கம் வழியாக 182 கி.மீ. தூர சாலையை 4 வழி தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற மத்திய அரசின் தரைவழிப்போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்தது.

    கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி இதற்கான பணிகள் தொடங்கியது. மத்திய அரசு இந்த திட்டத்துக்குரூ.612 கோடி நிதி ஒதுக்கியது. சாலை போடும் பணி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு திடீர் என்று கிடப்பில் போடப்பட்டது.

    சாலைகள் ஆங்காங்கே விரிவாக்கம் செய்யப்பட்டும், ஒரு சில இடங்களில் குறுகலாவும், குண்டும் குழியுமாகவும் இருந்த நிலையில் அப்படியே பாதியில் நிற்கிறது. இதனால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    திண்டிவனம், விழுப்புரம், கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலைவரை மட்டும் பணிகள் ஓரளவுக்கு முடிந்து வாகனங்கள் சீராக செல்கின்றன. அதன் பிறகு 4 வழிச்சாலைப்பணிகள் நிறைவடையாமல் உள்ளது.

    நிதிப்பற்றாக்குறை மற்றும் சாலை போடுவதற்கு தேவையான மூலப் பொருட்களான மண், கற்கள் போன்றவைகளை குவாரிகளில் இருந்து பெறுவதில் இடையூறு ஏற்பட்டது. மாநில அரசும் மூலப் பொருட்கள் கிடைப்பதற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால் திட்டம் பாதியில் கிடப்பில் போடப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்துக்கு மத்திய அரசு தற்போது புத்துயிரூட்டி ரூ.268 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 4 வழிச்சாலைப் பணியை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பாதியில் நிற்கும் சாலைகளையும், சாலைகள் இணைப்பு பணிகளையும் தேசிய நெடுஞ்சாலைதுறை தொடங்கியுள்ளது.

    12 மாதங்களில் குறிப்பிட்ட காலத்தில் திண்டிவனம்-கிருஷ்ணகிரி 4 வழிச்சாலைப் பணி முடிவடைந்து விடும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த 4 வழிச்சாலை திண்டிவனத்தில் தொடங்கி, விழுப்புரம், கீழ்பெண்ணாத்தூர், செஞ்சி, திருவண்ணாமலை. செங்கம், ஊத்தங்கரை வழியாக கிருஷ்ண கிரியுடன் இணைக்கிறது. இந்த 4 வழிச்சாலைப் பணிகள் நிறைவடைந்தால் இந்தப் பாதையில் போக்குவரத்து சீரடைவதுடன் பயண நேரமும் குறையும்.

    பெங்களூர்- புதுச்சேரி இடையே துரித சாலை போக்குவரத்து மேம்படும்.

    இதே போல் விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழிச் சாலையும், திருச்சி, சிதம்பரம் 4 வழிச்சாலைப் பணியும் ரூ.7600 கோடியில் நிறைவேற்றப்படுகிறது.

    தொழில் வளர்ச்சிக்கு தேவையான துரித சரக்கு போக்குவரத்தை துரிதப்படுத்தும் மத்திய அரசின் ‘பாரத்மாலா பிரயோஜனா’ திட்டத்தின் கீழ் இந்த 4 வழிச் சாலைப் பணி விரைவில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த 5 நாட்களாக தண்ணீர் வீணாகி ஓடுகிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
    பரமக்குடி:

    பரமக்குடி பகுதி ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து 5 நாட்களாக குடிநீர் வீணாகிறது. இரவு-பகலாக குழாயில் இருந்து வெளியேறும் குடிநீரால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது.

    பஸ், லாரி உள்பட கனரக வாகனங்கள் செல்லும் போது சாலையில் கிடக்கும் தண்ணீர் சிதறி நடந்து செல்பவர்களின் மீது பட்டு அவர்களின் ஆடைகள் அசுத்தம் அடைகின்றன. அப்பகுதியிலேயே அரசு ஐ.டி.ஐ., பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகியவையும் உள்ளன. எத்தனையோ அதிகாரிகள் அந்த சாலையின் வழியாக சென்று வருகின்றனர். ஆனால் குழாய் உடைந்து 5 நாட்களாக வீணாகி ஓடும் குடிநீரை தடுக்க யாரும் நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியதாகும். பல பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு குடிநீர் வீணாகி வருகிறது என்பதை அறிந்து பொதுமக்கள் அதிருப்தி அடைந்துஉள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    கிருஷ்ணகிரி - திண்டிவனம் வரை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.262 கோடியே 67 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அசோக்குமார் எம்.பி. கூறினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சாலை பாதுகாப்பு கண்காணிப்புக்குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கண்காணிப்புக்குழுத் தலைவர் கே.அசோக்குமார் தலைமையில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அசோக்குமார் எம்.பி. பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் 6 வழிச்சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை தடுக்க விபத்து நடைபெறும் இடங்களில் சாலையை அகலப்படுத்துதல், மேம்பாலங்கள், உயர்மட்ட நடைபாதைகள், மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.262 கோடியே 67 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் பணிகள் தொடங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி அளித்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5 தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் உள்ள 191.20 கிலோ மீட்டர் சாலையில் விபத்துகள் ஏற்படாத வகையில் மேம்பாலங்கள், உயர் மின்கோபுரங்கள், சர்வீஸ் சாலைகளில் வேகத்தடைகள் போன்ற பணிகள் விரைந்து மத்திய அரசின் அனுமதி பெற்று செய்து தரப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் தேவையான இடங்களில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர்கள் சிவாஜி, நாராயணன், ரிலையன்ஸ் மேலாளர் முத்துகுமார், மண்டல போக்குவரத்து ஆணையர் செந்தில்நாதன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அசோகன், செந்தில்வேலவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன் (கிருஷ்ணகிரி), சங்கர் (தேன்கனிக்கோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×