search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் பிரச்சாரம்"

    சேலத்தில் மூன்றாவது நாளாக இன்று பிரசாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் திமுகவின் கோட்டை என குறிப்பிட்டுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலில் திருவாரூர் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மூன்றாவது நாளான இன்று சேலத்தில் உள்ள கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ். ஆர். பார்த்திபனை ஆதரித்து பேசியதாவது:



    திமுகவின் சார்பில் என் பயணத்தை இன்று 3வது நாளாக நடத்தி கொண்டிருக்கிறேன்.  ஒவ்வொரு பகுதிக்கும் நான் செல்லும் போதும் ஒன்றை ஒன்று மிஞ்சக்கூடிய அளவுக்கு மக்கள்  திரண்டு ஆதரவு அளித்து வருகின்றீர்கள்.  இதன் மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம் என தெரிகிறது.

    இதற்கான காரணம் திமுகவின் மீது நீங்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும். மேலும் மத்தியிலே ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜக, மாநிலத்தில் உள்ள அதிமுக மீது உள்ள வெறுப்பையும் இந்த கூட்டம் நிரூபித்துள்ளது. இந்த கோட்டை மைதானம் நிறைந்து இருப்பதை பார்த்தால், கோட்டையை நாம் பிடிப்பது உறுதி.



    சேலம் திமுகவின் மாபெரும் கோட்டை. இந்த கோட்டையிலே இவ்வளவு மக்கள் ஆதரவு தர மிக முக்கியமான காரணம்  மறைந்த வீரபாண்டியார் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு இதே சேலத்தில் கலைஞர் கருணாநிதியின்  முத்து விழா மாநாட்டினை வீரபாண்டியார் முன்னின்று நடத்தினார். தோல்வியே அறியாமல் தொடர்ந்து வெற்றி பெற்ற சின்னம் தான் உதய சூரியன். திமுக சார்பில் யார் வேட்பாளர் என்றாலும் அவர் கலைஞர் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் நமது திமுக ஆட்சியிலே வேலை பெற முடிந்தது. தன்னம்பிக்கை உருவானது. கல்லூரிகள், பள்ளிகள் அதிகம் திறக்கப்பட்டன. கோட்டை மைதானத்திற்கு அருகில் உள்ள சையத் அபீத் தெருவில் தான் தொடக்க காலத்தில் கழக தலைவர் ஒன்றரை ஆண்டு காலம் இருந்திருக்கிறார்.

    இந்த திராவிட இயக்கத்திற்கு அடித்தளம் சேலம் தான். சுயமரியாதை இயக்கம், நீதி கழகம் இணைத்து 1944 ம் ஆண்டு திராவிட கழகம் என மாற்றப்பட்டது இந்த சேலத்தில் தான்.

    விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ரத்து, மாற்று திறனாளிகளை மேம்படுத்தியது, ஏராளமான மருத்துவ கல்லூரிகள் திறப்பு, சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம், மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக மாறியது என பல்வேறு சாதனைகள் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது.

    இந்த சேவைகள் தொடர,  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உங்களில் ஒருவராக இங்கு நிற்கும், எஸ். ஆர். பார்த்திபனை வெற்றி பெற செய்யுமாறு பணிவன்புடனும், உரிமையுடனும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019


    திருவாரூரில் இன்று பிரச்சாரம் தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி இரும்பு மனிதர் அல்ல கல் மனிதர் என்று கடுமையாக சாடினார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    திருவாரூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையினை வெளியிட்ட முக ஸ்டாலின், இன்று திருவாரூரில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். முதலில் திருவாரூரில் உள்ள கழக தலைவர் கருணாநிதி வீட்டிற்கு சென்று ஆசிப்பெற்று, வீதிவீதியாக சென்று, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



    பின்னர் திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாகை மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்  செல்வராசு மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுக  வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஆகியோரை ஆதரித்து பேசினார்.

    மறைந்த தலைவர் கருணாநிதியின் வசனங்களைக் குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கிய ஸ்டாலின் பேசியதாவது:-

    திருவாரூர் தொகுதிக்கு பிரசாரத்திற்காக வர வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், தொகுதி மக்கள் நம்ம வீட்டுப்பிள்ளை நம்ம ஊருக்கு வரவில்லை என எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே முதலில் வந்தேன். ஜூன் 3ம் தேதி நம் கழக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த தினம் ஆகும். அன்று பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வண்டு விடும்.

    மோடி இரும்பு மனிதர் அல்ல. கல் மனிதர். மத்தியில் இருக்கும் பாசிச மோடி அரசை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனும் முனைப்போடு செயல்பட்டு வருகின்றோம்.

    இந்தியாவில் கருப்புப் பணம் முற்றிலும் அழிக்கப்படும், இந்தியர்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் என கூறியது என்னவாயிற்று? இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என கூறிய வாக்குறுதி என்ன ஆனது? இவற்றில் ஏதேனும் ஒன்று நடந்ததா?

    மேலும் தமிழகத்திலே ஆட்சி புரிகின்ற இந்த அதிமுகவை நாம் தான் குற்றம் சாட்டவேண்டும் என்பது அல்ல. அவர்களின் செயல்களே போதும். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து, அவரது கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அவர்கள் இப்போது பதவியில் உள்ளனர். ஆனால், ஆதரவாக வாக்களித்த 18 பேரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

    இதேபோல் அதிமுகவில், கூட்டணியில் இணைந்துள்ள இதர கட்சியினரும் அவர்களை எப்படியெல்லாம் பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அக்கட்சி 2, 3 ஆக உடைந்து விட்டது.

    கழக தலைவரை ஈன்ற ஊர் இந்த ஊர். நம்முடைய தாய் தமிழ் மொழியை காத்திட வேண்டும் என இதே திருவாரூரில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார். இந்த திருவாரூர் தொகுதியில் தான், கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அவரை அமோக வெற்றி பெற வைத்தீர்கள். அந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே தலைவர் மு கருணாநிதி ஆவார்.  

    இதேபோல் தற்போது சகோதரர்கள் செல்வராசு மற்றும் பூண்டி கலைவாணன் ஆகியோரை மகத்தான வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019

    பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குடியுரிமை மசோதாவால் அசாம் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது என உறுதி அளித்துள்ளார். #CitizenshipBill #PMModi
    திஸ்பூர்:

    அரசுமுறை பயணமாக அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இன்று வந்த பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் இடாநகர் பகுதியில் உள்ள ஹோல்லோங்கி என்ற இடத்தில் அமையவுள்ள புதிய பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, உரையாற்றினார்.

    இதையடுத்து, அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றார். அசாம் மாநிலத்தின் சுகாதார துறை மந்திரி ஹிமாடா பிஸ்வா சர்மாவின் தொகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.



    அப்போது அவர் பேசுகையில், குடியுரிமை மசோதாவால் அசாம் மற்றும் வடகிழக்கு மாநில மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது. மாநில அரசுகளின் பரிந்துரையை ஏற்றபிறகே, இந்த மசோதாவை சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். #CitizenshipBill #PMModi
    உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை தொடர்ந்து, பா.ஜ.க. தலைவர் சிவராஜ்சிங் சவுகான் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கு வங்காள அரசு அனுமதி மறுத்துள்ளது. #MamataBanerjee #ShivrajSinghChouhan
    கொல்கத்தா:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் குறைந்தது 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என பா.ஜ.க தீவிரமாக வேலை செய்துவருகிறது. இதற்காக, பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கி வருகின்றனர்.

    இதற்கிடையே, மேற்கு வங்காளம் மாநிலத்தின் பஹராம்பூர், கரக்பூர் ஆகிய இரு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் திட்டமிட்டு இருந்தார்.

    ஆனால் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் பஹராம்பூர் கூட்டத்தை ரத்து செய்துள்ளதாக மாநில பா.ஜ.க அறிவித்துள்ளது.



    இந்நிலையில், கரக்பூர் பகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில்  சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது மம்தாவின் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மாநில அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது. ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்திவிட முடியாது என தெரிவித்தார்.

    ஏற்கனவே, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  #MamataBanerjee #ShivrajSinghChouhan
    தெலுங்கானா மாநிலத்தில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்னும் சில நாள்களில் தெலுங்கானாவில் மாற்றத்துக்கான புயல் வரும் என தெரிவித்துள்ளார். #TelanganaAssemblyElections #Congress #RahulGandhi
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை தக்கவைக்க தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணியும், பாஜகவும் போட்டியிடுகின்றன.

    இன்றுடன் நிறைவடையும் பிரச்சாரத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் கோடாட் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.  இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

    தெலுங்கானா மாநிலத்தில் இன்னும் சில நாள்களில் மாற்றத்துக்கான புயல் தாக்கும். இந்த புயலால் ஏற்படும் மாற்றத்தை மக்கள் வழங்க உள்ளனர். இந்த மாற்றத்தின் மூலம் தெலுங்கானாவின் கனவுகள் நிறைவேறும்.



    மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் மோடியும், மாநிலத்தில் ஆட்சி செய்த சந்திரசேகர் ராவும் கூட்டணி வைத்து செயல்பட்டு வருகின்றனர். எனவேதான், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆதரவளித்து வருகிறது.

    மாநிலத்தில் சந்திரசேகர் ராவை முதலில் தோற்கடிப்போம். அதன்பின், காங்கிரசும், மற்ற கட்சிகளும் மத்தியில் நரேந்திர மோடியை நிச்சயம் தோற்கடிப்போம்.

    தற்போது உங்கள் உடைகள் மற்றும் மொபைல்களில் 'மேட் இன் சீனா' என உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதை 'மேட் இன் தெலுங்கானா' என மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என தெரிவித்தார்.
    #TelanganaAssemblyElections #Congress #RahulGandhi
    ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, கடவுள் ராமரை கற்பனை வடிவம் என்று கூறியவர்கள் எனது மத பக்தியை விமர்சிப்பதா? என கேள்வி எழுப்பினார். #RajasthanAssemblyElections #BJP #Modi #LordRam #Congress
    ஜோத்பூர்:

    ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:



    மத்தியில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது, சுப்ரீம் கோர்ட்டுக்கு நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.  அதில், கடவுள் ராமர் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லை என தெரிவித்திருந்தேன்.

    அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் ராமர் ஒரு கற்பனை கதாபாத்திரம் என பதிலளித்தனர். அன்று அப்படி கூறியவர்கள், இப்போது மோடிக்கு இந்து மதத்தை பற்றி ஏதும் தெரியாது என விமர்சிக்கின்றனர்.

    ஆனால், எனக்கு இந்து மதம் தெரியுமா என்பதை ராஜஸ்தான் வாக்காளர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என தெரிவித்தார்.  #RajasthanAssemblyElections #BJP #Modi #LordRam #Congress
    தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி நாளை பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். #TelanganaAssemblyElections #BJP #PMModi
    ஐதராபாத்:

    119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

    சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு சில நாட்களே உள்ள நிலையில் இங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

    பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று தெலுங்கானா மாநிலத்தில் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஐதராபாத்தில் நடைபெறவுள்ள பிரச்சார கூட்டத்தில் பேசி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    டெல்லியில் இருந்து தெலுங்கானா மாநிலம் பேகம்பேட் விமான நிலையத்துக்கு நாளை வருகை தரும் மோடி, ஐதராபாத்தில் உள்ள லால் பகதூர் சஸ்திரி மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகிறார் என அம்மாநில பாஜக செய்தி தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, கடந்த வாரம் தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மற்றும் மஹபூப்நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியது குறிப்பிடத்தக்கது. #TelanganaAssemblyElections #BJP #PMModi
    ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேர்தல் காலங்களில் மட்டுமே காங்கிரசார் கோவிலுக்கு வழிபாடு செய்ய செல்கிறார்கள் என தெரிவித்துள்ளார். #RajasthanAssemblyElections #RajnathSingh
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பன்சுர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நேரங்களில் மட்டுமே கோவில்களுக்கு சென்று வருகின்றனர். அதுவரை அவர்கள் கோவில்களுக்கு செல்வதில்லை. 



    தேர்தல் காலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியினர் கோவில்கள் மற்றும் பசுக்களை வணங்கி வருகின்றனர். ஆனால் பாஜகவினருக்கு அப்படி அல்ல.

    பசுக்கள் மற்றும் கோவில்களுக்கு சென்று வணங்குவது அவர்களது வாழ்க்க்கையின் ஓர் அங்கமாகும் என தெரிவித்தார்.

    முன்னதாக, ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியா உதவ தயாராக இருக்கிறது என தெரிவித்தார். #RajasthanAssemblyElections #RajnathSingh
    தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். #TelanganaAssemblyElections #RahulGandhi #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் வரும் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி அங்கு தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது.

    இந்நிலையில், கம்மம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் பேசியதாவது:



    தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி பாஜகவின் மற்றொரு அங்கம் போல் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தை ஆட்சி செய்துவரும் சந்திரசேகர ராவ் பிரதமர் மோடிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். எனவே, மாநிலத்தில் சந்திரசேகர ராவ் ஆட்சியையும், மத்தியில் பாஜக ஆட்சியையும் அகற்ற வேண்டும்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக கூறிய பிரதமர் மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால்
    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்கள் மகிழ்ச்சியின்றி உள்ளனர்.

    மத்திய அரசின் அமைப்புகளான ஆர்பிஐ மற்றும் சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை மோடி அரசு அழிக்க முயற்சித்து வருகிறது என தெரிவித்தனர். #TelanganaAssemblyElections #RahulGandhi #ChandrababuNaidu
    ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, உங்களைப் போலவே நானும் வாழ்ந்தவன் என நெகிழ்ச்சியாக கூறினார். #RajasthanAssemblyElections #BJP #PMModi #Congress
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக சார்பில் வசுந்தர ராஜே சிந்தியா முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    இதற்கிடையே, டிசம்பர் மாதம் 7-ம் தேதி அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜகவும், ஆட்சிக்கட்டிலில் அமர காங்கிரசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நகவுரா பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர்நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ராகுல் காந்தி குடும்பத்தினர் போன்று நான் சில்வர் ஸ்பூனுடன் பிறக்கவில்லை. எனது பெற்றோரும், தாத்தா - பாட்டியும் ஆட்சியாளர்கள் இல்லை.  நான் உங்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன். உங்களைப் போன்ற வாழ்க்கையை தான் நானும் வாழ்கிறேன்.



    நான் எனது குடும்பத்திற்காக ஓட்டு கேட்கவில்லை. காங்கிரஸ் பரம்பரை அரசியலை உருவாக்க நினைக்கிறது.
    நீங்கள் உங்களின் ஓட்டின் வலிமையை உணர வேண்டும்.

    பாஜக அரசு சாதாரண மக்களுக்கானது. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் எல்லா வளங்களும் பெறவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

    அனைவரும் வளம் பெறவேண்டும் என்பதே பாஜக அரசின் ஒரே மந்திரம். நான்கு தலைமுறைகளாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் இல்லை. மக்களின் வலியை புரிந்து கொள்ளவும் இல்லை என தெரிவித்தார். #RajasthanAssemblyElections #BJP #PMModi #Congress
    ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியினர் நீதித்துறையையே மிரட்டி வருகின்றனர் என குற்றம் சாட்டினார். #RajasthanAsemblyElections #BJP #PMModi #Congress
    அல்வார்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி வசுந்தர ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் 7ம் தேதி அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

    ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் நலிந்து வருகிறது. அவர்கள் மரியாதை என்பதையே மறந்துவிட்டனர். பின்தங்கிய சமுதாயத்தினரை காங்கிரஸ் வாக்கு வங்கியாக பயன்படுத்தி வந்தது. டாக்டர் அம்பேத்கருக்கு அக்கட்சி பாரத ரத்னா வழங்கி கவுரவிக்கவில்லை.



    காங்கிரஸ் நீதித்துறையை அரசியலில் இழுக்கிறது. நீதித்துறைக்கு ஒரு பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அக்கட்சி தலைவர் ஒருவர், 2019 தேர்தல் வருவதால், அயோத்தி வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்கிறார். அந்த கோரிக்கை நீதிபதி ஏற்காதபோது, கண்டன தீர்மானம் கொண்டுவரப்படும் என நீதித்துறையை மிரட்டுகின்றனர். எந்த பயமும் இல்லாமல், நீதியின் பாதையில் நடக்க வேண்டும் என நீதித்துறையை கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார். #RajasthanAsemblyElections #BJP #PMModi #Congress
    சத்தீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, தலித் என்பதால் சீதாராம் கேசரியால் காங்கிரஸ் தலைவராக தொடர முடியவில்லை என தெரிவித்தார். #ChattisgarhAssemblyElections #BJP #PMModi
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் சென்ற வாரம் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 72 தொகுதிகளில் நாளை மறுதினம் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது. 

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் மகசமுந்த் என்ற இடத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் தலைவராக சீதாராம் கேசரி இருந்தபோது, அவரது 5 ஆண்டு பதவிக்காலத்தை அக்கட்சி நிறைவு பெற விடவில்லை. அவருக்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. சோனியா புதிய தலைவராக வேண்டும் என்பதற்காகவும், அவர் தலித் என்பதற்காகவும் சீதாராம் கேசரி பாதியிலேயே தூக்கி வீசப்பட்டார்.



    கடந்த சில பத்தாண்டுகளாக டெல்லியில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி நடைபெற்றது. இந்த ரிமோட் ஒரு குடும்பத்தின் கைகளில் இருந்தது. அவர்களுக்கு பாஜக மீது பயம் ஏற்பட்டது. ஒரு குடும்பத்தைச் சேராத திறமை வாய்ந்த ஒருவரை கட்சி தலைவராக காங்கிரஸ் நியமிக்க முடியுமா.

    காங்கிரசை சேர்ந்த ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறை ஆட்சி செய்ததை எண்ணிப் பாருங்கள். மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவர்கள் ஒரு குடும்பத்தின் நலனை மட்டுமே சிந்தித்தனர். மக்கள் நலத்திட்டங்கள் கிடைப்பதை பற்றி சிந்திக்கவில்லை. இவர்கள் மூலம் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதை எப்படி எதிர்பார்க்கமுடியும்.

    சத்தீஸ்கரின் வளர்ச்சிக்காக ராமன் சிங் ஏராளமாக உழைத்து வருகிறார். மாநிலம் வலுப்பெற வேண்டும் என்றால், அவருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். #ChattisgarhAssemblyElections #BJP #PMModi
    ×