search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு அதிகரிப்பு"

    இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலியாக திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். #SriLankablasts
    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், உள்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் ஏராளமான பயணிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் உள்ள மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளின் சோதனைக்கு பிறகே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் விமான நிலைய வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதோடு, பார்வையாளர் மாடமும் மூடப்படும்.

    இந்த நிலையில் இலங்கையில் நேற்று நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் 310 பேர் பலியான சம்பவத்தையடுத்து இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

    இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, போலீசார் அவர்களை அனுப்பி வைக்கின்றனர். மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. #SriLankablasts

    இந்திய எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #PulwamaAttack #KudankulamNuclearPowerPlant
    நெல்லை:

    இந்திய எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திர கிரியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இந்திய விண்வெளி ஆய்வு கழகத்தின் (இஸ்ரோ) திரவ இயக்க திட்ட மையம் அமைந்துள்ளது. அங்கு ராக்கெட்டுகளுக்கான திரவ எரிபொருள் சோதனை கூடம் உள்ளது.

    அதேபோல் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2 அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும் 3,4வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நாங்குநேரியை அடுத்த விஜயநாராயணத்தில் கப்பல் படை கண்காணிப்பு சிக்னல் மையம் செயல்பட்டு வருகிறது. இவைகள் அனைத்தும் தேசத்தின் பாதுகாப்பு மிக்க முக்கிய மையங்கள் ஆகும்.

    கூடங்குளம் அணுமின் நிலையம், விஜயநாராயணம் கடற்படைதளம், மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ மையங்களில் வழக்கமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவர்களது கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். #PulwamaAttack #KudankulamNuclearPowerPlant
    காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. #PulwamaAttack #KumbhMela
    பிரயாக்ராஜ்:

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நேற்று முன்தினம் நடத்திய கொடூர தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.



    அதன்படி உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் படையினர் அனைவரும் தீவிர உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

    கும்பமேளாவில் புனித நீராட வரும் பக்தர்கள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறிய போலீஸ் அதிகாரிகள், கும்பமேளா நடைபெறும் பிரதான பகுதிகள் அனைத்திலும் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக அதிநவீன தொழில் நுட்ப கருவிகளும் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் கூறினர். #PulwamaAttack #KumbhMela
    சென்னைக்கு வரும் ஜோத்பூர் விரைவு ரெயிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளதால், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #BombThreat #ChennaiRailwayStation
    சென்னை:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை செல்போன் எண்ணுக்கு நேற்று இரவு 12 மணியளவில் ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் இந்த நாச செயலில் ஈடுபட்டு இருப்பதாகவும் அந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சென்னை மாநகர கட்டுப்பாட்டு போலீசார் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூரை நோக்கி வந்து கொண்டிருப்பதும் தெரியவந்தது.

    சென்னை ரெயில்வே போலீசார் ஜோத்பூர் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்ததால் வழியில் நிறுத்தி சோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்தனர்.



    அதன்படி நள்ளிரவில் ஜோத்பூர் ரெயிலில் வெடி குண்டு சோதனை நடத்தப்பட்டது. அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை. என தெரிய வந்தது. இதையடுத்து அந்த ரெயில் இன்று காலை 10.30 மணிக்கு எழும்பூர் வந்தடைந்தது.

    ரெயிலில் சோதனை நடத்த வெடிகுண்டு நிபுணர்கள் தயாராக நின்று கொண்டிருந்தனர். பயணிகள் இறங்கியதும் போலீசார் ஒவ்வொரு பெட்டியிலும் ஏறி வெடிகுண்டு சோதனை நடத்தினர்.மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நவீன கருவிகள் வழியாக சோதனை நடத்தப்பட்டது.

    தீவிர சோதனைக்கு பிறகு அது ‘வெறும் புரளி’ என தெரியவந்தது. பயணிகளின் உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் பொருட்களும் தீவிர சோதனை நடத்தப்பட்டன.

    வடமாநிலத்தில் இருந்து வந்த பயணிகளை அழைப்பதற்காக அவர்களது உறவினர்களும் நிலையத்திற்கு வந்திருந்தனர். ரெயில்வே மற்றும் பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் எழும்பூர் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. #BombThreat #ChennaiRailwayStation
    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்த பின்னர் சபரிமலை கோவில் நடை, நாளை முதல் முறையாக திறக்கப்படுவதால் கோவிலின் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை அமல்படுத்த போவதாக கேரள மாநில அரசு அறிவித்தது. இதற்கு ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், நாயர் சங்கம், ஐயப்ப சேவா சங்கம் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டக்களத்தில் குதித்தன. இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது.



    பா.ஜனதா கட்சி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 90 கி.மீ. தொலைவுக்கு பிரமாண்ட பேரணியை நடத்தியது.

    சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பேரணியில் குவிந்ததால் திருவனந்தபுரம் நகரமே ஸ்தம்பித்தது. பேரணியில் பேசிய பா.ஜனதா மாநில செயலாளர் ஸ்ரீதரன்பிள்ளை தங்களது முதல்கட்ட போராட்டம் பெரிய வெற்றியை பெற்றுள்ளதாகவும், 24 மணி நேரத்திற்குள் மாநில அரசு சரியான முடிவை எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக இதை விட பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    சர்வதேச இந்து பரி‌ஷத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசும் போது, நாளையும், நாளை மறுநாளும் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் இந்து அமைப்புகள் ஆதரவுடன் நடத்தப்படும் என்றார்.

    இந்த பிரச்சினைக்கு சமரச தீர்வு காண மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தலைமையில் இன்று சமரச பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம்போர்டு தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சபரிமலை கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜ குடும்பம், தந்தரிகள் சமாஜம், ஐயப்ப சேவா சங்கம், ஐயப்ப சேவா சமாஜம், யோக சேமசபா ஆகியோருக்கு தேவசம் போர்டு அழைப்பு விடுத்து இருந்தது. இதன் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசும், தேவசம் போர்டும் உடனடியாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அது தொடர்பான தீர்ப்பு வரும்வரை சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும். தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையையே பின்பற்ற வேண்டும் என்று இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வற்புறுத்தினார்கள்.

    இதுதொடர்பாக தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில் சபரிமலை கோவிலின் பாரம்பரியம், நம்பிக்கைகளை பாதுகாக்கவே விரும்புவதாகவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண முடியும் என்றார்.

    இதனால் இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தெரிகிறது. இந்த கூட்ட முடிவுக்கு பிறகே சபரிமலையில் விவகாரத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி ஏற்படுமா, அல்லது தொடருமா? என்பது தெரியவரும்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக நாளை (17-ந்தேதி) மாலை திறக்கப்படுகிறது. வருகிற 22-ந்தேதி வரை 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல தடை இல்லை என்பதால் நாளை முதலே சபரிமலை கோவிலுக்கு பெண் பக்தர்கள் வருகை தர வாய்ப்பு உள்ளது.

    கேரளாவை சேர்ந்த பல பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல விரதம் இருந்து வருகிறார்கள். கண்ணூர் பகுதியை சேர்ந்த ரேஷ்மா என்பவர் 41 நாள் விரதம் இருந்து வருகிறார்.

    அவர் தன்னுடன் சில பெண்களை அழைத்துக் கொண்டு சபரிமலைக்கு செல்லப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும், போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    ஏற்கனவே சபரிமலைக்கு பெண் பக்தர்கள் சென்றால் அவர்களை பம்பை, நிலக்கல், பந்தளம் பகுதிகளில் தடுத்து நிறுத்துவோம் என்று இந்து அமைப்புகள் எச்சரித்து உள்ளன. சிவசேனா இது தொடர்பாக தற்கொலை மிரட்டலும் விடுத்துள்ளது. நிலக்கல், பம்பை பகுதிகளில் ஆதிவாசி சங்கடன சமிதி சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    சபரிமலைக்கு வரும் பெண்களை சாலைகளில் படுத்து தடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாகவும் ஐயப்ப பக்தர்கள் அறிவித்து உள்ளனர். இதனால் சபரிமலை பகுதியில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    வழக்கமாக சபரிமலை கோவில் நடைதிறப்பின் போது ஒரு ஐ.ஜி. தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தற்போது உருவாகி உள்ள பதட்டத்தை தொடர்ந்து சபரிமலையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், கமாண்டோ போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல சபரிமலை செல்லும் வழிகளான பந்தளம், நிலக்கல், பம்பை பகுதியிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

    பெண் பக்தர்கள் பாதுகாப்புக்காக சபரிமலையில் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று முதலில் கூறப்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா மாநில அரசுக்கு பரிந்துரையும் செய்திருந்தார்.

    தற்போது போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளதால் சபரிமலை பாதுகாப்பு பணி நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்போவது இல்லை. பெண் போலீசாரை அங்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்போவதில்லை என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. #SabarimalaTemple

    சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #IndependenceDay #IndependenceDaySecurity #Intelligence
    சென்னை:

    நாடு முழுவதும் வரும் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இதேபோல் அந்தந்த மாநில தலைநகரங்களில் சுதந்திர தின விழாக்கள் கோலாகலமாக நடைபெற உள்ளன. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் சுதந்திர தின விழா நடைபெறும் இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவு 12 மணி முதல் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்படுள்ளது. பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் 22-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    இதற்கிடையே சென்னை ராஜாஜி சாலையில் இன்று சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதேபோல் நாளை மற்றும் 13-ம் தேதியிலும் ஒத்திகை நடைபெற உள்ளது. #IndependenceDay #IndependenceDaySecurity #Intelligence
    நடிகர் சல்மான்கானை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருப்பதன் எதிரொலியாக அவரது வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் போலீசாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #SalmanKhan
    மும்பை:

    ராஜஸ்தானை சேர்ந்த பயங்கர ரவுடியான லாரன்ஸ் பிஸ்னோயின் உதவியாளர் சம்பத் நெஹ்ராவை அரியானா மாநில சிறப்பு அதிரடி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, நடிகர் சல்மான்கானை கொலை செய்வதற்கு லாரன்ஸ் பிஸ்னோய் திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது.

    இதற்காக லாரன்ஸ் பிஸ்னோயின் பிற கூட்டாளிகள் மும்பைக்கு சென்றிருக்கலாம் என கருதும் அரியானா போலீசார், இது தொடர்பாக மராட்டிய போலீசாரை எச்சரித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சல்மான்கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி அவரது வீடு மற்றும் படப்படிப்பு தளங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அவரது பாதுகாப்புக்காக சிறப்பு மெய்க்காப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  #SalmanKhan #Tamilnews 
    மாவோயிஸ்டுகள் கொலை மிரட்டலைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ரோடு ஷோக்கள் செல்ல வேண்டாம் என்று பிரதமருக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி உயிருக்கு மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக புனே போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கைதான மாவோயிஸ்டிடம் இருந்து கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மந்திரிசபை செயலக அதிகாரிகள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.

    பிரதமருக்கு சிறப்பு பாதுகாப்பு படை வீர்கள் (எஸ்.பி.ஜி.) மற்றும் நெருக்கமான பாதுகாப்பு படை வீரர்கள் (சி.பி.ஜி.) ஆகியோர் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். மாவோயிஸ்டுகள் மிரட்டலைத் தொடர்ந்து பிரதமருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    பிரதமரின் பாதுகாப்பு படையில் அதிவிரைவில் குறி பார்த்து சுடும் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எந்த தாக்குதலையும் முறியடிக்க கூடிய திறன் படைத்தவர்கள்.

    எதிரி துப்பாக்கியை எடுத்து குறி பார்க்கும் முன் இவர்கள் அவனை வீழ்த்தி விடுவார்கள். அந்த அளவுக்கு திறமை வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

    கோப்புப்படம்

    மேலும் பிரதமர் மோடி பொது இடங்களுக்கு செல்லும்போது திடீர் என்று பாதுகாப்பை மீறி ‘ரோடு ஷோ’ சென்று பொதுமக்களை சந்திக்கிறார். சமீப காலமாக பிரதமர் மோடி இவ்வாறு பல ரோடு ஷோக்கள் சென்றுள்ளார். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை அடைந்தனர்.

    இதுபோல் திடீர் ரோடு ஷோக்கள் செல்ல வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கண்டுபிடிக்க கூடிய நவீன கருவிகளும் பிரதமர் பாதுகாப்பில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. #PMModi
    ×