என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுச்சேரி சட்டசபை"
- வருகிற 31-ந்தேதி காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
- அன்றைய தினம் சபையில் கவர்னர் உரையாற்றுகிறார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
பாராளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல் முடிந்தவுடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் கடந்த மாதம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடியது. கூட்டத்தில் ரூ.12 ஆயிரத்து 700 கோடிக்கு வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக கோப்பு மத்திய உள்துறை, நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுச்சேரி அரசின் ரூ.12 ஆயிரத்து 700 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதன்படி வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.
ஆகஸ்டு 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று தெரிவித்தார்.
15-வது சட்டசபையின் 5-வது கூட்டம் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் சபையில் கவர்னர் உரையாற்றுகிறார். 1-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. மறுநாள் 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்கூட்ட தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.
இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்தார்.
- புதுவைக்கு கூடுதல் நிதி வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
- பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் என்னை சந்தித்து தொகுதி பிரச்சனைகளை மட்டும் பேசினார்கள்.
புதுச்சேரி:
தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள் இன்று புதுவையில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு புதுவை அரசு சார்பில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன்பின்னர் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காமராஜர் பிறந்தநாளை கொண்டாடுவது நமக்கு நாமே சேர்த்துக்கொள்ளும் சிறப்பு. இந்த புனிதநாளில் தான் முத்துக்குமரப்ப ரெட்டியார் மறைந்துள்ளார். ரெட்டியார் சமூகம்தான் புதுவையில் அதிகளவு நிலம் வைத்திருந்தனர். அந்த சமூகத்திலிருந்துதான் முத்துக்குமரப்ப ரெட்டியார் சோசலிச இயக்கத்தை ஆரம்பித்து பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு எதிராக விடுதலை போராட்டத்தை தொடங்கினார்.
நெட்டப்பாக்கத்தை சுற்றியுள்ள 60 கிராமங்களுக்கு விடுதலை பெற்று, முதல் முதலாக தேசியக் கொடியை, சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்த பெருமைக்குரியவர். சமுதாய நலனே உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்தவர்கள் நமக்கு இன்றும் வழிகாட்டியாக உள்ளனர். அவர்களின் வழியில் நம் பயணத்தை தொடர்வதுதான் நம் சமூகம் முன்னேற உகந்ததாக அமையும்.
ஓரிரு நாளில் புதுவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்கும். இந்த முறை பட்ஜெட் சிறப்பாக அமைய பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
எந்த திட்டங்கள் பாதியில் நிற்கிறதோ அதற்கு முன்னுரிமை கொடுத்து முடிக்கப்படும். எழுச்சி மிகு புதுவை என்பதே எங்கள் நோக்கம், அதற்கான பயணம் தொடரும்.
அமைச்சர் திருமுருகனுக்கு முதலமைச்சர் விரைவில் இலாகா ஒதுக்கு வார் என நம்புகிறேன். பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் என்னை சந்தித்து தொகுதி பிரச்சனைகளை மட்டும் பேசினார்கள். புதுவைக்கு கூடுதல் நிதி வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி முதலில் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
என்கவுண்டர் கூடாது என்பதல்ல என் கருத்து. என்கவுண்டர் வராமல் இருக்க ரவுடிகள் உருவாகாமல் இருக்க வேண்டும். அதற்கு அடிப்படையிலான கட்ட பஞ்சாயத்துகள் இருக்கக்கூடாது என்பதே என் கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 2 நாட்களாக தொகுதி நிகழ்ச்சிகளில் பைக்கில் சென்று பங்கேற்று வருகிறார்.
- மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு காருக்கு டீசல் போட மாதம் ரூ.30 ஆயிரம் தரப்படுகின்றது.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையில் கடந்த 22-ந் தேதி இடைக்கால கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அரசு காரில் வந்து இறங்கினர்.
ஆனால் திருபுவனை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., அங்காளன் மட்டும் தனது உதவியாளரின் பைக்கில் வந்து கலந்து கொண்டார்.
அரசு கொடுத்த கார் அடிக்கடி பழுதாகி விடுவதால் தனது வீடான செல்லிப்பட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டு சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தாக தெரிவித்தார்.
மேலும் தனக்கு புதிய காரை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
ஆனாலும், அவருக்கு புதிய கார் வழங்கப்படவில்லை. இதனையடுத்து அதிருப்தியடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. தனக்கு கொடுக்கப்பட்ட அரசின் காரை சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து கார் சாவியை கொடுத்து காரை ஒப்படைத்தார். கடந்த 2 நாட்களாக தொகுதி நிகழ்ச்சிகளில் பைக்கில் சென்று பங்கேற்று வருகிறார். இது குறித்த அங்காளன் எம்.எல்.ஏ., கூறியதாவது:-
எனக்கு கொடுக்கப்பட்ட அரசு கார் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஓடாமல் முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் வைத்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அந்த காரை பட்டி பார்த்து புதிய கார் போல் என்னிடம் வழங்கினர்.
ஆனால் கார் எங்கு போனாலும் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது.
இதேபோல் மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு காருக்கு டீசல் போட மாதம் ரூ.30 ஆயிரம் தரப்படுகின்றது. ஆனால் எனக்கு காருக்கு டீசல் போட பணம் தருவதில்லை. காரின் ஆவணங்களையும் வழங்கவில்லை. இதனால் எனக்கு காரே வேண்டாம் என்று சபாநாயகரை சந்தித்து சாவியுடன் ஒப்படைத்துவிட்டேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மற்றவர்களுக்கு புதிய கார் தந்துள்ளனர். எனக்கு இயங்கும் காரைக்கூட சீரமைத்து தரவில்லை.
- மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டி வர அவர் பின் சீட்டில் அமர்ந்து வந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி திருபுவனை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன்.
இவர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். இவருக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டிருந்தது. இந்த கார் பழுதடைந்து விட்டது. இதனால் பழைய காரை மாற்றி, புதிய கார் வழங்கும்படி சட்டசபை செயலகத்திடம் ஒப்படைத்திருந்தார். ஆனால் அவருக்கு மாற்று காரோ, பழைய காரை பழுது நீக்கியோ தரப்படவில்லை.
இதனால் அங்காளன் எம்.எல்.ஏ. தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் திருபுவனை தொகுதியிலிருந்தே மோட்டார் சைக்கிளில் சட்டசபைக்கு வந்தார். மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டி வர அவர் பின் சீட்டில் அமர்ந்து வந்தார்.
இதுகுறித்து அங்காளன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
எம்.எல்.ஏ.வான எனக்கு அரசு தரப்பில் வழங்கிய கார் பழுதடைந்தது. பலமுறை காரை மாற்றித் தரக்கோரி அதிகாரிகளிடம் கேட்டேன். ஆனால், அவர்கள் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்றவர்களுக்கு புதிய கார் தந்துள்ளனர். எனக்கு இயங்கும் காரைக்கூட சீரமைத்து தரவில்லை. அதிருப்தியடைந்தாலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வந்தேன் என தெரிவித்தார்.
- புதுவை மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் ஆண்டறிக்கை நகலை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சபையில் சமர்பித்தார்.
- பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு நடத்தி, அனுமதி வழங்கப்பட்டதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர உள்ளதால் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 9.45 மணிக்கு கூடியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார்.
சபையில் முதல் நிகழ்வாக, மறைந்த முன்னாள் அமைச்சர் ப.கண்ணனுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான மறைந்த விஜயகாந்த், விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் மார்க்சிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, மறைந்த தலைவர்களுக்காக, சபை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து புதுவை மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் ஆண்டறிக்கை நகலை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சபையில் சமர்பித்தார்.
தொடர்ந்து சட்ட முன்வரைவுகளுக்கு உறுப்பினர்கள் ஒப்புதல் பெறப்பட்டது. சட்டசபை குழு அறிக்கை, கூடுதல் செலவின அறிக்கை, பேரவை முன் வைக்கப்பட்டது.
தொடர்ந்து அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சபையில் தாக்கல் செய்தார்.
ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான 5 மாத அரசு செலவினங்களுக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85 ஆயிரத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு நடத்தி, அனுமதி வழங்கப்பட்டதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.
இந்த நிலையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாததை கண்டித்து எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
காலை 9.45 மணிக்கு தொடங்கிய சட்டசபை கூட்டம் 10.45 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.
- நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
- 2016-ம் ஆண்டுதான் புதுவை சட்டசபையில் அதிக பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றனர்.
நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் நீண்டகால கோரிக்கையான சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்றப்படவில்லை. புதிய பாராளுமன்ற கட்டடத்தை திறந்து நடந்த சிறப்பு கூட்டத்தில் சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளனர்.
இந்த மசோதா புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என்பதால் சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
இதன்படி பாராளுமன்றத்தில் நேற்று புதுவை உள்ளிட்ட சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களுக்கு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தம் மூலம் புதுவை சட்டமன்றத்தில் 30 எம்.எல்.ஏ.க்களில் 10 எம்.எல்.ஏ.க்கள் பெண்களுக்கு ஒதுக்கீடாக கிடைக்கும்.
இதுதவிர 3 நியமன எம்.எல்.ஏ.க்களில் ஒரு பெண் எம்.எல்.ஏ. இடம் பெறுவார்.
இதன் மூலம் புதுவை சட்டமன்றத்தில் வரும் காலத்தில் 11 பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம்பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற புதுவையில் முதல்முறையாக 1963-ம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது. அன்று முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தம் 15 சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றுள்ளது.
புதுவை சட்டப்பேரவை தேர்தலில் பெண் உறுப்பினர்களை குறைந்த அளவே கட்சிகள் வாய்ப்பு தந்தன. முதல் சட்டப் பேரவையில் (1963 முதல் 1964) சரஸ்வதி சுப்பையா, சாவித்திரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2-வது சட்டப்பேரவையில் (1964-68) பத்மினி சந்திரசேகரன், அங்கம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
3-வது சட்டப் பேரவையில் (1969-74) வீரம்மாள் தேர்வு செய்யப்பட்டார். 4-வது, 5-வது சட்டப் பேரவைக்கு பெண்கள் யாரும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 6-வது சட்டப்பேரவையில் (1980-83) ரேணுகா அப்பாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சராகவும் இருந்தார்.
7-வது சட்டப்பேரவையில் (1985-90) கோமளா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சட்டப்பேரவைக்கு செல்வி சுந்தரம் நியமன எம்.எல்.ஏ.வாக நியமிக்கப்பட்டார். 8-வது சட்டப்பேரவைக்கு பெண்கள் யாரும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 9-வது சட்டப் பேரவைக்கு 1991-ல் கேபக்கிரி அம்மாளும், 10-வது சட்டப்பேரவைக்கு 1996-ல் அரசியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
11-வது சட்டப் பேரவைக்கு 2001-ல் மேரிதெரசா நியமன எம்.எல்.ஏ.வாக இருந்தார். அதன்பிறகு பெண் எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை.
இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 1, காங்கிரஸ் சார்பில் 1, என்.ஆர். காங்கிரஸ் சார்பில் 2, தி.மு.க. சார்பில் 1, பா.ஜ.க., பா.ம.க., ஐ.ஜே.க. என பல்வேறு கட்சிகள் சார்பில் மொத்தம் 12-க்கு மேற்பட்ட பெண்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
காங்கிரஸ் சார்பில் நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட வி.விஜயவேணி, என்.ஆர். காங்கிரஸ் சார்பில் திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிட்ட கோபிகா, நெடுங்காடு (தனி) தொகுதியில் போட்டியிட்ட சந்திர பிரியங்கா, தி.மு.க. சார்பில் காரைக்கால் நிரவி தொகுதியில் போட்டியிட்ட கீதா ஆனந்தன், உள்ளிட்ட 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
2016-ம் ஆண்டுதான் புதுவை சட்டசபையில் அதிக பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றனர். 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்ற சந்திரபிரியங்கா அமைச்சராக பதவியேற்றார். இவரும் கடந்த அக்டோபர் மாதம் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஒட்டுமொத்தமாக தற்போதுள்ள சட்டசபை யில் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ. மட்டும்தான் உள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் பெண்களை சட்டசபை தேர்தலில் நிறுத்த முன்வராததுதான் காரணம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளான தி.மு.க., பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் பெண் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. காங்கிரசில் ஒரே ஒரு பெண் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவரும் நெட்டப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
என்.ஆர். காங்கிரசில் 2 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் ஒருவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். ஆனால் வருங்காலத்தில் இந்த நிலை முற்றிலும் மாறும். சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறி உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு வாய்ப்பளித்தே தீர வேண்டும் என்ற நிலை உருவாகும்.
- வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருந்தார்.
- சம்பவத்தால் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி அடுத்த கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகன் சத்யராஜ் (வயது 29).
பிளஸ்-2 வரை படித்துள்ள அவர், வலு தூக்கும் போட்டியில் மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். அவர் புதுச்சேரி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருந்தார்.
இந்நிலையில் நீண்ட ஆண்டுகளாக தனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை என்று விரக்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சத்யராஜ் தனது இரு சக்கர வாகனத்தில் சட்ட சபைக்கு வந்தார். சட்டசபை நுழை வாயிலில் நின்று கொண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை வேலை வழங்கப்படவில்லை என்று கூச்சலிட்டார்.
அப்போது சட்டசபை காவலர்கள் அவரை சமாதானப்படுத்தினர். ஆனால் அவர் தனது சான்றிதழ்களை சட்டசபை நுழை வாயிலில் தூக்கி வீசினார். உடனே சபை காவலர்கள் அதனை எடுத்துக்கொடுத்து அங்கிருந்து செல்லும் படி கூறினர். ஆனால் அவர் தொடர்ந்து அரசுக்கு எதிராக கூச்சலிட்டார்.
இது குறித்து பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- புதுவை அரசு சார்பில் கொம்பாக்கம்பேட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.
- சட்டசபை எதிர்கட்சி தலைவர் சிவா இசை கச்சேரிக்கு வந்த தவில், நாதஸ்வர வித்வான்களிடம் சென்று நலம் விசாரித்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் கொம்பாக்கம்பேட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.
விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்களை வரவேற்க சட்டசபை எதிர்கட்சி தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வான சிவா மங்கள இசைக்கு ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி வர காலதாமதமானது. அப்போது சட்டசபை எதிர்கட்சி தலைவர் சிவா இசை கச்சேரிக்கு வந்த தவில், நாதஸ்வர வித்வான்களிடம் சென்று நலம் விசாரித்தார்.
பின்னர் அவர்களிடம் கொடுங்கள் நானும் வாசித்து பார்க்கிறேன் என்று கூறி நாதஸ்வரத்தை வாங்கி வாசித்து பார்த்தார். இதைப்பார்த்த அவரது ஆதரவாளர்கள், விழாவுக்கு வந்தவர்கள் பாராட்டி, கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
- புதுவையில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்
- வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த புதுவை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை (16-ந்தேதி) முதல் 11 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுவை சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் ஆரம்ப பள்ளி முதல் 8-ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (வியாழக்கிழமை)முதல் 26-ந் தேதி வரை 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த புதுவை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுவை காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகரில் உழவர்கரை நகராட்சி சார்பில் இன்று தூய்மை பணி நடந்தது. மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்கவும், சேதத்தை தடுக்கவும் வாய்க்கால்களில் அடைப்புகளை அகற்றும் பணி நடந்தது. இதை சபாநாயகர் வைத்திலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியாவது:-
சட்டப்பேரவைக்கு மத்திய அரசு நியமித்த பா.ஜனதாநியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது.
எனவே, அவர்கள் 3 பேரும் உச்சநீதிமன்றத்தை அனுகி சபை நிகழ்வுகளில் பங்கேற்க கால நீட்டிப்பு பெறலாம். சட்டமன்ற உறுப்பினர்களின் சலுகைகளுக்கும் அவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை சட்டசபைக்கு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நியமன எம்.எல்.ஏக்கள் சபை நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
இதையடுத்து ஆகஸ்டு 1-ந்தேதி சட்டசபை நிகழ்வுகளில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்கு செப்டம்பர் 11-ந்தேதி வரையிலான காலத்திற்கு மட்டும் எம்.எல்.ஏ அடையாள அட்டை வழங்கப்பட்டது. தற்போது அந்த காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் சபாநாயகர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். #PuducherryAssembly #NominatedMLAs #Vaithilingam
புதுச்சேரி:
புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களது நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என தீர்ப்பளித்தது. இதையடுத்து காங்கிரசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு இடைக் கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், நியமனம் எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
இதையடுத்து கடந்த மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டத்தில் நியமனம் எம்.எல்.ஏ.க்கள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் அவர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என்றும் தீர்ப்பு வந்த பிறகே நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக இறுதியான முடிவு எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் வைத்திலிங்கம் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது பா.ஜனதா சார்பாக ஆஜரான வக்கீல்கள் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகள் எதுவும் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அடையாள அட்டை கூட தேதி குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய அனைத்து அதிகாரத்தையும் சலுகைகளையும் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதோடு அடுத்த மாதம் 9-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். #PuducherryAssembly #NominatedMLAs
புதுச்சேரி:
புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக 3 எம்.எல்.ஏ.க்களை நியமித்தது.
எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோருக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.
ஆனால், எம்.எல்.ஏ.க் களை சட்டசபைக்குள் அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் தொடர்ந்து மறுத்து வந்தார். அதோடு எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்க கோரி காங்கிரஸ் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
ஐகோர்ட்டு மத்திய அரசுக்கு புதுவை சட்ட சபைக்கு எம்.எல்.ஏ.க்களை நியமிக்க அதிகாரம் உள்ளதாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.
இதனால் தங்களை சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என நியமன எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
இதனிடையே சுப்ரீம் கோர்ட்டு, எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்காததால் அவர்களை சபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு கவர்னர் கிரண்பேடி நிதி மசோதாவுக்கு அனுமதி அளித்தார்.
இதையடுத்து கடந்த 1-ந்தேதி கூடிய சட்டசபை கூட்டத்தில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். நிதிமசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனந்தராமன் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சட்ட சபையில் வாக்களிக்க உரிமை இல்லை என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது சபாநாயகர் வைத்திலிங்கம் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றினார்.
மேலும் சுப்ரீம் கோர்ட்டின் எதிர்பார்ப்புக்கு இணங்கி 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் சபைக்குள் அனுமதிக்கப்பட்டதாகவும், செப்டம்பர் 11-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அளிக்கும் தீர்ப்புக்கு பிறகு நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் சபை நிகழ்வில் பங்கேற்க நியமன எம்.எல்.ஏ.க்கள் அனுமதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகள், உரிமைகள் வழங்கப்படாது என்பது தெரிய வந்துள்ளது.
வழக்கமாக நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி, அரசு விழாக்களுக்கு அழைப்பு, அரசின் நலத்திட்டங்களை பெற பரிந்துரைக்கும் உரிமை, சட்டசபையில் அறை ஒதுக்கீடு என தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க் களுக்கு உரிய அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.
ஆனால், பா.ஜனதாவை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படாது என்று சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏனெனில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்புக்கு பிறகே அவர்கள் எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதனால் நியமன எம்.எல். ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கிடைக்காது. அரசு விழாக்களுக்கு அழைப்பு அனுப்பப்படாது. மக்கள் நலத்திட்டங்களுக்கு பரிந்துரை செய்ய முடியாது என்ற நிலையே ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டசபை செயலகம் அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தலும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்