search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்"

    கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்கு ரேசன் கார்டு இல்லாமல் 5 லிட்டர் மண்எண்ணை வழங்கப்படும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். #GajaCyclone #NirmalaSitharaman
    பேராவூரணி:

    கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நாகை, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள், வீடுகளை இழந்த பொதுமக்கள், மற்றும் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து புயல் பாதித்த பகுதிகளில் மத்திய அரசின் சார்பில் புதிய வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நிர்மலா சீதாராமன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து அவர் தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு புறப்பட்டு வந்தார். அவருடன் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர்.

    அங்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை கணக்கெடுத்து நிவாரணம் அளிக்க வேண்டும். மேலும் பாதி முறிந்து நிற்கும் தென்னை மரங்களையும் கணக்கெடுத்து நிவாரணம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    புதிய தென்னை கன்றுகளை வழங்க வேண்டும், விழுந்த மரங்களை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    இதையடுத்து நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதமர் மந்திரி திட்டத்தில் புதிய வீடுகள் கட்டி தரப்படும். நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்கு ரேசன் கார்டு இல்லாமல் 5 லிட்டர் மண்எண்ணை வழங்கப்படும்.

    மேலும் மேற்கூரை இழந்த வீடுகளுக்கு மத்திய அரசு சார்பில் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து தார் பாய் வழங்கப்படும். தென்னை வாரியம் மூலம் இலவசமாக தென்னை கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    விவசாயிகளின் வங்கி கடன் தள்ளுபடி செய்வது பற்றி நிதி மந்திரியிடம் பரிந்துரை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அவர் மல்லிப்பட்டினம் பகுதியில் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்திக்க புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக பேராவூரணி பயணியர் மாளிகையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., பேராவூரணி கோவிந்தராசு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது கஜா புயல் நிவாரண பணிகள் குறித்து அமைச்சர்களிடம் விவரங்களை அவர் கேட்டறிந்தார். #GajaCyclone #NirmalaSitharaman

    மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் பிரான்ஸ் செல்கிறார். பாரீசில் 12 மற்றும் 13-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #BJP #NirmalaSitharaman #RafaleDeal
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டின் டிசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016-ம் ஆண்டு மோடி அரசு ஒப்பந்தம் செய்தது. அதில் ஊழல் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

    இந்த நிலையில் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கு அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனத்தை இந்திய அரசு தான் சிபாரிசு செய்தது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே கூறினார். இதனால் இப்பிரச்சனையில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

    ஹோலண்டேயின் கருத்தை மத்திய அரசும், பிரான்ஸ் அரசும் மறுத்துள்ளன. இதுகுறித்து டசால்ட் நிறுவனமும், ரிலையன்சும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதில் எங்களது தலையீடு எதுவும் இல்லை என இரு நாடுகளும் மறுத்துள்ளன.

    இந்த நிலையில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் (அக்டோபர்) பிரான்ஸ் செல்கிறார். பாரீசில் 12 மற்றும் 13-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    பிரான்ஸ் நாட்டின் ராணுவ மந்திரி புளோரன்ஸ் பார்லியை சந்தித்து பேசுகிறார். அப்போது மேற்கு ஆசியா மற்றும் இந்தோ- பசிபிக் கூட்டு ராணுவ பயிற்சியை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது.


    பாரீசில் தங்கியிருக்கும் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரனை சந்திக்கிறார். அங்கிருந்து ஆசியான்நாடுகளின் ராணுவ மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் செல்கிறார்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் அதிபர் மேக்ரன் இந்தியா வந்தார். அவரை தொடர்ந்து அக்டோபரில் ராணுவ மந்திரி பார்லியும் இந்தியா வருகை தந்தார். அப்போது பிரான்சில் ராணுவ மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. எனவே தான் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #BJP #NirmalaSitharaman #RafaleDeal
    டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமனை, கே.சி.பழனிசாமி திடீரென சந்தித்து பேசியது ஏன்? என்பது குறித்து அவர் கூறியுள்ளார். #KCPalanisamy #ADMK #BJP
    கோவை:

    அ.தி.மு.க. செய்தி தொடர்பாளராக இருந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கடந்த மார்ச் மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வில் இருந்து கே.சி. பழனிசாமி நீக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

    சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்முதலில் தேர்தல் ஆணையத்தில் மனு செய்தது இவர் தான். இவர் நீக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலரும், கட்சி தலைமையிடம் முறையிட்டதாக கூறப்பட்டது. எனவே கே.சி.பழனிசாமி நீக்கப்பட்ட விவகாரத்தில் கட்சி தலைமை முடிவை மறுபரிசீலனை செய்யலாம் என்றும் தகவல் வெளியானது.

    இந்தநிலையில், டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமனை, கே.சி.பழனிசாமி திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பாரதிய ஜனதாவில் இணைய போவதாக செய்திகள் வெளியானது.

    இதுகுறித்து கே.சி.பழனிசாமி கூறியதாவது:-

    நான் என்றைக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்தவன் தான். என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்காக கடிதம் தரவில்லை. என்னை ஏன் நீக்கினார்கள்? என்ற விளக்கமும் தரவில்லை.


    காவிரி விவகாரத்தில் தேவைப்பட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று தான் கூறி இருந்தேன். தேவை ஏற்படவில்லை என கூறி இருக்கலாம்.

    ஓ.பன்னீர்செல்வம் தான் முயற்சி எடுத்து என்னை நீக்குவதாக அறிவித்துள்ளார். சசிகலாவுக்கு எதிராக நான் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்ததற்கு நன்றி விசுவாசமாக இதை செய்துள்ளார். ஆனால் என்னிடம் கட்சியில் மீண்டும் சேர்க்க கடிதம் கேட்டனர். என் மீது எந்த தவறும் கிடையாது என்பதால் நான் கொடுக்கவில்லை. நான் என்றைக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்தவன் தான்.

    நிர்மலா சீதாராமனை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் தான். நான் பாரதிய ஜனதாவில் இணைய முயற்சிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது.

    இவ்வாறு அவர் கூறினார். #KCPalanisamy #ADMK #BJP
    ×