search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெகபூபா முப்தி"

    • மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் இல்திஜா தெரிவித்துள்ளார்.
    • கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மெகபூபாவின் பிடிபி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது.

    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டடு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின்னர் தற்போது முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மூன்று கட்டங்களாக நடந்த தேர்தலில் 63.45 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாகி நடந்து வருகிறது. முன்னதாக யாருக்கும் பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்கள் கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வந்தன.

    ஆனால் தற்போது அதை பொய்யாகும் விதமாக காங்கிரஸ் - என்.சி.பி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 48 இடங்களில் காங்கிரஸ்-என்சிபி கூட்டணி முன்னிலையில் உள்ளது. தனித்து போட்டியிட்ட பாஜக 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது .

    அதேவேளையில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி [பிடிபி] 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. முன்னதாக கருத்துக்கணிப்புகளின்படி மெகபூவாவின் கட்சி 7 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் அவர் கிங் மேக்கராக இருப்பார் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.

    இதனால் என்சிபி தலைவர் பரூக் அப்துல்லாவும் நேற்றைய தினம் மெகபூபா கட்சிக்கு தங்களுடன் கூட்டணி வைக்க அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் தற்போதைய நிலவரங்கள் பிடிபி கட்சி தோல்வி முகத்தில் இருப்பதையே பிரதிபலிக்கிறது.

     

    குறிப்பாக பிடிபி கட்சி சார்பில் ஸ்ரீகுஃப்வாரா - பிஜ்பெஹாரா தொகுதியில் போட்டியிட்ட மெகபூபா முஃப்தியின் மகள் இல்திஜா [36 வயது] தோல்வி முகத்தில் உள்ளார். தான் கடுமையாக உழைத்ததாகவும், இருப்பினும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் இல்திஜா தெரிவித்துள்ளார். இல்திஜாவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி சார்பில் தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கி உள்ள பஷீர் அமது வீரி வெற்றி முகத்தில் உள்ளார்.

    பஷீர் அமது வீரி 31292 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் 22534 வாக்குகள் பெற்று அவரை விட 8758 வாக்குகள் வித்தியாசத்தில் இல்திஜா பின்தங்கியுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட நபர் வெரும் 3468 வாக்குகள் மட்டுமே பெற்று 27824 வாக்குகள் பின்தங்கியுள்ளார். மேலும் இந்த தேர்தலில் மொத்தம் 5 இடங்களைத் தாண்டி மெகபூபாவின் பிடிபி கட்சி வெற்றி பெறாது என்று கூறப்படுகிறது.

    இதற்கு முற்றிலும் மாறாகக் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மெகபூபாவின் பிடிபி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. 25 இடங்களில் வென்ற பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைத்து மெஹபூபா முதலமைச்சர் ஆனார். ஆனால் அதற்கு பின்னர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக்கி சிறப்பு அந்தஸ்தை பாஜக நீக்கியதே இந்த தேர்தலில் இரண்டு கட்சிக்கும் பலத்த அடியாக அமைந்துள்ளது.

    • யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது.
    • அனைவரும் மாநில மக்களின் வளர்ச்சி என்ற ஒரே விஷயத்திற்காக பணியாற்றுகிறோம்.

    தேர்தல்! 

    ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக கடந்த மாதம் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தோ்தல் நடந்து முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது சட்டசபைத் தோ்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் மத்திய பாஜக அரசால் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை தோ்தல் இதுவாகும்.

    கருத்துக்கணிப்புகள் 

    இதில் காங்கிரஸ்- உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பா.ஜ.க., மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்று கூறுகின்றன.

    கிங் மேக்கர் 

    அதேநேரம், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன. மெகபூபாவின் மக்கள்ஜனநாயக கட்சி 5 முதல் 7 இடங்கள் வரை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் மெகபூபா முப்தி கிங் மேக்கராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் மெஹபூபாவின் கட்சிக்கு காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.சி.பி. அழைப்பு விடுத்துள்ளது.

     

    அழைப்பு 

    இதுகுறித்து நேற்றைய தினம் பேசிய பரூக் அப்துல்லா, நாங்கள் தேர்தலில் போட்டியாளராக இருந்தாலும் அனைவரும் மாநில மக்களின் வளர்ச்சி என்ற ஒரே விஷயத்திற்காக பணியாற்றுகிறோம். எனக்கு கூட்டணிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்காது என உறுதியாக சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தேவைப்பட்டால் சுயேச்சைக்களையும் அணுகுவோம் என்று அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    நிலவரம் 

    இந்த அழைப்பை ஏற்று மெகபூபா கூட்டணிக்கு வந்தால் காங்கிரஸ் தலைமையான கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புகள் அதிகம். இதற்கிடையே குலாம் நபி ஆசாத்தின் கட்சி மற்றும் பெரும்பான்மையான சுயேட்சைகளும் ஆட்சியமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று எதிர்பார்க்காடுகிறது. அதே நேரம் துணை நிலை ஆளுநரின் 5 எம்எல்ஏக்களை நியமிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை 46 இல் இருந்து 48 ஆக அதிகரித்துத் தொங்கு சபை ஏற்படுத்த பாஜக முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காஷ்மீர் மக்கள் சாலைகளில் திரண்டு கறுப்புக்கொடி ஏந்தி அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டனர்.
    • பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எதிரிகளுக்கு எதிரான ஹிஸ்புல்லாவின் புனிதப் போர் தொடரட்டும் என்று தனது அறிக்கையில் மெகபூபா தெரிவித்துள்ளார்.

    நஸ்ரல்லா கொலை 

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு ஈரான், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நஸ்ரல்லாவின் மரணத்தை அடுத்து ஜம்மு காஷ்மீரில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    காஷ்மீர் போராட்டம் 

    ஸ்ரீநகரில் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் பெண்கள் உட்பட அதிக அளவிலான மக்கள் சாலைகளில் திரண்டு கறுப்புக்கொடி ஏந்தி அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மக்கள் ஜனநாயக கட்சியின்[பிடிபி] தலைவரும் முன்னாள் காஷ்மீர் முதல்வருமான மெகபூபா முப்தி ஹசன் நஸ்ரல்லா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நஸ்ரல்லா மற்றைய உயிர் தியாகிகளோடு இணைந்துள்ளார் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எதிரிகளுக்கு எதிரான ஹிஸ்புல்லாவின் புனிதப் போர் தொடரட்டும் என்று தனது அறிக்கையில் மெகபூபா தெரிவித்துள்ளார்.

    உயிர் தியாகி 

    மேலும் ஹசன் நஸ்ரல்லாவின் உயிர்த் தியாகத்துக்கு துக்கம் அனுசரிக்கும் வகையிலும் பாலஸ்தீனம், லெபனான் மக்களோடு இந்த தருணத்தில் ஒன்றாக நிற்கும் விதமாக இன்றைய தினம் நடக்க இருந்த தனது சட்டமன்றத் தேர்தல் பிரச்சார கூட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

    ஏன் வலிக்கிறது? 

    இந்நிலையில் மெகபூபாவின் இந்த நடவடிக்கையை பாஜக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் கவீந்தர் குப்தா, ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் மெகபூபாவுக்கு ஏன் வலிக்கிறது, வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டபோது அவர் வாய்மூடி இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • தேசியவாத காங்கிரஸ், பிடிபி ஆகிய மூன்று குடும்பங்களும் சேர்ந்து பல ஆண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு காயங்களை ஏற்படுத்தியது.
    • தேர்தல் ஆதாயத்துக்காக பிரதமர் மோடி என்சிபியை விமர்சிக்கிறார் என்று மெகபூபா விமர்சித்துள்ளார்

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 18 முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் அடுத்தகட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே நேற்றைய தினம் பிரதமர் மோடி காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பிடிபி ஆகிய மூன்று குடும்பங்களும் சேர்ந்து பல ஆண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு காயங்களை ஏற்படுத்தியது. பாஜகவின் சின்னமான தாமரைக்கு அடுத்துள்ள பட்டனை அழுத்துவது இந்தக் கட்சிகளின் அரசியல் சூரிய அஸ்தமனத்தை உறுதி செய்யும் என்றார்.

    மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரும் விசயத்தில் நாங்களும் (பாகிஸ்தான்) தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஒரே பக்கம்" என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாகிஸ்தான் காங்கிரஸ் -என்சிபி கூட்டணியை ஒப்பிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இந்நிலையில் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் மக்கள் ஜனநாயக கட்சியின்[பிடிபி] தலைவரும் முன்னாள் காஷ்மீர் முதல்வருமான மெகபூபா முப்தி தேர்தல் ஆதாயத்துக்காக பிரதமர் மோடி என்சிபியை விமர்சிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக இன்று அவர் கூறியதாவது, ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதற்கு முக்கிய பங்காற்றிய ஷேக் குடும்பத்துக்கு [அபத்துல்லா குடும்பத்துக்கு] மோடி நன்றி தெரிவிக்க வேண்டும். குறிப்பாக ஷேக் அப்துல்லாவின் முயற்சியினால் தான் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது என்று தெரிவித்துள்ளார்.

    • சட்டத்துக்கு புறம்பான வகையில் ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட நிஜமான அந்தஸ்து [சிறப்பு அந்தஸ்து] மீட்டெடுக்கப்படும்
    • உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியை அறிவித்துள்ளது

    ஜம்மு காஷ்மீர்  

    ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநில அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகள் வேகமெடுத்து வருகிறது. 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அக்டோபர் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

    தேர்தல் களம்

    சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரமே இந்த தேர்தலில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தேர்தலில் பரூக் மற்றும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியை அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை எதிரித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்திருந்தார்.

     

    மெகபூபா முப்தி

    இதற்கிடையே முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் சட்டத்துக்கு புறம்பான வகையில் ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட நிஜமான அந்தஸ்து [சிறப்பு அந்தஸ்து] மீட்டெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்தியா-பாகிஸ்தான் இடையே தூதரக உறவுகள், வர்த்தகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலியுறுத்துவோம் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து , 200 யூனிட் இலவச மின்சாரம், ஏழைகளுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் இலவசம், ரேஷன் கடைகளில் மீண்டும் சர்க்கரை, மண்ணெண்ணெய் வினியோகம் உள்ளிட்ட வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளது.

     

    கூட்டணி...

    இந்த தேர்தலில் காங்கிரசும்- தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் தங்களது செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டால் காங்கிரஸ், தேசிய மாநாடு கூட்டணியை ஆதரிக்கத் தயார் என மெகபூபா முப்தி நேற்று தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது, 'காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது, எல்லை சாலைகளை திறப்பது உள்ளிட்ட எங்கள் செயல் திட்டங்களை காங்கிரசோ அல்லது தேசிய மாநாடு கட்சியோ ஏற்பதாக இருந்தால், நீங்கள் தேர்தலில் போட்டியிடுங்கள், நாங்கள் உங்கள் பின்னால் அணிவகுக்கிறோம் என கூறுவோம். எங்களுக்கு தேர்தலில் சீட் பங்கீட்டை விட காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதுதான் முக்கியமானது. பாதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீர் மக்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்தார். 

     

    • எங்கள் கட்சி தொண்டர்கள் எந்த காரணம் இன்றி போலீஸ் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
    • டிஜி, எல்ஜி, என அனைத்து அலுவலகங்களின் உயர் அதிகாரி முதல் எல்லோரும் இதில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீரில் இன்று இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். அவருடன் அவரது கட்சி தொண்டர்களும் போராட்டத்தில் குதித்தனர். பாதுகாப்பு படையினர் தங்களது கட்சி ஏஜெண்டுகளை பணியாற்ற விடாமல் தடுப்பதாக கூறி மெகபூபா மறியலை மேற்கொண்டார். அவரை பாதுகாப்பு படையினர் சமரசம் செய்தனர். இதனால் அனந்த்நாக் தொகுதியில் சில இடங்களில் ஓட்டுப்பதிவு சற்று தாமதம் ஆனது.

    இது தொடர்பாக மெகபூபா முப்தி கூறிகையில் "எங்கள் கட்சி தொண்டர்கள் எந்த காரணம் இன்றி போலீஸ் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். டிஜி, எல்ஜி, என அனைத்து அலுவலகங்களின் உயர் அதிகாரி முதல் எல்லோரும் இதில் ஈடுபட்டுள்ளனர். காவல் நிலையத்தில் பூத் ஏஜென்ட்களை அடைத்து வைத்துள்ளனர்.

    சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் இந்த விசயங்கள் அனைத்தையும் நீங்கள் செய்கிறீர்கள். வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்ய இருப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது" என்றார்.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு நேற்று மெகபூபா முப்தி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மெகபூபா முப்தி கட்சி இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்தாலும் ஜம்மு காஷ்மீரில் தனித்துப் போட்டியிடுகிறது.
    • பா.ஜ.க.வின் 'சி' டீமாக மெகபூபா கட்சி இணைந்துள்ளது என்றார் உமர் அப்துல்லா.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு தொகுதிக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாளை மறுதினம் நடைபெற உள்ள 2வது கட்ட தேர்தலில் மேலும் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரசும் அங்கு இணைந்து போட்டியிடுகின்றன. இதில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்தாலும் அங்கு தனித்துப் போட்டியிடுகிறது.

    இதற்கிடையே, பா.ஜ.க. தலைவர் முஷ்தாக் பஹாரி பிரசாரத்தில் பேசுகையில், மக்கள் ஜனநாயக கட்சிக்கு பஹாரி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பா.ஜ.க வேட்பாளரை விடுத்து அவர் வேறு கட்சிக்கு ஆதரவளித்தது விவாதப் பொருளானது.

    இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் உமர் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இங்கே பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டும். நாடு முழுவதும் விஷத்தைப் பரப்பும் சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், ஜம்மு காஷ்மீரின் 5 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியை மக்கள் வெற்றியடையச் செய்யவேண்டும்.

    மற்ற கட்சிகள் எல்லாம் 'ஏ' டீம், 'பி' டீம் என ஏதோ ஒரு வகையில் ஒன்றிணைந்துள்ளன. அந்த வகையில் தற்போது மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் பா.ஜ.க.வில் 'சி' டீமாக இணைந்துள்ளது என தெரிவித்தார்.

    • கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • பா.ஜ.க.வில் சேராதவர்கள், சிறைக்குச் செல்வோர் முற்றிலும் நிரபராதிகள் என்றார் மெகபூபா முப்தி.

    ஸ்ரீநகர்:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

    கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகள் பா.ஜ.க.வில் சேருகிறார்கள், அதன்பின் அவர்களுக்கு எதிராக எல்லாமே அழிக்கப்படுகிறது.

    அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்பாவிகள்.

    பா.ஜ.க.வில் சேராதவர்கள், சிறைக்குச் செல்வோர் முற்றிலும் நிரபராதிகள்.

    தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கிறது பா.ஜ.க. என தெரிவித்தார்.

    • இன்னும் எத்தனை தலைவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என எங்களுக்கு தெரியவில்லை.
    • இது தேர்தலையொட்டிள்ள தொடர்பு மட்டுமே. இதன் அர்த்தம் எதிர்க்கட்சிகளை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதுதான்.

    மக்களவை தேர்தல் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கியுள்ளது.

    இந்தமுறை பா.ஜனதாவை எப்படியாவது தோற்கடித்து விட வேண்டும் என 26-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதனால் பா.ஜனதா சற்று அச்சம் அடைந்துள்ளது. என்றபோதிலும் 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என இலக்குடன் தேர்தல் பணியில் இறங்கியுள்ளது.

    இதற்கிடையே மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை தங்களுக்கு சாதகமாக பா.ஜனதா பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதற்கு ஏற்ற வகையில் தொடர்ந்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கு சம்மன் அனுப்பிக் கொண்டே இருக்கிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான 86 வயதான பரூக் அப்துல்லாவிற்கு ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் பரூக் அப்துல்லா இன்று ஆஜராகவில்லை.

    இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை தேர்தல் செயல்பாட்டின் ஒரு பகுதியாகிவிட்டது என மெகபூபா முப்தி விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக மெகபூபா முப்தி கூறியதாவது:-

    எப்போதெல்லாம் மாநில தேர்தல் அல்லது பாராளுமன்ற தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்க தொடங்கிவிடும். ஆகவே, பரூக் அப்துல்லாவிற்கு சம்மன் வழங்கியதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

    இன்னும் எத்தனை தலைவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என எங்களுக்கு தெரியவில்லை. இது தேர்தலையொட்டிள்ள தொடர்பு மட்டுமே. இதன் அர்த்தம் எதிர்க்கட்சிகளை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதுதான்.

    இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்திற்குரிய பணம் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அலுவலக நபர்கள் அல்லாத நபர்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. பணம் எடுத்ததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சிபிஐ கடந்த 2018-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் கடந்த 2022-ம் ஆண்டு அமலாக்கத்துறை பரூக் அப்துல்லா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக கானாபலுக்குச் மெகபூபா சென்று கொண்டிருந்தார்.
    • முப்தி பாதுகாப்பாக இருப்பதாகவும், காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சங்கம் என்ற இடத்தில் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியின் வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், அவர் காயமின்றி உயிர் தப்பினார். 

    தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக கானாபலுக்குச் மெகபூபா சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. மெகபூபா சென்றுக் கொண்டிருந்த வாகனம் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மெகபூபாவின் தனிப்பட்ட பாதுகாப்பில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    முப்தி பாதுகாப்பாக இருப்பதாகவும், காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பிடிபி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    • காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் சுரான்கோட் பகுதியில் ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் பலியானார்கள்.
    • அதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களை ராணுவத்தினர் விசாரணைக்காக பிடித்து சென்றனர்.

    ஸ்ரீநகர்:

    கடந்த 21-ந் தேதி, காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் சுரான்கோட் பகுதியில் ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் பலியானார்கள். அதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களை ராணுவத்தினர் விசாரணைக்காக பிடித்து சென்றனர். 3 பேரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

    இதற்கிடையே, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, நேற்று சுரான்கோட் பகுதிக்கு சென்று, பலியானோர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற திட்டமிட்டு இருந்தார்.

    அவரது பயணத்தை தடுக்கும்வகையில், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக மக்கள் ஜனநாயக கட்சி, தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் குற்றம்சாட்டி உள்ளது. அதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

    • 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு 4-வது ஆண்டு நிறைவையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
    • மெகபூபா முப்தி கட்சியின் கருத்தரங்கத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு 4-வது ஆண்டு நிறைவையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

    மேலும் மெகபூபா முப்தி கட்சியின் கருத்தரங்கத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ×