என் மலர்
நீங்கள் தேடியது "யானை"
- காட்டு யானைகள் குட்டிகளுடன் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன.
- காட்டு யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிந்த 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதிக்கு விரட்டினர். இந்த காட்டு யானைகளும் ஏற்கனவே அங்கு முகாமிட்டிருந்த காட்டு யானைகள் என மொத்தமாக 50-க்கும் மேற்பட்ட யானைகள் சேர்ந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு தேன்கனிக்கோட்டை கஸ்பா பகுதியில் முகாமிட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் தாவரக்கரை வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகள் குட்டிகளுடன் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன.
இந்த காட்டு யானைகள் கவிக்கோவில், மாரசந்திரம் மேடு, சாப்ராணப்பள்ளி, சீனிவாசபுரம், லக்கசந்திரம் வழியாக அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானைகளை கொத்தூர், உச்சனப்பள்ளி, அர்த்தகூர், பாலதோட்டனப்பள்ளி, ரங்கசந்திரம், கோட்டை உலிமங்கலம் கிராமங்கள் வழியாக தாவரக்கரை வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். காட்டு யானைகள் விரட்டப்பட்டதால் ஓசூர் சானமாவு, ராயக்கோட்டை, ஊடேதுர்கம், தேன்கனிக்கோட்டை கஸ்பா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.
இதனிடையே, 20 யானைகள் தாவரக்கரை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் யானைகளை விரைந்து கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து காட்டு யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்.
- கோவில் யானைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
- பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஒரு மாதத்திற்குள் நியமிக்கபடுவார்கள்.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். உண்டியல் காணிக்கைகள் கோவில் ஊழியர்களால் தரம் பிரித்து மாத மாதம் எண்ணப்படுகிறது. உண்டியலில் கிடைத்த நகைகளை பழனி கோவில் தலைமை அலுவலகத்தில் பாதுகாத்து வைத்துள்ளனர். இந்தநிலையில் பயன்படுத்த இயலாத தங்க நகைகளில் உள்ள கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் பிற உலோகங்கள் நீக்கப்பட்டு மும்பையில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தின் உருக்காலையில் சுத்த தங்கமாக மாற்றம் செய்யவும், வங்கியில் தங்க பத்திரமாக முதலீடு செய்யவும் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி பழனி முருகன் கோவிலுக்கு வரப்பெற்ற ரூ.136 கோடி மதிப்பிலான 192.984 கிலோ கிராம் தங்க நகைகளை சுத்த தங்கமாக மாற்றி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், ஓய்வு பெற்ற நீதியரசர் மாலா ஆகியோர் பங்கேற்று வங்கி அதிகாரிகளிடம் நகைகளை வழங்கினர்.
அப்போது அமைச்சர் சேகர் பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் முதற்கட்டமாக 23 கோவில்களில் இருந்து காணிக்கை தங்கங்களை உருக்கி 443 கிலோ தங்கம் வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடியே 79 லட்சம் வட்டி கிடைக்கிறது. 2ம் கட்டமாக பழனி கோவிலில் 192.984 கிராம் தங்கமும், மாசாணியம்மன் கோவிலில் 28 கிலோ தங்கம், திருச்சி குணசீலன் கோவிலில் 12 கிலோ தங்கம் என 13 கோவில்களில் தங்க முதலீடு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்கு ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 1000கிலோ தங்கம் முதலீடு செய்யப்பட்டு, ரூ.700 கோடி அளவிற்கு வைப்பு நிதியாக வைக்கப்படும். அதன்மூலம் ஆண்டுதோறும் ரூ.12 கோடி வட்டி வருமானம் பெறப்படும். 2007ம் ஆண்டு பழனி கோவிலில் 191 கிலோ தங்கம் முதலீடு செய்யப்பட்டு அதன்மூலம் ரூ.1 கோடியே 38 லட்சம் வருமானம் பெறப்படுகிறது.
அறங்காவலர் குழு தீர்மானத்தின் படி அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் நிரப்பப்படும். கோவில் யானைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. புதிய சட்டத்தின் படி யானை வாங்க இயலாது. புதிய யானையை வாங்கி பராமரிப்பு செலவையும் ஏற்கும் வகையில் புதிய யானையை பக்தர்கள் வாங்கிக் கொடுத்தால் அவை பெற்றுக்கொள்ளப்படும். பழனி கோவிலில் 2-வது ரோப்கார் மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ளதை போல நவீன முறையில் அமைக்கப்படும். பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஒரு மாதத்திற்குள் நியமிக்கபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பழனி மலைக்கோவிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், வங்கி அதிகாரிகள், கோவில் உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
- வனத்துறையினர் பட்டாசு வெடித்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றுப்புற கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்த கிரி என்ற ஒற்றை காட்டு யானை விவசாயிகள் மற்றும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது.
காது கேட்காத இந்த ஒற்றை காட்டு யானையை பொதுமக்கள் விவசாயிகள் விரட்டினாலும் அது அசராமல் அப்படியே நிற்கும், இந்த காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் இந்த கிரி ஒற்றை காட்டு யானை தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு கிராமங்கள் வழியாக தற்போது கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமம் அருகே வந்துள்ளது. அந்த பகுதியில் சாலையோரம் சுற்றித்திரிந்த இந்த காட்டு யானை குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
காது கேட்காத இந்த கிரி ஒற்றை காட்டு யானையால் போடிச்சிப்பள்ளி, சினிகிரிப்பள்ளி, பென்னிகல் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். விவசாயிகள் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- யானை ஆக்ரோஷம் அடைந்து வாலிபரை ஓட, ஓட விரட்டியது.
வடவள்ளி:
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள், விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொருட்கள், விளை நிலங்களை சேதப்படுத்துகிறது.
இதனால் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் காட்டு யானைகளை பார்த்தால் அருகில் செல்ல வேண்டாம். அதனை விரட்டவோ, செல்போனில் வீடியோ எடுக்கவோ கூடாது என்று அறுவுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் வாலிபர்கள் சிலர் காட்டு யனையுடன் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரம் வைதேகி நீர்வீழ்ச்சி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் சம்பவத்தன்று ஒற்றை காட்டுயானை ஒன்று உலா வந்தது.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் யானையை பார்த்ததும் செல்போனில் வீடியோ எடுத்தார்.இதனை பார்த்த காட்டு யானை ஆக்ரோஷம் அடைந்து வாலிபரை ஓட, ஓட விரட்டியது. தொடர்ந்து அந்த வாலிபர் அருகே இருந்த வீட்டுக்குள் சென்று மயிரிழையில் உயிர்தப்பினர்.
இருப்பினும் வாலிபர் பதுங்கிய வீட்டை சுற்றி சுற்றி வந்த காட்டு யானை ஆக்ரோஷத்துடன் அந்த வீட்டின் முன்பாக நின்றிருந்த ஆட்டாவை முட்டி தள்ளியது. பின்னர் அங்கிருந்து சென்று விட்டது.
இதற்கிடையே செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை காட்டு யானை விரட்டும் காட்சிகள் இணையத்தளத்தில் வரைலாக பரவி வருகிறது.
- தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதய குமார் மற்றும் உயிரிழந்தார்.
- உயிரிழந்த பாகனின் மனைவியிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சேகர்பாபு வழங்கினார்.
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கடந்த 18-ந் தேதி தெய்வானை யானை தாக்கியதில் யானை பாகன் உதய குமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் இறந்தனர்.
பின்னர் யானை பாகன் உதயகுமார் வீட்டிற்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவரது மனைவி ரம்யாவிடம், முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம், கோவில் நிதியிலிருந்து ரூ. 5 லட்சம், தக்கார் அருள் முருகன் சார்பில் ரூ.3 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இதனையடுத்து யானை பாகன் உதயகுமார் மனைவிக்கு தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும். அவரது குழந்தைகள் படிப்புச் செலவை இந்த தொகுதி அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்த பாகனின் மனைவிக்கு கோயில் அலுவலக உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை திமுக எம்.பி. கனிமொழி இன்று வழங்கினார்.
- காட்டு யானைகளை கிராமப்பகுதிக்குள் புகுந்து விடாதவாறு கும்ளாபுரம் வழியாக வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
- யானை தின்னூர், லக்கசந்திரம் வழியாக நொகனூர் வனப்பகுதி சென்றது.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஜவளகிரி காப்பு காட்டில் இருந்து நேற்று அதிகாலை 8 காட்டு யானைகள் கூட்டமாக வெளியேறி கங்கனப்பள்ளி, கும்ளாபுரம் கிராம வழியாக சுற்றித்திரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டு யானைகளை கிராமப்பகுதிக்குள் புகுந்து விடாதவாறு கும்ளாபுரம் வழியாக வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதிக்கு அருகே சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள தைலதோப்புக்குள் காட்டு யானைகள் புகுந்தன. தற்பொழுது 8 காட்டு யானைகளும் தைலதோப்புக்குள் தஞ்சமடைந்துள்ளன.
வன காவலர்கள் மற்றும் வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து அவைகள் மீண்டும் வெளியேறாதவாறு அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டனர்.
கும்ளாபுரத்தில் இருந்து ஆனைக்கல் செல்லும் சாலையை கடந்த யானைகள் தேவரபெட்டா வனப்பகுதிக்கு சென்றன. இதற்கிடையே தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் நேற்று, முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து தாவரக்கரை வனப்பகுதிக்கு சென்றன.
அங்கு 25 க்கும் மேற்பட்ட யானைகள் ஒரு குழுவாகவும் கிரி யானை உட்பட 3 யானைகள் மற்றொரு குழுவாகவும் முகாமிட்டுள்ளன.
தேன்கனிக்கோட்டை அருகே சாப்பரானப்பள்ளி செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே நுழைந்த கிரி என்கிற ஒற்றை யானை அங்குள்ள விவசாய நிலத்தில் நுழைந்து ராகி, சோளம் தின்றும் மிதித்தும் நாசம் செய்தது.
விவசாயிகள் பட்டாசுகள் போட்டும், யானை நகராமல் ஒரு மணி நேரத்திற்கு மேல் அங்கே நின்றன. பிறகு அங்கிருந்து சென்ற யானை தின்னூர், லக்கசந்திரம் வழியாக நொகனூர் வனப்பகுதி சென்றது.
- பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சாப்பிட்டும், மிதித்தும் சேதப்படுத்தியது.
- வனப்பகுதியையொட்டி அகழிகளை அமைத்து யானைகள் கிராமத்திற்குள் புகாத வண்ணம் தடுக்க வேண்டும்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அருகில் இருக்கும் மலை கிராமங்களில் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தம்முரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தன். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார், இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சித்தனின் மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்தது.
தொடர்ந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சாப்பிட்டும், மிதித்தும் சேதப்படுத்தியது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய யானை அதிகாலை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
யானை வனப்பகுதியில் இருந்து மலை கிராமங்களுக்கு வருவதை தடுக்கும் பொருட்டு வனப்பகுதியையொட்டி அகழிகளை அமைத்து யானைகள் கிராமத்திற்குள் புகாத வண்ணம் தடுக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்ததோடு சேதமான பயிருக்கும் உரிய இழப்பீடு அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளார்.
- யானை கட்டப்பட்டிருந்த அறைக்கும், சம்பவம் நடந்த இடத்திற்கும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
- யானை சகஜ நிலையில் இருப்பதாகவும் விரைவில் பக்தர்களுக்கு ஆசி வழங்க வரும் என கூறப்படுகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 18-ந் தேதி கோவில் யானை தெய்வானை தாக்கி யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.
சம்பவம் நடந்த 10 நாட்களாக அறையில் யானையை கட்டி வைத்து மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று 11-வது நாள் யானையை அறையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். இதற்காக யானையை அதிகாலையிலே குளிப்பாட்டி நவதானிய உணவுகள் வழங்கப்பட்டது.
யானை விரும்பி சாப்பிடும் பச்சை நாற்று வகை புல் உணவாக கொடுக்கப்பட்டது. அதை தெய்வானை யானை ருசித்து சாப்பிட்டது.
முன்னதாக யானைக்காக கோவில் ஆனந்த விலாச மண்டபத்தில் சிறப்பு யாகசலை பூஜைகள் நடந்தது. யாக பூஜையில் வைக்கப்பட்ட கலத்தில் உள்ள புனிதநீர் கோவில் யானை தெய்வானை மீது தெளிக்கப்பட்டது. மேலும் யானை கட்டப்பட்டிருந்த அறைக்கும், சம்பவம் நடந்த இடத்திற்கும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
தற்போது யானை சகஜ நிலையில் இருப்பதாகவும் விரைவில் பக்தர்களுக்கு ஆசி வழங்க வரும் என கூறப்படுகிறது.
- காபி எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு கூச்சலிட்டபடியே ஓட்டம் பிடித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் தினமும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் தனியார் தேயிலை மற்றும் காபி எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் காபி தோட்டத்தில் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு காட்டுயானை ஒன்று வந்தது. பின்னர் திடீரென தொழிலாளர்களை துரத்த தொடங்கியது. இதை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு கூச்சலிட்டபடியே ஓட்டம் பிடித்தனர்.
காட்டு யானையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க சில தொழிலாளர்கள் அங்குள்ள மரங்களில் ஏறினர். இதை கண்ட காட்டுயானை அந்த மரங்களின் அடியிலேயே முகாமிட்டு நின்றது. ஆனால் தொழிலாளர்களோ, மரங்களை விட்டு கீழே இறங்கவே இல்லை.
பின்னர் அங்கிருந்து யானை சென்று விட்டது. அதன் பிறகு தொழிலாளர்கள் கீழே இறங்கி தப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டனர்.
- வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் சர்வசாதாரணமாக குடியிருப்புக்குள் நுழைந்து சுற்றி வருகின்றன.
- வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக காட்டு யானைகள், கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் சர்வசாதாரணமாக குடியிருப்புக்குள் நுழைந்து சுற்றி வருகின்றன. அவ்வாறு வரும் விலங்குகள் வீடுகள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி செல்கின்றன.
குன்னூர் அடுத்த மேலூர் ஊராட்சியில் தூதூர் மட்டம் கேரடாலீஸ் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
வெகுநேரமாக யானை அங்கேயே சுற்றி திரிந்தது. ஊருக்குள் யானை நுழைந்ததை பார்த்ததும், அங்குள்ள வீடுகளில் வளர்க்கப்படும் மற்றும் தெருவில் சுற்றி திரிந்த நாய்கள் குரைத்தன.
மேலும் யானையை நோக்கி நாய்கள் குரைத்தபடியே வந்தன. நாய்கள் குரைத்து கொண்டே பின்தொடர்ந்ததால் காட்டு யானை, குடியிருப்பு பகுதியில் இருந்த சக்தி மாரியம்மன் கோவிலுக்குள் சென்று தஞ்சம் அடைந்தது.
அங்கேயே யானை நீண்ட நேரம் நின்றிருந்தது. இந்த நிலையில் நாய்கள் தொடர்ந்து குரைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் எழுந்து பார்த்தனர்.
அப்போது யானை கோவிலுக்குள் நின்றிருந்தை கண்டு அச்சம் அடைந்தனர். சிறிது நேரம் அங்கு நின்ற யானை அதன்பிறகு அங்கிருந்து வனத்தை நோக்கி சென்றது.
- பெண்களின் நளினமான நடன அசைவுகளுக்கு ஏற்றவாறு அந்த யானை, தன்னுடைய ராட்சத காதுகளை அசைத்தும் தலையை ஆட்டியும் காட்டுகிறது.
- வீடியோ 2 நாட்களில் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள தோட்டத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ள ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் யானை இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டுள்ளது. யானைக்கு முன்பாக இரண்டு இளம்பெண்கள் பரதநாட்டியம் ஆடுகிறார்கள். அப்போது அந்த பெண்களின் நளினமான நடன அசைவுகளுக்கு ஏற்றவாறு அந்த யானை, தன்னுடைய ராட்சத காதுகளை அசைத்தும் தலையை ஆட்டியும் காட்டுகிறது.
பெண்களுடன் இணைந்து ஆடிய யானை என்ற தலைப்புடன் எக்ஸ் தளத்தில் வெளியான அந்த வீடியோ சமூக வலைத்தளவாசிகளிடையே விவாதத்தை கிளப்பி உள்ளது.
அந்த யானை மகிழ்வுடன் இல்லை எனவும், மன அழுத்தம் காரணமாக அந்த யானை அவதிப்படுவதாகவும் இந்திய வனத்துறை அதிகாரி உள்பட ஏராளமானவர்கள் இந்த வீடியோவுக்கு கருத்துகளை பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ 2 நாட்களில் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
— Bhoomika Maheshwari (@sankii_memer) November 26, 2024
- ஒற்றை காட்டு யானை அனுமய்யாவை திடீரென்று துரத்தி சென்று தாக்கியது.
- யானை தாக்கி தொழிலாளி காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஓட்டர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட கூலி தொழிலாளி அனுமய்யா (வயது44). இவர் இன்று அதிகாலை கட்டிட வேலை செய்வதற்காக தனது கிராமத்திலிருந்து அந்தேவனப்பள்ளி கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது ஆலஹள்ளி கிராமத்தின் அருகே அவர் நடந்து சென்றபோது அப்பகுதியில் வந்த ஒற்றை காட்டு யானை அனுமய்யாவை திடீரென்று துரத்தி சென்று தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சத்தம் போட்டு அலறினர். அவரது அலறல் சத்தத்தை கேட்ட கிராம மக்கள் அங்கு திரண்டனர்.
இதனையடுத்து அங்கு நின்றவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் மருத்துவமனைக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஆலஹள்ளி, ஒட்டர்பாளையம், மணியம்பாடி மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிவதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த யானைகளை அடர்ந்த ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை எடுத்துள்ளனர்.
யானை தாக்கி தொழிலாளி காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.