என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரேஷன் கடை"
- மாவட்டங்கள் தோறும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
- நேற்று மாலை நிலவரப்படி சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.
சென்னை:
தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையின் கீழ் 34 ஆயிரத்து 774 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுனர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய கூட்டுறவுத்துறை முடிவு செய்தது.
அதன் படி, தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் என 3 ஆயிரத்து 308 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 9-ந் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இதற்காக மாவட்டங்கள் தோறும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
இதில், ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு கல்வித் தகுதியும், கட்டுனர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு கல்வித் தகுதியும் வரையறுக்கப்பட்டு உள்ளது.
அதே போன்று, ரேஷன் கடை விற்பனையாளர் பதவிக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.6,250 மாதம் வழங்கப்படும். ஓர் ஆண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.8,600 முதல் ரூ.29,000 வரை வழங்கப்படும். ரேஷன் கடை கட்டுனர் பதவிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.5,500 வழங்கப்படும். ஓர் ஆண்டுக்கு பிறகு ரூ.7,800 முதல் ரூ.26,000 வரை வழங்கப்படும்.
ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில், கல்வித் தகுதி 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பாக இருந்த போதிலும் பட்டப்படிப்பு படித்த ஏராளமானோர் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்திருக்கக் கூடும் என தெரிகிறது. மேலும், இந்த பதவிகளுக்கு மொத்தம் எத்தனை பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று அல்லது நாளை தெரிய வரும்.
- தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
- இதற்காக 4 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
சென்னை:
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக 4 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தமிழக அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட உள்ளது என தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.
- தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை அக்டோபர் 21-ம் தேதி ரேஷனில் வழங்கப்படும்.
- மாற்றுத் திறனாளிக்கான உதவித்தொகை ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களைச் சந்தித்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அக்டோபர் 21-ம் தேதி புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்படும்.
தொடர்ந்து ரேஷனில் மாதா மாதம் இலவச அரிசி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஏற்கனவே அறிவித்தபடி, மாற்றுத் திறனாளிக்கான உதவித்தொகை ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது மாதம் ரூ.2000 உதவித் தொகை பெறுபவர்கள் இனி, ரூ.3,000 உதவித் தொகை பெறுவார்கள். அதேபோல் ரூ.2500, ரூ.2700, ரூ.3500, ரூ.3800 உதவித் தொகை பெறுவோர் இனி கூடுதலாக ரூ.1000 சேர்த்து பெறுவர்.
உயர்த்தப்பட்ட உதவித்தொகையின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.24.5 கோடி கூடுதலாக செலவாகும். இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியில் 21,329 பயனாளிகள் பயன்பெறுவர்.
இந்த உயர்த்தப்பட்ட உதவித்தொகை அக்டோபர் 2024-ம் தேதி முன் தேதியிட்டு நவம்பர் மாதம் முதல் சேர்த்து வழங்கப்படும் என தெரிவித்தார்.
- ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை என வானதி குற்றச்சாட்டு
- பருப்பு விநியோகம் தொடர்பான எனது அறிக்கையை படிக்காமல் வானதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சரிவர துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை எனவும் ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வானதியின் குற்றசாட்டிற்கு பதில் அளிக்கும் வகையில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "பருப்பு விநியோகம் தொடர்பான எனது அறிக்கையை படிக்காமல் வானதி அறிக்கை வெளியிட்டுள்ளார். பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி பருப்பு, பாமாயில் தடையின்றி வழங்கப்படும்.
அக்டோபர் மாதத் துவரம் பருப்பு ஒதுக்கீடான 20,751 மெட்ரிக் டன்னில் நேற்று (15.10.2024) வரை 9,461 மெட்ரிக் டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. 2,04,08,000 பாமாயில் பாக்கட்டுகள் ஒதுக்கீட்டில் 97,83,000 பாக்கட்டுகள் விநியோகப்பட்டுவிட்டன. மீதியுள்ளவை விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆதலால் தீபாவளிக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது.
- ரேஷனில் கிலோ ரூ30க்கு கிடைக்கும் துவரம் பருப்பை நம்பியே ஏழை நடுத்தர மக்கள் உள்ளனர்.
ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான அவரது அறிக்கையில், "தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சரிவர துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை. மூன்று மாதங்கள் யாருக்கும் துவரம் பருப்பு கிடைக்கவில்லை. கடந்த பல மாதங்களாக சில நாட்கள் மட்டுமே துவரம் பருப்பு கிடைக்கிறது வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 200 வரை விற்கப்படுகிறது. இதனால் ரேஷனில் கிலோ ரூ30க்கு கிடைக்கும் துவரம் பருப்பை நம்பியே ஏழை நடுத்தர மக்கள் உள்ளனர்.
தீபாவளிக்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையில் ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக 20,000 டன் துவரம் பருப்பு ஆர்டர் செய்யப்பட்டதாகவும், அதில் 3473 டன் மட்டுமே மட்டுமே சப்ளை செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அரசின் அலட்சியத்தால் மீதமுள்ள 16,527 டன் துவரம் பருப்பு உரிய நேரத்தில் வந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு பெற தகுதியான 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பருப்பு வழங்க முடியாது என கூறப்படுகிறது. இது ஏழை நடுத்தர மக்களை மிக கடுமையாகப் பாதிக்கும். எனவே திமுக அரசு தனறு தூக்கத்தை கலைத்து போர்க்கால அடிப்படையில் துவரம் பருப்பை கொள்முதல் செய்து அனைவருக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுபோல தீபாவளிக்கு முன்பாக பாமாயில் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கிடைப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- ஆகஸ்ட் மாதத்திற்கான ரேசன் பொருட்களை பெறாதவர்கள் அதனை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- பாமாயில், துவரம் பருப்பை அடுத்த மாதம் 5-ந்தேதி வரையில் பெற்றுக்கொள்ளலாம்.
சென்னை:
ரேசன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான ரேசன் பொருட்களை பெறாதவர்கள் அதனை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரேசன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பை செப். 5 வரை பெற்றுக்கொள்ளலாம் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை,
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் பாமாயில், துவரம் பருப்பை அடுத்த மாதம் 5-ந்தேதி வரையில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
- பொதுமக்களிடம் அரசு கருத்து கேட்டு வருகிறது.
- கருத்துக்களை பதிவு செய்ய படிவங்களும் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை:
ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெயை வழங்கலாமா? என்பது பற்றி பொதுமக்களிடம் அரசு கருத்து கேட்டு வருகிறது.
கோவை, திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய் மற்றும் கொப்பறை தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வில்லை என்று ஆதங்கப்பட்டு வருகின்றனர்.
தங்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்ய ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் என்று மாநில அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு அட்டைதாரர்களின் கருத்தை அறியுமாறு ரேஷன் கடை மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதற்கான கருத்துக்களை பதிவு செய்ய படிவங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாதம் இறுதி வரை பொது மக்களின் விருப்பத்தை கேட்டறிந்து அதன் விவரங்களை மாவட்ட நிர்வாகங்கள் அறிக்கையாக தொகுத்து அரசுக்கு அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
1 லிட்டர் பாமாயில் எண்ணைக்கு பதில் 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்குவது பற்றி முதற்கட்ட மாக கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வசிக்கும் சிலர் தேங்காய் எண்ணெயை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துவதால் எத்தனை கார்டுதாரர்கள் இதற்கு மாறுவதற்கு ஆர்வமாக உள்ளனர் என்பதை அறிய கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபற்றி சிவில் சப்ளை அதிகாரி கூறுகையில் கேரள மாநில எல்லையோர மாவட்டங்களில் வசிக்கும் சிலர் தேங்காய் எண்ணெயை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துவதால் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
ஆனாலும் இதுகுறித்த கொள்கை முடிவை அரசு தான் எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்களின் ஆய்வறிக்கைகள் கிடைத்த பிறகு அரசு இதில் இறுதி முடிவை அறிவிக்கும் என்று தெரிவித்தார்.
- ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
- சோதனை அடிப்படையில் சட்டசபை தொகுதிக்கு ஒரு ரேஷன் கடையில் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் அட்டை மூலமாக வழங்கப்படுகிறது. ரேஷன் அட்டையை பொருத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறுபடும்.
ரேஷன் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உணவு பொருட்கள் சுத்தமாக கிடைக்க வேண்டும். எடையில் ஏமாற்றம் செய்ய கூடாது என்பதால் பொருட்களை ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்களை வினியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சோதனை அடிப்படையில் சட்டசபை தொகுதிக்கு ஒரு ரேஷன் கடையில் இதுபோன்று பாக்கெட்டுகளில் பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக சேலத்தில் ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது பாக்கெட் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- 9 இடங்களில் தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.
சென்னை:
மின்சார கட்டண உயர்வு மற்றும் ரேசன் கடைகளில் பருப்பு, பாமாயில் போன்றவற்றை நிறுத்த முயற்சிப்பதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
அதன்படி கட்சி மாவட்டங்கள் அடிப்படையில் இன்று காலையில் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தில் 9 இடங்களில் தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.
வடக்கு மாவட்டம் வடசென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தலைமையில் பழைய வண்ணாரப்பேட்டை கிருஷ்ணா தியேட்டர் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தின் சார்பில் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளரு
மான ந.பாலகங்கா தலைமையில் தங்க சாலை மணிக்கூண்டு அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தலைமையில் அண்ணாசாலை தாராபூர் டவர் அருகில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்சென்னை (தெற்கு) மாவட்ட செயலாளர் எம்.கே.அசோக் தலைமையில் வேளச்சேரி காந்தி சிலை அருகில் மின் கட்டண உயர்வை குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் பள்ளிக்கரணை மாநகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு தலைமையில் கொளத்தூரில் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் வி.என்.ரவி தலைமையில் எம்.ஜி.ஆர்.நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்சென்னை மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
- அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பும் பாமாயிலும் 3 மாதங்களாக ரேஷன் கடைகளில் கிடைக்காமல் அல்லல்படுத்துகிறது.
- துவரம் பருப்பு-பாமாயில் ஆகியவை தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யுமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தி, மக்களை நேரடியாகவும், மின் கட்டண உயர்வால் ஏற்படும் விலைவாசி உயர்வால் மறைமுகமாகவும் வாட்டி வதைக்கின்ற மு.க. ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசை கண்டித்து
அதிமுக சார்பில் கழக அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெறுகிறது.
அன்று எதிர்க்கட்சித் தலைவராக "ஷாக் அடிப்பது மின்சாரமா மின் கட்டணமா" என்று ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு, இன்று முதல்வராக இருக்கும் அவருக்கு, இந்த விடியா ஆட்சியில் "ஷாக்அடிக்கும்_மின்கட்டணம்" என்று மக்கள் பதில் அளிக்கின்றனர்.
நிர்வாகத் திறமையின்மையே உருவான இந்த அரசு, ஒருபுறம் மின் கட்டண சுமையை மக்கள் மீது ஏற்றியதுடன், மறுபுறம் அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பும் பாமாயிலும் 3 மாதங்களாக ரேஷன் கடைகளில் கிடைக்காமல் அல்லல்படுத்துகிறது.
போதைப்பொருள் எங்கும் கிடைக்கும் விடியா திமுக ஆட்சியில் பருப்பு_பாமாயில்_எங்கே ஸ்டாலின் என்று மக்கள் கேட்கிறார்கள்
மின் கட்டணத்தை உயர்த்தியும் ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் வழங்கப்படுவதை நிறுத்த முயற்சித்தும் மக்கள் விரோதப் போக்கில் செயல்படும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
அநியாயமாக மக்கள் தலையில் சுமத்தப்படும் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுமாறும், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு-பாமாயில் ஆகியவை தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யுமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- கடந்த 2 மாதங்களாக ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை.
- ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் தடையின்றி வினியோகிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, சமையல் எண்ணெயை (பாமாயில்) மிக குறைந்த விலையில் பெற்று வருகிறார்கள்.
ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயிலை வெளி சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து அவற்றை மிக மிக குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது. அதாவது துவரம் பருப்பு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது.
அதுபோல சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் இந்த விலையில் இந்த இரு பொருட்களும் கிடைக்கிறது. இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள்.
கடந்த 2 மாதங்களாக ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை. இந்த பொருட்களை விரைவில் வழங்குவோம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 2 மாதத்திற்கு தேவையான பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் டெண்டர் கோரி உள்ளது.
பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் டெண்டருக்கு ஆவணங்களை சமர்பிக்க 27-ந்தேதி கடைசிநாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் தடையின்றி வினியோகிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு, பாமாயில் விநியோம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் பரவிய நிலையில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
விரைவாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது.
- விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
- 2 நாள்கள் பணிக்காலத்தை ஈடுசெய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் (20-ந்தேதி) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மகளிா் உரிமைத் தொகைத் திட்டப் பணிகளுக்காக வேலை செய்த நிலையில், அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ், பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை கடந்த ஆண்டு ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் ரேஷன் கடை பணியாளா்கள் மேற்கொண்டனா்.
2 நாள்கள் பணிக்காலத்தை ஈடுசெய்யும் வகையில், கடந்த ஜூன் 15-ந்தேதி ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் நாளை மறுநாள் விடுமுறை விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்