search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதலை புலிகள்"

    • ராஜிவ் காந்தியுடன் 17 பேர் கொல்லப்பட்டதை மூடி மறைக்க கூடாது என்றார் கார்த்தி சிதம்பரம்
    • ராஜிவ் காந்தியின் முடிவு அவரே தேடி கொண்ட ஒன்று என்றார் வன்னி அரசு

    தி.மு.க.வின் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு நேர்காணலில் "சரித்திர புகழ் வாய்ந்த தலைவர் ஒருவருடன் உணவருந்த வேண்டும் என்றால், விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுடன் உணவு அருந்த விரும்புகிறேன். அப்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக அவரிடம் மன்னிப்பும் கேட்பேன்" என கருத்து தெரிவித்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் பதிவிட்டார்.

    அதில் அவர் கூறியதாவது:

    பிரபாகரனை பாராட்டி பேசுவது இந்திய காங்கிரஸ் கட்சியினருக்கு இசைவான கருத்து அல்ல. ராஜிவ் காந்தியும், அவருடன் 17 பேரும் விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட படுகொலை சம்பவத்தை மூடி மறைத்து பிரபாகரனின் புகழ் பாட நினைப்பது தவறு. இந்துத்துவா தேசியவாதம் போல்தான் பிரபாகரனின் தமிழ் தேசிய சித்தாந்தங்களும் மிக சிறுமையானது.

    இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பதிவிட்டார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் புத்த, சிங்கள ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகவும் போராடிய பெரும் தலைவர், மேதகு பிரபாகரன்.

    சனாதன இந்துத்துவம் ஆதிக்க மனப்பான்மையை வலியுறுத்துகிறது. மேதகு பிரபாகரனின் அரசியல், இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எப்போதுமே ஆதரவு அளித்ததில்லை.

    திரு. ராஜிவ் காந்தியின் படுகொலையை காரணம் காட்டி எத்தனை நாட்கள் தமிழ் மக்களை நீங்கள் இழிவு படுத்துவீர்கள்? தமிழ் ஈழத்தில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தங்கள் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை காங்கிரஸ் கொண்டு வர வேண்டிய தருணம் இது என்பதை உணருங்கள்.

    சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதால் மேதகு பிரபாகரனுக்கும் விடுதலை புலிகளுக்கும் திருமதி இந்திரா காந்தி ஆதரவு அளித்தார்.

    ராஜிவ் காந்தியின் படுகொலையை யாரும் கொண்டாடவில்லை. அவரது முடிவு அவரே தேடி கொண்ட ஒன்றாகும்.

    மேதகு பிரபாகரனுக்கு ஆதரவு அளிப்பதுதான் இந்துத்துவாவை எதிர்ப்பதற்கு ஒப்பாகும்.

    இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.

    தி.மு.க.வுடன் தமிழகத்தில் ஒரே கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் இந்த சித்தாந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

    • 2009ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியும் நடைபெற்றது
    • முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்பேன் என்றார் தி.மு.க. எம்.பி.

    கடந்த 2009ல், இலங்கை ராணுவத்திற்கும் விடுதலை புலிகள் (LTTE) அமைப்பினருக்கும் இடையே நடைபெற்ற ஈழப்போரின் கடைசி கட்டத்தில், இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

    எல்.டி.டி.ஈ. அமைப்பினருக்கு எதிராக இந்திய அரசாங்கம் மறைமுகமாக இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகளை செய்து வந்ததாக அப்போது விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.

    இந்தியாவில் அப்போது காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ஆட்சியில் தமிழ்நாட்டின் முக்கிய கட்சியான தி.மு.க.வும் அங்கம் வகித்தது. இது மட்டுமின்றி தமிழகத்திலும் தி.மு.க. ஆட்சியே  அப்போது நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் ராணுவ உதவி அப்போதைய தி.மு.க. அரசாங்கத்திற்கு தெரிந்தே நடந்ததாகவும், அன்றைய முதல்வர் கருணாநிதி இதனை அறிந்திருந்தும் தடுக்க தவறியதால்தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று அதில் அப்பாவி இலங்கை தமிழர்கள் உயிரிழந்ததாக தமிழகத்தின் மற்றொரு முக்கிய கட்சியான அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியது. தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள பல கட்சிகளும் அப்போது தி.மு.க.வை இதே காரணத்திற்காக குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்த சச்சரவுகள் இன்று வரை ஓயவில்லை.

    இந்நிலையில், தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.வின் முக்கிய பிரமுகரும், தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றார். அவரிடம், "வரலாற்று சிறப்புமிக்க ஒரு நபருடன் உணவு உண்ண வேண்டுமென்றால், யாருடன் உண்ன விரும்புகிறீர்கள். அந்த நபரிடம் என்ன கேட்பீர்கள்?' என்று கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன், "மேதகு தலைவர் பிரபாகரன் உடன் உணவருந்தி, அவரிடம் முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்பேன்" என பதிலளித்தார்.

    இரு தலைமுறைகளாக தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் குடும்பத்தை சேர்ந்தவரான தமிழச்சி தங்கபாண்டியனின் இந்த பதில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை தி.மு.க. தடுக்க தவறிய குற்றத்தை தாமாக முன் வந்து ஒப்பு கொண்டதாக ஆகி விட்டது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே, பிரபாகரனை ஒரு மாவீரனை போல் சித்தரித்து தமிழச்சி பேசியிருப்பதை, தி.மு.க.வுடன் கூட்டணி ல் உள்ள காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கண்டித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அடுத்த வருடம் இந்திய பாராளுமன்றத்திற்கு நடைபெற உள்ள தேர்தலில் பல கூட்டணிகளில் மாற்றங்கள் வரலாம் எனும் பின்னணியில் தி.மு.க. மற்றும் காங்கிரஸின் இந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

    • ‘பிரபாகரனும் உயிருடன் இருக்கிறார்' என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தொடர்ந்து கூறி வருகிறார்.
    • இலங்கையில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது பலர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தனர்.

    சென்னை:

    தமிழீழம் கோரி இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த போரில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, 2 மகன்கள், மகள் துவாரகா ஆகியோரும் உயிரிழந்து விட்டனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது.

    ஆனால் டென்மார்க் நாட்டில் வசிக்கும் தாரகா ஹரித்தரன் என்ற பெண், தன்னை பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி என்று கூறி 'வீடியோ' ஒன்றை வெளியிட்டார். அதில் மதிவதனியும், பிரபாகரனின் மகள் துவாரகாவும் இறக்கவில்லை. உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

    'பிரபாகரனும் உயிருடன் இருக்கிறார்' என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த தகவலை இலங்கை நாட்டு ராணுவம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

    இந்த நிலையில் இலங்கையில் உள்ள சமூக வலைத்தளங்களில் 'வீடியோ' காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், அந்த நாட்டில் சர்வ மக்கள் கட்சியை நடத்தி வரும் உதயகலா என்ற பெண்தான் பிரபாகரனின் மகள் துவாரகா என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

    துவாரகா தனது பெயரை உதயகலா என்று மாற்றி தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்ததாகவும், தற்போது அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி மக்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது இலங்கை தமிழர்கள் மத்தியில் விவாத பொருளாகவும் இருக்கிறது.

    இதன் பின்னணி வருமாறு:-

    இலங்கையில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது பலர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் சென்னை, திருச்சி, ராமேசுவரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி சிறப்பு முகாமில் தங்கி இருந்த தயாபாராஜ், அவரது மனைவி உதயகலா ஆகியோர் ராமேசுவரம் மண்டபம் சிறப்பு முகாமில் தங்களது உறவினர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று கூறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேரும் மண்டபம் சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் அவர்கள் இருந்து வந்தனர். இதில் தயாபாராஜ் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டவர் ஆவார்.

    தற்போது வெளியாகி உள்ள உதயகலா 'வீடியோ' காட்சி மூலம்தான் அவர் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பி சென்றிருக்கும் தகவல் தமிழக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. உதயகலா, அவரது கணவர் மற்றும் 3 குழந்தைகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பி சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை நாட்டுக்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    போருக்கு பின்னர் இலங்கை நாட்டில் அமைதி திரும்பியதால் இவர்களை அந்நாடு ஏற்றுக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    • பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யும் வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்.
    • இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும்.

    கொழும்பு:

    இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிகட்ட உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்தப் போரின் முடிவில் ஏராளமான விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் தற்போது அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது:

    ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றும். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்வது, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது ஆகிய 2 முக்கிய கோரிக்கைகள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை முன் வைத்துள்ளது.

    சிறைகளில் நீண்ட காலமாக அடைப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்குவார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான வரைவு மசோதாவுக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது. இது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. #SaatchigalSorgathil
    விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து ஒரு சினிமா படம் தயாரிக்கப்படுகிறது.

    ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஈழன் இளங்கோ டைரக்டு செய்துள்ளார். இதற்கிடையே இப்படத்தை திரையிடும் முயற்சியில் கடந்த மார்ச் 19-ந் தேதி தணிக்கை பெறுவதற்காக இலங்கை தலைநகர் கொழும்பில் இருக்கும் தணிக்கை குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது.

    இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இலங்கையில் திரையிட தடை விதித்தனர். டைரக்டரின் பிரதிநிதிகள் எவ்வளவோ முயன்றும் முயற்சி பயனளிக்கவில்லை. இறுதிப் போரில் நடந்த சம்பவங்கள் படத்தில் இடம் பெறவில்லை. இருந்தும் படம் திரையிட ஏன் தடை விதிக்கப்பட்டது என கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த தணிக்கை குழு, “படத்தில் வரும் செய்திகளும், துணைக் கதைகளும், வசனங்களும், ஒரு பாடலும் மிகவும் உணர்ச்சி மயமாக உள்ளது. சேனல் 4-ல் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. அது மட்டுமின்றி பாலசந்திரனும், இசை பிரியாவும் திரையில் தோன்றும் காட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் இலங்கை அரசுக்கும், ராணுவத்தினருக்கும் எதிராக உள்ளது. இலங்கையில் படத்தை திரையிட அனுமதித்தால் பல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன” எனக் கூறியது.

    அதனால் டைரக்டரும், சக கலைஞர்களும், ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து டைரக்டர் ஈழன் இளங்கோ கூறும்போது, “உலகமெங்கும் வாழும்மக்களை இப்படத்தை பார்க்க வைப்போம். தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து மொழியினரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே தமிழர்கள் மட்டுமின்றி மாற்றுமொழி பேசும் மக்களும் இதை பார்ப்பார்கள். அப்போது தான் ஈழத்தமிழருக்கு நடந்த, நடக்கின்ற கொடுமைகளை அறிந்து கொள்ள முடியும்” என்றார். #SaatchigalSorgathil

    இலங்கையில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ விடுதலை புலிகள் மீண்டும் வர வேண்டும் என வடக்கு மாகாண பெண் மந்திரி தெரிவித்துள்ள கருத்து இன்று பாராளுமன்றத்தில் கடும் அமளியை ஏற்படுத்தியது. #Srilanka #LTTE
    கொழும்பு:

    இலங்கை வடக்கு மாகாண அரசில் மந்திரியாக இருப்பவர் விஜேயகலா மகேஷ்வரன். ஆளும் ஐக்கிய தேதிய கட்சி உறுப்பினரான இவர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில், “2009-ம் ஆண்டுக்கு முன்னர் நாம் எப்படி இருந்தோம். நாம் தலைநிமிர்ந்து வாழ, தெருவில் சுதந்திரமாக நடமாட, நமது குழந்தைகள் பத்திரமாக பள்ளி சென்று வர தற்போது உள்ள சூழலில் விடுதலை புலிகள் மீண்டும் வந்தால் மட்டுமே சாத்தியம்” என கூறினார்.

    சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இதனை மேற்கோள் காட்டி பேசிய விஜயகலா, ‘இதற்காகவா மைத்திரிபால சிறிசேனாவுக்கு நாங்கள் வாக்களித்தோம்’ என்றார். வடக்கு மாகாண பகுதியில் எந்த வளர்ச்சி திட்டமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

    விஜேயகலாவின் இந்த பேச்சு அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று அமளியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆளும் கட்சி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய கல்வி மந்திரி அகில விராஜ் கரியவாசம், “விஜேயகலாவின் பேச்சு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது” என்றார்.
    விடுதலை புலிகளை முறியடித்துவிட்டாலும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் அவர்களின் சித்தாந்தத்தை முறியடிக்க வேண்டும் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். #MaithripalaSirisena #Eelam #LTTE
    கொழும்பு :

    இலங்கை உள்நாட்டு போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களின்  ஒன்பதாவது நினைவு தினம் இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, விடுதலை புலிகள் அமைப்பை நாம் வீழ்த்தி விட்டோம். ஆனால் அவர்களின் சித்தாந்தம் இன்னும் சாகவில்லை. வெளிநாடுகளில் உள்ள விடுதலை புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் இன்றும் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.

    அவர்களின் ஒரே நோக்கம் தனி ஈழம் அமைப்பதே, அதுவே அவர்களின் கனவு. மேலும், விடுதலைப் புலிகளின் ஆதரவளர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக விளங்கி வருகிறார்கள். எனவே, விடுதலைப்புலிகளின் தனிநாடு கோரும் சித்தாந்தத்தை முறியடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் நேற்று முன்தினம் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் தலைமையில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்ற இறுதிப்போரின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, மே 18-ம் தினம் தமிழ் இன அழிப்பு தினமாக அவர் பிரகடனப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #MaithripalaSirisena #Eelam #LTTE  
    ×