என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஹைட்ரோ கார்பன் திட்டம்"
புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேரு நினைவுநாள் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
நாடு சுதந்திரமடைந்தவுடன் நேரு கையில் நாடு இருந்தால்தான் வளர்ச்சியும், பாதுகாப்பும் கிடைக்கும் என காந்தி நாட்டை ஒப்படைத்தார். சுதந்திரத்திற்கு பிறகு நாட்டின் வளர்ச்சிக்கு நேரு முக்கியத்துவம் அளித்தார்.
பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, அணைகள், மின்நிலையம், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை கொண்டுவந்தார்.
பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு முன்னதாக ஊடகங்களும், பத்திரிகைகளும் காங்கிரஸ் கட்சியை பற்றி பலவிதமான செய்திகளையும், தகவல்களையும் வெளியிட்டனர். தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட ஆட்களே இல்லை. யாரும் முன்வரவில்லை. பலமான எதிரணி என்பதால் வெற்றி அவர்களுக்குத்தான் என கூறினர்.
ஆனால் அதை பொருட்படுத்தாமல் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கத்திற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என தேர்தலில் நிறுத்தினோம். அவரும் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவோடு இருந்தார். இதற்காக வேறு ஒரு வேட்பாளரை தயார் செய்த பின்னர் கட்சித்தலைமைக்கு விருப்பத்தை தெரிவித்து வேட்பாளராகினார்.
காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் இரவு, பகலாக பாடுபட்டீர்கள். ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தீர்கள். ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வெற்றி பெறுவார் என கூறி வந்தேன். ஆனால் அவர் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதோடு மட்டுமின்றி புதுவையில் உள்ள 29 சட்டமன்ற தொகுதிகளில் கூடுதலாக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இது புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும், அரசுக்கும் கொடுத்துள்ள அங்கீகாரம். இந்த வெற்றிக்கு 6 நாள் போராட்டமும், போராட்டத்திற்கு காரணமானவர்களும் ஒரு காரணம்தான்.
மோடி 2-வது முறை பிரதமராக வெற்றி பெற்றவுடன் பாகுபாடின்றி அனைத்து மாநில வளர்ச்சிக்கும் பாடுபடுவேன் என கூறியுள்ளார். மக்கள் நல திட்டங்களை அனைத்து மாநிலங்களுக்கும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனால் அவரை சந்தித்து புதுவைக்கு தேவையான நிதி, திட்டங்களை கேட்டுப்பெறவுள்ளோம். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்தால் அமைச்சரவை பங்கேற்கும்.
புதுவை, காரைக்கால் பகுதியில் எரிபொருள் எடுக்க ஆய்வு மையம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் புதுவை அரசு எந்தவித அனுமதியும் அளிக்கவில்லை.
மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசின் அனுமதி இல்லாமல் எந்த பணியையும் செய்ய இயலாது. எங்கள் அனுமதியின்றி பணியை தொடங்கினால் அதை தடுத்து நிறுத்துவோம். இதை சட்டமன்றத்திலும் நான் உறுதியளித்துள்ளேன். புதுவைக்கு தேவையான நல்ல திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தில் நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகியவற்றை எடுக்க மத்திய அரசு வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா பகுதிகள் அனைத்தும் அழிந்து நிலத்தடி நீர்மட்டம் இறங்கி பாலைவனமாகிவிடும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களை ரத்து செய்ய அனைத்து பகுதிகளிலும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி தெற்கு கரைமேடு பகுதியில் விவசாயிகள், மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநிலத்தலைவர் தங்கசண்முகசுந்தரம் தலைமையில், விவசாயிகள் உளுந்து வயலில் இறங்கி ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களை செயல்படுத்த தமிழகம் முழுவதும் கைவிட வேண்டும். விவசாயம் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகள், பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வரை மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது என விவசாயிகள் முடிவு செய்தனர்.
தமிழகத்தில் விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து 274 இடங்களில் 3500 அடி முதல் 6 ஆயிரம் அடிவரை கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 274 கிணறுகள் தோண்டப்பட உள்ளது.
தமிழகத்தில் வேதாந்தா நிறுவனம் முதல் வட்டாரத்திற்கு மரக்காணம் முதல் கடலூர் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்க பரிசோதனை செய்ய உள்ளது. கடந்த 12-ந்தேதி இரண்டாவது வட்டாரத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த 2-வது வட்டாரம் என்பது நாகை மாவட்டத்தின் ஆழ்கடல் இல்லாத கரையோர கடல் பகுதியாகும். இந்த பகுதியில் 158 கிணறுகள் அமைக்கப்பட உள்ளது.
இந்த திட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் முற்றிலும் அழிந்து குடிநீர் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள 274 இடங்களில் கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் தமிழ்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் தலைமையில் காவிரி படுகை மண்டல கூட்டம் நடந்தது. இதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ள இடங்களின் பட்டியலில் முதலில் உள்ள இடம் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம், திருக்களார் ஊராட்சி ஆகும்.
இங்கு கடந்த 14-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அதில் அடுத்த மாதம் (ஜூன்) கடைசி வாரத்தில் லட்சக்கணக்கான மக்களை திரட்டி திருவாரூர் மாவட்டம் முழுவதும் மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல் கட்டமாக கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளிலும் போராட்டக்குழு அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று போராட்டக்குழுவினர் மற்றும் பொதுமக்கள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள் உள்பட பலர் திருக்களாரில் ஒன்று திரண்டனர். அப்போது பெண்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கும்மியடித்து ஒப்பாரி போராட்டம் நடத்தினர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் நான்காம் சேத்தி கிராமத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியமும் கலந்து கொண்டார்.
திருக்களாரில் இன்று போராட்டம் தொடங்கி விட்டது. நெடுவாசல் போல வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது. காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும். உயிரை கொடுத்தாவது ஹைட்ரோ கார்பன் திட்டங்களை வெளியேற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக மீத்தேன் எதிர்ப்பு திட்ட கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசுகள் டெல்டா மாவட்டங்களை பாலை வனமாக்க இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இதற்கு எதிராக ஓட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்டங்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம். மயிலாடுதுறையில் வருகிற 19-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தி போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம் வரையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
இத்திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் கீழ் தமிழகம், புதுவையில் 274 கிணறுகள் அமைக்கப்படவுள்ளது. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும் 3 ஆயிரத்து 500 மீட்டர் முதல் 4 ஆயிரத்து 500 மீட்டர் வரை ஆழம் கொண்டதாக இருக்கும். விழுப்புரத்தில் 139 சதுர கி.மீட்டருக்கு கிணறு வெட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல புதுவை மாநிலத்தில் புதுவை பிராந்தியத்தில் 2 சதுர கி.மீட்டரும், காரைக்காலில் 39 சதுர கி.மீட்டருக்கும் கிணறு வெட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுவை பிராந்தியத்தில் அரியாங்குப்பம் முதல் பனித்திட்டு வரையிலான பகுதிகள்தான் கடற்கரையை ஒட்டிய பகுதி.
இப்பகுதியில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக 2 சதுர கி.மீட்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இப்பகுதியில் ஏம்பலம் மற்றும் மணவெளி ஆகிய தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளை சேர்ந்த அமைச்சர் கந்தசாமியும், அரசு கொறடா அனந்தராமனும் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக புதுவை அரசுக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை. புதுவையை பொறுத்தவரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எந்த காரணத்தை கொண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் புதுவையில் செயல்படுத்தப்பட மாட்டாது என்று கூறினார்.
திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டிருக்கும் தொகுதியின் அமைச்சர் கந்தசாமி கூறியதாவது:-
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், திட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்காது என கொள்கை முடிவு எடுத்துள்ளோம். சுற்றுச்சூழல்துறை அமைச்சராக நான்தான் உள்ளேன். பெரிய மாநிலங்களே இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த கடும் எதிர்ப்பினால் தவிக்கின்றனர்.
சிறிய மாநிலமான புதுவையில் இத்திட்டங்களுக்கு ஒரு போதும் அனுமதி கிடையாது. தேர்தலுக்கு பிறகு மத்தியில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வந்துவிடும். இதனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாது. எக்காரணத்தை கொண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவை மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல மணவெளி தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அரசு கொறடாவுடமான அனந்தராமனும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி கடலூர் தெற்குமாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சிதம்பரத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-
சிதம்பரம் பா.ம.க.வின் கோட்டை. டெல்டா பகுதிக்கு மோடி அரசால் ஆபத்து வந்துவிட்டது. காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உருவாக்க 3 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டம் காவிரி டெல்டா பகுதியில் அமைந்தால் இந்த பகுதி பாலைவனமாக மாறிவிடும். 85 கிராமங்கள் அப்புறப்படுத்தப்படும். மக்கள் அகதியாகி விடுவார்கள்.
கடலூர், கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கொள்ளிடம் போன்ற ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் பெரும் ஆபத்தை உண்டாக்கும். ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் 30 அடி அகலத்தில் 3 ஆயிரம் அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும். இதற்காக பூமிக்கு கீழே உள்ள பாறைகள் சக்திவாய்ந்த வெடி வைத்து தகர்க்கப்படும். இதனால் நில அதிர்வு ஏற்படும். அதுமட்டுமல்ல, கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்படும்.
தமிழகத்தில் உள்ள பூமி இன்னும் ஆயிரமாயிரம் காலம் நன்றாக இருக்கவேண்டும். நம் சந்ததியினர் இந்த பூமியில் வாழவேண்டும். இந்த பகுதியில் யாராவது ஆழ்துளை கிணறுகள் அமைக்க குழாய்களை இறக்கினால் அதை தடுத்து நிறுத்த வேண்டும். மத்திய மாநில அரசுகள் மக்களை கண்டு கொள்வதில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பா.ம.க. கடுமையாக எதிர்க்கும். போராட்டமும் நடத்துவோம்.
மக்களுக்கு எந்த பிரச்சினைகள் வந்தாலும் அதை கண்டிக்கவும், தடுத்து நிறுத்தவும் நானும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் முன்வருவோம். எனக்கு பதவி ஆசை கிடையாது. நான் 35 வயதினிலேயே பதவியை பார்த்துவிட்டேன். மக்களை பற்றி நினைக்காமல் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கல்லாக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறியும் காலம் வந்துவிட்டது.
நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரப்போகின்றது. எனவே ஹட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டுவிட்டு, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவிக்கவேண்டும். விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வர நாங்கள் விடமாட்டோம் இவ்வாறு அவர் பேசினார். #AnbumaniRamadoss
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. கலிவரதன் ஆகியோர் வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர், தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பூத்கமிட்டி அமைக்கும் பணி ஆலோசனை வழங்கினர். இன்று 2-வது நாளாக ஒரத்தநாடு தொகுதியில் ஆய்வு நடத்தினர். பின்னர் இருவரும் மன்னார்குடிக்கு வந்தனர்.
அப்போது பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமரின் தனிநபர் கழிவறை, இலவச கேஸ் இணைப்பு, இலவச வீடு கட்டும் திட்டம், பயிர்கடன் திட்டம், மருத்துவ காப்பீடு ஆகிய திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்துள்ளன. பெட்ரோல், டீசல் விலையை ரூ.2.50 மத்திய அரசு குறைத்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் குறைக்கவேண்டும்.
இந்து கோவில்களின் வருமானத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள சட்டத்தில் இடமில்லை. வருமானத்தில் 18 சதவீதம் தான் தொகுப்பூதியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மீதி தொகையை வருமானமில்லாத நலிவுற்ற கோவில்களின் வளர்ச்சிக்காக செலவிடவேண்டும்.
தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மேற்கொள்ள தி.மு.க. மற்றும் தமிழ் தேசிய கட்சிகள் எதிர்ப்பது சரியல்ல. ஹைட்ரோ கார்பன் எடுக்க டி.போர்வெல் என்ற முறையில் எடுக்க அனுமதித்துள்ளது. இதனால் நிலத்தடிநீர் குறைவதற்கோ, விவசாயம் பாதிக்கும் என்றோ அச்சப்பட தேவையில்லை.திருமுருகன் காந்தியை ஸ்டாலின் சந்தித்தது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #HRaja #HydroCarbon
சென்னை:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவி 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் சுகாதாரமான வாழ்வினைக் கேள்விக் குறியாக்கி சுற்றுச் சூழல் மண்டலத்தைப் பாழ்படுத்திய வேதாந்தா நிறுவனத்திற்குத் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் தருகிறது.
நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, ஒ.என்.ஜி.சி. நிறுவனமும், வேதாந்தா நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் இரு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு இடம் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் ஹைட்ரோ கார்பன் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், கமலாபுரம் உட்பட இரு இடங்கள் இதற்கெனத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு இடத்தில் 1,794 ச.கி.மீ. பரப்பிலும், மற்றொரு இடத்தில் 2,574 ச.கி.மீ. பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 731 ச.கி.மீ. பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என எதுவும் காவிரிப் படுகையில் எடுக்க மாட்டோம் எனப் பாராளுமன்றத்தில் கூறிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இன்றைக்கு அவ்வாக்கை மீறி காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதித் திருப்பது தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த பச்சைத் துரோகம்.
தூத்துக்குடியில் 13 உயிர்களைப் பலிகொண்டு, பல இளைஞர்களை ஊனமாக்கி அவர்கள் வாழ்க்கையினையே இழப்பதற்குக் காரணமாக இருந்த வேதாந்தா நிறுவனத்தை அம்மக்களின் மரண ஓலமும், ரத்தவாடையும் நெஞ்சைவிட்டு அகலாது ரணமாக உறுத்திக் கொண்டிருக்கிற இவ்வேளையில் தமிழகத்திற்குள் அனுமதித்திருக்கும் மோடி அரசின் நயவஞ்சகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் களப்போராட்டங்களும், கருத்தியலும் தமிழகம் முழுக்க வீரியம்பெற்றிருக்கிற நிலையில் மீண்டும் அதனை அனுமதித்திருப்பது தமிழர்களின் தன்மான உணர்வை உரசிப்பார்க்கும் அதிகாரத்திமிராகும். அதனை எதன்பொருட்டும் இன மானத்தமிழர்கள் அனுமதிக்க மாட்டோம் என அறுதியிட்டுக் கூறுகிறேன்.
மத்திய அரசானது தமிழர்களின் உணர்வுக்கும், உரிமைக்கும் மதிப்பளித்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும்.
இதனைச் செய்யத்தவறும் பட்சத்தில் தமிழர் நிலவியல் மீதான இப்போருக்கு எதிராக இதுவரை காணாத அளவிற்குப் போர்க் களமாகத் தமிழகம் மாறும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார். #Seeman #HydrocarbonProject
நாடு முழுவதும் 55 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில், கடலூர் மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கும் நாகை மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 1-ந்தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் டெல்லியில் நடந்தது.
தமிழகத்தை பொறுத்தவரை 3 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் தீவிரமாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் இன்று (3-ந்தேதி ) திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு திருவாரூர் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ். பழநிமாணிக்கம், முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன், நாகை மாவட்ட செயலாளர் கவுதமன், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி ஆடலரசன், திருவையாறு துரை.சந்திரசேகரன், கும்பகோணம் அன்பழகன், ஒரத்தநாடு ராமச்சந்திரன், திருவிடைமருதூர் கோவி.செழியன் மற்றும் தஞ்சை நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் எரிவாயு, எண்ணை திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திக்கூடாது என்று கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் இன்று பிற்பகலில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், திருவாரூக்கு சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெறுகிறார்.
மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் அனைவரும் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.
அதன்படி திருவாரூருக்கு வரும் வழியில் கவர்னருக்கு பிற்பகலில் விளமல் கிராமம் பகுதியில் கருப்பு கொடி காட்டப்பட உள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
கவர்னர் வருகையையொட்டி திருவாரூர் செல்லும் வழி நெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #Hydrocarbon #DMK
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி டெல்டா பகுதிகளில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, இரண்டு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு இடம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு, மக்கள் ஏகோபித்த எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “தமிழக அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது” என்று கூறி ஏமாற்றி வந்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது திடீரென்று மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியிருப்பது, தமிழக வேளாண்மை முன்னேற்றம் பற்றியோ, தமிழக விவசாயிகளின் பாதுகாப்பு பற்றியோ மத்திய அரசு துளியும் கவலைப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் துயரம் மறைவதற்குள், ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி சுற்றுப்புறச்சூழலைக் கெடுத்து வரும் அதே வேதாந்தா நிறுவனத்திற்கு, மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க இடங்களை மத்திய அரசு ஒதுக்கியிருப்பது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை அடக்குவதில் மத்திய பா.ஜ.க. அரசும் தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க அரசுக்கு உறுதுணையாக இருந்து “அரச பயங்கரவாதத்தை” அப்பாவி மக்கள் மீது இரண்டு அரசுகளும் இணைந்து கட்டவிழ்த்து விட்டது உண்மையாகியிருக்கிறது.
ஆகவே, “தமிழகத்தின் நெற்களஞ்சியத்தினை” காப்பாற்றுவதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு கருதியும் இத்திட்டத்தினை மத்திய பா.ஜ.க. அரசு உடனே கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
“தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்க அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியதை நினைவுபடுத்தி, இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கையை மத்திய அரசுக்கு வைக்க வேண்டும் என்று தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin #HydrocarbonProject #BJP
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்