search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "One Country One Election"

    • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாட்டின் இயல்பான போக்கை சீர்குலைக்கும்.
    • பா.ஜனதா கட்சியின் பேராசையை திருப்திபடுத்துவதற்காக இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு நடைமுறைக்குச் சாத்தியமற்றதும், இந்தியாவின் பரந்துபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களை கவனத்தில் கொள்ளாததும், கூட்டாட்சியியலைச் சிதைப்பதும் ஆகும். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடப்பது, அந்தந்த மாநிலத்துக்குரிய பிரச்சனைகள், ஆட்சி முன்னுரிமைகள் உள்ளிட்ட காரணங்களால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒவ்வாதது.

    எதார்த்தத்துக்கு முரணாக அனைத்து மாநில அரசுகளின் ஆட்சிக்காலத்தையும் ஒரே வரிசையில் கொண்டு வருவது என்பது இயல்பாக நடக்கும் அரசு நிர்வாகத்துக்கு இடைஞ்சலை உருவாக்கும்.

    இந்த முன்மொழிவு என்பதே மொத்தத்தில் பா.ஜ.க.வின் ஆணவத்தைத் திருப்திப்படுத்துவதற்கான நகர்வுதானே ஒழிய, இதனை ஒருபோதும் அவர்களால் நடைமுறைப்படுத்த இயலாது. இந்திய ஜனநாயகம் ஒற்றைக் கட்சியின் பேராசைக்கு ஏதுவாக வளைக்கப்படலாகாது.

    ஒன்றிய அரசானது இத்தகைய திசைதிருப்பல் உத்திகளில் தனது ஆற்றலை வீணடிப்பதை விட்டுவிட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களைச் சமமாக பகிர்ந்தளித்தல் ஆகிய முக்கியமான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

    • மோடி தலைமயிலான மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
    • கடந்த மக்களவை தேர்தலில் சந்தித்த பின்னடைவில் இருந்து பாஜக எதையும் கற்றுக்கொள்ளவில்லை.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தனது ஆட்சிக் காலத்துக்குள்ளாகவே அமல் படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆய்வை இறுதி செய்து அந்த அறிக்கையை மத்திய அமைச்சரவையில் சமர்ப்பித்தது.

    இந்நிலையில் இன்று மோடி தலைமயிலான மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தி, மத்திய அரசுக்கு முழு அதிகாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட முறைமுக செயல்திட்டமாகும். கடந்த மக்களவை தேர்தலில் சந்தித்த பின்னடைவில் இருந்து பாஜக எதையும் கற்றுக்கொள்ளவில்லை

    இந்தியாவின் தேர்தல் அரசியலை சர்வாதிகார முறையை நோக்கி நகர்த்துவதற்கு சங்பரிவார் ஒரு இரகசிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது. "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற முழக்கம் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான அம்சங்கள் உள்ளது. இந்த வேறுபாடுகளைப் புறக்கணித்து, மாநிலங்களில் எழும் அரசியல் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளாமல் எந்திரத்தனமாகத் தேர்தலை நடத்துவது கட்டாய மத்திய ஆட்சியை விளைவிக்கும். இறுதியில் அது ஜனநாயகத்தை அழித்துவிடும்.

    இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பையும், இந்தியா என்ற எண்ணத்தையும் சீர்குலைக்கும் சங்பரிவார்களின் முயற்சிகளுக்கு எதிராக நாட்டின் ஜனநாயக சமூகம் எழுந்து நிற்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் ஹைதராபாத் எம்.பி. ஒவைசி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    • நாட்டு மக்கள் நிச்சயம் இதை ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
    • இளைஞர்கள் இந்த திட்டத்துக்கு அதிக ஆதரவளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தனது ஆட்சிக் காலத்துக்குள்ளாகவே அமல் படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆய்வை இறுதி செய்து அந்த அறிக்கையை மத்திய அமைச்சரவையில் சமர்ப்பித்தது. இந்நிலையில் இன்று மோடி தலைமயிலான மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த திட்டத்துக்குக் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. தற்போது இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது தேர்தல் வரும் சமயத்தில் பாஜக செய்யும் அரசியல் தந்திரமே ஆகும். தேர்தல் வரும்போதெல்லாம் பாரதீய ஜனதா கட்சி இதுபோன்ற விஷயங்களை கூறும். நாட்டு மக்கள் நிச்சயம் இதை ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் தொலைத் தொடர்புத் துறை அஸ்வினி வைஷ்ணவ், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சி அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த திட்டம் பற்றி கருத்து தெரிவித்தவர்களில் 80 சதவீதம் பேர் நேர்மறையான ஆதரவையே வழங்கியுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் இந்த திட்டத்துக்கு அதிக ஆதரவளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருந்தது
    • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்த ஆட்சிக் காலத்துக்குள்ளாகவே அமல்படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அதை உறுதிப்படுத்தும் வகையில் பேசி இருந்தார். இதுதொடர்பாக ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பதிவு செய்து ஆராய்ந்து வந்தது.

    தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை இறுதி செய்து அந்த அறிக்கையை மத்திய அமைச்சரவையில் சமர்ப்பித்தது. இந்நிலையில் இன்று [செப்டம்பர் 18] பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தின் 100 நாள் நிறைவு கொண்டாட்டங்களை ஒட்டி ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3-வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
    • உயர்மட்டக்கு குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஆதரவாக பரிந்துரைகளை வழங்கியது.

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தற்போதைய ஆட்சிக் காலத்திற்குள் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்தும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதுபற்றி பெயர் வெளியிட விரும்பாத பிரமுகர் ஒருவர் கூறிய தகவலை மேற்கோள் காட்டி தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3-வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது.

    கடந்த மாதம் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், "ஒரே நாடு ஒரே தேர்தல்" குறித்து பதிவு செய்தார். ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த முன்வர வேண்டும் என்றும் அவர் அரசியல் கட்சிகளை கேட்டுக்கொண்டார்.

    இதேபோல், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய வாக்குறுதிகளில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற வாக்குறுதியும் ஒன்று ஆகும்.

    இதுதொடர்பாக ஆராய்வற்காக முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஆதரவாக பரிந்துரைகளை வழங்கியது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்படுவது அவசியம் என குறிப்பிட்டிருந்தது. இதற்காக 18 அரசியலமைப்பு திருத்தங்களை குழு பரிந்துரைத்தது. அவற்றில் பெரும்பாலானவை மாநில சட்டசபைகளின் ஒப்புதல் பெறத் தேவையில்லை. சில அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் கூறியிருந்தது.

    இந்த சீர்திருத்தங்களை செய்தபின், மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்கலாம் என்றும், அது முடிந்த பின்னர் 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.

    இந்நிலையில், தற்போதைய பாஜக ஆட்சிக் காலத்திற்குள் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்தும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
    • உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுவதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் முன் 'ஒரே கட்டமாக தேர்தல்' நடத்தும் முறையை ஏன் அமல்படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • கடிதத்தை திமுக எம்பி வில்சன் உயர்மட்ட குழுவிடம் நேரில் சென்று அளித்தார்.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைப்பட்டுள்ளது. இந்த குழு கடந்த சில நாட்களாக முன்னாள் தேர்தல் ஆணையர்கள், இந்நாள் தேர்தல் ஆணையர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோரிடம் தொடர்ச்சியாக கருத்துக்களை கேட்டு வருகின்றது. இந்த திட்டத்திற்கு ஏற்கனவே தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் ஒன்று எழுதப்பட்டது. கடந்த மாதம் 17ம் தேதி இந்த கடிதம் எழுதப்பட்டது.

    இந்நிலையில் இந்த கடிதத்தை திமுக எம்.பி. வில்சன் அவர்கள் உயர்மட்ட குழுவிடம் நேரில் சென்று அளித்தார். இந்த திட்டத்தை தி.மு.க. நிராகரிப்பதாகவும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும், இது குடியரசு தலைவர் முறையிலான ஆட்சியை நோக்கி செல்வதற்கு சமம் என்றும் திமுகவினரால் இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. இந்த திட்டதை கைவிட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்மட்ட குழு பல்வேறு கட்சிகளிடம் கருத்து கேட்டு வரும் நிலையில் தி.மு.க. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    • தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது
    • தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்டது போல நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த திட்டமிடப்படுகிறது. தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி தேர்வுகள், பண்டிகைகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் எப்போது வருகின்றன என்பது பற்றி தேர்தல் ஆணையம் ஆய்வு செய்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த அட்டவணை அடுத்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. தேர்தல் அட்டவணை வெளியானதும் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த தேதிகளில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்பது தெரிய வரும்.

    மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருக்கும் மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதுபோல பெரிய மாநிலங்களிலும் பல கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் சுமூகமான சூழ்நிலை எப்போதும் காணப்படும்.

    இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் எப்போதும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்துவது வழக்கில் உள்ளது. எனவே இந்த தடவையும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.


    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது.

    இதற்கிடையே தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. துணை நிலை ராணுவத்தினர் எத்தனை கம்பெனி தேவைப்படுவார்கள் என்பது பற்றியும் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    மேலும் தேசிய தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இப்போதே திட்டமிடப்பட்டு வருகிறது. அதுபோல மின்னணு எந்திரங்கள் அனைத்தும் தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

    தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டிய அதிகாரிகளின் பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பயிற்சி அளிப்பது பற்றியும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தேர்தல் பணியில் தொடர்புடைய அலுவலர்கள், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தால் அவர்களை வருகிற 31-ந் தேதிக்குள் இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவுறுத்தி உள்ளார்.

    இது குறித்து அரசு துறை செயலாளர்களுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் பணியில் நேரடியாக தொடர்புடைய அலுவலர்கள், சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

    ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால் வருகிற ஜூன் மாதம் 30-ந் தேதி 3 ஆண்டுகள் நிறைவடைவதாக இருந்தாலும், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

    பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினாலும் இடமாற்றம் செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புதல் பெற்ற பின் அப்பணியில் தொடர அனுமதிக்கலாம். வேறு ஏதேனும் காரணத்துக்காக ஒருவர் அப்பணியில் தொடர வேண்டுமானால் தேர்தல் கமிஷன் ஒப்புதல் அவசியம்.

    ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோர் 6 மாதங்களில் ஓய்வு பெறுவதாக இருந்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்கலாம். ஆனால் அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் போன்றோர், அதே மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்படலாம். ஆனால் அவர்கள் வீடு உள்ள சட்டசபை தொகுதியில் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் இருப்போரை வருகிற 31-ந்தேதிக்குள் இட மாற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.10 ஆயிரம் கோடி வரை செலவாகும்.

    பாராளுமன்ற மக்களவை, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசலீத்து வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர்களிடம் இந்த குழு ஆலோசனைகளை பெற்று வருகிறது.

    இதனிடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி கூறுகையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும்.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். எனவே மூன்று முறை மட்டுமே அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியும். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இரண்டு வகையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும்" எனக் கூறினார்.

    • ஒன்றிய ஆளுங்கட்சியும் பெரும்பான்மை இழந்தால்- ஆட்சி கவிழும்.
    • தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்த முயற்சிப்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவிற்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம்.

    ஒன்றிய ஆளுங்கட்சியும் பெரும்பான்மை இழந்தால்- ஆட்சி கவிழும். அது போன்ற நிகழ்வில் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முன்னெடுப்பிற்கு மீண்டும் இடையூறு ஏற்படும் என்பதைக் கூட ஆலோசிக்காமல் "ஒரே நாடு ஒரே தேர்தல்" முயற்சி நடப்பது நடைமுறை சாத்தியமற்றது.

    ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கும்- மாநில கட்சிகளுக்கும் இடையே தேர்தல் களத்தில் சம நிலையிலான போட்டியை ஏற்படுத்தி தராது

    உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்த முயற்சிப்பது எழுத்தறிவு இன்னும் பெற வேண்டிய கிராமப்புற மக்கள் மத்தியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது விவாத பொருளாகவே நீடிக்கும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
    • ஆய்வின் போது வட்டார நிர்வாகிகள் முத்துமாரி, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் ஜி-20 மாநாடு நடந்து வருகிறது. 2 நாடுகளின் தலைவர்கள் வரவில்லை. எதிர்க்கட்சி தலைவர் மல்லி கார்ஜுன கார்கேவுக்கு குடியரசு தலைவர் அளித்த விருந்திற்கு அழைப்பு வராதது வருத்தமளிக்கிறது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை. விவாத பொருளாகவே நீடிக்கும். இதற்கான சட்ட திருத்தத்தை நிறைவேற்ற பாராளு மன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை தேவை உள்ளதால் அது கனவாகவே நீடிக்கும்.

    வெவ்வேறு கொள்கை களை கொண்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி அமைத்திருப்பது மத்தியில் பா.ஜ.க. அரசை அகற்றுவதற்காகதான். ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு எந்த நீதிமன்ற உத்தரவும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது, கண்டிக்கத்தக்கது.

    அரசியலமைப்புச் சட்டத்திலேயே இந்தியா, பாரதம் என்று குறிப்பி டப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை கேட்டவுடன் பாரதம் என்று பேச ஆரம்பித்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது காங்கிரஸ் மாநில பொதுக் குழு உறுப்பினர் பால கிருஷ்ண சாமி, மாவட்ட நிர்வாகிகள் சிவகுருநாதன், மீனாட்சி சுந்தரம், சிவஞான புரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளி ட்டோர் உடன் இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ரங்கபாளையம், லட்சுமி நாராயணபுரம், கம்மாபட்டி, மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் 100 நாள் வேலை திட்ட பணிகளையும் மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது வட்டார நிர்வாகிகள் முத்துமாரி, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×