என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "aanmiga kalanjiyam"
- பொதுவாகவே இத்தகைய வழிபாடு ஒவ்வொரு அமாவாசையன்றும் மேற்கொள்ளப்படுகிறது.
- ஆடி அமாவாசையன்று தவறாமல் நிறைவேற்றிவிடுவது சிறந்தது என்பார்கள்.
ஆடி அமாவாசை தினம் நம்மை விட்டு நீங்கியவர்களை நினைவு கூறும் நன்னாள். அறிந்தோ அறியாமலோ அவர்களுக்கு நாம் இழைத்திருக்கக்கூடிய பிழைகளுக்கு பேசியிருக்கக்கூடிய தீச்சொற்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் ஒரு வழியாகவும் நாம் இந்த நல்நிலைக்கு உயர்ந்ததற்கு நன்றி சொல்லும் வழியாகவும் அமாவாசையன்றும் நாம் முன்னோருக்கு வழிபாடு செய்கிறோம்.
பொதுவாகவே இத்தகைய வழிபாடு ஒவ்வொரு அமாவாசையன்றும் மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் அப்போது எந்த காரணத்திலாவது அவ்வாறு மேற்கொள்ள இயலவில்லை என்றால் ஆடி அமாவாசையன்று தவறாமல் நிறைவேற்றிவிடுவது சிறந்தது என்பார்கள்.
- ஆடி துவங்கினால் போதும் பண்டிகைகளின் பட்டியலும் துவங்கிவிடும்.
- ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள்தான் ஆடிப்பூரமாக கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதம் தக்ஷியாயனம் ஆரம்பமாகிறது. ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரிப்பர். ஆடி முதல் மார்கழி வரையிலான தியாயனமும், தை முதல் ஆடி வரை உத்ரானமும் ஆகும்.
ஒன்று மழைக்காலத்தின் துவக்கத்தையும், மற்றொன்று கோடைக்காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.
ஆடி மாதத்தை கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் துவக்கமே ஏற்படுகிறது. ஆடி துவங்கினால் போதும் பண்டிகைகளின் பட்டியலும் துவங்கிவிடும்.
பூமாதேவி அவதரித்த ஆனந்த மாதமும் இந்த ஆடி மாதம்தான். அதாவது ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள்தான் ஆடிப்பூரமாக கொண்டாடப்படுகிறது.
மேலும் ஆடிப்பதினெட்டு அல்லது ஆடிப்பெருக்கு என்றும் நாம் கொண்டாடுகிறோம். அந்த நாளில் முன்பெல்லாம் காவிரியும், தாமிரபரணியும், வைகையும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும். அதுவே ஆடிப்பெருக்காக கொண்டாடப்பட்டது.
இந்த மாதத்தில் கிராமத்தில் காவல் தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
இந்த ஆடி மாதத்தில் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் அம்மன் அருள்கிட்டும் என்பது நம்பிக்கை.
- செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்குபற்றுதல் நல்லது என்ற கருத்தும் உண்டு.
- முருகப்பெருமானை வேண்டி விரதம் கடைப்பிடிப்பதும் உண்டு.
ஆடி செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. செவ்வாய்க் கிழமைகளில் ராகு காலத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கி 4.30 மணி வரை உள்ள காலத்தில் துர்க்கையை பூஜிப்பது விசேஷமானது என்று இந்துக்கள் கருதுகிறார்கள். பத்திரகாளி ராகுவாக அவதாரம் செய்தார் என்பர்.
செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமண தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்குபற்றுதல் நல்லது என்ற கருத்தும் உண்டு. ஆடிச்செவ்வாயில் மட்டுமின்றி பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வேண்டி விரதம் கடைப்பிடிப்பதும் உண்டு.
- கருட பகவானே ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரங்கமன்னாருடன் ஒரே ஆசனத்தில் கருடனுடன் காட்சி அளிக்கிறார்.
வைகாசி ஆகமப்படி கருடனின் அவதார நாளை நட்சத்திர அடிப்படையில் ஆடி சுவாதியன்று கொண்டாடுவார்கள். பாஞ்சராத்ர ஆகமப்படி திதியின் அடிப்படையில் கருட பஞ்சமியாகக் கொண்டாடுவார்கள்.
கருட பகவானுக்கு ருத்ரா, கீர்த்தி என்று இரண்டு தேவிகள், இவர்களே அரங்கநாயகிக்கு இரு கண்களாகத் திகழ்கிறார்களாம். கருட பகவான் திருமாலின் பல லீலைகளில் சம்பந்தப்பட்டுள்ளார்.
கஜேந்திர மோட்ச வைபவத்தில், கஜேந்திரன் என்ற யானையின் காலை ஒரு முதலை கவ்வி இழுக்க, கஜேந்திரன் திருமாலை 'ஆதிமூலமே' என்று கூவிச் சரணடைய, திருமாலின் திருவுள்ளத்தை அறிந்த கருடன் வாயு வேகத்தில் அவரை கஜேந்திரன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சேர்த்தார்.
ராமாயண காலத்தில் போர்க்களத்தில் ராம-லட்சுமணர்களை அசுரர்கள் நாகபாசத்தால் கட்டிப் போட, அவர்கள் மயங்கி விழுந்தபோது கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளிய வைத்தார்.
கிருஷ்ணாவதாரத்திலும் சத்ய பாமாவுக்காக பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்தார்.
கருட பகவானே ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார். பாண்டியன் சபையில் பரதத்வ நிர்ணயம் செய்து பொற்கிழியைப் பெற்றபோது, மன்னன் பெரியாழ்வாரைப் பெருமைப்படுத்தி ராஜவீதிகளில் யானை மீதேற்றி பவனிவரச் செய்தான். அப்போது தன் பக்தனின் வைபவத்தைக் கண்டு மகிழ திருமால் கருடானாக வானில் காட்சி கொடுத்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரங்கமன்னாருடன் ஒரே ஆசனத்தில் கருடனுடன் காட்சி அளிக்கிறார்.
கருட பகவானை துதித்தால் கொடிய நோய்களிலிருந்து நிவாரணம், தொலைந்த பொருள் கிடைக்கும். சர்ப்பதோஷ நிவர்த்தி ஆகிய அனைத்து நலன்களும் கிடைக்கும்.
- தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும்.
- தட்சணாயணத்தின் தொடக்க தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும்.
ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடிமாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் சொல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் தொடக்க தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடை கால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாக பெருகும் இயல்புடையது. இந்நாளில் ஈழநாட்டுத் தமிழ் மக்கள் ஆடிக்கூழ் கொழுக்கட்டை என்னும் உண்டிவகைகளை விசேஷமாக செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேஷ வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணுதலும் வழக்கமாகும்.
ஆடி மாதத்தில் ஆற்றுநீர் வளமுள்ள தென்னாட்டு மக்கள் காவிரி போன்ற ஆற்றங்கரைகளில் சித்திரான்னம் உண்டு படகோட்டம் போன்ற கேளிக்கைகளில் பங்குபற்றும் 'ஆடிப்பெருக்கு' பண்டிகையை கொண்டாடுவர்.
ஆடி விதை தேடி விதை
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
ஆடி ஆவணி ஆன புரட்டாதி
காடி தோய்த்த கனபனங் காயத்தைத்
தேடித் தேடித் தினமும் புசிப்பவர்
ஓடி யோடி யுலகெலாம் பீச்சுவர்
என்பன போன்ற பழம் பாடல்களால் ஆடி மாதம் ஆனந்தமாகக் கொண்டாடப்பட்டு வந்ததென்பது அறியலாம்.
- பூஜை மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் படத்தை கிழக்கு முகமாக வைக்கவேண்டும்.
- பூஜை செய்பவர் வலதுபுறமாக இருந்து பூஜை செய்யவேண்டும்.
வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்கள் முதல் நாளன்று வீட்டை நன்றாக கழுவி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வீட்டின் தென்கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து, அதில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும். அங்கு சுவற்றில் படமாகவோ அல்லது வெள்ளியில் கிடைக்கும் வரலட்சுமி தேவியின் திருமுகத்தை வைக்க வேண்டும். வரலட்சுமிக்கு ஆடை, ஆபரணங்கள் அணிவிக்க வேண்டும்.
மண்டபத்தில் வாழை இலையின் மீது ஒரு படி அரிசியை பரப்பி, அம்மன் கலசத்தை தாமிர செம்பிலோ அல்லது வெள்ளியால் ஆன செம்பிலோ வைக்க வேண்டும்.
அந்த செம்பின் மீது சந்தனத்தை பூசி, அதன் மீது வரலட்சுமி அம்மனின் முகத்தை வரையலாம் அல்லது கடைகளில் கிடைக்கும் அம்மன் முகத்தை வாங்கி வந்து பதியலாம்.
கலசத்தின் உள்ளே தேவையான அளவு அரிசியைக் போட்டு அதன் வாய்ப்பகுதியில் மாவிலைகளை சுற்றி வைத்து நடுவில் ஒரு தேங்காயை வைக்கவேண்டும்.
அந்த தேங்காய்க்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு இட்டு பூ சூட்ட வேண்டும். இவை எல்லாவற்றையுமே முதல் நாள் மாலையிலேயே செய்து விட வேண்டும்.
மறுநாள், வரலட்சுமி விரதம் அன்று பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பூஜை மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் படத்தை கிழக்கு முகமாக வைக்கவேண்டும். பூஜை செய்பவர் வலதுபுறமாக இருந்து பூஜை செய்யவேண்டும்.
சாதம், பாயாசம், வடை, கொழுக்கட்டை, இட்லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து நிவேதனம் செய்யவேண்டும். ஐந்து முக விளக்கை ஏற்றி வைக்கவேண்டும்.
எங்கள் வீட்டில் எழுந்தருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக பாட வேண்டும்.
அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்து விட்டு அலங்காரத்தை அகற்றிக் கொள்ளலாம்.
பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயாசம் செய்து நிவேதனம் செய்யலாம்.
இந்த விரதம் மேற்கொள்வதால் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும்.
தர்ப்பண பூஜை
தர்ப்பண பூஜை என்பது இறந்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்யும் பூஜைகள் ஆகும். நம் மூதாதையர்கள் எல்லாருமே பித்ரு லோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது. மனிதனாக, புல், பூண்டாக, விலங்குகளாக, தாவரங்களாகப் பலர் பிறப்பெடுக்கலாம். அவரவர் தீவினைக் கர்மங்களுக்கு ஏற்ப ஆவி ரூப பிறவிகளும் கொண்டிருக்கலாம்.
நம் மூதாதையர்களான பித்ருக்கள் அனைவரும் நினைத்தபடியெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, இறந்த திதி, மாதப்பிறப்பு, மாளய பட்ச நாட்கள் போன்ற புனித தினங்களில் மட்டும் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, அவர்கள் சூட்சும தேகத்தில் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் தர்ப்பண பூஜைகளைத் செய்தால் அவர்கள் அவற்றை இங்கு நேரடியாகப் பெற்று ஆசி அளிப்பார்கள்.
தர்ப்பண பூஜை நாட்களில் நாம் யாருக்காக, எந்தக் காரணத்துக்காகத் தர்ப்பணம் அளிக்கின்றோமோ, அதைப் பொறுத்து தர்ப்பண பூஜை முறைகள் மாறுபடுகின்றன. ஒவ்வொரு தர்ப்பண பூஜை முறைக்கும் வெவ்வேறு விதமான சிறப்புப் பெயரும் உண்டு. அதைப்போலவே இறந்தவருடைய வாழ்க்கை முறை, செய்து வந்த தொழில், உத்தியோகம், அவரது உயிர் பிரிந்த விதம் இவ்வாறு எத்தனையோ காரண, காரியங்களைக் கொண்டு அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதற்கான வெவ்வேறு விதமான தர்ப்பண பூஜை முறைகளைச் சித்த புருஷர்கள் அருளியுள்ளனர்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முடிவு எவ்வாறு அமையும் என்பதை யாராலும் யூகிக்க இயலாது. விபத்து, தற்கொலை, உறவினர், நண்பர்கள் தரும் வேதனைகள், வறுமை, கொடிய நோய் போன்ற பல காரணங்களால் மரணம் ஏற்படுவதுண்டு.
ஏன், நம் தினசரி வாழ்க்கையில் கூட எத்தனையோ கொசுக்கள், வண்டுகள், ஈக்கள், புழு, பூச்சிகள், எறும்புகள் போன்ற எத்தனையோ உயிரினங்களின் மரணத்திற்கு நாம் காரணமாகி விடுகின்றோம்.
நாம் முறையாக நம் பித்ருக்களுக்கு சிரார்த்தம், திவசம் மற்றும் தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றினால் தான் இவ்வாறாக விதவிதமான முறைகளில் உயிர் விட்ட அனைத்து ஜீவன்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் எந்த அளவிற்கு நம்முடன் வாழ உரிமை பெற்றிருக்கும் சக ஜீவன்களின் நல்வாழ்விற்காக நாம் மனதாலும், உடலாலும் சேவை, பூஜை, வழிபாடு, தான தர்மங்கள் ஆகியவற்றைச் செய்கின்றோமோ, அந்த அளவிற்கு நம் வாழ்க்கையும் மேம்படும்.
தற்காலத்தில் அனைவரும் சிரார்த்தத்துக்கும், தர்ப்பணத்துக்கும் வித்தியாசம் தெரியாது இவை இரண்டுமே ஒன்று என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். சிரார்த்தம், தர்ப்பணம் ஆகிய இரண்டு பூஜைகளுமே இறந்த நம் முன்னோர்களின் திதியன்று செய்யப்படுபவை என்றாலும் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.
சிரார்த்தம், திவசம் என்றால் இறந்தோருக்குப் பிரியமான உணவு, உடைகளைப் படைத்து வணங்கிப் பின்னர் அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல் ஆகும்.
ஆனால் தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு முறையான தர்ப்பண மந்திரங்களைச் சொல்லி வார்த்து பித்ருக்களை திருப்தி செய்தல் என்று பொருள்.
- வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பக்தி, கற்பூரம் காட்டி தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர்.
- காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால்தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையட்டியே ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் விளைந்தது.
மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கை கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோவில்களுக்கு சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன்மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.
வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பக்தி, கற்பூரம் காட்டி தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர்வளம் பெருகியதுபோல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பலவிதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர்சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.
காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.
நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரதது கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்.
பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் மட்டுமாவது அணைகளை திறந்து விட்டு நீர்பெருக்கெடுத்து ஒடச் செய்கின்றனர்.
- ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.
- அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆடிக் கிருத்திகை முருகனுக்கு உகந்த நன்னாள். இந்நாளில் பக்தர்கள் காவடி எடுத்து தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கயிலை நாதனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த ஆறு போறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாற அந்தக் குழந்தைகளை கார்த்திகை பெண்கள் எடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தார்கள். உலக மக்களின் நன்மைக்காக உதித்த அந்த சரவணனை வளர்த்த கார்த்திகைப் பெண்களையும் சேர்த்து நினைவு கூறும் வகையில் ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.
குறிப்பாக திருத்தணியில் தெப்ப உற்சவம் ஆடிக்கிருத்திகையன்று ஆரம்பிக்கிறது. அரக்கர்களின் செருக்கழித்துமுருகன் ஓய்வெடுத்த திருத்தலம் திருத்தணி ஆகும். அந்த தினத்தில் இங்கு அரக்கர்கள் வீழ்ச்சிக்கும் மக்கள் மகிழ்ச்சிக்கும் வழிவகுத்துக் கொடுத்த இறைவனை நினைத்து பல்வேறு வழிபாடுகளை செய்வது பக்தர்களின் வழக்கம்.
- புருவத்தின் மத்தியிலிருந்து வகிடு வரை பல்வேறு நிறங்களில் குங்குமத் திலகங்கள் இட்டுக் கொள்வார்கள்.
- வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், இருபத்தைந்து காசு வைத்து கொடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
ஒவ்வொரு ஆடி மாத செவ்வாய்க்கிழமையையும் ஒரு திருநாளாகக் கொண்டாடுவது தென்பாண்டி நாட்டின் தனிச்சிறப்பு.
அன்று கன்னிப் பெண்கள் கூடி ஊர்வலமாய் நதிக்கோ, வாய்க்காலுக்கோ, குளத்திற்கோ சென்று தெய்வ வழிபாடு செய்வார்கள்.
கண் நிறைந்த கணவனைப் பெறுவதற்குச் செய்யப்படும் நோன்பு இது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
பொழுது விடியுமுன்பே மணமாகாத பல பெண்கள் எல்லோரும் தெருக்கோடியில் கூடுவார்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பனைநார் ஓலைப்பெட்டி அல்லது பிரம்புப் பெட்டி இருக்கும். இப்பெட்டியை பொடகாப் பொட்டி என்று பாண்டி நாட்டில் கூறுவார்கள்.
அதில் மாற்றுப் பாவாடை, சட்டை, மஞ்சள், பல்வேறு நிறங்களில் குங்குமம், நாவற்பழம், வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவை இருக்கும். இவை தவிர நல்லெண்ணெய், திரிநூல், சூடம், தீப்பெட்டியும் கூட இருப்பதுண்டு.
எல்லோரும் சேர்ந்தவுடன் வரிசையாய் தெரு அடைக்க நின்று கொண்டு, ஒரு பாட்டைப் பாடிக் கொண்டு நதிக்கரைக்கோ, வாய்க்காலுக்கோ அல்லது குளக்கரைக்கோ செல்வார்கள்.
எளிய தமிழில் பாடப்படும் அந்தப் பாட்டு அவ்வவ்வூர் தெய்வங்கள், நதிகளின் பேர்களையும் சேர்த்து அமைந்திருக்கும். எல்லோரும் ஒன்று கூடிச் சொல்லும்போது மிக அழகாயிருக்கும்.
ஆற்றங்கரையை அடைந்ததும் கன்னிப்பெண்கள் எல்லோரும் நன்றாய்ப் பச்சை மஞ்சளைத் தேய்த்துக் குளித்து விட்டுப் புத்தாடை புனைவார்கள்.
புருவத்தின் மத்தியிலிருந்து வகிடு வரை பல்வேறு நிறங்களில் குங்குமத் திலகங்கள் இட்டுக் கொள்வார்கள். பாதங்களில் நலுங்கு மஞ்சளைப் பூசிக் கொண்டு பின் அருகிலுள்ள அரசடிப் பிள்ளையாரையோ அல்லது ஆலயத்திலுள்ள மூர்த்தியையோ கண்டு, நல்ல கணவனை அளிக்குமாறு பிரார்த்தித்து வழிபடுவார்கள்.
பின்பு தாங்கள் கொண்டு வந்த வாசனை மலர்களால் அர்ச்சித்து விட்டு, நாகப்பழத்தை நிவேதனம் செய்வார்கள். சூடத்தைக் கொளுத்தி வழிபட்டு நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுப்பார்கள்.
மீண்டும் எல்லோரும் ஒன்று கூடி வரிசையாய் நின்று பாடலைப் பாடிக் கொண்டு திரும்புவார்கள்.
வீட்டிற்குச் சென்றதும் மஞ்சப் பொங்கல் தாளகம் கலந்து சாப்பிடுவது வழக்கம். துருவிய தேங்காயும் வெல்லமும் கூடச் சேர்த்துக் கொள்வதுண்டு. சில வீடுகளில் பலவித வடாம் பொரித்துப் போடுவதும் உண்டு.
கடைசி ஆடிச் செவ்வாய் அன்று வருடத்திற்கொருமுறை கிராமத்தில் உள்ள வசதி படைத்த வீட்டார்கள் முறைப்படி ஒவ்வொருவராக எல்லாக் குழந்தைகளையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று அவர்களை தெய்வமாக வழிபட்டு வடை, பாயாசத்துடன் விருந்தளிப்பர். சிலர் புதிய பாவாடை, சட்டைகள் வாங்கிக் கொடுப்பதுண்டு. அதனுடன் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், இருபத்தைந்து காசு வைத்து கொடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
- லிங்க திருவுரு அனைத்து தெய்வங்களின் குறியீடாக திகழ்வது.
- எட்டு லிங்கங்களும் திருவேற்காட்டில் வந்து ஐக்கியமாயின.
சிவம் தனது பார்வையை எண் திசையில் நோக்கியது. எண் திசையிலும் எட்டு லிங்க மூர்த்தங்கள் ஏற்பட்டன.
லிங்க திருவுரு அனைத்து தெய்வங்களின் குறியீடாக திகழ்வது. லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்மம். மத்திய பாகம் மகாவிஷ்ணு. மேற்பரப்பு ருத்திரன்.
இப்படிப்பட்ட லிங்கம் எண் திசையிலும் எண் வகை லிங்கமாக ஊன்றியது.
1. பார்வதி லிங்கம், 2. நவமணி லிங்கம், 3. பைரவி லிங்கம், 4. சிவநிலை லிங்கம், 5. பூரண லிங்கம், 6. சத்தியமாலிங்கம், 7. காரணி லிங்கம், 8. வாரணி லிங்கம்
அன்னை தானே சிவமாகி அருளாட்சி செய்த போது எட்டு லிங்கங்களும் திருவேற்காட்டில் வந்து ஐக்கியமாயின.
- சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி.
- ஸ்ரீரங்கத்தில், ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாகப் பெருக்கெடுத்து ஓடும்.
ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அகத்தியர் இங்கு வந்து காவிரி உருவாகக் காரணமானார் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப்பெருக்கு அன்று, ஒருநாள் மட்டும் அகத்தியருக்கு இங்கு தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்து மரியாதை செய்யப்படுகிறது ஆடிப்பெருக்கில்...
காவிரி நீர் அபிஷேகம்!
நாமக்கல்லில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மோகனூர். இந்த தலத்தில் உள்ள சுவாமியின் திருநாமம் ஸ்ரீ அசலதீபேஸ்வரர். மூலவரின் சன்னதியில் எப்போதும், அசையாமல் ஒளிர்ந்தபடி இருக்குமாம் தீபம்; ஆகவே இந்தத் திருநாமம் ஈசனுக்கு!
இந்தத் தலத்தின் சிறப்பு... சுவாமியை தரிசித்தபடி அப்படியே திரும்பினால், காவிரித்தாயை தரிசிக்கலாம். காவிரி வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் தலம் இது என்பர்! எனவே காசிக்கு நிகரான திருத்தலம் எனப்போற்றுவர். ஆடிப்பெருக்கு நாளில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு, காவிரி நீரால் அபிஷேகித்து, சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
சூரிய பூஜை காணும் முருகன்
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பனையத்தூர் கிராமத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் முன்பும், ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் பின்பும், தினமும் காலை 8 முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழுகிறது. இந்த அதிசய நிகழ்வை பக்தர்கள் கண்டுகளிக்கிறார்கள்.
பூக்கள் நிரப்பும் விழா
சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது. இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாகத் கருதப்படுகிறது.
காவிரித் தாயாருக்கு சீர்வரிசை!
ஸ்ரீரங்கத்தில், ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாகப் பெருக்கெடுத்து ஓடும். இதனைக் காண அரங்கன், காவிரிக்கரைக்கு எழுந்தருள்வார்!
ஆலயத்தில் இருந்து அம்மா மண்டபத்துக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் வரும் அழகே அழகு! அங்கே திருவாராதனம் முடிந்து, மாலை வேளைகளில், காவிரித் தாயாருக்கு மாலை, தாலிப்பொட்டு முதலான சீர்வரிசைகள், யானையின் மேல் வைத்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும்.
காவிரித் தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவத்தைக் காண, எண்ணற்ற பக்தர்கள் திரளாகக் கூடி, பெருமாளையும் காவிரித்தாயையும் வணங்கி மகிழ்வர்!
- அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
- ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.
1. ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது.
2. ஆடி மாதத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.
3. ஆடி செவ்வாய் தேடிக்குளி என்பது பழமொழி, அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலைகுளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
4. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்தது என்றாலும், குறிப்பாக மாரியம்மன் வழிபாடு இன்னும் சிறப்பாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.
5. புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் ஆடி மாதம் 18-ம் பெருக்கின் போது நதிக்கரையில் நிலாச்சோறு சாப்பிடுவார்கள்.
6. ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.
7. புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி மாதம் ஒரு கஷ்ட காலமாகவே இருக்கும். அதாவது, ஆடி மாதத்தில் தம்பதியர் ஒன்று சேர்ந்து குழந்தை உண்டானால் சித்திரையில் குழந்தை பிறக்கும். அந்த சமயத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால்தான் ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைப்பார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்