search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Atakasam"

    • வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.
    • யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    தருமபுரி:

    ஒற்றை ஆண் யானை ஒன்று, கடந்த 15 நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல் வனப்பகுதியை விட்டு வெளியேறியது. இந்த யானை கிராமப் பகுதிகளில் சுற்றி திரிந்து, கடந்த வாரம் தருமபுரி நகர் பகுதி வரை சென்றது. மேலும் தருமபுரியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடனே தருமபுரிக்கு வந்து அட்டகாசம் செய்து வந்த ஒற்றை யானையை தொப்பூர் வனப் பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த ஒற்றை யானை மீண்டும் பொம்மிடி கிராமப் பகுதியில் நுழைந்தது.

    குறிப்பாக முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, காளிக்கரம்பு வழியாக சுற்றிய யானையை கம்பைநல்லூர் வழியாக கொண்டு சென்று பாலக்கோடு வனப்பகுதியில் விட வன துறை தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த யானை சில்லாரஅள்ளியில் இருந்து கொடகாரஅள்ளி பகுதியில் மைலாப்பூர் கிராமத்தில் தஞ்சம் புகுந்தது.

    வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வத்தல் மலை அடிவாரபகுதியில் நேற்று இரவு நேரத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டிலிருந்து வெளியேறிய யானை விவசாய தோட்டங்களை சேதப்படுத்தி உணவை உட்கொண்டது. அப்போது யானைக்கு வனத்துறையினர் இரண்டு மயக்க ஊசி செலுத்தினர்.

    உடனடியாக கிரேன் மூலம் யானையை மீட்டு ஒகேனக்கல் அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப் பகுதிகளுக்குள் விடுவதற்காக யானையை வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர்.

    கடந்த 3 வாரமாக மக்களை அச்சுறுத்தி வந்த யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    • கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து ஜெயஸ்ரீ என்ற பெண்ணை தாக்கியது.
    • யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி நகர பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. அந்த ஒற்றையானையை வனப்பகுதிக்குள் விரட்ட மாவட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை கடந்த 3 நாட்களாக கிராமப் பகுதிக்குள் புகுந்து காரிமங்கலம் வழியாக அண்ணாமலைஅள்ளி, சவுளுக்கொட்டாய் பகுதி யில் இருந்த கரும்பு தோட் டத்திற்குள் புகுந்து ஜெயஸ்ரீ என்ற பெண்ணை தாக்கியது. படுகாயம் அடைந்த அந்தப் பெண் தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் யானை திருப்பத்தூர் சாலை வழியாக சோளக்கொட்டை அருகே மான்காரன் கோட்டை பகுதியை வந்து அடைந்தது அங்குள்ள கரும்பு தோட்டம், தீவனம் பயிர், சோளத்தட்டு உள்ளிட்ட விவசாய பயிர்களை நாசம் செய்து, பின்பு இரவு அங்கிருந்து வனத் துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்ட தொடங்கினர்.

    அப்போது அந்த யானை வேறு பகுதிக்கு சென்றது. தொடர்ந்து வனத் துறையினர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி டிரோன் கேமரா மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று மாலை 7 மணி அள வில் தருமபுரி திருப்பத்தூர் சாலையை கடந்து செட்டிகரை பகுதி பொறியியல் கல்லூரி பின் பகுதியில் தஞ்சம் அடைந்தது.

    வனத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை தருமபுரி நகரப் பகுதியான வேடியப்பன் திட்டு, அக்ரஹாரம், சனத்குமார்ஓடை அருகே தற்பொழுது யானை குடியிருப்பு அதிகம் உள்ள பகுதிக்கு யானை புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வேறு பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் யானை தற்போது சனத்க்குமார் ஓடை அருகே உள்ள புதர் பகுதியில் புகுந்துள்ளதால் 3 வனக் குழுவினர் வெவ்வேறு பகுதிகளில் நின்று யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    யானை நகரப் பகுதியில் தற்பொழுது இருப்பதால் இந்த பகுதியில் உள்ள மின்சாரத்தை துண்டித்துள்ளனர். மேலும் யானை நகரப் பகுதிக்குள் செல்ல நேர்ந்தால் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். தருமபுரி நகரப் பகுதியில் ஒற்றை ஆண் காட்டு யானை வந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • 100-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தின.
    • மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், மான், சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவை தீவனம் மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து, விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

    தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 60). இவர் அங்கு உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமாக நஞ்சேகவுண்டன் புதூரில் சுமார் 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அஙகு இவர் நேந்திரன் வாழை பயிரிட்டு இருந்தார்.

    இந்நிலையில் நேற்றிரவு 3 காட்டு யானைகள் தோட்டத்தில் புகுந்தன. அங்கு இருந்த 100-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தின. அதன்பிறகு வாழைத்தார்களை மட்டும் பிடுங்கி ருசித்து விட்டு காட்டுக்குள் சென்றன.

    திருநாவுக்கரசு இன்று அதிகாலை தோட்டத்திற்கு சென்றார். அப்போது வாழைத்தார்களை மட்டும் யானைகள் ருசித்துவிட்டு சென்றது தெரிய வந்தது. இது திருநாவுக்கரசு மற்றும் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    விவசாயி திருநாவுக்கரசு கூறுகையில், காட்டுப்பன்றி, காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே அடர்வனத்தில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாத வகையில், ஏற்கனவே வெட்டப்பட்டு உள்ள அகழிகளை ஆழப்படுத்த வேண்டும். வனப்பகுதியை ஒட்டியுள்ள மின்வேலிகளை முறையாக பராமரிக்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.

    இதற்கிடையே சிறுமுகை லிங்காபுரத்தில் பெரிய தந்தங்களுடன் கூடிய ஒற்றைக் காட்டு யானை, வனப்பகுதியில் இருந்து வெளியேறி லிங்காபுரம் சாலையோரத்தில் முகாமிட்டது. இதனை தற்செயலாக பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதனை தொடர்ந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

    சிறுமுகை, லிங்காபுரத்தில் நீண்ட நேரமாக முகாமிட்டு இருந்த காட்டு யானை அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்தது. அதன்பிறகு பவானி ஆற்றில் தண்ணீர் குடித்து விட்டு, காந்தையூர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்துவிட்டது. இதனால் லிங்காபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    • கொளத்தூர் அருகே உள்ள சின்னத்தண்டா கிராமத்தில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை யானை உலா வருகிறது.
    • தோட்டத்தில் புகுந்து, அங்கு பயிர் செய்யப்பட்டுள்ள வாழையை தின்றும், மிதித்தும் நாள்தோறும் நாசம் செய்து வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சின்னத்தண்டா கிராமத்தில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை யானை உலா வருகிறது.

    இந்த யானை, அந்த பகுதியை சேர்ந்த செந்தில் என்பவருடைய தோட்டத்தில் புகுந்து, அங்கு பயிர் செய்யப்பட்டுள்ள வாழையை தின்றும், மிதித்தும் நாள்தோறும் நாசம் செய்து வருகிறது.

    இதுகுறித்து செந்தில் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையில் வனவர் வெங்கடேஷ் மற்றும் வனக்காப்பாளர்கள், சின்னத்தண்டா கிராமத்தில் முகாமிட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×