search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Barack Obama"

    • ஜன நாயக கட்சியின் மாநாடு சிகாகோ நகரில் நடந்து வருகிறது.
    • டிரம்ப் அமெரிக்கர்கள்-மற்றவர்களுக்கும் பிளவு ஏற்பட விரும்புகிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

    இதற்கிடையே கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்படும் ஜன நாயக கட்சியின் மாநாடு சிகாகோ நகரில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று அதிபர் ஜோபைடன் பேசினார். இன்று மாநாட்டில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேசியதாவது:-

    இக்கட்டான நேரத்தில் ஜனநாயகத்தை பாதுகாத்த ஒரு சிறந்த அதிபராக ஜோபைடனை இந்த நாடு நினைவில் கொள்ளும். அவரை ஜனாதிபதி என்று அழைப்பதோடு அவரை எனது நண்பர் என்று அழைப்பதில் பெருமைப்படுகிறேன்.

    நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களைப் பற்றி அக்கறையுள்ள ஒரு அதிபர் நமக்கு தேவை. மக்களுக்கு ஆதரவாக நிற்கும் மற்றும் சிறந்த ஊதியத்திற்கு பேரம் பேசும் ஒரு அதிபர் நமக்கு தேவை. அந்த அதிபராக கமலா ஹாரிஸ் இருப்பார். அது அவரால் முடியும். அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் தயாராகி விட்டார்.

    டிரம்ப் மற்றும் அவரது பணக்கார நன்கொடையாளர் உலகை இப்படி பார்க்க வில்லை. அவர்களைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பது சக்தி வாய்ந்தவர்கள் அவர்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என்பதுதான். ஆனால் சுதந்திரம் பற்றிய பரந்த கருத்து நம்மிடம் உள்ளது.

    நாடு பிளவுப்படுத்த இருப்பதாக நாம் சிந்திக்க வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார். அவரை ஆதரிக்கும் அமெரிக்கர்கள்-மற்றவர்களுக்கும் பிளவு ஏற்பட விரும்புகிறார். இது அரசியலில் பழமையான தந்திரங்களில் ஒன்றாகும். அவரது செயல் மிகவும் பழுதடைந்துவிட்டது.

    இன்னும் 4 ஆண்டுகள் குழப்பம் நமக்கு தேவையில்லை. அதன் தொடர்ச்சி பொதுவாக மோசமாக இருக்கும் என்பது நமக்கு தெரியும்.

    அமெரிக்கா ஒரு புதிய அத்தியாயத்துக்கு தயாராக உள்ளது. கமலா ஹாரிசுக்காக நாம் தயாராக இருக்கி றோம். அவர் இந்த பதவிக்கு தயாராக இருக்கிறார். டிரம்ப் அதிகாரத்தை தனது நோக்கங்களுக்கு ஒரு வழிமுறையாக பார்க்கிறார். அவர் தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு நடுத்தர வர்க்கம் பணம் கொடுக்க விரும்புகிறார்.

    கமலா ஹாரிசிடம் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் டிரம்ப் மோசமாக பேசி வருகிறார். நாம் நம்பும் அமெரிக்காவுக்காகப் போராடுவது நம் அனைவரின் கையில் இருக்கிறது.

    இவ்வாறு பராக் ஒபாமா பேசினார்.

    • நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து கோபமுற்ற போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. தீ வைக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    உலகளவில் பேசு பொருளாக மாறி இருக்கும் கென்யா நாடாளுமன்ற போராட்டத்தில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஒன்றுவிட்ட சகோதரி ஔமா ஒபாமா (Auma Obama) கலந்து கொண்டுள்ளார்.

    போராட்டம் தொடர்பாக பேசிய அவர், இங்கு என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள், இதனால் தான் இங்கு வந்துள்ளேன். இளம் கென்யர்கள் தங்களது உரிமைக்காக போராடி வருகின்றனர். அவர்கள் கொடிகள் மற்றும் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். என்னால் இப்போது கூட கண் திறந்து பார்க்க முடியவில்லை. எங்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது என்று தெரிவித்தார்.

    கென்ய நாடாளுமன்ற போராட்டத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் பலத்த காயமுற்றனர். 

    • ஹல்லேகெரே கிராமத்தில் ஆன்மீக அமைப்பு சார்பாக சர்வதேச யோகா மற்றும் தியான மையம் கட்டப்பட்டு உள்ளது.
    • ஹல்லேகெரே கிராமத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன.

    ஒபாமா டிசம்பர் மாதம் கர்நாடகம் வருகிறார்

    யோகா, தியான மையத்தை திறந்து வைக்கிறார்

    கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஹல்லேகெரே கிராமத்தில் ஆன்மீக அமைப்பு சார்பாக சர்வதேச யோகா மற்றும் தியான மையம் கட்டப்பட்டு உள்ளது. இதை திறந்துவைக்க அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா வருகிற டிசம்பர் மாதம் மாண்டியாவுக்கு வருகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் திபெத்தின் புத்தமத தலைவர் தலாய் லாமாவும் கலந்துகொள்கிறார். இதையொட்டி ஹல்லேகெரே கிராமத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

    • இந்த தீர்ப்பை அடுத்து எங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய தருணம் இது- ஒபாமா
    • இதன்மூலம் இனி அமெரிக்கர்கள் பிற நாட்டினருடன் போட்டியிட முடியும்- டிரம்ப்

    அமெரிக்காவில் ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பு, இரண்டு முன்னாள் அமெரிக்க அதிபர்களை எதிரெதிர் நிலைப்பாட்டை எடுக்க வைத்துள்ளது.

    கருப்பின மற்றும் லத்தீன் இனத்தின மாணவ- மாணவிகளின் கல்லூரி சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக உறுதியான நடவடிக்கை கொள்கைகள் (affirmative action efforts) என்ற பெயரில் மாணவர் சேர்க்கையின்போது அவர்கள் இனத்தை அறிந்து கொள்ள வழி செய்யும் வகையில் விண்ணப்பபடிவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

    இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்நாட்டு உச்சநீதிமன்றம் இனி மாணவ- மாணவியருக்கான விண்ணப்ப படிவத்தில் அனுமதி முறைகளுக்காக அவர்களின் இனம் என்ன என்பதை தெரிந்து கொள்ள கேள்விகள் கேட்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

    இந்த தீர்ப்புக்கு முன்னாள் அதிபர்களான பராக் ஒபாமாவும், டொனால்ட் டிரம்பும் எதிரெதிர் நிலைகளை எடுத்துள்ளனர்.

    இந்த தீர்ப்புக்கு மாறான கருத்துடன் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியிருப்பதாவது:-

    கடைபிடிக்கப்பட்டு வந்த வழிமுறை நாங்களும் இந்த மண்ணை சார்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க எனது மனைவி மிச்செல் உட்பட பல தலைமுறை மாணவர்களை அனுமதித்தது. அனைத்து மாணவர்களுக்கும் இனம் பாராமல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற இதுபோன்ற கொள்கைகள் அவசியம்.

    அமெரிக்காவின் பெரும்பாலான முக்கிய நிறுவனங்களில் இருந்து திட்டமிட்டு விலக்கப்பட்டவர்களுக்கு, நாங்களும் தகுதியுடையவர்கள் என்பதை காட்டுவதற்கான வாய்ப்பை அளித்து வந்தது. இந்த தீர்ப்பை அடுத்து எங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய தருணம் இது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால், இந்த தீர்ப்பை வரவேற்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது "ட்ரூத்" (Truth) சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

    இதன் மூலம் இனி அமெரிக்கர்கள் பிற நாட்டினருடன் போட்டியிட முடியும். எல்லோரும் எதிர்பார்த்திருந்த ஒரு நல்ல தீர்ப்பு இது. நம்முடைய மிகப்பெரிய மனங்கள் போற்றப்பட வேண்டும். அதைத்தான் இந்த அற்புதமான நாள் கொண்டு வந்திருக்கிறது. அனைத்தும் இனி தகுதியின் அடிப்படைலேயே நிர்ணயம் செய்யப்படும் என்கின்ற நிலைக்கு நாம் திரும்புகிறோம். இது இப்படித்தான் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

    இந்த தீர்ப்பு குறித்து கடுமையான எதிர்ப்பினை பதிவிட்டிருக்கும் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "பல தசாப்தகால முன்னுதாரணங்களிலிருந்து விலகிச் செல்கிறது" என்று கூறியிருக்கிறார்.

    • எம்மி விருது பெறும் 2-வது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
    • ஒபாமா தனது 2 ஆடியோவை தொகுத்து வழங்கியதற்காக ஏற்கனவே கிராமி விருதுகளை பெற்றுள்ளார்.

    வாஷிங்டன் :

    அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் இணைந்து 'ஹையர் கிரவுண்ட்' என்கிற பெயரில் இணைய தொடர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் 'அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்தது. இதில் உலகம் முழுவதும் உள்ள தேசிய பூங்காக்களின் சிறப்பம்சங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.

    மொத்தம் 5 பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த தொடரை ஒபாமாவே தொகுத்து வழங்கியுள்ளார். இந்த தொடர் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது.

    இந்ந நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற எம்மி விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த தொகுப்பாளருக்கான விருது ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது. எம்மி விருது பெறும் 2-வது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிவைட் டி.எய்சன்ஹோவர் கடந்த 1956-ம் ஆண்டு சிறப்பு எம்மி விருதை பெற்றார். ஒபாமா தனது 2 ஆடியோவை தொகுத்து வழங்கியதற்காக ஏற்கனவே கிராமி விருதுகளை பெற்றுள்ளார். மிச்செல்லும், தனது ஆடியோ புத்தகத்தை வாசித்ததற்காக கடந்த 2020-ல் கிராமி விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்.
    • அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டதற்கு முன்னாள் அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மான் அல்-ஜவாரி. அவரை அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு, கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தேடி வந்தது.

    இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத இயக்க தலைவர் அய்மான் அல்-ஜவாரி கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று அறிவித்தார்.

    இந்நிலையில், அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார்.

    இதுதொடர்பாக ஒபாமா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், செப்டம்பர் 11 தாக்குதலுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரும், அல்-கொய்தாவின் தலைவரான அய்மான் அல்-ஜவாரி இறுதியாக நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். அதிபர் பைடனின் தலைமைக்கு பாராட்டுக்கள். இந்த தருணத்திற்காக பல பத்தாண்டுகளாக உழைத்த உளவுத்துறை அதிகாரிகள் தங்களில் ஒருவருக்கு கூட சிறிய பாதிப்பும் இன்றி இதை நிகழ்த்திக் காட்டியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்காவில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி மூத்த தலைவர் ஜான் மெக்கைன் எம்.பி. மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு டிரம்ப், தலைவர்கள் அனுதாபம் தெரிவித்து உள்ளனர். #JohnMcCain #DonaldTrump #BarackObama
    வாஷிங்டன்:

    அமெரிக்காவை ஆளும் குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜான் மெக்கைன் (வயது 81). இவர் 2008-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமாவை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்.

    அமெரிக்காவுக்கும், வியட்நாமுக்கும் இடையே நடந்த போரில், போர் விமானியாக இருந்தவர் ஜான் மெக்கைன். அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அவர் போர்க் கைதியாக சிறை பிடிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் சித்ரவதைகளை அனுபவித்து இருக்கிறார். அதன் பின்னர் வியட்நாம், அவரை விடுவித்தது. இதனால் அவர் வியட்நாம் போர் நாயகனாக கொண்டாடப்பட்டார்.



    பின்னர் அரசியலில் குதித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில், அரிசோனா மாகாணத்தில் இருந்து 6 முறை எம்.பி. பதவி வகித்து உள்ளார்.

    செனட் சபை எம்.பி. என்ற நிலையில் அவர் பழமைவாதியாக திகழ்ந்தார். கருச்சிதைவுக்கு எதிராக குரல் கொடுத்தார். ராணுவத்துக்கு அதிகளவில் நிதி ஒதுக்குவதை ஆதரித்தார். ‘ஒபாமா கேர்’ காப்பீடு திட்டத்தை ரத்து செய்வதற்கு எதிராக ஓட்டு போட்டார். இது டிரம்புக்கு அவர் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. டிரம்பை ஜான் மெக்கைன் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு மூளையில் புற்றுநோய் தாக்கியது தெரிய வந்தது. அதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்தான், இனி சிகிச்சை பெறுவது இல்லை என்று அவர் முடிவு செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார். அப்போது அவர் அருகில் குடும்பத்தினர் இருந்தனர்.

    அவரது மறைவு குறித்து மனைவி சின்டி மெக்கைன் டுவிட்டரில் துயரத்துடன் வெளியிட்டு உள்ள பதிவில், “என் இதயம் நொறுங்கிவிட்டது. கடந்த 38 ஆண்டுகளாக ஒரு துணிச்சலான, அன்பான மனிதருடன் வாழ்ந்து இருக்கிறேன் என்பதால் நான் அதிர்ஷ்டசாலி. அவர் விரும்பிய வாழ்க்கையை, நேசித்த மனிதர்களை, இடங்களை, கொள்கைகளை கடந்து சென்று இருக்கிறார்” என குறிப்பிட்டு உள்ளார்.

    ஜான் மெக்கைன் உடல், அரிசோனாவின் பீனிக்ஸ் நகரிலும், பின்னர் வாஷிங்டன் நகரிலும் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், மேரிலாந்து மாகாணத்தில் உள்ள அன்னாபோலிசில் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர்.

    ஜான் மெக்கைன் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.

    ஜனாதிபதி டிரம்ப், “ஜான் மெக்கைன் குடும்பத்தினருக்கு எனது மரியாதையையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் இதயங்களும், பிரார்த்தனைகளும் உங்களோடு இருக்கின்றன” என குறிப்பிட்டு உள்ளார்.

    முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யு புஷ் தனது இரங்கல் செய்தியில், “ஜான் மெக்கைன் மிகச்சிறந்த தேசப்பற்றாளர். எனக்கு அவர் மிகச்சிறந்த நண்பர். நான் அவரை இழந்து தவிக்கிறேன்” என கூறி இருக்கிறார்.

    மற்றொரு முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா விடுத்து உள்ள இரங்கல் செய்தியில், “ஜான் மெக்கைன் சந்தித்த சோதனைகள், நமக்கும் வைக்கப்பட்டு உள்ளது. ஜான் மெக்கைன் காட்டிய தைரியத்தை நாமும் காட்ட வேண்டியது இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறி உள்ளார்.  #JohnMcCain #DonaldTrump #BarackObama
    ட்விட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றம் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ட்விட்டர் ஃபாளோவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. #TwitterPurge



    ட்விட்டரில் லாக் செய்யப்பட்ட கணக்குகள் முடக்கப்படுவதால் டொனால்டு டிரம்ப் மற்றும் பராக் ஒபாமா ஆகியோரை பின்தொடர்வோர் (ஃபாளோவர்கள்) எண்ணிக்கை முறையே சுமார் ஒரு லட்சம் மற்றும் நான்கு லட்சம் வரை குறைந்துள்ளது.

    சமூக வலைத்தளங்களில் போலி தகவல்கள், வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் அதிகம் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் பல்வேறு நிறுவனங்களும் இவற்றை எதிர்கொள்ள அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ட்விட்டரில் லாக் செய்யப்பட்ட ஐ.டி.க்கள் முடக்கப்படுகின்றன.

    லாக் செய்யப்பட்ட அக்கவுன்ட்களை முடக்குவதால் ட்விட்டரில் அரசியல் தலைவர்கள் ஃபாளோவர்களின் எண்ணிக்கை குறைய துவங்கியிருக்கிறது. உலகளவில் பல லட்சம் கணக்குகள் முடக்கப்படுவதால் இவ்வாறு ஃபாளோவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

    "புதிய நடவடிக்கை பலருக்கு பாதகமாக இருந்தாலும், இதுபோன்ற முடிவுகளால் பொதுப்படை கருத்துக்களை விவாதிக்க  ட்விட்டர் அதிக நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கும்," என ட்விட்டர் நிறுவன சட்ட வல்லுநர், திட்டம் மற்றும் பாதுகாப்பு துறை தலைவர் விஜாயா கடே தனது வலைதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

    லாக் செய்யப்பட்ட அக்கவுன்ட்கள் பெரும்பாலும் மக்களால் உருவாக்கப்படுவதால், இது ஸ்பேம் அல்லது ரோபோட்களாக இருக்க வாய்ப்புகள் குறைவு தான். ட்விட்டர் பயன்பாட்டில் அதிகப்படியான திடீர் மாற்றங்களை கவனிக்கும் பட்சத்தில் இதுபோன்ற அக்கவுன்ட்களை ட்விட்டர் கண்டறிந்து கொள்ளும்.


    கோப்பு படம்

    தற்போதைய நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்பதால், ட்விட்டர் ஃபாளோவர்கள் எண்ணிக்கையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படலாம் என ட்விட்டர் தெரிவித்துள்ளது. 

    முன்னதாக இதுகுறித்து வெளியான தகவல்களில் கடந்த சில மாதங்களில் ட்விட்டர் பல லட்சம் கணக்குகளை முடக்கி வருகிறது, இதனால் மாதாந்திர ட்விட்டர் பயனர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்தில் மட்டும் ஏழு கோடி கணக்குகளை ட்விட்டர் முடக்கியதைத் தொடர்ந்து ஜூலை மாதத்திலும் கணக்குகளை முடக்கும் நடவடிக்கை தொடரும் என கூறப்படுகிறது. ட்விட்டர் தலைமை நிதி அலுவலர் நெட் சீகல் இந்த நடவடிக்கை காரணமாக ட்விட்டர் பயனரின் எண்ணிக்கை பாதிக்கப்படாது என ட்வீட் செய்திருக்கிறார். 

    தற்சமயம் ட்விட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 33 கோடிகளாக இருக்கின்றன. இது குறித்து சீகல் மேலும் கூறும் போது, "ட்விட்டரில் சைன்-அப் செய்து மிகவும் குறைந்த எண்ணிக்கையில் லாக்-இன் செய்தோ அல்லது 30 நாட்களுக்கும் அதிகமாக பயன்படுத்தாமல் இருக்கும், எங்களது பட்டியலில் இல்லாத கணக்குகளை நாங்கள் முடக்குகிறோம்," என தெரிவித்திருக்கிறார்.

    "ஒருவேளை ஏழு கோடி பேரின் கணக்குகளை ட்விட்டரில் இருந்து முடக்கியிருந்தால், அதனை நாங்களாகவே நேரடியாக உங்களுக்கு தெரிவிப்போம்" என சீகல் தனது மற்றொரு ட்வீட்-இல் குறிப்பிட்டிருக்கிறார்.
    ×