search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bullets and explosives"

    ராமேசுவரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடி பொருட்கள் சிவகங்கையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ஆயுதகிடங்கில் மாற்றம் செய்யப்படும். #Rameswarambullets

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்தில் எடிசன் என்பவரது வீட்டின் பின்புறத்தில் தோண்டிய போது ஆயுதக்குவியல் கண்டெடுக்கப்பட்டது. இதில் சக்திவாய்ந்த வெடி குண்டுகள், கண்ணி வெடி, தோட்டாக்கள் ஆகியவை இருந்தன.

    இதனை திருவாடானை மாஜிஸ்திரேட் பாலமுருகன் ஆய்வு செய்தார். அப்போது வெடிபொருட்களின் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு சென்னை வெடி மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து வெடி மருந்து நிபுணர்கள் கடந்த வாரம் ராமேசுவரத்திற்கு வந்தனர். அவர்கள் 2 முறை வெடிபொருட்களை ஆய்வு செய்தனர். அப்போது ஆய்வுக்காக மாதிரிகளை சென்னைக்கு கொண்டு சென்றனர்.

    கண்டெடுக்கப்பட்ட வெடிமருந்துகள் அதே இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள வெடிமருந்துகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என தொடர்ந்து அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் வெடி மருந்துகளை ஆய்வு செய்த சென்னை வெடிபொருட்கள் நிபுணர்கள் திருவாடானை கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

    அதில், தங்கச்சிமடத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடி மருந்துகளின் மாதிரி தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கை கிடைத்த பின்னர் தான் வெடிபொருட்களை அழிப்பது குறித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய முடியும். எனவே அதுவரை வெடி பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைக்கலாம் என கூறப்பட்டு உள்ளது.

    இந்த அறிக்கை அடிப்படையில் வெடிபொருட்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல மாஜிஸ்திரேட் அனுமதி அளிப்பார் என தெரிகிறது.

    அதன்பின்னர் வெடி பொருட்கள் சிவகங்கையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ஆயுதகிடங்கில் பாதுகாக்கப்படும். இறுதி அறிக்கை வந்தபின்னர் அவை அழிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார். #Rameswarambullets

    ராமேஸ்வரம் அருகே கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டுகள் தமிழ்ஈழ விடுதலைப் போராளிகள் பதுக்கியது என தெரிய வந்ததால் டெல்லி, சென்னையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த ராமேசுவரம் விரைந்துள்ளனர். #Rameswarambullets
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே கடற்கரை கிராமமான தங்கச்சி மடத்தில் ஆயுத குவியல் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தமிழ்ஈழ விடுதலைப் போராளிகள் பதுக்கியது என தெரிய வந்ததால் டெல்லி மற்றும் சென்னையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் மேல் விசாரணை நடத்த ராமேசுவரம் விரைந்துள்ளனர்.

    தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் எடிசன் என்பவரது வீட்டின் பின்புறம் அந்த ஆயுத குவியல் சிக்கியுள்ளது. அவர் இந்த இடத்தில் கழிவுநீர் தொட்டி அமைக்க குழி தோண்டினார். அப்போது வித்தியாசமான சத்தம் கேட்டதால் புதையலாக இருக்கும் என கருதி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசாரும் அதிகாரிகளும் அங்கு விரைந்தனர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த இடத்தை அகலப்படுத்தி தோண்டினார்கள். அப்போது ஆயுத புதையல்கள் இருப்பது தெரிய வந்தது. அவை வெடிக்கக் கூடிய அபாயம் இருப்பதால் போலீசார் உஷாராகி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றினார்கள்.

    அதன்பிறகு தோண்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. முதலில் சிறிய இரும்பு பெட்டிகளாக சிக்கின. அதனை போலீசார் பாதுகாப்புடன் திறந்து பார்த்தபோது அதில் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பது தெரிய வந்தது.



    தொடர்ந்து அந்தப் பகுதியைச் சுற்றிலும் தோண்டினார்கள். நள்ளிரவு வரை தோண்டும் பணி நீடித்தது. அப்போது குவியல் குவியலாக ஏராளமான ஆயுதங்கள் சிக்கின. அவற்றை போலீசார் மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்து ஆய்வு செய்தனர். என்னென்ன ஆயுதங்கள் சிக்கின என்ற விவரங்களை கணக்கெடுத்தனர்.

    400 அதிநவீன கை எந்திர துப்பாக்கி குண்டுகள், 5 ஆயிரத்து 500 சின்ன துப்பாக்கி குண்டுகள், 4 ஆயிரத்து 928 எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கி குண்டுகள், 199 அடுக்கடுக்கான செனைட்டர் சிலாஸ் குண்டுகள், 20 எம்.5-302 ரக துப்பாக்கி குண்டுகள், 87 சிக்னல்ஸ் ரவுண்டு குண்டுகள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் இருந்தன.

    வெடிகுண்டுகளை வெடிக்க பயன்படுத்தும் 8 ரோல் வயர்கள் (சிறியது-4, பெரியது-5), 20 கண்ணிவெடிகள், 11 பாக்கெட் கன் பவுடர், 15 கையெறி குண்டுகள் போன்றவையும் பதுக்கப்பட்டு இருந்தது.

    கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகள் பூமியில் புதைக்கப்பட்டு சுமார் 30 முதல் 35 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இலங்கையில் தமிழ் அமைப்புகளுக்கும், இலங்கை அரசுக்கும் நடைபெற்ற போரின்போது 1983-ம் ஆண்டு தமிழகத்தில் தமிழ் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டது.

    ராமேசுவரம், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளில் பிரபாகரனின் விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் பத்மநாபா தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். உள்பட பல்வேறு தமிழ் ஈழப் போராளிகள் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.

    1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலைக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் பயிற்சி நிறுத்தப்பட்டு போராளிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    அப்போது அவர்கள் தங்கள் கைவசம் வைத்திருந்த துப்பாக்கி குண்டுகள் மற்றும் ஆயுதங்களை மண்ணில் புதைத்து சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் குவியலாக எடிசன் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளன. அந்த துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடி குண்டுகள் செயல் தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை மற்றும் டெல்லியில் இருந்து அதிகாரிகள் ராமேசுவரம் விரைந்துள்ளனர்.

    அவர்கள் ஆய்வு நடத்திய பிறகே கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் செயல்பாட்டில் உள்ளதா? செயலிழந்து விட்டனவா? என்பது தெரிய வரும்.

    ஆயுதங்களின் தன்மையை கண்டறிய வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். ஆயுத குவியல் வைக்கப்பட்டுள்ள வீட்டைச் சுற்றிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ஆய்வுப் பணி முடியும் வரை நெருங்க வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    ஆய்வு முடிந்ததும் ஆயுத குவியல்கள் கியூ பிராஞ்ச் போலீஸ் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படும் என்று தெரிகிறது.

    தமிழ்ஈழ விடுதலைப் போராளிகள் பல வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி இலங்கை ராணுவத்துக்கு எதிராக பயன்படுத்தினார்கள்.

    தற்போது சிக்கி இருக்கும் ஆயுதங்களின் அடையாளங்கள் மூலம் அவை எந்த நாட்டைச் சேர்ந்தவை என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆயுத குவியல் சிக்கியது பற்றி போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-

    கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள் பூமியில் புதைக்கப்பட்டு 35 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கலாம் என தெரிகிறது.

    கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் செயல்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அந்த ஆயுதங்கள் எங்கு தயாரிக்கப்பட்டது? எப்போது தயாரிக்கப்பட்டது? என்பது குறித்தும் விவரம் சேகரிக்கப்படும். அதன் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும்.

    ஆயுதங்களை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து அதிகாரிகள் வந்துள்ளனர். டெல்லியில் இருந்தும் வர உள்ளனர்.

    1983-ம் ஆண்டு முதல் இந்த பகுதியில் பல்வேறு தமிழ் ஈழப்போராளிகள் ஆயுதப் பயிற்சி எடுத்துள்ளனர். எனவே அவர்கள் தான் ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே மதுரையில் இருந்து வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் போலீசார் தங்கச்சிமடம் சென்றனர்.

    கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளின் செயல்திறன், அவற்றை செயல் இழக்க வைப்பது போன்றவை குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் வெடிகுண்டுகள் ஆய்வு செய்யப்பட்டன.

    எடிசன் வீட்டை சுற்றியுள்ள மற்ற பகுதிகளில் இது போன்று வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டு உள்ளனவா? என்பது குறித்தும், நவீன கருவிகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. #Rameswarambullets

    ×