search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car seized"

    கரூர் அருகே போலி தாசில்தார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே ஓலப்பாளையம் பிரிவு சாலையில் தமிழ்நாடு அரசு முத்திரையுடன் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் இது குறித்து கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் (மேற்கு) கிராம நிர்வாக அதிகாரி பூபதிக்கு தகவல் கொடுத்தனர். 

    அவர் அந்த இடத்திற்கு வந்து பார்த்த போது காரில் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். உடனே அவரிடம் விசாரித்தார். அப்போது அந்த நபர், தான் மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த பழனிவேல் (வயது 34) திருச்சியில் நெடுஞ்சாலைத்துறையில் தனி தாசில்தாராக பணிபுரிந்து வருவதாகவும் கூறியுள்ளார். 

    இதையடுத்து அவரிடமிருந்த அடையாள அட்டையை சோதனை செய்தபோது, அதில் கவர்மெண்ட்-ஆப் தமிழ்நாடு, ரிவன்யூ டிபார்ட்மெண்ட் கரூர் மாவட்டம் என்றும், தமிழ்நாடு அரசு முத்திரையுடன் இருந்தது. மேலும் காருக்குள் தேர்தல் சமயத்தில் அதிகாரிகள் பயன்படுத்தக் கூடிய 5 ரப்பர் சீல்கள் இருந்தன. 

    இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி பூபதி வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, விபரம் கேட்டபோது, பழனிவேல் அரசு அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது. 

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பழனிவேலுவை பிடித்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழனிவேல் கடந்த 2002-ம் ஆண்டு கரூர் பகுதியில் பணியாற்றிய தாசில்தார் சசிக்குமாரிடம் தற்காலிக ஓட்டுநராக பணி புரிந்து வந்ததாகவும், பின்னர் 2004-ம் ஆண்டு மதுரை முதுகுளத்தூர் தாசில்தாரிடம் தற்காலிக ஓட்டுநராக பணியாற்றியதாகவும் தெரிவித்தார். மேலும், பழனிவேலை கைது செய்து, அவர் பயன்படுத்திய அரசு முத்திரையுள்ள காரை பறிமுதல் செய்து, விசாரணை செய்ததில், இவர் போலி தாசில்தார் என்றும், இவர் வேறு எந்தெந்தப் பகுதிகளில் தாசில்தார் எனக்கூறி, வசூல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் நடந்து சென்ற மாணவி பலியான சம்பவம் குறித்து காரை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ். இவருடைய மகள் அசீகா (வயது 19). இவர் நர்சிங் படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தியின் மகள் நிவேதிதா (18), கோபால் மனைவி அர்ச்சனா(25), சந்திரப்பா மகள் மாணிக்கியா(20). இவர்கள் அனைவரும் உறவினர்கள் ஆவார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவி அசீகா, நிவேதிதா, அர்ச்சனா, மாணிக்கியா ஆகிய 4 பேரும் அதே பகுதியில் உள்ள தங்கள் விவசாய தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது.

    அந்தநேரம் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த அசீகா உள்ளிட்ட 4 பேர் மீதும் மோதியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி அசீகா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய காரை சிறிது தூரத்தில் நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    புதுவையில் இருந்து மதுரைக்கு நூதன முறையில் மதுபாட்டில் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் கடலூர் பெரிய கங்கணாங்குப்பம் என்ற பகுதியில் வாகன சோதனையில் இன்று அதிகாலை ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த போல் இருந்தது. இதனால் மதுவிலக்கு போலீசார் தூங்கிய நபரை எழுப்புவதற்கு காரின் அருகே சென்றனர்.

    ஆனால் இருக்கையில் எந்த நபரும் தூங்கவில்லை. அதற்கு மாறாக தலையணையை அடுக்கி வைத்து, ஒருவர் தூங்குவது போல் தோற்றம் ஏற்படுத்தி இருந்தது தெரிந்தது. இதனால் உஷாரான போலீசார் அதனை அகற்றி பார்த்தபோது அட்டைப் பெட்டி முழுவதும் மதுபாட்டில்கள் இருந்தது.

    இதனையடுத்து மதுவிலக்கு போலீசார் டிரைவரை மது விலக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் டிரைவர் மதுரை பழங்காநத்தம் சேர்ந்த மணிகண்டன் என்பதும், அவர் 160 மதுபாட்டில்களை மதுரைக்கு கடத்தி செல்வதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து கடலூர் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் மணிகண்டனை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
    ×