search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery"

    கர்நாடகாவில் உள்ள மண்டியா மாவட்டத்தில் காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்க அம்மாநில அரசு இன்று தீர்மானித்துள்ளது. #Karnatakagovernment #Cauvery
    பெங்களூரு:

    கர்நாடக மாநில நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி சாரா ரமேஷ் ஆகியோர் தலைமையில் இரு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் இன்று நடைபெற்றது.



    மண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு அருங்காட்சியகம் கட்டப்படும். அந்த அருங்காட்சியகத்தின் உச்சியில் காவிரி தாய்க்கு  125 அடி உயரத்தில் சிலை அமைக்க இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அப்பகுதியில் புதிய ஏரி உருவாக்கப்பட்டு இந்த சிலையும், அருகாமையில் 360 அடியில் கண்ணாடியால் ஆன இரு கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தனியார் பங்களிப்புடன் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த திட்டத்துக்கு தேவையான நிலம் மட்டும் அரசு ஒதுக்கீடு செய்யும் என மந்திரி சிவக்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார். #Karnatakagovernment #Cauvery 
    திண்டுக்கல்லில் குழாய் உடைந்து காவிரி கூட்டுக்குடிநீர் வீணாகி வருகிறது. கழிவு நீரோடு சேர்ந்து சாலையில் செல்வதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லில் குடிநீர் தட்டுப்பாடு தீராத பிரச்சினையாக உள்ளது. ஆத்தூர் காமராஜர் அணை மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளுக்கும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இருந்த போதும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் கரூர் மாவட்டத்தில் இருந்து எரியோடு, குஜிலியம்பாறை, வடமதுரை, தாடிக்கொம்பு வழியாக திண்டுக்கல் மற்றும் நத்தத்துக்கு காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.

    இந்த குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிய போதும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக சரி செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

    நாகல்நகர் ரெயில்வே மேம்பாலம் அருகே கூட்டுறவு பண்டகசாலை, ரேசன் கடை உள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கியுள்ளது.

    கழிவு நீரோடு சேர்ந்து சாலையில் செல்வதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் விரைந்து குழாயை சீரமைக்க வேண்டும். தண்ணீரை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்துள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 6 ஆயிரத்து 608 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது 6 ஆயிரத்து 99 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்திற்காக மொத்தம் 22 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    நீர் திறப்பை விட தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தினமும் 1 அடி குறைந்து வருகிறது. நேற்று 107.79 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 106.73 அடியாக குறைந்தது.

    நீர்வரத்து குறைவாக உள்ளதால் வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் மேலும் சரிவதற்கான வாய்ப்பு உள்ளது.

    காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. #SupremeCourt #CauveryWater
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள தொழிற்சாலைகள், நகரங்களில் இருந்து கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கின்றன.

    இதனால் ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகாவில் இருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது.

    இந்த கழிவுகளால் காவிரி கரையோரம் வாழும் தமிழக மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பலவித நோய்கள் ஏற்படுகிறது.

    எனவே காவிரியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், கழிவுகள் கலப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



    இந்த வழக்கில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை மாதம் 16-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்தது. இதில், கர்நாடகாவில் இருந்து காவிரியில் கழிவுகள் கலக்கப்படவில்லை என்றும், தென்பெண்ணையாறு, அர்க்காவதி ஆகிய காவிரியின் கிளை நதிகள்தான் மாசடைந்த நிலையில் தமிழ்நாட்டுக்குள் பாய்கிறது என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த அறிக்கை மீது ஏற்கனவே தமிழக அரசும், கர்நாடகா அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்தநிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் வக்கீல் ஜி.உமாபதி ஆஜரானார்.

    விசாரணை தொடங்கியதும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த அறிக்கை மீது எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றிய முக்கிய குறிப்புகளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.  #SupremeCourt #CauveryWater
    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி, பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். #Cauvery #Mekedatu #Kumaraswamy #PMModi
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றில் 5-வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியிருந்தது.
     
    ஏற்கனவே கர்நாடகா தண்ணீர் திறந்துவிடுவதில்லை. மேகதாது அணை கட்டினால் உபரி நீர் திறந்து விடுவது சந்தேகம்தான். எனவே கர்நாடகாவை மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

    இந்நிலையில், மேகதாது அணை கட்ட அனுமதிக்குமாறு பிரதமர் மோடியிடம் குமாரசாமி நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக, கர்நாடக அரசுகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

    காலதாமதம் செய்யாமல் மேகதாது அணையை கட்ட மத்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும், தமிழக அரசுடனான அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

    சமீபத்தில் இதுகுறித்து பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசுகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதலை பெற அவசியம் இல்லை என கூறியிருந்தார்.
    ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 31 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் இருந்தது. இன்று படிப்படியாக சரிந்து காலை 8 மணிக்கு 23 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்தது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணை களுக்கு நீர் வரத்து அதிகமாகியது. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.

    திறந்து விடப்பட்ட நீர் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடையும். ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 31 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் இருந்தது. இன்று படிப்படியாக சரிந்து காலை 8 மணிக்கு 23 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்தது.

    இன்று 51-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், வழக்கமான பாதை வழியாக பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. முதலைப்பண்ணை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் காவிரி கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். #Hogenakkal #Cauvery

    மேட்டூர் அணைக்கு நேற்று 28 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று நீர் வரத்து 22 ஆயிரம் கன அடியாக சரிந்தது. #Metturdam #Cauvery
    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மீண்டும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.

    நேற்று 2 அணைகளில் இருந்தும் 36 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று 28 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று நீர் வரத்து 22 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

    அணையில் இருந்து நேற்று 27 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்த விடப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 20 ஆயிரத்து 800 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.05 அடியாக இருந்தது.

    கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு இன்று மேலும் குறைக்கப்பட்டதால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 31 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 23 ஆயிரம் கன அடியாக சரிந்தது. மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

    அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. முதலைப் பண்ணை, நாகர்கோவில் உள்பட பகுதிகளில் காவிரி கரையோரம் சுற்றுலா பகுதிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    வழக்கமான பாதை யில் இன்று காலை முதல் பரிசல் இயக்க அனுமதிக்கப் பட்டதால் சுற்றுலா பயணி கள் உற்சாகமாக பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர். #Metturdam #Cauvery
    ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று உயர்ந்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அதில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தற்போது அணைகளில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் கர்நாடக-தமிழக எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்தது நேற்று 17 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    நேற்று மதியம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு சற்று அதிகரித்தது. நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று உயர்ந்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று முதல் ஒகேனக்கல்லில் கோத்திக்கல்பாறை என்ற இடத்தில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். ஒகேனக்கல்லில் தொடர்ந்து 48-வது நாளாக மெயினருவில் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.  #Hogenakkal #Cauvery
    கடந்த 15 நாட்களுக்கு மேலாக மேட்டூர் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நீர்திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது. #MetturDam

    மேட்டூர்:

    கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்ததால், கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து கடந்த ஒரு மாதமாக காவிரியில் உபரிநீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இதனால், கடந்த ஒரு மாதமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் இருந்தது.

    இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டதால், கடந்த ஒரு மாதமாக காவிரியில் வெள்ள கரைபுரண்டு ஓடியது.

    தற்போது கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 65 ஆயிரம் கன அடியாகவும், நீர் திறப்பு 60 ஆயிரம் கன அடியாகவும் சரிந்தது.

    பின்னர், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 35 ஆயிரம் கன அடியாகவும் குறைந்தது. நேற்று மதியத்துக்கு மேல் நீர்திறப்பு விநாடிக்கு 20 ஆயிரத்து 800 கன அடியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலை நீர்வரத்து மேலும் குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் சுரங்க மின் நிலையம் வழியாக 20 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு பாசன கால்வாய் வழியாக 800 கன அடி வீதம் தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120.02 அடியாக உள்ளது.

    இதனிடையே கடந்த 15 நாட்களுக்கு மேலாக 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நீர்திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது. மேட்டூர் அணையில் இருந்து ஒரு மாதத்துக்கு பின்னர் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், காவிரியில் நிலவி வந்த வெள்ள அபாயம் தற்போது நீங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #MetturDam

    மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி. அதைவிட அதிமான தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது. இப்போது மட்டும் அல்ல இதேபோல பல தடவை அதிக அளவில் தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. #Cauvery #Metturdam
    சென்னை:

    கர்நாடகாவில் உற்பத்தியாகி வரும் காவிரி ஆறு திருச்சி முக்கொம்பில் காவிரி என்றும், கொள்ளிடம் என்றும் 2 ஆறுகளாக பிரிகிறது.

    அதில் காவிரி ஆறு நாகப்பட்டினம் மாவட்டம் பூம்பூகாரிலும், கொள்ளிடம் ஆறு சிதம்பரம்-சீர்காழி இடையேயும் கடலில் கலக்கின்றன.

    காவிரி ஆற்றில் தமிழ்நாட்டில் மேட்டூர் அணை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கும் அணையாக உள்ளது. அதன்பிறகு திருச்சி அருகே முக்கொம்பில் தண்ணீரை பிரித்து அனுப்பும் ஒரு அணையும், அதைத் தொடர்ந்து கல்லணையும் உள்ளன.

    காவிரியில் அதிக வெள்ளம் வரும்போது, முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். மேலும் கல்லணையில் இருந்தும் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றுக்கு தனியாக திறந்து விடப்படும்.

    இவ்வாறு திறந்துவிடப்படும் தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை வந்து சேரும். அங்கு ஒரு அணை உள்ளது. அதில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும்.

    ஆனால் அதிக அளவில் தண்ணீர் வந்தால் அவை முழுவதையும் கால்வாயில் அனுப்பும் அளவிற்கு போதிய கால்வாய்கள் இல்லை. எனவே அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் முழுவதுமாக கடலுக்கு செல்வது வாடிக்கை.

    தற்போது காவிரியில் தொடர்ந்து அதிக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அந்த தண்ணீரில் பெரும் பகுதி கடலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் 26-ந்தேதியில் இருந்து உபரி நீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலந்து வருகிறது. அதேபோல காவிரி ஆற்றில் பூம்புகார் செல்லும் தண்ணீரும் கடலில் கலக்கிறது. இவ்வாறு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

    மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி. அதைவிட அதிமான தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது. இப்போது மட்டும் அல்ல இதேபோல பல தடவை அதிக அளவில் தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது.

    இதுசம்பந்தமாக அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, 2000-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 385 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்ததாகவும், 2014-ல் 115 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்ததாகவும் கூறினார்.

    பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பருவநிலை மாற்ற மைய முன்னாள் இயக்குனர் நடராஜன் கூறும்போது, 1991-ல் இருந்து 2005 வரை மட்டுமே 1039 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலந்துள்ளது.



    காவிரி டெல்டா பகுதியில் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு போதிய வசதிகள் செய்யாததால் 2005-ம் ஆண்டு 300 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்தது. 1991-2005 வரை கடலில் கலந்துள்ள தண்ணீரை கொண்டு சுமார் ரூ.51 ஆயிரம் கோடி அளவிற்கு நெல் உற்பத்தி செய்திருக்கலாம் என்று கூறினார்.

    கொள்ளிடத்தில் தேவையான அளவுக்கு சிறு அணைகளையும், தடுப்பு அணைகளையும் கட்டினாலே தண்ணீர் வீணாவதை கட்டுப்படுத்த முடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    காவிரியில் 177.25 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் ஜூன் 1-க்கு பிறகு இதுவரை 270 டி.எம்.சி. தண்ணீர் வந்துவிட்டது. அதாவது 93 டி.எம்.சி. தண்ணீர் அதிகமாக வந்துள்ளது. ஆகஸ்டு மாதத்தில் மட்டுமே 132 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. #Cauvery #Metturdam
    திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் ஓடும் அதிக தண்ணீரால் மேலணையில் உள்ள 8 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Cauvery #Mukkombu
    திருச்சி:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கிருந்து உபரிநீர் 2 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மேலணையில் உள்ள 45 மதகுகளில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    இதனால், ஆற்றில் சுமார் 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. மதகு உடைப்பை அடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    அணைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் வந்து அணையை பார்வையிட்டார். 
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றிரவு மீண்டும் 120 அடியை தாண்டி நடப்பாண்டில் 3-வது முறையாக அணை நிரம்பியது.
    மேட்டூர்:

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணைக்கு கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் கடந்த மாதம் 23-ந் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை தாண்டியது. பின்னர் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் சரிந்தது.

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 11-ந் தேதி மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது.

    தொடர்ந்து மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்ததால் அணை பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 119.25 அடியாக சரிந்தது.

    இதற்கிடையே கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று 80 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு 50 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    இதனால் நேற்று காலை 11.25 கன அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றிரவு மீண்டும் 120 அடியை தாண்டி நடப்பாண்டில் 3-வது முறையாக அணை நிரம்பியது.

    கடந்த 2005-ம் ஆண்டு மேட்டூர் அணை 5 முறை நிரம்பியது. அதன் பிறகு நடப்பாண்டில் நேற்றிரவு 3-வது முறையாக நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.21 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து 75 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து நேற்று 98 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    கபினி அணையில் இருந்து மட்டும் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறையும்.

    ஒகேனக்கலில் நேற்று காலை 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று தண்ணீர் வரத்து 75 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கலில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்றும் தடை விதிக்கப்பட்டிருந்தது.



    ×