search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai"

    • அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறவில்லை.
    • ஜூலை 23-ந் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு.

    சென்னை:

    இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

    இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த சட்டங்களை அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை என அறிவிக்கக் கோரி, தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

    அவர் தனது மனுவில், நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் ஒன்பது மாநிலங்களிலும், இரு யூனியன் பிரதேசங்களிலும் மட்டும் தான் இந்தி அலுவல் மொழியாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில், 43.63 சதவீதம் மக்கள் மட்டுமே இந்தியை தாய் மாொழியாகக் கொண்டவர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். வேறு மொழிகளில் சட்டம் இயற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளுக்கு எதிராக இந்தியில் பெயரிடப்பட்டுள்ள மூன்று சட்டங்களையும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து, ஆங்கிலத்தில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மூன்று சட்டங்களும் ஆங்கிலத்தில் தான் நிறைவேற்றப்பட்டன எனவும், சட்டங்களின் பெயர்கள் கூட ஆங்கில எழுத்துக்களில் தான் இடம் பெற்றுள்ளன என்றும் விளக்கினார்.

    மேலும், இந்த சட்டங்கள், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறவில்லை எனவும், எவரின் அடிப்படை உரிமையும் இதனால் பாதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

    சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது பாராளுமன்றத்தின் விருப்பம் எனவும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் விளக்கமளித்தார்.

    இதையடுத்து, மனுவுக்கு ஜூலை 23-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • இறால், மீன் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் கவலை.
    • கழிவு நீர் மற்றும் ரசாயனம் கலந்து வருவதால் ஆற்றின் நிறம் மாறுகிறது.

    எண்ணூர்:

    எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதியில் ஏராளமான மீன்களும், இறால்களும் அதிக அளவில் கிடைக்கும். இதனை நம்பி 10 மீனவ கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் கொசஸ்தலை ஆறு இணையும் பகுதி முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. இதனை கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவு வெளியேற்றப்படும் கழிவு நீரால் இந்த மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் இறால், மீன் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    மேலும் இதேபோல் எண்ணூர் முகத்துவார பகுதி அடிக்கடி மஞ்சள் நிறமாக மாறி காட்சி அளிப்பதாக குற்றம் சாட்டினர்.

    இது தொடர்பாக மீனவர்கள் கூறியதாவது:-

    எண்ணூர் முகத்துவார பகுதி ஆண்டுதோறும் பல நாட்கள் மஞ்சள் நிறமாக மாறி காட்சி அளித்து வருகிறது.

    ஆற்றை சுற்றி இருக்கும் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீர் மற்றும் ரசாயனம் கலந்து வருவதால் ஆற்றின் நிறம் மாறுகிறது. இதனால் ஆற்றில் இருக்கும் மீன்கள் மற்றும் இறால்கள் இனப்பெருக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் கொசஸ்தலை ஆற்றை நம்பி இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    எனவே எண்ணூர் முகத்துவாரத்தை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் எண்ணூரில் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் கடந்த சில மாதங்களாக மஞ்சள் நிறமாக வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    • சிறை தண்டனையால் பாலகிருஷ்ண ரெட்டி பதவியை இழந்தார்.
    • பலவீனமான ஆதாரங்களே உள்ளது.

    சென்னை:

    1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, அ.தி.மு.க. ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இவ்வழக்கில், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு 2019-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தீர்ப்பளித்தது. மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், பாலகிருஷ்ண ரெட்டி பதவியை இழந்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், போலீஸ் விசாரணையில் குறைபாடுகள் உள்ளது. உண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அரசுத்தரப்பு கண்டறியவில்லை. பலவீனமான ஆதாரங்களே உள்ளது. அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை. எனவே, சிறப்பு கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.

    • கேப்ஜெமினி, சென்னையில் புதிய கேம்பஸ் அமைக்க உள்ளதாக தகவல்.
    • தமிழ்நாடு அரசின் இலக்கிற்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தற்போது பெங்களூருக்கு இணையாக தகவல் தொழில் நுட்பத் துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஸ்டார்ட்அப் முதல் ஐ.டி. சேவைத் துறை வரையில் தொடர்ந்து முதலீடுகளை பெற்று வருகிறது.

    இதன் வாயிலாக நாட்டின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியிலும், மென்பொருள் துறை வேலைவாய்ப்புகளிலும் தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபலமான ஐ.டி. சேவை மற்றும் கன்சல்டிங் சேவை நிறுவனமான கேப்ஜெமினி, சென்னையில் புதிய கேம்பஸ் அமைக்க உள்ளதாக நேற்று (செவ்வாய்க் கிழமை) அறிவித்துள்ளது.

    டெக் நிறுவனங்களின் முதலீடுகள் சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், கேப் ஜெமினி அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த முதலீட்டின் வாயிலாக கேம்ஜெமினி சுமார் 6 லட்ச சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த புதிய தகவல் தொழில் நுட்ப வளாகத்தில், 5000 ஊழியர்கள் பணிபுரியும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது.

    2027-ம் ஆண்டுக்குள் இந்த கேம்பஸ் கட்டி முடிக்கப்படும் என்று கேப்ஜெமினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மேலும், கேம்ஜெமினி தற்போது அறிவிக்கப்பட்ட முதலீட்டில் சுமார் ரூ.3 கோடியை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்குவதாகவும் இந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இந்த புதிய , ஐடி வளாகத்தில் நவீன கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இருக்கும் என்று கேப் ஜெமினி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த கேம்பஸ்-ல் பைனான்சியல் சர்வீசஸ், என்ஜினீயரிங், டிஜிட்டல், கிளவுட், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறை நிபுணர்கள் பணிபுரிய இது உதவும்.

    மேலும், இந்த வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட என்ஜினீயரிங் லேப்ஸ், வாடிக்கையாளர் சேவை மையங்கள் என தனித்தனி பகுதிகள் இருக்கும் என கேப்ஜெமினி தெரிவித்துள்ளது.

    சென்னையில் மிகப்பெரிய ஐ.டி. கேம்பஸ் என்றால் டி.சி.எஸ். நிறுவனத்தின் சிறுசேரி கேம்பஸ் தான். இதை முறியடிக்கும் வகையில் பல நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் வேளையில் பிரான்சின் கேப்ஜெமினி நிறுவனம் அடுத்த 3 வருடத்தில் சென்னையில் ரூ. 1000 கோடி முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாட்டில் இன்னோ வேஷன் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு நாங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை இந்த முதலீடு காட்டுகிறது என்று கேப்ஜெமினி நிறு வனத்தின் ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் கார்ப்பரேட் ரியல் எஸ்டேட் சேவைகளின் தலைவர் விஜய் சந்திர மோகன் கூறி உள்ளார்.

    கேப்ஜெமினியின் இந்த உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப வளாகம், தமிழ்நாட்டில் இருக்கும் திறன்மிக்க டெக் ஊழியர்களை பயன்படுத்திக் கொள்ள ஆர்வம்காட்டு வதை பிரதிபலிக்கிறது, மேலும் 2030-ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் தமிழ்நாடு அரசின் இலக்கிற்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது என்று தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

    • வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளது.
    • படம் திரையரங்குகளில் ஓடி இதுவரை 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலளித்துள்ளது

    இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கருடன் அதிரடி திரில்லர் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தினை தயாரிப்பாளர் கே குமார் மாற்றம் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் அதிரடி - திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'கருடன்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர்தர் எ வில்சன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, ரோஷ்ணி ஹரிப்ரியன், ரேவதி சர்மா, மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கருடன் திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. திரைக்கதை, வசனங்கள், நடிப்பு என இப்படம் பெரிய அளவில் ரசிகர்களின் மனதை வென்று புகழ் பெற்றுள்ளது. கிராமத்து திரைக்கதையில் வெளியான இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று இந்த ஆண்டின் வெற்றி பட வரிசையில் இணைந்துள்ளது.

    விடுதலை படத்தின் மூலம் நாயகனாக நடிக்க தொடங்கிய நகைச்சுவை நடிகர் சூரி, இப்படத்தில் நாயகனாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படத்தில் சூரியின் நடிப்பை பலரும் பாராட்டினர். நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டு இருந்தவர். விடுதலை படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுப்பட்ட சூரியாக திரையில் வந்தார். அதற்கடுத்து கருடன் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கி மக்கள் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

    படம் திரையரங்குகளில் ஓடி இதுவரை 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் நாளை [ஜூலை 3] வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சொத்து வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • 8,305 ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் சொத்து வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மதிப்பீட்டில் 8,305 ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டு நிலவழிகாட்டி மதிப்புகள் ஒட்டுமொத்தமாக சீரமைக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு 2021-ல் 33 சதவீதம் வரை குறைக்கப்பட்டன.

    இந்த நிலையில் 2012-ல் அறிவிக்கப்பட்ட மதிப்புகளை மீண்டும் கடைபிடிப்பதாக, பதிவுத்துறை 2023-ல் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து விடுபட்ட தெருக்களுக்கு மதிப்பு நிர்ணயிப்பதாக கூறி, அனைத்து பகுதிகளுக்குமான நில வழிகாட்டி மதிப்புகளை 70 சதவீதம் வரை உயர்த்தும் பணிகள் துவங்கியது. தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்த நடவடிக்கைகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

    இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட சர்வே எண்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள மதிப்பை 10 சதவீதம் வரை அரசு உயர்த்தி உள்ளது.

    வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக புகார்கள் வந்ததின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வழிகாட்டி மதிப்புகளை ஆய்வு செய்து அதனை தற்போது சீரமைத்துள்ளது.

    இதன்படி ஆலந்தூர் சாலையில் ஒரு சதுர அடி வழிகாட்டி மதிப்பு கடந்த ஜூன் மாதம் வரை ரூ.5,500 ஆக இருந்தது. நேற்று முதல் ரூ.6,100-ஆக உயர்ந்துள்ளது.

    ஒக்கியம் துரைப்பாக்கத்தில் ஒரு சதுர அடி ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.6,600-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அபிராமபுரம் 3-வது தெருவில் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.17, 600-ஆக அதிகரித்து உள்ளது. கிட்டத்தட்ட 2.19 லட்சம் தெருக்களில் உள்ள 4.46 கோடி சர்வே எண்கள் மற்றும் உட்பிரிவுகளுக்கு வழிகாட்டி மதிப்பு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், வேலூர் போன்ற நகரங்களில் வழிகாட்டி மதிப்பு உயர்ந்துள்ளது. மற்ற ஊர்களில் அந்தளவுக்கு உயர்வு இல்லை.

    புதிய வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், 8,305 ஆவணங்கள் புதிய மதிப்பீட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • கடந்த 17-ந் தேதி முதல் தடை விதித்தது.
    • பஸ்களை சிறைபிடிக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலமாக அனுமதி.

    சென்னை:

    வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்க தமிழ்நாடு போக்குவரத்துத் துறை கடந்த 17-ந் தேதி முதல் தடை விதித்தது.

    இதை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை சிறைபிடித்த நிலையில், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த நிலையில் ஆல் இந்தியா பெர்மிட் மூலம் ஆம்னி பஸ்களை தமிழ்நாட்டில் இயக்கிக் கொள்ளலாம். அந்த பஸ்களை சிறைபிடிக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலமாக அனுமதி வழங்கியது.

    இதைத்தொடர்ந்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தற்போது வழக்கம் போல வெளிமாநில பதிவு எண் கொண்ட பஸ்களை இயக்கத் தொடங்கி உள்ளனர்.

    தமிழகத்தில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் , கொச்சின், விசாகப்பட்டினம் போன்ற நகரங்களுக்கு செல்லக் கூடிய வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

    அதேசமயம் தமிழகத்திற்கு உள்ளேயே வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் தற்போது வரை இயக்கவில்லை என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    • தனிப்பெரும் அடையாளங்களில் முதன்மையானது 69 சதவீத இட ஒதுக்கீடு ஆகும்.
    • 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 1980-ம் ஆண்டு முதல் 68சதவீத இட ஒதுக்கீடும், 1989-ம் ஆண்டு முதல் 69சதவீத இட ஒதுக்கீடும் நடைமுறையில் உள்ளன. இதற்கிடையே, 69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தினேஷ் என்பவர் புதிய வழக்கை தொடர்ந்திருப்பதால் இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    மாராத்தா இட ஒதுக்கீடு செல்லாது என்று 2021-ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் மீதான சீராய்வு மனு கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப் பட்டு விட்ட நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு இம்மாதம் 8-ந்தேதி கோடை விடுமுறைக்குப் பிறகு உச்சநீதிமன்றம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

    தமிழ்நாட்டில் தனிப்பெரும் அடையாளங்களில் முதன்மையானது 69 சதவீத இட ஒதுக்கீடு ஆகும். அதைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. அந்த கடமையை நிறைவேற்றும் வகையில், இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அண்ணாமலை தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும்.
    • தமிழக அரசியலில் தோற்றுப்போனவர்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சி பா.ஜ.க. அதன் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து வெறுப்பு அரசியலை செய்து வருகிறார்.

    முதல்-அமைச்சர் மீதும் அவதூறு பேசுவது வாடிக்கையாகி விட்டது. எத்தனையோ அரசியல் கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள. இவரைப்போல் யாரிடமும் வெறுப்பும், திமிறும், ஆணவமும் இல்லை.

    காங்கிரஸ் பற்றி எனக்கு தெரியாது என்கிறார். நான் படித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன். முதலில் ஜன நாயகத்தை படிக்க வேண்டும். நான் காங்கிரஸ் பற்றி பேச தயார். நீங்கள் ஜனசங்கம், இந்து மகாசபா பற்றி பேச தயாரா?

    தன் கட்சி வேட்பாளரையே தோற்கடிக்க முயற்சித்த விவகாரம், சிருங்கேரி மடம் முதல் பல விசயங்களை நாங்களும் தூசு தட்டுவோம்.

    முதல்-அமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை கிண்டல் செய்கிறார். மோடி எத்தனையோ வெளிநாடுகளுக்கு செல்கிறாரே முதலீடுகளை கொண்டு வந்தாரா?

    முதலில் அண்ணாமலை தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும். அவர் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து காவிரி விவகாரத்தில் கன்னடர்களுக்குத்தான் ஆதரவாக இருப்பாராம்.

    தமிழக அரசியலில் தோற்றுப்போனவர். இப்போது உலக அரசியல் செய்யப் போகிறாராம். ஒரு வேளை அமெரிக்க அதிபராக முயற்சிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • சுற்றுலா பயண திட்டங்கள் பொதுமக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், மைசூர்-பெங்களுர், குற்றாலம், நவக்கிரக கோவில்கள் தொகுப்பு மற்றும் மூணார் என மூன்று நாட்கள் செல்லும் சுற்றுலா பயண திட்டங்களும், சென்னை-மாமல்லபுரம், காஞ்சிபுரம்-மாமல்லபுரம், திருப்பதி, திருவண்ணாமலை, ஸ்ரீபுரம் தங்க கோவில், புதுச்சேரி என ஒரு நாள் சுற்றுலா பயண திட்டங்களும்.

    8 நாட்கள் பயணம் செய்யும் தமிழ்நாடு சுற்றுலா, கோவா-மந்த்ராலயம் சுற்றுலா பயண திட்டங்களும், 14 நாட்கள் பயணம் செய்யும் தென்னிந்திய சுற்றுலா பயண திட்டங்களும், யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான பண்பாட்டு சின்னங்களை பார்வையிடும் சுற்றுலா பயண திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுலா பயண திட்டங்கள் பொதுமக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இப்போது சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக 3 கோடி ரூபாய்எ மதிப்பிலான 35 இருக்கைகள் கொண்ட 4 பஸ்கள் மற்றும் 18 இருக்கைகள் கொண்ட 1 பஸ் என 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பஸ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த பஸ்களில் நீண்ட தூரம் மற்றும் நீண்ட நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள குளிர்சாதன வசதி, மிதவை அமைப்பு வசதி, வாகனத்தின் இருப்பிடத்தை அறிய ஜி.பி.எஸ்.கருவி, ஒய்பை வசதி, ஒவ்வொரு இருக்கையிலும் போன் சார்ஜ் செய்யும் வசதி, 35 பயணிகளும் நீண்ட நாள் பயணத்திற்கான தங்கள் பொருட்களை தாராளமாக வைத்துக் கொள்ள மிகப்பெரிய அளவிலான பொருட்கள் வைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கா.ராமச்சந்திரன், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் மணிவாசன், மேலாண்மை இயக்குநர் சமயமூர்த்தி கலந்து கொண்டனர்.

    • போராட்டக் குழுவினர் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
    • போராட்டம் மீண்டும் சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னைக்கு அடுத்தபடியாக மிக பெரிய விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைந்தால் 20-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் நீர்நிலைகள், விளைநிலங்கள், குடியிருப்புகள் பாதிக்கப்படும் என கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 705 நாட்களாக மாலை நேரங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளை கணக்கிட்டு தேர்வு செய்வதற்காக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டு 58 கிராம ஊராட்சிகள் உள்ள நிலையில் ஏகனாபுரம் கிராமத்தை தவிர மற்ற 57 கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்ற நிலையில் பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.

    இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.

    சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறாததை கண்டிக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் ஏகனாபுரம் கிராமத்தை புறக்கணிப்பு செய்வதை கண்டித்தும், விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிற 3-ந்தேதி (புதன் கிழமை) காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்ட குழுவினர் மட்டும் கலந்து கொண்டு தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

    இதன் காரணமாக பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் மீண்டும் சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • மதிப்பு பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டன.
    • கிராமப்புறங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

    சென்னை:

    தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, ஆவண பதிவுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கிறது.

    இந்த வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்கள் இருப்பதாக புகார்கள் சொல்லப்பட்டன. எனவே அதனை சீர் செய்யும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையிலான துணை குழுக்களை தமிழக அரசு அமைத்தது.

    இந்த குழுவினர், தங்கள் மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை ஆய்வு செய்து அதில் உள்ள குறைகளை சீர் செய்தனர். அதாவது ஒரே தெருவில் வெவ்வேறு வழிகாட்டி மதிப்புகள் இருந்தால், அதனை ஒன்றாக மாற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டனர். ஆனால் புதிதாக மதிப்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

    இந்த திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் வரைவு பட்டியல் கடந்த மாதம் (ஜூன்) 10-ம் தேதி பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் மீது பொதுமக்கள் கருத்துக்கள் சொல்ல 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டன.

    பின்னர் பொதுமக்களிடம் இருந்து வரப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை கலெக்டர்கள் தலைமையிலான துணைக்குழுக்கள் ஆய்வு செய்தன. அதில் தகுதியானவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வரைவு வழிகாட்டி மதிப்பு பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டன.

    இந்த திருத்தம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்பிற்கு பத்திரப்பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த 29-ம் தேதி ஒப்புதல் அளித்தார்.

    இந்த புதிய வழிகாட்டி மதிப்பை பொறுத்தவரை கிராமப்புறங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், நகர்ப்புறங்களில் சில இடங்களில் மட்டும் 10 சதவீதம் அதிகரித்தும், குறைத்தும் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் புதிய வழிகாட்டி மதிப்பினை இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்த பத்திரப்பதிவு துறை முடிவு செய்தது. அதற்காக பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் நேற்று இரவு புதிய வழிகாட்டி மதிப்புகள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்தன. அதன் காரணமாக அந்த இணையதளம் https://tnreginet.gov.in சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.

    இன்று முதல் பத்திரப்பதிவு செய்பவர்கள் புதிய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஏற்கனவே ஆவணங்களை பதிவு செய்ய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இருந்தால், அவர்கள் தற்போதைய மதிப்பின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும். வழிகாட்டி மதிப்பு குறைந்து இருந்தால், அந்த தொகை திருப்பி அளிக்கப்படும்.

    ×