search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Councillors"

    • தி.மு.க.வை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் வாக்களித்துள்ளனர்.
    • திரைமறைவில் நடந்த ‘உள்ளடி’ வேலைகளால் மேலிடம் அதிர்ச்சி

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் தி.மு.க. சார்பில் புதிய மேயர் வேட்பாளராக 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

    மாநகராட்சியில் தி.மு.க.-கூட்டணி கவுன்சிலர்கள் 51 பேர் இருப்பதால், ராமகிருஷ்ணன் ஒரு மனதாக மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று நடந்த மறைமுக தேர்தலில், தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட கவுன்சிலர் பவுல்ராஜ் திடீரென போட்டி வேட்பாளராக களமிறங்கினார்.

    இதைத்தொடர்ந்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்த உள்ள 55 கவுன்சிலர்களில் ஒருவர் மட்டும் வரவில்லை. மீதமுள்ள 54 பேர் ஓட்டு போட்டதில் ஒரு ஓட்டு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் ராமகிருஷ்ணனுக்கு 30 ஓட்டுகளும், பவுல்ராஜூக்கு 23 ஓட்டுகளும் கிடைத்தது.

    கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு கவுன்சிலர் 23 வாக்குகள் பெற்றது கட்சி தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    தலைமையின் உத்தரவையும் மீறி கவுன்சிலர் பவுல்ராஜிக்கு ஆதரவாக தி.மு.க.வை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில், திரை மறைவுக்கு பின்னால் நடந்த பல சம்பவங்கள், கவுன்சிலர்களின் உள்ளடி வேலைகள் நடைபெற்றுள்ளது என்கின்றனர்.

    நெல்லை மாநகராட்சியில் இருக்கும் கவுன்சிலர்கள் அனைவருமே அப்துல் வகாப் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளராக இருந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்டு களத்தில் நிறுத்தப்பட்டவர்கள். இவர்களில் 90 சதவீதம் கவுன்சிலர்கள் தற்போது வரை அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர்.

    ஏற்கனவே இருந்த மேயர் சரவணனும் இவருக்கு ஆதரவாக இருந்தவர். ஆனால் மேயர் ஆனதிலிருந்து அவருக்கும், அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வுக்கும் மோதல் தொடங்கியது.

    ஒரு கட்டத்தில் மாநகராட்சி பணிகளில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வின் தலையீடு அதிகரிக்க தொடங்கியதால் சரவணன் அவரை எதிர்த்து களத்தில் இறங்கினார். இதனால் மேயரை செயல்பட விடாமல் செய்யும் நோக்கில் கவுன்சிலர்களை அப்துல் வஹாப் தவறாக வழிநடத்தியதாக பலரும் புகார் கூறினர்.

    ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் அதீத நெருக்கடியின் காரணமாக சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது.

    இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அப்துல் வகாப்புக்கு ஆதரவான கவுன்சிலரை மேயராக அறிவித்தால் மட்டுமே மீண்டும் மாநகராட்சி கூட்டங்கள் பிரச்சனை இன்றி நடைபெறும் என்று தி.மு.க தலைமை கருதியது.

    இதன் காரணமாக கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் அவரது ஆதரவாளரான ராமகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    இந்நிலையில் மேயர் வேட்பாளரான ராமகிருஷ்ணனை ஆதரித்து வாக்களித்தால் தங்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று சில கவுன்சிலர்கள் பேரம் பேசியதால் அவர்களுக்கு நேற்று முன்தினம் இரவோடு இரவாக 'வைட்டமின் ப' வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    எனினும் ராமகிருஷ்ணனை தேர்வு செய்யும் பட்சத்தில் அப்துல் வஹாப்பின் தலையீடு மாநகராட்சியில் மீண்டும் எழுந்து விடும் என்றும், நமக்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய சன்மானங்கள் எல்லாம் கிடைக்காது என சில கவுன்சிலர்கள் கருதினர்.

    இதனால் போட்டி வேட்பாளர் யாராவது நின்றால் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுமார் 10-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தங்கள் மனதிற்குள் ஒரு கணக்கு போட்டு வைத்திருந்ததாகவே தெரிகிறது.

    இந்த சூழ்நிலையில் தான் கவுன்சிலர் பவுல்ராஜ் தனித்து போட்டியிடவே அவருக்கு ஆதரவாக கவுன்சிலர்கள் வாக்களித்தது தெரியவந்தது. தங்களுக்கு மேயர் பதவி கிடைக்கும் என்று ஆசைப்பட்டு கனவோடு காத்திருந்த கவுன்சிலர்களில் சிலரும், தங்கள் சமுதாயத்தை புறக்கணிப்பதாக கருதும் சில கவுன்சிலர்களும் பவுல்ராஜூக்கு வாக்களித்திருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

    இது தவிர முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கானின் ஆதரவு கவுன்சிலர்கள், மாநகர செயலாளருக்கு ஆதரவான கவுன்சிலர்கள் என சிலரும் பவுல்ராஜூக்கு ஆதரவாக வாக்களித்திருக்க கூடும் எனவும், இதனால் பவுல்ராஜ் 23 வாக்குள் பெற்றிருக்கிறார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    நெல்லைக்கு வந்த அமைச்சர் கே. என்.நேரு கவுன்சிலர்களை அழைத்து யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஒரு கருத்தை கேட்டு அதற்கு ஏற்ப செயல்பட்டிருந்தால் நிச்சயமாக போட்டி இருந்திருக்காது எனவும், மேயர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்றும் கவுன்சிலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    ஆனால் கட்சி தலைமையும் முறையாக ஆலோசிக்காமல் மேயர் வேட்பாளராக நிறுத்தியது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர். இனிவரும் மாநகராட்சி கூட்டங்கள் கண்டிப்பாக ஒரு யுத்த களமாக காட்சியளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என கவுன்சிலர்கள் சிலர் கூறுகின்றனர்.

    கவுன்சிலர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்த பின்னரும், போட்டி இல்லாமல் ஒரு மனதாக மேயரை தேர்ந்தெடுக்க முடியவில்லையா என அமைச்சர்களையும், அப்துல் வகாப எம.எல்.ஏ.வையும் கட்சி தலைமை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

    மேலும் பவுல்ராஜூக்கு பின்னால் இருந்து செயல்பட்ட கவுன்சிலர்கள் யார்-யார்? என்பதை கண்டுபிடிக்க தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக புகார்.
    • கவுன்சிலர்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் 5 பேர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக வந்த புகாரை தொடர்ந்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் நோட்டீசு அனுப்பி உள்ளார்.

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 2022-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டு மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அந்தந்த வார்டுகளில் அதிகார துஷ்பிரயோகம் செய்யக் கூடாது.

    புகார்களுக்கு இடமின்றி மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவுரை கூறி இருந்தது. ஆனாலும் ஆங்காங்கே கவுன்சிலர்கள், மேயர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக புகார்கள் வந்தன.

    சமீபத்தில் கூட கோவை, நெல்லை தி.மு.க. மேயர்கள் மீது புகார்கள் வந்த காரணத்தால் அவர்களது பதவி பறிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி (தி.மு.க.) மீதும் புகார்கள் வந்தது. அவர் மீது தி.மு.க. கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

    ஆனாலும் கடைசி நேரத்தில் இதில் சமரசம் காணப்பட்டதால் நம்பிக்கை

    யில்லா தீர்மானம் ஓட்டெடுப்பில் கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. இதனால் மகாலட்சுமியின் மேயர் பதவி தப்பியது.

    இப்போது சென்னை மாநகராட்சியில் உள்ள சில கவுன்சிலர்கள் மீது பல்வேறு புகார்கள் அரசுக்கு சென்ற வண்ணம் உள்ளது. இதனால் ஒவ்வொரு கவுன்சிலரின் செயல்பாடுகள் பற்றி உளவுப்பிரிவு அதிகாரிகள் அரசுக்கு தகவல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர்.

    சென்னை மாநகராட்சியில் 200 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் 3 பேர் இறந்து விட்ட நிலையில் 197 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    புகார்கள் விரிவாக்கப்பட்ட மண்டலங்களான பெருங்குடி, சோழிங்கநல்லூர், மாதவரம், கொளத்தூர் உள்பட பல பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு கொடுப்பதற்கும், வீடுகள் கட்டுவதற்கும் இடையூறாக இருப்பதாகவும் புகார்கள் சென்றுள்ளன.

    ரூ.30 லட்சத்தில் வீடு கட்டினால் குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற ரூ.5 லட்சத்துக்கும் மேல் கேட்பதாகவும் பணம் கொடுக்காவிட்டால் பணிகளை நிறுத்துகின்றனர் என்றும் புகார்கள் சென்றுள்ளது. பணி மேற்கொள்ள வரும் ஒப்பந்த நிறுவன ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுப்பதாகவும், அதிகாரிகளை தரக்குறைவாக பேசி மிரட்டுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த விசயங்கள் அனைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு தெரிய வந்ததும், எந்த கவுன்சிலராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு

    உள்ளார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு கவுன்சிலர்களின் செயல்பாடுகள் பற்றி முழு விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற இப்போதே கட்சித் தலைமை வியூகம் வகுத்து வரும் நிலையில் கவுன்சிலர்களால் அரசுக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருதுகிறார்.

    அதனால்தான் பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் கவுன்சிலர்களின் செயல்பாடுகள் குறித்து உளவுத்துறையிடம் விரிவான அறிக்கை கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு கவுன்சிலர்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

    இதில் சென்னை மாநகராட்சியில் பெரிய அளவில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக 5 கவுன்சி

    லர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர். இப்போது அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு

    உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன் இதற்கான நோட்டீசை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

    29-வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன் (தி.மு.க.), 189-வது வார்டு கவுன்சிலர் பாபு (தி.மு.க.), 195-வது வார்டு கவுன்சிலர் ஏகாம்பரம் (தி.மு.க.) ஆகியோருக்கு நோட்டீசு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

    இது தவிர மேலும் 2 கவுன்சிலர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அதில் ஒரு கவுன்சிலர் வி.ஐ.பி. தொகுதியில் உள்ள பெண் கவுன்சிலர் என்று தெரிய வந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்துக்கே தெரியாமல் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

    அரசின் இந்த நடவடிக்கையால் அனைத்து மாநகராட்சி கவுன்சிலர்களும் கலக்கத்தில் உள்ளனர். தொடர்புடைய கவுன்சிலர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது.

    இதற்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர்களின் பதவியை பறிப்பதில் ஏராளமான சட்ட சிக்கல்கள் இருந்தது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் விதி மீறல்களில் ஈடுபடும் கவுன்சிலர்களின் பதவியை உடனே பறிக்க முடியும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே குற்றச்சாட்டுக்கு உள்ளான கவுன்சிலர்களின் விளக்கத்தை பொறுத்து அவர்களின் பதவி தப்புமா? என்பது தெரியவரும்.

    • மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
    • நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராக உள்ளார்.

    மாநகராட்சியில் மொத்தம் தி.மு.க.வில் 33 பேர், காங்கிரஸ்-1, அ.தி.மு.க.-8, த.மா.கா-1, பா.ம.க.-2, பா.ஜனதா-1, விடுதலை சிறுத்தைகள்-1, சுயேட்சைகள்-4 உறுப்பினர்கள் உள்ளனர். துணை மேயராக காங்கிரசை சேர்ந்த குமரகுருநாதன் உள்ளார்.

    மேயர் மகாலட்சுமி யுவராஜிக்கு சொந்த கட்சியான தி.மு.க. கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். மேயருக்கு எதிராக மொத்தம் 33 கவுன்சிலர்கள் இருந்தனர்.

    அவர்கள், மகாலட்சுமி யுவராஜ் மேயர் பதவியில் இருந்து விலககோரி மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனரிடம் புகார் மனு அளித்தனர். தி.மு.க. எதிர்ப்பு கவுன்சிலர்களை கட்சி மேலிடம் அழைத்து சமாதானம் செய்தும் அவர்கள் தங்களது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

    இதைத்தொடர்ந்து மேயருக்கு எதிராக இன்று (29-ந்தேதி) நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் அது தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் மொத்தம் உள்ள 51 கவுன்சிலர்களில் 30-க்கும் மேற்பட்டோர் சொகுசு பஸ்சில் காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுலா சென்றனர்.

    அவர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டுகளில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்து இருந்தது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் சரியாக காலை 10 மணிக்கு தனது இருக்கையில் வந்து அமர்ந்தார். அவரது இருக்கை அருகில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிக்க பூட்டு போடப்பட்ட பெட்டியும் தயாராக இருந்தது.

    ஆனால் மாநகராட்சி கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. அதிகாரிகள் மட்டும் வந்திருந்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் வெறிச்சோடி கிடந்தது.

    சிறிது நேரத்திற்கு பின்னர் அதிருப்தி தி.மு.க. கவுன்சிலரான 34-வது வார்டு உறுப்பினர் பிரவீன் குமார் மாநகராட்சி கூட்டத்திற்கு வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர் இருக்கையில் அமராமல் நேராக கமிஷனர் செந்தில் முருகனிடம் சென்று கடிதம் ஒன்றை கொடுக்க முயன்றார். ஆனால் அதனை கமிஷனர் வாங்க மறுத்தார். மேலும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர் கடிதத்தை வழங்கும் படி தெரிவித்தார்.

    ஆனால் கவுன்சிலர் பிரவீன்குமார் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட வில்லை. மேலும் அவர் தான் கொண்டு வந்த கடிதத்தை கமிஷனர் செந்தில் முருகன் இருந்த மேஜை மீது வைத்து விட்டு சென்றார். அதனை கமிஷனர் கண்டுகொள்ள வில்லை. அதனை எடுத்து பார்க்கவும் இல்லை.

    மேயர் மகாலட்சுமி யுவராஜிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து போர்க்கொடி தூக்கிய கவுன்சிலர்கள் மற்றும் மேயருக்கு ஆதரவான கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்காததால் தொடர்ந்து பரபரப்பான நிலை நிலவியது. மேயரும் கூட்டத்திற்கு வரவில்லை.

    மேயரை பதவி நீக்கம் செய்ய 5-ல் 4 பங்கு கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். ஆனால் உறுப்பினர்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் அது தொடர்பான விவாதம், வாக்கெடுப்புக்கு ஏற்கப்பட வில்லை. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் மகாலட்சுமி யுவராஜின் மேயர் பதவி தப்பியது.

    கட்சியின் தலைைமக்கு கட்டுப்பட்டு மேயர் மகாலட்சுமி யுவராஜிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சி முன்பு டி.எஸ்.பி.முரளி தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • டெல்லி தலித் மேயர் பதவியை பாஜக அனுமதிக்கவில்லை என கண்டித்து ஆம் ஆத்மி மாநகராட்சியில் போராட்டம் நடத்தியது
    • மேயர் தேர்தல் ரத்து தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர ஆலோசித்து வருவதாக ஆம் ஆத்மி தெரிவித்தது.

    டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். 10 எம்.பி.க்கள் (7 லோக்சபா மற்றும் 3ராஜ்யசபா) மற்றும் 14 எம்.எல்.ஏ.க்கள் (டெல்லி சட்டசபையில் உள்ள மொத்தமுள்ள 70 எம்.எல்.ஏ.க்களில் ஐந்தில் ஒரு பங்கு) மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

    இதன் மூலம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 274 ஆக உள்ளது. ஒரு வேட்பாளருக்கு மேயர் பதவிக்கு 138 வாக்குகள் தேவை .இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 134 கவுன்சிலர்களும் பாஜக வுக்கு 105 கவுன்சிலர்கள் உள்ளனர்.



    ஆம் ஆத்மிக்கு 134 கவுன்சிலர்கள், 13 எம்எல்ஏக்கள் மற்றும் 3 ராஜ்யசபா எம்பிக்கள் உள்ளனர் . இதில் 3 சுயேச்சை கவுன்சிலர்களில் ஒருவரின் ஆதரவு ஆம் ஆத்மிக்கு உள்ளது. இதனால் ஆம் ஆத்மிக்கு ஆதரவு 151 ஆக உயர்ந்தது.

    மேலும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளருக்கு 9 காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆதரவும் கிடைக்க இருந்தது.ஆம் ஆத்மிக்கு மொத்த ஆதரவு 160 ஆக உயரும் சூழ்நிலையால் மேயர் தேர்தலில் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது.




    டெல்லி மேயர்,துணை மேயர் பதவிக்கான தேர்தல் இன்று 26- ந் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில் மேயர் தேர்தலை கவர்னர் அலுவலகம் நேற்று ரத்து செய்தது. டெல்லி தலித் மேயர் பதவியை பாஜக அனுமதிக்கவில்லை என கண்டித்து ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

    ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் "தலித் விரோதி பாஜக" என்ற போஸ்டர்களை ஏந்தி கோஷமிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேயர் தேர்தல் ரத்து தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாக ஆம் ஆத்மி தெரிவித்தது.

    • கவுன்சிலர்கள்,மண்டல தலைவர்களுக்கு சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும் என தி.மு.க. கவுன்சிலர் உலகநாதன் பேசினார்.
    • கவுன்சிலர்கள் ரவீந்திரன், பவுல்ராஜ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மண்ட பத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு தபால் தலை

    தொடர்ந்து தீர்மான ங்களை வலியுறுத்தி மேயர் சரவணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் வேலை வாய்ப்பு முகாம்கள் அதிகளவில் நடத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருவதோடு, முதல் தலை முறை பட்டதாரிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, தமிழக தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா மற்றும் நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக மாநகராட்சியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் மற்றும் சிறப்பு தபால் தலைகளை மத்திய அரசு வெளியிட வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கவுன்சிலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தி.மு.க. கவுன்சிலர் சங்கர் கூறும்போது, எங்களது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஒரு வருடத்திற்கு மேலாக சரிவர குடிநீர் வினியோ கிக்கப்படவில்லை. எனவே உடனடியாக சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    ம.தி.மு.க. கவுன்சிலர் சங்கீதா பேசும்போது, 41-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு முறப்பநாடு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் விரைந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    பாளை மண்டல தலைவர் பிரான்சிஸ் பேசும்போது, பாதாள சாக்கடை 3-ம் கட்ட பணிகள் எப்போது தொடங்கும்? முறப்பநாடு குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகர விரிவாக்க பகுதி களுக்கு விரைந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கவுன்சிலர்கள் மற்றும் மண்டல தலைவர்களுக்கு சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும் என தி.மு.க. கவுன்சிலர் உலகநாதன் பேசினார்.

    கவுன்சிலர் சின்னத்தாய் பேசும்போது, ஒரு சமூகத்தின் மனவலியை மாமன்னன் திரைப்படம் வெளிக்கொண்டு வந்துள்ளது. எங்கள் பகுதியில் அதிகளவு ஓடைகள் உள்ளது. ஆனால் அதனை சீரமைக்காமல் உள்ளது. அண்ணா நகர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. எனவே அங்கு தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். ஓய்வு பெற்ற தூய்மை பணியா ளர்களுக்கு சேர வேண்டிய பணத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    தி.மு.க. கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் கூறும்போது, நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்பட்ட சிந்துபூந்துறை- உடையார்பட்டி சாலையை சீரமைத்ததற்கு நன்றி, சிந்துபூந்துறை மின்தகன மேடையில் கூடுதலாக ஒரு அறை அமைக்க வேண்டும், 1 ஆண்டாக பணிக்குழு கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது. அதனை நடத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திரசேகர் பேசும்போது, மாநகர பகுதியில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் சாப்பாட்டின் அளவு குறைத்து வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 28-வது வார்டுக்குட்பட்ட பூங்கா பகுதியில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    திடீர் போராட்டம்

    முன்னதாக, ரூ.32 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு மேயர் கையெழுத்திடாமல் உள்ளதால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டள்ளதாக கூறி கவுன்சிலர்கள் ரவீந்திரன், பவுல்ராஜ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் கூட்டத்திற்கு செல்லாமல் மாநகராட்சி வளாகத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனே அங்கு சென்ற மேயர் சரவணன் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு கூட்டத்திற்கு சென்றனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் கருப்பசாமி கோட்டையப்பன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், கந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் மேட்டூர் நகர்மன்ற கூட்டம், நகராட்சி தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மேட்டூர் காவிரி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு சின்டெக்ஸ் டேங்க் அமைப் பது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ேமட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் நகர்மன்ற கூட்டம், நகராட்சி தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் காசி விஸ்வநாதர், ஆணையாளர் (பொறுப்பு) சுகவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேட்டூர் காவிரி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு சின்டெக்ஸ் டேங்க் அமைப் பது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டம் தொடங்கிய வுடன், அ.தி.மு.க.வை சேர்ந்த நகர்மன்ற உறுப்பி னர்கள் கிருஷ்ணன், லாவண்யா, கலா, செல்வ ராணி உட்பட 5 பேரும் மேட்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொத்து வரி வசூலிப்பு நடவடிக்கை யில் வரி மேல்முறையீட்டுக் குழுவினரின் நடவடிக் கையால் நகராட்சிக்கு வரு வாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.

    • சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
    • இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர், ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    கூட்டத்தில், வி.சி.க கவுன்சிலர் சாமுராய்குரு பேசுகையில், தேர்தலுக்கு முன்பு தனி அதிகாரியாக இருந்தபோது ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு தற்போது பணம் எடுக்கப்படுகிறது.

    காடையாம்பட்டி மட்டுமல்ல ஓமலூர், மேச்சேரி என அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் போதுமான நிதி இல்லாத நிலையில், பொது நிதியிலிருந்து தேவையான பணிகளுக்கு தீர்மானங்கள் வைக்கப்படுகின்றன.

    பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படாத நிலையில், அ.தி.மு.க கவுன்சிலர் வெங்கடேசனும் இதே கேள்வியை எழுப்பினார். இதனை தொடர்ந்து தி.மு.க கவுன்சிலர்கள் உள்பட அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.

    • திருச்சி மாநகராட்சி 28 பெண் கவுன்சிலர்கள் 3 நாட்கள் தெலுங்கானா மாநிலம் பயணம்
    • திடக்கழிவு மேலாண்மை குறித்து கள ஆய்வு மேற்கொள்ள செல்கின்றனர்

    திருச்சி,

    நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுரையின்படி திருச்சி மாநகராட்சி மற்றும் ஜிஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தியா நாமா "சர்குலேஷன் வேஸ்ட் சொல்யூஷன்" திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, துர்காதேவி, உட்பட பெண் மாமன்ற உறுப்பினர்கள் 28 பேர் தெலுங்கானா மாநிலம் சென்றனர்.அவர்கள் அங்குள்ள சித்தி பேட் நகராட்சியில் வரும் 12-ந்தேதி முதல் 3 நாள் களப்பயணம் மேற்கொண்டு அந்நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'திடக்கழிவு மேலாண்மை' பணிகளை பார்வையிட்டு, அது தொடர்பான திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள உள்ளனர்.இப்பயணம் மேற்கொள்ள உள்ள பெண் மாமன்ற உறுப்பினர்களை மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.

    • பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தகவல் அறிந்ததும் தாசில்தார் செல்வகுமார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.76 கோடி மதிப்பீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை பாதாள சாக்கடை பணிகள் முடிவடையவில்லை.

    மேலும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு மின்விளக்கு அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் இதுவரை மின்விளக்குகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இதனை கண்டித்தும், பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் 9 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு துணை தலைவர் விஜயகுமார் தலைமையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தாசில்தார் செல்வகுமார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் நகராட்சி ஆணையர் கோபிநாத் மற்றும் பாதாள சாக்கடை திட்ட அதிகாரிகளிடம் பணிகள் குறித்து விபரங்களை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து 45 நாட்களுக்குள் திட்டப் பணிகள் முடிப்பதாகவும் மின் விளக்கு பொருத்தும் பணி உடனடியாக தொடங்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் தாசில்தார் செல்வக்குமார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

    • மாநகராட்சி 51 வார்டுகளிலும் தரமான முறையில் சாலைகள் போடப்பட்டு வருகின்றன.
    • ஆட்டோக்களில் கியூ ஆர் கோடு மூலம் சரியான கட்டணம் நிர்ணயம் செய்ய முடியும்

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேயர் சண். ராமநாதன் பேசும்போது, மாநகராட்சி 51 வார்டுகளிலும் தரமான முறையில் சாலைகள் போடப்பட்டு வருகின்றன. பல இடங்களில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

    இன்னும் மூன்று மாதத்தில் ரூ.50 கோடி மதிப்பில் புதிதாக தார் சாலைகள் அமைக்கப்படும். இந்த பணிகளும் விரைவில் முடிவடையும்.

    ஆட்டோக்களில் கியூ ஆர் கோடு மூலம் சரியான கட்டணம் நிர்ணயம் செய்ய முடியும் என்றார்.

    ஆணையர் சரவணகுமார் பேசும்போது, பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் வரும் 1-ந் தேதி நடைபெறுகிறது.

    சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் தேரோட்டத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த முறை தேரோட்டம் அனைவரும் போற்றும் வகையில் நடைபெறும்.

    தேரோட்டத்தை சிறப்பாக நடத்தஜ மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    கவுன்சிலர் கண்ணுக்கி னியாள் :

    தஞ்சை கீழ வாசலில் கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களில் பாலம் இடிந்து விழுந்தது. இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன. சரியான முறையில் பாலம் கட்டப்பட்டதா? என்றார்.

    இதே பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் பேசும்போது மைக் ஆப் செய்யப்பட்டது.

    கோரிக்கை குறித்து பதில் அளித்த

    மேயர் சண். ராமநாதன் :

    கீழவாசல் பாலத்தில் போக்குவரத்திற்கு அனுமதிக்காத நிலையில் தடையை மீறி லாரி டிரைவர் அதிக லோடு மணல் ஏற்றி சென்றதால் விபத்து ஏற்பட்டது. லாரி டிரைவர், உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கட்டுமான பணிக்கு தேவையான பணத்தை லாரி உரிமையாளர் தருவதாக கூறியுள்ளார். பாலம் தரமான முறையில் தான் கட்டப்பட்டது.

    கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட சாந்த பிள்ளை பாலம் தரமான முறையில் கட்டவில்லை என்றார்.

    அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் சாந்த பிள்ளை கேட் பாலம் சேதம் குறித்த புகைப்படத்துடன் கூடிய பேனரை காண்பித்து கோஷம் எழுப்பினர். இதனால் அ.தி.மு.க, அ.ம.மு.க. பா.ஜ.க. கவுன்சிலர்கள் பதிலுக்கு கோஷம் எழுப்பினர்.

    இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் அமளி ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் மாறி மாறி கடும் வார்த்தைகளால் பேசிக்கொண்டனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதையடுத்து அனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக மேயர் சண். ராமநாதன் கூறி சென்றார்.

    அப்போது கூட்ட அரங்கில் மைக், விளக்கு அமைக்கப்பட்டது.

    இதனை கண்டித்தும் கூட்டத்தில் தங்களது கருத்துகளை தெரிவிக்க சுதந்திரமான முறையில் பேச அனுமதிக்க வேண்டும், பேசும்போது மைக்கை ஆப் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க, அ.ம.மு.க, பா.ஜ.க. கவுன்சிலர்களான மணிகண்டன், கோபால், கேசவன், தட்சிணாமூர்த்தி, சரவணன், காந்திமதி ,கலை வாணி, கண்ணுக்கினியாள், ஜெய்சதீஷ் ஆகிய 9 பேரும் மாநகராட்சி கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பால பிரச்சனை குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் பேசும்போது மைக், லைட் ஆப் செய்ததை கண்டித்தும், கவுன்சிலர் கேசவனை தள்ளி விட்ட சம்பவத்தை கண்டித்தும் கோஷமிட்டனர்.

    தகவல் அறிந்து ஆணையர் சரவணகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். நீங்கள் கருத்துகளை கூற சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மேலும் கூட்ட அரங்கில் இருந்து போராட்டம் நடத்துவது முறையல்ல. எனது அறைக்கு வாருங்கள். அங்கு பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றார்.

    இதனை ஏற்றுக் கொண்டு போராட்டத்தில் ஏற்பட்ட கவுன்சிலர்கள் அனைவரும் மாநகராட்சி ஆணையர் அறைக்கு சென்று பேசினர்.

    இந்த சம்பவம் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் புல்லாணி தலைமையில் நடந்தது.
    • காவிரி கூட்டு குடிநீர் திட்ட பொறியாளருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கீழக்கரை 

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் புல்லாணி தலைமையில் பி.டி.ஓ.க்கள் ராஜேந்திரன், கணேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:-

    கவுன்சிலர் பைரோஸ்கான்:- பெரியபட்டினம் சாலைகள் அனைத்தும் பழு தடைந்து உள்ளது. அதை புதுப்பித்து சாலை அமைக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நிழற்குடை அமைக்க இடத்தை சரி செய்து தர வேண்டும். பெரிய பட்டினம் சுடுகாட்டிற்கு பாதை இல்லை என பலமுறை நான் கோரிக்கை வைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் வடக்கு குடியிருப்பில் மயானம் அமைத்துத் தர வேண் டும்.

    கவுன்சிலர் கலாராணி:- தாதனேந்தல் பகுதியில் சம்பு கட்டி பயனின்றி உள்ளது. ஆனால் காவிரி கூட்டுக்குடிநீர் ஊர் மக்களுக்கு கிடைக்கவில்லை.

    பி.டி.ஓ:- காவிரி கூட்டு குடிநீர் திட்ட பொறியாளருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கவுன்சிலர் காங்கிரஸ் திருமுருகன்:- ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரேஷன் கடை கட்ட ஆலங்குளம் பகுதியில் நீதி பெற்றும் அங்குள்ள சமுதாய கட்டிடம் பாழ டைந்து உள்ளது. அதன் அருகில் தான் கட்ட வேண்டும். எனவே சமுதாய கட்டிடத்தை இடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பி.டி.ஓ. ராஜேந்திரன்:- உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கவுன்சிலர் நாகநாதன்:- ரெகுநாதபுரத்தில் அரசு இடத்தில் தனியார் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வாடகைக்கு விடுகிறார். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மக்களைத் திரட்டி பஸ் மறியல் போராட்டம் நடத்துவோம்.

    கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பி.டி.ஓக்கள் பதிலளித்தனர்.

    இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.

    ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் சிவலிங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் இருப்பதாக கூறி கேள்வி கேட்டதால் கடந்த கூட்டத்தில் சேர்மன் ஒருமையில் பேசியதாக கூறி இந்த கூட்டத்தில் அவரது இருக்கையில் அமராமல் செய்தியாளர்கள் அமரும் இடத்தில் அமர்ந்திருந்தார்.

    • தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • தினசரி மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் செய்து வியாபாரிகளை மிரட்டி வருவதாக கூறினர். தொடர்ந்து கவுன்சிலர்கள் தனபால், குமரேசன், பழனிசாமி, பாலசுந்தரம் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை வாகித்தார்.ஆணையாளர் முஸ்தபா, துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கி மன்ற தீர்மானங்களை ஆணையாளர் வாசித்து கொண்டிருந்த போது குறுக்கிட்டு பேசிய பாமக கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய திட்டப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் தினசரி மார்க்கெட் சுங்க வசூல் கட்டணத்திற்கு சீல் வைக்கப்பட்ட முறையான ரசீது வழங்கவேண்டும். ஆனால் தினசரி மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் செய்து வியாபாரிகளை மிரட்டி வருவதாக கூறினர். தொடர்ந்து கவுன்சிலர்கள் தனபால், குமரேசன், பழனிசாமி, பாலசுந்தரம் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    பாமக உறுப்பினர்களை தொடர்ந்து சுயேட்சை உறுப்பினர் சுமதியும் இதே குற்றசாட்டை முன்வைத்து வெளியேறினார். அதனை தொடர்ந்து கூட்டதில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டது.

    ×