என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "court"

    • பாதுகாப்பு காரணத்தை சுட்டிக்காட்டி சிறை அதிகாரிகள் கொசுவலை தர மறுக்கிறார்கள்.
    • தாதா லக்டவாலாவின் கொசு வலை கோரிக்கை தொடர்பான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    மும்பை :

    மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் முன்னாள் கூட்டாளி இஜாஜ் லக்டவாலா. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை கடந்த 2000-ம் ஆண்டு போலீசார் மராட்டிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு சட்டத்தின் (மோக்கா) கீழ் வழக்குப்பதிவு செய்து நவிமும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் சிறையில் கொசு தொல்லை மிதமிஞ்சி இருப்பதால், தனக்கு கொசுவலை வழங்க உத்தரவிட கோரி மும்பை செசன்ஸ் கோர்ட்டில் லக்டவாலா மனு செய்து இருந்தார். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது லக்டவாலா கோர்ட்டில் அஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது நீதிபதியிடம், "சிறையில் கொசு தொல்லை பொறுக்க முடியவில்லை, இதோ பாருங்கள்... சிறையில் பிடித்த கொசுக்களை கொண்டு வந்து இருக்கிறேன்" என்று பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைத்திருந்த செத்துப்போன கொசுக்களை லக்டவாலா காட்டினார்.

    "என்னை போல தான் மற்ற கைதிகளும் கொசு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள், ஆனால் பாதுகாப்பு காரணத்தை சுட்டிக்காட்டி சிறை அதிகாரிகள் கொசுவலை தர மறுக்கிறார்கள். சிறையில் கொசுவலை பயன்படுத்த அனுமதிக்க சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று நீதிபதியிடம் கைதி லக்டவாலா கேட்டுக்கொண்டார்.

    ஆனால் அவரது கோரிக்கைக்கு சிறை நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கைதிகள் தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் காரணமாக கொசுவலை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து தாதா லக்டவாலாவின் கொசு வலை கோரிக்கை தொடர்பான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கொசு வலைக்கு பதிலாக வேறு கொசு விரட்டிகளை பயன்படுத்தி கொள்ளுமாறு லக்டவாலாவை அறிவுறுத்திய கோர்ட்டு, கொசுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    முன்னதாக கொசு அடங்கிய பாட்டிலை தாதா லக்டவாலா கோர்ட்டுக்கு கொண்டு வந்து நீதிபதியிடம் காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேவேளையில் தாதாவின் நூதன முயற்சி அவருக்கு பயன் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • நெல்லையில் மெகா சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்டபணிகள் முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது.
    • முகாமை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குமரகுரு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்கள்.

    நெல்லை:

    இந்தியா முழுவதிற்கும் சட்ட விழிப்புணர்வு, சட்ட உதவி மற்றும் அரசு பல நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கொண்டு செல்லும் வகையில் தேசிய சட்டபணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவிட்டுள்ளது.

    நெல்லையில் மெகா சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்டபணிகள் முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது. முகாமை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குமரகுரு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்கள்.

    முகாமில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு துறைகளான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சமூக பாதுகாப்பு திட்டம், வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை துறை, ஆதி–திராவிட நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூகநலத்துறை, வங்கிகள், மகளிர் திட்டம் வழங்கல் துறை, தாட்கோ, போக்குவரத்து துறை, குழந்தைகள் நலத்துறை, தொழிலாளர் நல ஆணையம், மாற்றுத்திறனாளி நலத்துறை, நெல்லை, பாளையங்கோட்டை மற்றும் மானூர் தாசில்தார் அலுவலகம் வட்டார வளர்ச்சித்துறை, அரசு கேபிள் டி.வி., இ-சேவை மையம் ஆகிய துறைகளில் இருந்து நலத்திட்டங்களை வழங்க இருக்கிறார்கள்.

    மேலும் பொதுமக்கள் இது சம்பந்தமாக மனுக்கள் கொடுத்து பயன் பெறலாம். இத்தகவலை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குமரகுரு தெரிவித்தார்.

    • எல்லா பிரச்சினைகளுக்கும் போலீசாரால் தீர்வு காண முடியாது.
    • எலிகள் மிகச்சிறியதாகவும், போலீசாருக்கு பயப்படாததாகவும் உள்ளன.

    மதுரா :

    உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நெடுஞ்சாலை போலீஸ் நிலையம் சார்பில் பல்வேறு சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்களை செர்கார் கிட்டங்கியில் போலீசார் பாதுகாத்து வந்தனர்.

    இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு விசாரணை நடந்தபோது, கைப்பற்றப்பட்ட 586 கிலோ கஞ்சாவை கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் கூறிய தகவல்கள், நீதிமன்றத்தை அதிர வைத்தது. "எலிகள் மிகச்சிறியதாகவும், போலீசாருக்கு பயப்படாததாகவும் உள்ளன. அவை 581 கிலோ கஞ்சாவை தின்றுவிட்டன. எல்லா பிரச்சினைகளுக்கும் போலீசாரால் தீர்வு காண முடியாது" என்று அவர் வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து, "எலிகளை கட்டுப்படுத்தவும், எலிகள் 581 கிலோ கஞ்சாவை சாப்பிட்டதற்கான ஆதாரங்களை வரும் 26-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கவும்" போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கு முன்பு ஒருமுறை, 195 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக போலீசார் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வீடியோ அனுப்பியதால் போலீஸ்காரர் பணிநீக்கமா? அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பிருந்தனர்.
    • உயர் அதிகாரியை நான் திட்டியதாக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரையைச் சேர்ந்த அப்துல் காதர் இப்ராகிம், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை ஆயுதப்படையில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்தேன். கடந்த ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரத்திடம் எனக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்க கோரி மனு அளித்தேன். இதற்கு போலீஸ் கமிஷனரின் ஒப்புதலை பெற வேண்டும் என்று கூறி சாதாரண விடுப்பு வழங்கினார்.

    இது எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கோரிக்கை வீடியோ வெளியிட்டேன்.

    அது சமூக வலை தளங்களில் வைரலானது. இதையடுத்து என்னை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. எனது தரப்பு கருத்துகளை கேட்காமலேயே இறுதி அறிக்கை தாக்கல் செய்து என்னை நிரந்தரமாக நீக்கிவிட்டனர். இது ஏற்கத்தக்கதல்ல.

    ஆயுதப்படை துணை போலீஸ் கமிஷனர் சண்முகசுந்தரம், டிக்-டாக் வீடியோக்களை சமூக ஊடகங்களில் போலீஸ் சீருடையில் வெளியிட்டார்.

    அவர் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யாமல் எச்சரித்து அதிகாரிகளால் மன்னிக்க ப்பட்டது. இதுபோல பல போலீஸ்காரர்கள் மன அழுத்தத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அதில் சில போலீஸ்காரர்களை மட்டும் டி.ஜி.பி. நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

    நான் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்த வீடியோவை வெளியிட்டதாகவும், முக கவசம் அணியவில்லை என்று கூறியும் என்னை பணி நீக்கம் செய்துள்ளனர்.

    உயர் அதிகாரியை நான் திட்டியதாக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என்னை பணிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன்னி லையில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • 4 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.
    • வழக்குகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    தாராபுரம் :

    தாராபுரம் சர்ச் வீதியில் நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றம் , தாலுகா அலுவலகம் அருகில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என 4நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற ஆணையின் படி நீதிமன்ற பணிகள், தினசரி வழக்குகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த பதிவு செய்யப்பட்ட விபரங்களை வழக்கறிஞர்களும் பொதுமக்களும் தினசரி பார்த்துக் கொள்ளும் வசதிகள் உள்ளன. இந்தநிலையில் நீதிமன்ற வளாக இணையதள சேவையில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இதனால் பணி , வழக்கு விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே இணையதள சேவையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என தாராபுரம் வக்கீல் ராஜேந்திரன் மற்றும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி, 1வருடம் சிறைதண்டணையும், 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
    • இரண்டு மாத காலமாக தலைமறைவாக இருந்த நிலையில் காவல்து றையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, கண்டியன் தெருவில் வசித்து வந்த சின்னதம்பி மகன் பிரபாகரன்.

    இவரிடம் தஞ்சாவூர் மாவ ட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆம்பலாப்பட்டு தெற்குதெரு, கொல்லிபத்தை முகவரியில் வசி க்கும் ஜோதிவேல் மகன் இரனதிவே என்பவர் 25 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, அதற்கு காசோலை கொடுத்து மோசடி செய்ததால் பிரபாகரன், இரனதிவே மீது பட்டுக்கோட்டை குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் கடந்த 2016 ம் ஆண்டு காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்து இரனதிவேக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி, 1வருடம் சிறைதண்டணையும், 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து இரனதிவே பட்டுக்கோட்டை 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, மேல்மு றையீடு தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்றம் விதித்த தண்டணை சரியானது என்றும், இரணதிவேயை கைதுசெய்து சிறையில் அடைக்க கடந்த அக்டோபர் மாதம் 12 ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதனைத் தொ டர்ந்து இரனதிவே கடந்த இரண்டு மாத காலமாக தலைமறைவாக இருந்த நிலையில் காவல்து றையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • நீதிமன்ற தீர்ப்பை தமிழில் வெளியிட வேண்டும்
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும்

    அரியலூர்:

    நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிட வேண்டும் என்று உடையார்பாளையம் வட்டார அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.ஜெயங்கொ ண்டத்திலுள்ள ஒரு தனியார் கூட்டரங்கங்கில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும்,வழக்கு மன்றங்களில் தமிழில் தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும், அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக கற்பிக்க வேண்டும், காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களையும் முழுமையாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு அச்சங்கத்தின் வட்டாரத் தலைவர் சுந்தரேசன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் முன்னிலை வகித்தார்.செயலர் கலியமூர்த்தி அறிக்கை வாசித்தார். பொருளாளர் ராமூர்த்தி வரவு செலவு கணக்குகளை சமர்பித்தார். முன்னதாக சங்க நிர்வாகி வரவேற்றார். முடிவில் ராமையன் நன்றி தெரிவித்தார்.




    • தனது தந்தையின் உயிரை காப்பாற்ற தனது கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
    • தந்தையின் உயிரை காப்பாற்ற சிறுமி நடத்திய சட்ட போராட்டத்தை கோர்ட் சுட்டிக்காட்டியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்தால் அவரை காப்பாற்றலாம் என்றனர்.

    இதையடுத்து உறுப்பு தானம் பெறுவோர் பட்டியலில் அந்த நபர் பதிவு செய்து காத்திருந்தார். ஆனால் உடனடியாக அவருக்கு கல்லீரல் தானம் கிடைக்கவில்லை. எனவே அவரது 17 வயதே ஆன மகள், தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார்.

    ஆனால் மருத்துவ சட்டவிதிகளின் படி மைனர் பெண் உறுப்பு தானம் செய்யக்கூடாது. இதனால் டாக்டர்கள், 17 வயது சிறுமியின் உறுப்பை தானமாக பெற மறுத்தனர். இதையடுத்து அந்த சிறுமி, ஐகோர்ட்டில் மனு செய்தார்.

    அதில் தனது தந்தையின் உயிரை காப்பாற்ற தனது கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். சிறுமியின் மனுவை பரீசிலித்த கோர்ட்டு சிறுமி அவரது, தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய அனுமதி வழங்கியது.

    தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்க சிறுமிக்கு அனுமதி வழங்கிய கோர்ட்டு அவரை பாராட்டவும் செய்தது. தந்தையின் உயிரை காப்பாற்ற சிறுமி நடத்திய சட்ட போராட்டத்தை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

    மேலும் இதுபோன்ற மகளை பெற அவரது பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் என்றும் குறிப்பிட்டது.

    • வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
    • கோர்ட் ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கடந்த 1985ம் ஆண்டு கட்டப்பட்ட போது இப்பகுதியை சேர்ந்த செட்டிநாயக்கன்பட்டி கிராம மக்களின் 50க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. சுமார் 215 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் 1 ஏக்கருக்கு ரூ.1500 வழங்க அரசு முடிவு செய்தது.

    ஆனால் இந்த தொகை தங்களுக்கு போதவில்லை எனவும், கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என 50க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் சப்-கோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் திண்டுக்கல் கோர்ட்டு அறிவித்த தொகையை உறுதிசெய்து கடந்த 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த தொகையை இதுவரை அரசு வழங்கவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அதனை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே நிர்ணயித்த இழப்பீட்டு தொகையுடன், 30 சதவீதம் ஆறுதல் தொகை, 15 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த தொகையும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் இன்று திண்டுக்கல் மாவட்ட கலெகடர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்தனர்.

    அப்போது மாவட்ட கலெக்டர், அலுவலகத்தில் இல்லை. மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் கோர்ட்டு ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர். கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு வருவாய் அலுவலர் தெரிவித்தார். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் சம்மதிக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • நிவாரணத்தொகை வழங்காததால் கோர்ட்டு ஊழியர்கள் கார்களை ஜப்தி செய்ய வந்தனர்.
    • கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை தத்தனேரியை சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு கூடல்புதூரில் சொந்தமாக நிலங்கள் இருந்தன. இந்த நிலத்தில் 1.14 ஏக்கர் மனையை ரெயில்வே நிர்வாகமும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுவதற்காக 1 ஏக்கர் நிலத்தை மாநக ராட்சியும் கடந்த 1973-ம் ஆண்டு ஆர்ஜிதம் செய்து கொண்டது.

    அப்போது அரசாங்கம் சார்பில் நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவிக்கப் பட்டது. இருந்த போதிலும் தரப்படவில்லை. எனவே கருப்பையா மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அப்போது கருப்பையாவுக்கு 20.5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இருந்த போதிலும் அரசாங்கம் நிவாரணத் தொகை வழங்க முன்வரவில்லை.

    எனவே கருப்பையா மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். இதனைத் தொடர்ந்து கலெக்டரின் கார், கடந்த 2019-ம் ஆண்டு ஜப்தி செய்யப்பட்டது. அப்போது 2 மாத காலத்துக்குள் நிவாரண தொகை வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தின் பேரில், அந்த கார் மீட்கப்பட்டது.

    இந்த நிலையில் ெரயில்வே நிர்வாகம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    இதனைத்தொடர்ந்து மதுரை நீதிமன்ற ஊழியர்கள் இன்று மதியம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது கலெக்டர் மற்றும் டிஆர்ஓ ஆகியோரின் கார்களை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. இதனைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கருப்பையா தரப்பிடம் டி.ஆர்.ஒ சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தேசத்தின் நுகர்வோர் நீதி நிர்வாகம் வலிமையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆணைய நீதிபதி பேசினார்
    • பாதிக்கப்படும் நுகர்வோர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்து நுகர்வோர் நீதியைப் பெற நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்

    அரியலூர்:

    அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வழக்குரைஞர்களுக்கான நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த மாநாட்டில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் கலந்து கொண்டு பேசினார். மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை ஏதாவது ஒரு வகையில் நுகர்வோராக உள்ளதால் தேசத்தின் நுகர்வோர் நீதி நிர்வாகம் வலிமையாக இருக்க வேண்டும். இதனை வலுப்படுத்த நுகர்வோர்களும், வழக்குரைஞர்களும் முன் வரவேண்டும். நுகர்வோர் நீதிமன்றங்களில், 60- க்கும் மேற்பட்ட வகையான பிரச்னைகளுக்கு புகார் தாக்கல் செய்யவும், பலவகையான தீர்வுகளை பெறவும் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழிவகை செய்துள்ளது. இணையதளம் மூலம் நடத்தப்படும் விளையாட்டு போட்டி போன்ற தன்மையிலான வணிகங்கள் உட்பட அனைத்து வகையான நுகர்வோரின் இணையதள பயன்பாடுகளில் பிரச்னை ஏற்படும் போது எங்கு அணுகுவது என்ற குழப்பமான நிலை பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மாறிவரும் இணையதள யுகத்தில் ஏற்படும் இத்தகைய சவால்களை முறியடிக்கவும் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழிவகுத்துள்ளது. பாதிக்கப்படும் நுகர்வோர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்து நுகர்வோர் நீதியைப் பெற நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம். பணம் செலுத்தி பெறக்கூடிய பொருள்கள் மற்றும் சேவைகள் குறித்த பிரச்னைகளுக்கு மட்டுமே நுகர்வோர் நீதிமன்றங்களை அணுக இயலும். கட்டணம் இல்லாமல் அரசு வழங்கும் பல்வேறு சேவைகளில் பிரச்னை ஏற்படும்போது மக்களுக்கு நீதி வழங்க தமிழக அரசு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மாநில அளவிலான திருத்தங்களை மேற்கொண்டு நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும் சேவை உரிமை தீர்ப்பாயங்களாக மாற்றலாம். இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டால் நமது மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றார். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். மாநாட்டில், வழக்குரைஞர் சங்கச் தலைவர் மனேகோரன், செந்துறை வழக்குரைஞர் சங்கத் தலைவர் சின்னதுரை, அரியலூர் வழக்குரைஞர் சுகுமார் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அரசு வழக்குரைஞர் ஏ.கதிரவன் வரவேற்றார். முடிவில் அரியலூர் மாவட்ட வழக்குரைஞர் சங்கச் செயலர் வி.முத்துகுமார் நன்றி தெரிவித்தார்.


    • மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்டவரின் செலவுத் தொகையை அரசு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் மரைன் டிரைவ் பகுதியில் ஸ்விக்கி விநியோக நிர்வாகி கடந்த 2020-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, தெரு நாய் ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென குறுக்கே வர, ஸ்விக்கி விநியோக நிர்வாகி மனாஸ் காட்போல் சென்ற மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதியுள்ளது.

    இந்த விபத்தில் நாய் காயமடைய, பெண் ஒருவர் விபத்தை ஏற்படுத்திய மனாஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 279 உள்பட சில பிரிவுகளில் (மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல்) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இது மனாஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தனக்கு எதிரான புகாரை எதிர்த்து மகாராஷ்டிரா மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த ரேவதி மோகித் டேர், பிரித்விராஸ் சவான் கொண்ட டிவிசன் பெஞ்ச், இந்த எஃப்.ஐ.ஆர். நியாயமற்றது என கேன்சல் செய்ததோடு, பாதிக்கபட்ட மனாஸ்க்கு வழக்கு செலவாக 20 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில அரசுக்கு நீதிபதிகள் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளனர்.

    நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    நாய், பூனை அவர்களது உரிமையாளர்களுக்கு குழந்தை அல்லது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் போன்று நடத்தப்படும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. ஆனால், அடிப்படையில் உயிரியல் என்ன சொல்கிறது என்றால், அவைகள் மனித உயிரினங்கள் இல்லை.

    இந்த தண்டனைச் சட்டம் 279 மற்றும் 337 ஆகியவை, மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல், அல்லது எந்த நபருக்கும் காயம் ஏற்படுத்துதல் என்பதை குறிப்பிடுகின்றன.

    குறிப்பாக 279 பிரிவு, மற்றவர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு, உயிருக்கு ஆபத்து விளைவித்தல் ஆகிய குற்றத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே, சட்டப்பூர்வமாக பார்த்தால், இதற்கு பொருந்தாது. மனித உயிரினங்களை தவிர்த்து மற்றவைக்கு காயத்தை ஏற்படுத்தும்போது, இந்த சட்டப்பிரிவுகள் பயன்படுத்த அங்கீகரிக்கப்படவில்லை.

    அந்த எஃப்.ஐ.ஆர். நியாயமான முறையில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெளிவுப்படுத்தப்படுகிறது. எந்தவொரு குற்றமும் வெளிப்படுத்தப்படாத போதிலும், போலீசார் மேற்படி வழக்குப் பதிவு செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட நபருக்கு 20 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என்பது பொருத்தமானதாக இருக்கும் என கருதுகிறோம்.

    இந்த பணம் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காரணமாக இருந்து அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து வசூலிக்க வேண்டும்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×