search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dattajirao Gaekwad"

    • பரோடா மருத்துவமனையில் 12 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது
    • 1952லிருந்து 1961 வரை இந்தியாவிற்காக 11 டெஸ்ட் மேட்சுகளில் தத்தாஜி விளையாடியுள்ளார்

    இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில், மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக வாழ்ந்தவர், தத்தாஜிராவ் கெய்க்வாட் (Dattajirao Gaekwad).

    இன்று தத்தாஜிராவ் கெய்க்வாட், தனது 95-வது வயதில், முதுமை தொடர்பான உடல்நல கோளாறுகளினால் காலமானார்.

    பரோடா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த 12 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தத்தாஜிராவ் கெய்க்வாட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    வலது கர பேட்ஸ்மேனான தத்தாஜி, 1952ல் இங்கிலாந்தின் லீட்ஸ் (Leeds) மைதானத்தில், விஜய் ஹசாரே (Vijay Hazare) தலைமையிலான அணியில், சர்வதேச அளவிலான தனது முதல் கிரிக்கெட் ஆட்டத்தை தொடங்கினார்.


    ஆரம்பத்தில் தொடக்க வீரராக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கியவர், பின்னர் "மிடில் ஆர்டர்" விளையாட்டில் தன்னை நிலைநிறுத்தி கொண்டார்.

    1952லிருந்து 1961 வரை இந்தியாவிற்காக 11 டெஸ்ட் மேட்சுகளை தத்தாஜி விளையாடியுள்ளார்.

    1959ல் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கினார்.

    1961ல் சென்னையில் நடந்த பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இறுதியாக இந்தியாவிற்காக விளையாடினார்.

    பரோடா சார்பில் ரஞ்சி கோப்பை போட்டிகளில் 1947லிருந்து 1961 வரை விளையாடியவர் தத்தாஜி. இப்போட்டிகளில், 3139 ரன்களை குவித்து, 14 சதங்களும் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தத்தாஜி கெய்க்வாட்டின் மகன் அன்சுமன் கெய்க்வாட் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர். அன்சுமன், இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மேட்சுகளில் விளையாடியவர் என்பதும் 90களில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தத்தாஜி கெய்க்வாட்டின் மரணத்தை தொடர்ந்து, "93 வருடம் 349 நாட்கள்" வயதில் வாழும், செங்கல்பட் கோபிநாத், இந்தியாவின் அதிக வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் எனும் அந்தஸ்தை பெறுகிறார்.

    ×