search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devotion"

    • மாநிலம் முழுவதும் இன்று தமிழ்நாடு தினக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றது.
    • ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மிகவும் வளமான கலாச்சாரமாக வளர்ந்து வந்திருக்கிறது.

    தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

    அதனையொட்டி மாநிலம் முழுவதும் இன்று தமிழ்நாடு தினக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றது.

    இந்நிலையில் தமிழ் கலாச்சாரம் குறித்து சத்குரு பேசிய விடியோ ஒன்றை அவரின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

    அதில், "பக்தியில் ஊறி வளர்ந்தது தமிழ் கலாச்சாரம், இதனை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

    அந்த வீடியோவில் மேலும் கூறியிருப்பதாவது:-

    இந்த தமிழ் மண், தமிழ் கலாச்சாரம், தமிழ் இசை, தமிழ் நாட்டியம், தமிழ் கலை, தமிழ் மொழி என்று எதை எடுத்தாலும், தமிழ் என்றால், பக்தி என்கிற ஒரு தெம்பு. பக்தியில்லாமல் தமிழ் கலாச்சாரம் இல்லை. பக்தர்களின் நாடாக இருக்கின்ற தமிழ்நாட்டில், குழந்தை பிறந்தாலும் பக்தி, காது குத்து என்றாலும் பக்தி, வாழ்ந்தாலும் பக்தி, திருமணம் செய்தாலும் பக்தி, இறந்தாலும் பக்தி என்றே இருந்து வருகிறது.

    பக்தியிலேயே ஊறி வளர்ந்திருக்கும் இந்தக் கலாச்சாரம், நெஞ்சத்தில் இருக்கும் பக்தி என்ற தெம்பினால் எவ்வளவோ சாதனைகள் செய்து இருக்கிறது.

    ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மிகவும் வளமான கலாச்சாரமாக வளர்ந்து வந்திருக்கிறது. எவ்வளவு வளம் என்றால்? மற்ற நாடுகள் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு வளமான சமூகமும், கலாச்சாரமும் இங்கு உருவாக்கப்பட்டது.

    உங்களுக்கு தெரிந்து இருக்கும், ஐரோப்பிய நாடுகளில் இருந்தவர்கள் எப்படியாவது இங்கு வந்துவிட வேண்டும் என்ற பெரிய ஆர்வம் இருந்தது. கப்பல் ஏறி வழித் தெரியாமல் அங்குமிங்கும் அமெரிக்கா வரை சென்று, இறுதியில் இங்கு வந்தார்கள். ஏனெனில் உலகிலேயே வளமான நாடாக நாம் இருந்தது தான்.

    இந்த வெற்றிகரமான வாழ்க்கைக்கு மூலமாக இருந்தது நம்முடைய பக்தி. சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் மட்டுமில்லாமல் அனைத்திற்கும் மேலாக முக்கியமாக 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஒளவையார் போன்ற பக்தர்கள் பிறந்து வாழ்ந்த கலாச்சாரம் நம்முடையது.

    இந்த தமிழ் கலாச்சாரம் பக்தியில் ஊறி நனைந்து வளர்ந்திருக்கும் கலாச்சாரம். தமிழ் மக்கள் இதை உணர்ந்து உலகம் முழுவதும் தீவிரமாக இந்த பக்தியை கொண்டு சேர்க்க வேண்டும் . இது மிக மிகத் தேவையானது. தமிழ் கலாச்சாரத்தை குறித்து வெறுமனே பேசிப் பயனில்லை. நமக்கு அதில் பெருமை இருந்தால் அதனை உயிரோடு வைத்திருக்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பக்தி உள்ளவன் உலகில் எந்தக் கடவுளையும் வணங்கலாம்.
    • ராமாயணத்திற்கு முன்பே ராம நாமம் தோன்றியது வால்மீகியால் தான்.

    அவிநாசி :

    அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:- பக்தி என்பது மதங்களுக்கு ம், ஜாதிகளுக்கும் அப்பாற்பட்டது. பக்தி உள்ளவன் உலகில் எந்தக் கடவுளையும் வணங்கலாம். எங்கு வேண்டுமானாலும் பிறந்திருக்கலாம்.

    ராம நாமத்தை ஜெபிக்க இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மனதை ஒருமைப்படுத்தி னால் பக்தியை எதிலும் காணலாம். கல்வியறிவு துளியும் இல்லாத ஒரு வேடர் தான் மகரிஷி வால்மீகி என்பது பலருக்கும் தெரியாது. ராமாயணத்திற்கு முன்பே ராம நாமம் தோன்றியது வால்மீகியால் தான்.

    பக்திக்கு எப்படி மதங்கள் தடையில்லையோ அதே போல தான் மொழிகளும். பல மொழிகளையும் கற்று உணர்ந்த பாரதி தமிழைப் போன்றதொரு மொழி இல்லை. கற்ற மொழியிலேயே தமிழ் தான் சிறந்தது என்று கூறுகிறார். இவ்வாறு கல்யாணராமன் பேசினார். 

    • கற்க கசடற என்ற தலைப்பில் ஆன்மிக பேச்சாளர் கங்கை மணிமாறன் பேசினார்.
    • நாம் சுதந்திரம் பெற்றதே ஆன்மிகவாதிகளின் அருளாசியோடுதான் என்பதை நினைவு கூற வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் கார்த்திகை விழா மன்றம் சார்பில் நவராத்திரி இசை, இலக்கிய கலை விழா நடக்கிறது. விழாவையொட்டி கோவிலில் நாள்தோறும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஆன்மிகம் - கற்க கசடற என்ற தலைப்பில் ஆன்மிக பேச்சாளர் கங்கை மணிமாறன் பேசினார்.அவர் பேசியதாவது:-

    பாரத பூமி, பழம்பெரும் பூமி. ஆன்மிக பூமியாகவும் உள்ளது.நாடு சுதந்திரம் பெற்றபோது, மவுண்ட் பேட்டன் கையில் திருவாவடுதுறை ஆதீன இளைய சன்னிதானம் செங்கோலைக்கொடுத்து, ஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தை பாடி அபிஷேக நீர் தெளித்து, பிரதமரை வாங்கச்செய்தார்கள். நாம் சுதந்திரம் பெற்றதே ஆன்மிகவாதிகளின் அருளாசியோடுதான் என்பதை, இன்றைய இளைஞர்கள் நினைவு கூற வேண்டும்.

    பக்தியால், செயல்களில் செம்மை பிறக்கும். சோம்பல் அழியும். மனம் சொன்னபடி உடல் நடக்கும். அல்லல் ஒழியும். கல்வி வளரும். செல்வம் தேடிவரும் என பாரதியார் தெரிவிக்கிறார்.இந்த அனுபவ உரையை இளைஞர் உலகம் கற்றுக்கொள்ள வேண்டும். நம் முன்னோர்களின் உபதேச வார்த்தைகள் ஒவ்வொன்றும் அட்சர லட்சம் பெறும் என்னும் அறிவுத்தெளிவை நாம் அடைகாத்தால் அது நம்மை சிகரத்தில் ஏற்றும்.நம்பிக்கை என்னும் நந்தா விளக்கு உள்ள வரையில் உலகம் நமக்கு என்னும் நேர்மறைச் சிந்தனை உரமாக மட்டும் அல்ல,வரமாகவும் நின்று நம்மை வாழ்விக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    ×