search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "factory fire accident"

    • தீ விபத்து நடந்த நிறுவனம் அருகே தனியார் வங்கி, தனியார் நிதி நிறுவனம் உட்பட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
    • ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த திண்டல் வேலன் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (40). இவர் ஈரோடு மேட்டூர் ரோட்டில் சொந்தமாக பிளக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் விலை உயர்ந்த பிரிண்டிங் மிஷின்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளன.

    நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்ததும் ஊழியர்கள் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை நிறுவனத்திலிருந்து புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென பிடித்தது.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உரிமையாளர் சுரேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் இந்த விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான சி.என்.சி. மெஷின், அதிநவீன பிரின்டிங் மிஷின், ஏ.சி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்கள் எரிந்து சேதம் அடைந்தன. நல்ல வாய்ப்பாக அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அதே நேரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உரிய நேரத்தில் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீ விபத்து நடந்த நிறுவனம் அருகே தனியார் வங்கி, தனியார் நிதி நிறுவனம் உட்பட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா என தெரிய வில்லை. இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரியை அடுத்த உத்தண்டிகண்டிகை கிராமத்தில் உள்ள உணவுப்பொருள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த உத்தண்டிகண்டிகை கிராமத்தில் தனியார் தொழிற்சாலை உள்ளது.

    இங்கு குழந்தைகளுக்கான உணவு பொருட்கள், சத்து மாவு உள்ளிட்ட பல்வேறு வகை உணவுப்பொருட்கள் தயார் செய்யப்பட்டு வெளிநாடு மற்றும் பிற மாநில, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று இரவு திடீரென தொழிற்சாலை கிடங்கில் இருந்து கரும்புகை வந்தது. இதனை கண்ட காவலாளி தொழிற்சாலை மேலாளருக்கு தகவல் கொடுத்தார். ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. கிடங்கு முழுவதும் தீ பரவி பற்றி எரிந்தது.

    தகவல் அறிந்ததும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சிப்காட், தேர்வாய் கண்டிகை, செங்குன்றத்தில் இருந்து 5 வண்டிகளில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்க போராடினர். தீ விபத்து காரணமாக தொழிற்சாலையில் இருந்து பல அடி உயரத்துக்கு கரும்புகை மேலே எழுந்தது. மேலும் அப்பகுதியை சுற்றிலும் ஏலக்காய் வாசனை வீசியது.

    விடிய, விடிய போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் தொழிற்சாலையில் இருந்த ஏலக்காய், பாதாம், பிஸ்தா, கோதுமை, பார்லி, கம்பு, கேழ்வரகு, சோளம், கடலை, பேரிச்சம்பழம் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. சேதமதிப்பு பல கோடி இருக்கும்.

    மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Tamilnews
    ×