search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "five arrested"

    பாலவாக்கத்தில் கள்ளக்காதல் தகராறில் துணிக்கடை ஊழியர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    சின்ன நீலாங்கரை குப்பத்தை சேர்ந்தவர் சாலமோன். இவர் பாலவாக்கத்தில் உள்ள உறவினரின் துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சாலமோன் கடையில் இருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை வெளியே அழைத்து சென்று காரில் கடத்தி சென்றனர்.

    இது குறித்து நீலாங்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடத்தல் கும்பல் சம்பவம் குறித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர். இதற்கிடையே சாலமோனை கடத்தி சென்ற கும்பல் அண்ணாநகர் பகுதில் காரில் சுற்றுவது தெரிந்தது. இதுபற்றி அண்ணா நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் தீவிர சோதனை நடத்தி காரில் சுற்றிய கடத்தல் கும்பலை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் சிக்கி இருந்த சாலமோனை மீட்டனர்.

    இது தொடர்பாக காரில் இருந்த வெட்டுவாங்கேனியை சேர்ந்த முகமது ஆரீப், துரைப்பாக்கம் விக்னேஷ், கதிர்வேல், பரத் மற்றும் மஞ்சுளா என்ற பெண் ஆகிய 5பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் இந்த கடத்தல் நடந்து இருப்பது தெரிந்தது. சாலமோனுக்கும் வெட்டுவாங்கேனியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது.

    இதனை அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக பிடிபட்ட 5 பேரிடமும் விசாரணை நடக்கிறது.

    கிருஷ்ணகிரியில் தனியார் தங்கும் விடுதிகளில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நகர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் பணம் கேட்டு மிரட்டிய மூர்த்தி மற்றும் உடனிருந்த குணா, பார்த்திபன், கார்த்திக், தினேஷ்குமார் உள்ளிட்ட 5 பேரை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

    மூர்த்தி என்பவர் மீது கடந்த சில வருடங்களாக பல்வேறு புகார்கள் வாய் மொழியாக வந்த நிலையில் இன்று எழுத்துப் பூர்வமாக புகார் வந்ததையெடுத்து சி.சி.டி.வி. ஆதாரங்களுடன் கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்துள்ளனர். 

    கைதான 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    திருவையாறு அருகே பாலியல் தொல்லைக்குள்ளான சிறுமியை மரத்தில் கட்டி வைத்து சூடு வைத்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். #Arrested
    திருவையாறு:

    தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகள் தேவி(வயது 14). (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). ராஜா சொந்தமாக மாட்டு வண்டி வைத்துள்ளார். இதனால் அவர் மணல் ஏற்ற செல்லும்போது தனது மகள் தேவியையும் உடன் அழைத்து செல்வது வழக்கம். அப்போது மணல் ஏற்ற வந்த 16 வயது சிறுவன் ஒருவனுக்கும் தேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த சிறுவன் தேவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் அந்த சிறுவன், தேவியின் வீட்டுக்கு வந்து சென்றதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த கண்ணன் என்ற கோபாலகிருஷ்ணன் தேவியை கண்டித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் கண்ணன் என்ற கோபாலகிருஷ்ணன் தேவியை அடித்து உதைத்து அவரது ஆடைகளை களைந்து அவமானப்படுத்தியதாக தெரிகிறது.

    இதை அறிந்த தேவியின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் கண்ணன் என்ற கோபாலகிருஷ்ணனிடம் சென்று இது குறித்து கேட்டனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தேவியின் தாய் கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தேவி தனது தாயுடன் பேச அதே பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பவரிடம் செல்போனை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மகேந்திரன் செல்போனை கொடுக்கவில்லை. இந்த நிலையில் மகேந்திரனின் செல்போன் திடீரென மாயமானது. இந்த செல்போனை தேவிதான் திருடி சென்று விட்டார் என கருதி மகேந்திரன், அதே பகுதியை சேர்ந்த வித்யா, சிவக்குமார் ஆகியோர் சேர்ந்து தேவியை அங்கு உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்ததுடன் அவரது உடலில் சூடு வைத்ததாக தெரிகிறது. இதில் தேவி மயங்கி விழுந்தார். உடனே மகேந்திரன் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த தேவி தன்னை சுற்றி கட்டப்பட்டிருந்த கயிறை அவிழ்த்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார். பின்னர் அவர், திருவையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா அரசு மருத்துவமனைக்கு சென்று தேவியிடம் விசாரணை நடத்தினார்.

    அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் என்ற கோபாலகிருஷ்ணன்(29), மகேந்திரன்(35), சிவக்குமார்(31), வித்யா(27), மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாலியல் தொல்லைக்குள்ளான சிறுமியை மரத்தில் கட்டி வைத்து சூடு வைத்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Arrested
    பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக, மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். #NationwideRaid #Maoist
    ஐதராபாத்:

    மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி, இடதுசாரி ஆதரவாளர்கள் ஒரு மாநாடு நடத்தினர். அதில் பேசியவர்கள், ஆவேசமாக பேசினர்.

    அதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தின் கோரேகான்-பீமா கிராமத்தில் வன்முறை வெடித்தது. மராத்தா சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். வன்முறையை தூண்டும்வகையில் பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் டெல்லியில் பிடிபட்ட ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “ராஜீவ் காந்தி கொலை பாணியில், பிரதமர் மோடியை கொலை செய்வோம்” என்று மாவோயிஸ்டுகள் எழுதி இருந்தனர். இதன்மூலம், மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டி இருப்பது தெரியவந்தது.



    அந்த கடிதத்தில், ஐதராபாத்தை சேர்ந்த புரட்சிகர இடதுசாரி எழுத்தாளர் பி.வரவர ராவின் பெயர் இருந்தது. இந்நிலையில், அவரை கைது செய்ய புனே போலீசார், நேற்று ஐதராபாத்துக்கு வந்தனர். ஐதராபாத் போலீசாரின் ஒத்துழைப்புடன், வரவர ராவின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான கே.வி.குர்மாநாத், புகைப்பட நிபுணர் கிராந்தி ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    பின்னர், வரவர ராவின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். அவரை ஐதராபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, புனேவுக்கு அழைத்து சென்றனர். புனே கோர்ட்டில் இன்று அவரை ஆஜர்படுத்துகிறார்கள்.

    இதுபோல், மாவோயிஸ்டு ஆதரவாளர்களை குறிவைத்து தெலுங்கானா, மராட்டியம், அரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கார் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த சோதனையில், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.

    மும்பையில் நடந்த சோதனையில், மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா, டெல்லியில் நடந்த சோதனையில் சிவில் உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நடவடிக்கைகளுக்கு, காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில், “இந்த கைதை கண்டிக்கிறோம். உரிய குற்றச்சாட்டு இல்லாமல், எந்த மனித உரிமை ஆர்வலரையும் கைது செய்யக்கூடாது” என்றார்.

    மேலும், பெண் எழுத்தாளர் அருந்ததி ராய், பிரபல வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.  #NationwideRaid #Maoist
    ×