search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flood In Thamirabarani River"

    தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தில் ஏற்கனவே சேதம் அடைந்த பகுதி மீண்டும் வெள்ளத்தில அரித்து செல்லப்பட்டது. #Thamirabaraniriver
    ஏரல்:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பின. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவை குண்டம் தடுப்பணையை தாண்டி விழுந்து ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரானது ஏரல், ஆத்தூர் வழியாக புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது.

    ஏரலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பழமைவாய்ந்த தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. கடந்த 2015, 2016ம் ஆண்டுகளில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தின் நடுவில் அரித்து செல்லப்பட்டது. வெள்ளம் வடிந்த பின்னர், பாலம் அரித்து செல்லப்பட்ட இடத்தில் ஜல்லி கற்கள் மற்றும் சரள் மண்ணை நிரப்பி சீரமைத்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் அதன் அருகில் உள்ள உயர்மட்ட பாலத்தின் வழியாகவே அனைத்து வாகனங்களும் செல்கின்றன. ஆற்றில் தண்ணீரின் அளவு சற்று குறைவாக சென்றது. அப்போது தரைமட்ட பாலத்தில் ஏற்கனவே சேதம் அடைந்த பகுதி மீண்டும் வெள்ளத்தில் அரித்து செல்லப்பட்டது தெரிய வந்தது. எனவே ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தில் வெள்ளம் அரித்து சென்ற பகுதியை காங்கிரீட் கலவையால் முறையாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.  #Thamirabaraniriver

    மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நம்பியாறு அணை நிரம்பியது. தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து 4-வது நாளாகவும் வெள்ளம் செல்கிறது. #Thamirabaraniriver
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள 11 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக அடவி நயினார் அணை பகுதியில் 45 மில்லி மீட்டர் மழையும், குண்டாறு பகுதியில் 28 மில்லி மீட்டர் மழையும், நகர் புறமான செங்கோட்டையில் 19 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

    பாபநாசம் அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பெய்தது. மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 665 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 141.65 அடியாக உள்ளது. அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பை கருதி கால்வாய்கள் மூலம் வினாடிக்கு ஆயிரத்து 20 கன அடியும், கீழ் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 460 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று காலை 147.64 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 156 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 55 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. மேலும் கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் ஆகிய அணைகள் முழு கொள்ளவையும் அடைந்து நிரம்பி வழிகிறது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள நம்பியாறு அணைக்கும், வடக்கு பச்சையாறு அணைக்கும் தண்ணீர் குறைந்த அளவே வந்ததால் அந்த அணைகள் நிரம்பாமல் இருந்தது. நேற்று முன்தினம் பெய்த கனமழையில் நம்பியாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் நம்பியாறு அணைக்கு தண்ணீர் வேகமாக வரத்தொடங்கியது. இன்று அணையின் நீர்மட்டம் 20.6 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 22 அடியாகும். சிறிய அணை என்பதால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணைக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 14 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 15 அடியாக உயர்ந்துள்ளது.

    இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு அணைகளை தவிர மற்ற 9 அணைகளும் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    தொடர் மழை காரணமாக அணைகளில் இருந்து தண்ணீர் அதிகமாக திறந்து விடப்படுவதாலும், மழையினால் காட்டாற்று வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் வந்து சேர்வதாலும், தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி முதல் 10 ஆயிரம் கனஅடி வரை செல்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து 4-வது நாளாகவும் வெள்ளம் செல்கிறது.

    அகஸ்தியர் அருவியில் 4-வது நாட்களாக யாரும் குளிக்க அனுமதிக்கப்பட வில்லை. பாபநாசம் தலையணை பகுதியிலும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    நெல்லை குறுக்குத்துறை முருகன்கோவில், தைப்பூச மண்டபம் ஆகியவைகள் தொடர்ந்து தண்ணீரில் மூழ்கியபடி உள்ளது. இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளார்கள். தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடி சுமார் 8 ஆயிரம் கன அடி நீர் கடலுக்கு செல்கிறது. ஆனாலும் பல்வேறு கால்வாய்களில் இருந்து விவசாயத்திற்கு செல்லும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு செல்லவில்லை என்று விவசாயிகள் கூறி வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த ஒரு நாள் மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    அடவிநயினார்-45, குண்டாறு-28, செங்கோட்டை-19, கடனாநதி-6, பாபநாசம்-4, சிவகிரி-3, ராதாபுரம்-3, சேர்வலாறு-2, தென்காசி-2, கருப்பாநதி-1.5, ராமநதி-1

    இந்த நிலையில் இன்று பகலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் சாரல் மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் அணைகளுக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. #Thamirabaraniriver



    பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் கடனா அணைகளில் இருந்து வரும் உபரி நீர் தாமிரபரணியில் சேர்வதால் இன்று 3-வது நாளாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. #Thamirabaraniriver #Papanasamdam
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த 2 மாதமாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்கனவே பெய்த மழையினால் மாவட்டத்தில் உள்ள கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணை ஆகிய 6 அணைகள் நிரம்பியுள்ளன.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணை நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 149 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து சுமார் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதே போல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 144.85 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 79 அடியாக இருந்தது. இன்று 81.70 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,743 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. எனினும் மலைப்பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக வரும் காட்டாற்று வெள்ளம் அதிகமாக வருகிறது.

    வடக்கு பச்சையாறு அணை 14 அடியாகவும், நம்பியாறு அணை 20.6 அடியாகவும் இருந்துள்ளன. அணைகள் நிரம்பியதால் அங்கு வரும் தண்ணீர் அப்படியே ஆறுகளில் திறந்துவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பெய்து வரும் மழையினால் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்து பாய்ந்தோடும் வெள்ளம்

    பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் கடனா அணைகளில் இருந்து வரும் உபரி நீர் தாமிரபரணியில் சேர்வதால் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று 3-வது நாளாக தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக ஆற்றில் கரையோர மண்டபங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

    நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் தைப்பூச மண்டபம் ஆகியவற்றையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலப்பாளையம் கருப்பந்துறை ஆற்றுப்பாலத்தை தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

    நெல்லையில் தாமிரபரணியின் குறுக்கே பாலம் கட்டும் பணி வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்பை உள்ளிட்ட பல பகுதிகளில் கரையோரம் உள்ள வயல்வெளிகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது.

    மணிமுத்தாறு அருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும், கல்யாண தீர்த்தத்திலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். பாபநாசம் சோதனைச்சாவடி இன்றும் மூடப்ப‌ட்டு உள்ளது.

    அடவி நயினார் அணையில் வினாடிக்கு 1000 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதால் அந்த பகுதிகளிலுள்ள நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.மேலும் மேக்கரை நீர்தேக்கத்தின் நீர் அப்படியே வெளியேற்றபப்டுவதால் பண்பொழி, கடையநல்லூர் சாலையிலுள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல், வாழை,காய்கறிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குண்டாறு அணை ஏற்கனவே கடந்த 2 மாதத்துக்கு முன்பே நிரம்பி வ‌ழிகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணையில் 76 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் அடவிநயினார் அணை பகுதியில் 68 மில்லிமீட்டர் மழையும், செங்கோட்டையில் 66 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. பாபநாசம் அணை பகுதியில் நேற்று 21 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடனா அணையில் 18 மில்லிமீட்டர், ராமநதி அணையில் 10 மில்லிமீட்டர், கருப்பாநதி அணையில் 8 மில்லிமீட்டர், சேர்வலாறு அணையில் 7 மில்லிமீட்டர், சங்கரன்கோவிலில் 3 மில்லிமீட்டர், அம்பையில் 2.4 மில்லிமீட்டர், ஆய்க்குடி, சிவகிரியில் தலா 1 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மழை குறைந்தாலும் தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து உள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, பாவூர் சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி, அம்பை, பணகுடி, களக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குளங்களும் நிரம்பியுள்ளன. கால்வாய்களிலும் அதிகளவு தண்ணீர் செல்கிறது.

    எனினும் வடக்கு கோடைமேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுன்னி கால்வாய்களில் இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை. மற்ற பகுதிகளில் குளங்கள் மற்றும் கால்வாய்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆற்று பாலங்களில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  #Thamirabaraniriver #Papanasamdam

    நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையினால் மாவட்டத்தில் பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நிரம்பியது. #Papanasamdam
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே நெல்லை மாவட் டத்தில் கடந்த மாதம் பெய்த மழையினால் 6 அணைகள் நிரம்பின. இந்த அணைகளில் இருந்து கார்சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஒடிசா வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஏற்கனவே நிரம்பிய கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவி நயினார் ஆகிய 6 அணைகள் மீண்டும் நிரம்பியுள்ளன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து விடிய விடிய பெய்தது. பகல் முழுவதும் கொட்டி தீர்த்த மழை நேற்றும் தொடர்ந்தது. நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளில் இருந்து உபரி நீர் கூடுதலாக ஆறுகளில் திறந்து விடப்பட்டன. இதனால் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து பெய்த மழையினால் மாவட்டத்தில் பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நிரம்பியது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று 137.80 அடியாக இருந்தது. இன்று பாபநாசம் அணை 141 அடியை எட்டி நிரம்பியது. வினாடிக்கு 12 ஆயிரத்து 212 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பாதுகாப்பு கருதி கீழ் அணையில் இருந்து இன்று காலை 7 ஆயிரத்து 365 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சேர்வலாறு அணை பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் பாபநாசம் கீழ் அணை வழியாக வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் 146.52 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணை பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இன்று காலை வரை அங்கு 57 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 910 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் எதுவும் வெளியேற்றப்படவில்லை.

    இதனால் நேற்று 75 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று 79.6 அடியாக உள்ளது. இது போல கடனாநதி-83, ராம நதி-82.50, கருப்பாநதி-71.20, குண்டாறு-36.10, கொடு முடியாறு-52.50, அடவி நயினார்-132.22 என்று உச்ச நீர்மட்டத்தை அடைந்துள்ளது. தற்போது இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அனைத்தும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    இதுவரை நம்பியாறு மற்றும் வடக்கு பச்சையாறு அணைக்கு தண்ணீர்வரத்து இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று நம்பியாறு அணை பகுதியில் 6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் நம்பியாறு அணைக்கு தண்ணீர் வர தொடங்கி உள்ளது. வினாடிக்கு 528 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் சிறிய அணையான நம்பியாறு அணை ஒரே நாளில் 9 அடி உயர்ந்து இன்று காலை 20.57 அடியாக உள்ளது.

    வடக்கு பச்சையாறு அணை பகுதியில் மழை இல்லாத தால் அந்த அணையின் நீர்மட்டம் உயரவில்லை.

    மலை பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பாபநாசம் அணை பகுதிகளில் இன்று காலை வரை 58 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணை பகுதியில் 121 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நகர்புறங்களில் செங்கோட்டை பகுதியில் அதிகபட்சமாக 89 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் கரையோர மண்டபங்கள் மூழ்கியுள்ளன

    தொடர் மழையினால் தாமிரபரணி ஆற்றில் இன்று 2-வது நாளாகவும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அகஸ்தியர் அருவி மற்றும் பாபநாசம் தாமிரபரணி ஆறு பகுதியில் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    அதுபோல அம்பை, சேரன்மகாதேவி, பாளை, நெல்லை பகுதியிலும் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், ஆற்றுக்குள் இறங்கி யாரும் குளிக்கக் கூடாது என்றும் அரசு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    நெல்லை குறுக்குத்துறை முருகன்கோவில் முழுவதும் தண்ணீரில் மூழ்கி மேல்பகுதி மட்டும் தெரிகிறது. தைப்பூச மண்டபங்களும் நீரில் மூழ்கி காட்சியளிக்கிறது. நெல்லை சந்திப்பு ஆற்றுப்பாலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி நடந்து வந்தது. தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கட்டுமான பகுதிகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதனால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன.

    ஆற்றில் வெள்ளம் அதிகரித்து தண்ணீர் கடலுக்கு செல்கிறது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்வாய் குளங்களுக்கு இன்னும் முழு அளவு தண்ணீர் செல்லவில்லை என்றும், அந்த பகுதியில் விவசாய பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    எனவே கடலுக்கு செல்லும் வெள்ள நீரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்வாய் பாசனத்திற்கு முழு அளவு திருப்ப வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    குண்டாறு-121, அடவி நயினார்-110, செங்கோட்டை -89, பாபநாசம்-58, மணிமுத்தாறு-57, சேர்வலாறு-50, தென்காசி-35, கடனாநதி- 32, கருப்பாநதி- 30, ராதாபுரம்-24, அம்பை- 22.6, சங்கரன்கோவில்-15, கொடுமுடியாறு-15, ஆய்க்குடி- 13.2, ராமநதி-12, நாங்குநேரி- 8, நம்பியாறு- 6, நெல்லை-5.5, பாளை-5.4, சிவகிரி-4, சேரன்மகாதேவி- 3.2. #Papanasamdam
    ×