search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "foreign prisoners"

    • சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் ரொக்கம் மற்றும் 57 பவுன் நகைகள், 90 செல்போன்கள், 60 சிம் கார்டுகள், ஒரு மடிக்கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட சில ஆவணங்களையும் பறிமுதல் செய்து சென்றதாக தெரிகிறது
    • முகாம் பாதுகாப்பினை மேம்படுத்த விரிவான கடிதம் ஒன்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கலெக்டருக்கு அனுப்ப உள்ளனர்.

    திருச்சி :

    திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் போலி பாஸ்போர்ட், வெளிநாட்டு பணம் முறைகேடு, ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல், தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் மற்றும் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, நைஜீரியா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் அவ்வப்போது தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம், காத்திருப்பு, தற்கொலை முயற்சி என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்றைய தினம் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் அதிகாலை 5 மணி அளவில் சிறப்பு முகாமில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் போது துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர். சிறைத்துறை ஐ.ஜி. காளிராஜ் மகேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது இலங்கை தமிழர்களான குணசேகரன், பூங்கொடி கண்ணன், திலீபன், ஸ்டான்லி, கென்னடி உள்ளிட்ட சிலரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் குணசேகரன் அடிக்கடி வந்து பார்த்து சென்ற பொன்மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவர் ஏற்கனவே போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் ஆவார். இவருக்கும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள குணசேகரன் என்ற இலங்கை தமிழருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6.45 மணி வரை நீடித்தது. இந்த சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் ரொக்கம் மற்றும் 57 பவுன் நகைகள், 90 செல்போன்கள், 60 சிம் கார்டுகள், ஒரு மடிக்கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட சில ஆவணங்களையும் பறிமுதல் செய்து சென்றதாக தெரிகிறது.

    இது திருச்சி மத்திய ஜெயில் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த சிறப்பு முகாமை பொருத்தமட்டில் முழுக்க முழுக்க கலெக்டர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பணம், நகை கைப்பற்றப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் முகாமில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க என்.ஐ.ஏ. யோசனை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. மேலும் முகாம் பாதுகாப்பினை மேம்படுத்த விரிவான கடிதம் ஒன்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கலெக்டருக்கு அனுப்ப உள்ளனர்.

    இந்த அதிரடி சோதனை கேரளாவில் கடந்த 2021-ம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் கடத்தல் வழக்கு, போலி பாஸ்போர்ட் விவகாரம், முகாம் கைதிகள் விடுவிப்பு என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டிலேயே திருச்சி மத்திய ஜெயிலில் மட்டும்தான் வெளிநாட்டினருக்கான இந்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் போலி பாஸ்போர்ட், போதைப் பொருள் கடத்தல், கள்ளத் தோணியில் இந்தியா வந்தடைதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் வழக்குகளில் இருந்து ஜாமீன் பெற்றாலும் வழக்கு முடியும் வரை சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படாமல் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதான வெளிநாட்டு கைதிகள் புழல் ஜெயிலில் திடீரென மோதிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    புழல் ஜெயிலில் போலி பாஸ்போர்ட், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கிய வெளிநாட்டு கைதிகள் 20-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். போர்ச்சுக்கலை சேர்ந்த டோமிகோய், தயான் மற்றும் துருக்கியை சேர்ந்த மகிர் தெர்வம் ஆகியோர் போலி பாஸ்போர்ட்டு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர்.

    இன்று காலை கைதிகள் அனைவரும் உணவு வாங்குவதற்காக வரிசையில் நின்றனர். அப்போது மகிர் தெர்வத்துக்கும், டோமிகோய், தயாள் ஆகியோருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    ஆத்திரம் அடைந்த மகிர்தெர்வம் அருகில் கிடந்த கல்லால் டோமிகோய், தயாளை தாக்கினார். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறை அதிகாரிகள் அவர்களை விலக்கி விட்டனர். மோதலில் பலத்த காயம் அடைந்த கைதிகள் 2 பேருக்கும் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. கைதிகள் மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    ×