search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujarat riots"

    • குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
    • குஜராத் அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008-ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பில்கிஸ் பானு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த 11 பேரை நன்னடத்தையின் அடிப்படையில் ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதனையடுத்து, 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    ஜனவரி 8-ம் தேதி அவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது. பில்கிஸ் பானு வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றதால், குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் மகாராஷ்டிரா அரசுக்குதான் உள்ளது.

    ஆகவே குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மேலும் குஜராத் அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்ட்டிருந்தது

    இந்த மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் பூயன் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றத்தின் கருத்தில் எந்த தவறும் இல்லை. அதை நீக்கக்கோரும் இந்த மனுவில் எந்த தகுதியும் முகாந்திரமும் இல்லை, இது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

    • பிபிசி இந்தியா சார்பில் குஜராத் கலவரம் தொடர்பாகவும் ஆவணப்படம் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
    • இந்திய பிபிசி நிறுவனத்தின் தில்லி, மும்பை அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன

    பிபிசி இந்தியா என்கிற பெயரில் பிரிட்டன் அரசாங்கத்தின் பொது நிறுவனத்தின் கிளையாக இயங்கிவந்த நிறுவனமே, பிபிசி செய்திகளை வெளியிட்டு வந்தது. அதன் அனைத்து அம்சங்களுக்கும் முழுமையாக பிபிசி நிறுவனமே பொறுப்பாக இருந்துவந்தது. இங்கு பணியாற்றும் ஏழு மொழிகளின் பிரிவுகளைச் சேர்ந்த 200+ ஊழியர்களும் பிபிசி ஊழியர்களாக இருந்துவந்தனர்.

    பிபிசி இந்தியா சார்பில் குஜராத் கலவரம் தொடர்பாகவும் அப்போது முதல்வராக இருந்த தற்போதைய பிரதமர் மோடி குறித்தும் ஆவணப்படம் கடந்தாண்டு வெளியிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதானி குழுமம் தொடர்பான இண்டென்பர்க் அறிக்கையை முன்வைத்து பிபிசி சிறப்புச் செய்திகளை வழங்கியிருந்தது.

    இந்நிலையில், குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படம் வெளியான அடுத்த சில வாரங்களில் இந்திய பிபிசி நிறுவனத்தின் தில்லி, மும்பை உட்பட்ட அலுவலகங்களில் வரி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வருமானவரித் துறை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    விதிமுறை மீறல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டதால் அந்நிறுவனத்தின் அலுவலகங்கள் இந்தியாவில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது

    இதனை அடுத்து தற்போது கலெக்டிவ் நியூஸ் ரூம் என்ற பெயரில் தனியாக செய்தி ஏஜென்சியை தொடங்கி இந்த ஏஜென்சி இந்தியாவில் இருந்து பிபிசி நிறுவனத்திற்கு செய்திகளை தயாரித்து தர இருக்கிறது.

    அதன்படி, பிபிசி செய்திகளை இனி 'கலெக்டிவ் நியூஸ்ரூம்' என்கிற புதிய இந்திய தனியார் நிறுவனம் வெளியிடும். அதாவது செய்தி வெளியீட்டு உரிமையை இந்திய நிறுவனமே கையாளும் எனக் கூறப்பட்டுள்ளது.

    இந்த தனியார் நிறுவனம் வேறொரு நிறுவனம்தான் என்றாலும், பிபிசி தரப்புக்குத் தொடர்பே இல்லாத நிறுவனம் என்றும் சொல்லிவிட முடியாது. நான்கு மூத்த பிபிசி பத்திரிகையாளர்கள் ராஜினாமா செய்துவிட்டு, கலெக்டிவ் நியூஸ்ரூம் நிறுவனத்தை நிறுவியுள்ளனர்.

    இந்த நிறுவனத்தில், 2021 நேரடி அந்நிய முதலீட்டுச் சட்டப்படி, 26 சதவீதம் அளவுக்கு தங்களின் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்குமாறு பிரிட்டன் அரசாங்க நிறுவனமான பிபிசி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

    புதிய நிறுவனம் தற்போது பிபிசிக்கான உள்ளடக்கத்தை உருவாக்கி வெளியிடும், ஆயினும் எதிர்காலத்தில் ஒரு சுதந்திரமான ஊடக நிறுவனமாக பிற நிறுவனங்களுக்கும் உயர்தர உள்ளடக்கத்தை உருவாக்க விரும்புகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிபிசி நியூஸ் தமிழ், பிபிசி நியூஸ் தெலுங்கு, பிபிசி நியூஸ் ஹிந்தி, பிபிசி நியூஸ் மராத்தி, பிபிசி நியூஸ் குஜராத்தி, பிபிசி நியூஸ் பஞ்சாபி ஆகிய 6 இந்திய மொழிகளுடன் பிபிசி ஆங்கிலத்திற்கும் டிஜிட்டல் மற்றும் யூடியூபில் இந்திய நேயர்களுக்கான செய்திகளை கலெக்டிவ் நியூஸ்ரூம் தயாரித்து வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ராம ஜென்மபூமி இயக்கம் தொடர்பாக பகுதியில் பாபர் மசூதி இடிப்பு, இந்துத்துவா அரசியல் பற்றிய குறிப்புகளை என்.சி.இ.ஆர்.டி நீக்கியுள்ளது.
    • ஜனநாயக உரிமைகள்" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில், குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன

    கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து பாபர் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரம் ஆகிய பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.

    அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தின் 8வது அத்தியாயத்தில், ராம ஜென்மபூமி இயக்கம் தொடர்பாக பகுதியில் பாபர் மசூதி இடிப்பு, பாஜகவின் எழுச்சி, இந்துத்துவா அரசியல் பற்றிய குறிப்புகளை என்.சி.இ.ஆர்.டி நீக்கியுள்ளது.

    பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு சொந்தம் என கொடுக்கப்பட்ட தீர்ப்பில் இருந்து இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்சிஇஆர்டி கூறியுள்ளது.

    மேலும், காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி, 1990-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மண்டல் கமிஷன், 1991 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பான பகுதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    "மதச்சார்பின்மை" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில் "2002 இல் குஜராத்தில் கோத்ரா கலவரத்திற்குப் பின்பு 1,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவற்றில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள் என்ற வாக்கியம், 2002ல் குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரத்தின் போது 1,000-த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்" என மாற்றப்பட்டுள்ளது.

    ஜனநாயக உரிமைகள்" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில், குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன

    இந்தப் புதிய மாற்றங்களை 2024- 25 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த என்.சி.இ.ஆர்.டி திட்டமிட்டுள்ளது.

    • குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் எரிப்புச்சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
    • வழக்கு விசாரணை 2010-ம் ஆண்டு தொடங்கி, 13 ஆண்டுகள் நடந்ததும், சம்பவம் நடந்து 21 ஆண்டுகளுக்குப்பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ந்தேதியன்று நடந்த கோத்ரா ரெயில் எரிப்புச்சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கரசேவகர்கள் 58 பேர் கொல்லப்பட்டனர்.

    அதற்கு மறுநாளில், இந்த கொடிய சம்பவத்தைக் கண்டித்து அங்கு முழு அடைப்பு நடந்தது. அப்போது அகமதாபாத்தில் இனக்கலவரங்கள் மூண்டன. அங்கு, நரோடா காம் பகுதியில் வெடித்த கலவரத்தின்போது, வீடுகளுக்கு தீ வைத்ததில் முஸ்லிம் சமூகத்தினர் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக 86 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 18 பேர் வழக்கு விசாரணையின்போது மரணம் அடைந்தனர். ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    முன்னாள் பா.ஜ.க. பெண் மந்திரி மாயா கொத்னானி, விசுவ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஜெய்தீப் படேல், பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவர் பாபு பைராங்கி உள்பட எஞ்சிய 67 பேர் மீதான வழக்கு அகமதாபாத்தில் உள்ள தனிக்கோர்ட்டில் (சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குகள்) நடந்து வந்தது.

    இந்த வழக்கை முதலில் நீதிபதி எஸ்.எச்.வோரா விசாரித்தார். அவர் ஐகோர்ட்டு நீதிபதி ஆனதைத் தொடர்ந்து, ஜோத்ஸ்னா யாக்னிக், கே.கே.பட், பி.பி. தேசாய் ஆகிய 3 நீதிபதிகள் அடுத்தடுத்து விசாரித்த நிலையில் ஓய்வு பெற்றனர். அதைத் தொடர்ந்து நீதிபதி எம்.கே. தவே விசாரித்தார். அவர் இட மாற்றம் செய்யப்பட்டார்.

    கடைசியாக நீதிபதி எஸ்.கே. பாக்சி விசாரித்தார். எனவே இந்த வழக்கை மொத்தம் 6 நீதிபதிகள் விசாரித்துள்ளனர்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் 187 சாட்சிகள், கோர்ட்டுக்கு வரவழைத்து விசாரிக்கப்பட்டனர். இதேபோன்று, குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் அப்போதைய பா.ஜ.க. மூத்த தலைவரும், தற்போதைய மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா உள்பட 57 சாட்சிகள் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டனர்.

    விசாரணை முடிந்த நிலையில், 20-ந் தேதி (நேற்று) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இந்த வழக்கில் நேற்று நீதிபதி எஸ்.கே.பாக்சி தீர்ப்பு வழங்கினார்.

    அவர், முன்னாள் பா.ஜ.க. பெண் மந்திரி மாயா கொத்னானி, விசுவ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஜெய்தீப் படேல், பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவர் பாபு பைராங்கி உள்பட எஞ்சிய 67 பேர் மீதான குற்றச்சாட்டும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானித்து, விடுதலை செய்து உத்தரவிட்டார்.

    இந்த வழக்கு விசாரணை 2010-ம் ஆண்டு தொடங்கி, 13 ஆண்டுகள் நடந்ததும், சம்பவம் நடந்து 21 ஆண்டுகளுக்குப்பிறகு தீர்ப்பு வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது.
    • இதுதொடர்பான சர்ச்சையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இங்கிலாந்து பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது குஜராத் முதல் மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார்.

    இதற்கிடையே லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற தலைப்பில் 2 பகுதிகள் கொண்ட ஆவணப்படம் தயாரித்துள்ளது. முதல் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பானது. அதில், குஜராத் கலவரத்தில் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது இங்கிலாந்து அரசுக்கு தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. 2-வது பகுதி 23-ம் தேதி ஒலிபரப்பாகிறது.

    இந்நிலையில், இந்த ஆவணப்படத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:

    பி.பி.சி. ஆவணப்படம் அடிப்படையற்ற ஒன்றை முன்னிறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட பிரசார படம். அதில் பாரபட்சமும், தொடரும் காலனி ஆதிக்க மனப்பான்மையும் அப்பட்டமாகத் தெரிகிறது.

    இந்தப் பிரச்சினையை மீண்டும் கிளற விரும்புபவர்களின் வெளிப்பாடாக அப்படம் தோன்றுகிறது. அதன் நோக்கமும், அதற்கு பின்னால் உள்ள செயல்திட்டமும் நமக்கு வியப்பளிக்கிறது என தெரிவித்தார்.

    இந்த சர்ச்சையில் பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குஜராத் கலவரம் தொடர்பாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் பிரதமர் மோடி அடைந்த வேதனையை பார்த்தேன் என அமித் ஷா கூறியுள்ளார்.
    • குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என கூறியது.

    புதுடெல்லி:

    அயோத்தியில் கரசேவையில் பங்கேற்றுவிட்டு கரசேவகர்கள் திரும்பியபோது 2002, பிப்ரவரி 27-ம் தேதி குஜராத்தின் கோத்ராவில் அவர்கள் பயணம் செய்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் 59 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து குஜராத்தில் மூண்ட கலவரத்தில் 1,044 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த கலவரத்தை அப்போது குஜராத் முதல்மந்திரியாக இருந்த தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தூண்டினார். அவர் கலவரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தக் கலவரங்களை நடத்தியதில் உயர்மட்ட சதி நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு நடத்திய விசாரணையில் நரேந்திர மோடி உள்ளிட்டோர் குற்றமற்றவர்கள் என 2012-ல் இறுதி அறிக்கை அளித்தது.

    இதற்கிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சமீபத்தில் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என கூறியது.

    இந்நிலையில், குஜராத் கலவரம் தொடர்பான வழக்கு தீர்ப்புக்கு பின் உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    2022 குஜராத் கலவரத்தின் போது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் பிரதமர் மோடி மிகுந்த வேதனை அடைந்ததை நான் பார்த்தேன். பிரதமர் மோடி பெரிய தலைவர். ஆனால் அவர் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. தற்போது உண்மை வெளிவந்துள்ளது.

    பிரதமர் மோடி எவ்வாறு வலியை தாங்கிக்கொண்டார் என்பதை நான் பார்த்துள்ளேன். விஷமருந்திய சிவனைப் போல் வேதனை அடைந்தார் பிரதமர் மோடி. நீதித்துறை விசாரணைகள் நடைபெற்றபோது அவர் எதுவும் செய்யவில்லை. இந்த விவகாரத்தை சிலர் கொதிப்புடன் வைத்திருந்தனர். வழக்கு பா.ஜ.க.வின் பெயரை சரித்தது. ஆனால் அது தற்போது நீங்கப்பட்டுவிட்டது.

    கலவரம் நடந்தபோது நடவடிக்கை எடுக்க குஜராத் அரசு காலம் தாழ்த்தவில்லை. ஆனால், டெல்லியில் சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆனால், யாரும் கைதுசெய்யப்படவில்லை. எங்களை பாரபட்சத்துடன் குற்றம் சாட்டுகின்றனர் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குஜராத் கலவரத்துக்கு மோடி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட 64 பேர் தான் காரணம் என அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
    • குஜராத் கலவர வழக்கில் இருந்து பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் கோக்ரா என்ற இடத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் கரசேவர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் மதக்கலவரம் மூண்டது. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அகமதாபாத் குல்பர்க் சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் இறந்தனர். கோக்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு நடந்த மோசமான வன்முறை இதுதான்.

    இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எக்சான் ஜாப்ரி கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடந்தபோது குஜராத் மாநிலத்தில் மோடி முதல்-மந்திரியாக இருந்தார்.

    இந்த கலவரத்துக்கு மோடி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட 64 பேர் தான் காரணம் என அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது.

    இந்த குழு விசாரணை நடத்தி 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் குஜராத் கலவரத்தில் மோடி உள்ளிட்ட 64 பேருக்கு தொடர்பு இல்லை என்றும் இதற்கான எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து கலவரத்தின்போது கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி.யின் மனைவி ஜக்கியா ஜாப்ரி குஜராத் ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஜகோர்ட்டு 2017-ம் ஆண்டுஅவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இதையடுத்து ஜக்கியா ஜாப்ரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், கலவரம் தொடர்பாக புதிய விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் கான் வில்சர், தினேஷ் மகேஸ்வரி, மற்றும் ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு நடத்தியது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குஜராத் கலவர வழக்கில் இருந்து பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

    இந்த வழக்கில் மேல் விசாரணை தேவையில்லை. மோடி குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்கிறோம். விசாரணை குழு அறிக்கையை ஏற்று மோடி உள்ளிட்ட 64 பேரை விடுவித்ததை உறுதி செய்த ஜகோர்ட்டு உத்தரவு சரி தான் என்று தீர்ப்பு கூறினார்கள்.

    குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் இருந்து மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கின் விசாரணையை 26-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. #Gujaratriots #SChearing #ZakiaJafriplea
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்துக்கு மறுநாள் 28-2-2002 அன்று நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 சிறுபான்மையினர் கோரமாக கொல்லப்பட்டனர்.

    இதுதொடர்பான வழக்கில் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி, முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மொத்தம் 70 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், மாயா கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 32 பேரை குற்றவாளிகள் என கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இதில் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாபு பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 8 பேருக்கு 31 ஆண்டுகளும், 22 பேருக்கு 24 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


    இந்த வழக்கில் அந்நாள் முதல் மந்திரி நரேந்திர மோடி சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவினரால் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாக்கியா ஜாப்ரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இவ்வழக்கு நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, சிறப்பு புலனாய்வு குழுவின் சார்பில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி, இந்த வழக்கில் இரண்டாவது மனுதாரராக சமூக ஆர்வலர் டீஸ்ட்டா சீட்டல்வாட் இணைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கவும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என குறிப்பிட்ட நீதிபதிகள் இவ்வழக்கின் விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #Gujaratriots #SChearing #ZakiaJafriplea

    குஜராத் கலவரம் தொடர்பாக மோடியை விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மீதான வழக்கு 19-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. #GujaratRiots #Modi #SupremeCourt
    புதுடெல்லி:

    குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிக்கப்பட்டது. இதில் கரசேவகர்கள் பலர் இறந்தனர். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. அப்போது ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

    அப்போது குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார். அவர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, நரேந்திர மோடிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால் அவரை 2012-ம் ஆண்டு கலவர வழக்கில் இருந்து விடுவித்தது.



    இந்த கலவரத்தில் முன்னாள் எம்.பி. இசான் ஜாப்ரி என்பவரும் கொல்லப்பட்டார். அவருடைய மனைவி ஜாகியா ஜாப்ரி, நரேந்திர மோடியை கலவர வழக்கில் இருந்து விடுவித்த சிறப்பு புலனாய்வு குழுவின் முடிவை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவருடைய மனுவை குஜராத் ஐகோர்ட்டு கடந்த ஆண்டு நிராகரித்தது.

    இதை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு 19-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. இதனை நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தீபக் குப்தா ஆகியோர் விசாரிக்க உள்ளனர். #GujaratRiots #Modi #SupremeCourt 
    ×