search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal liquor"

    • சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்பதுதான் எங்களது தீர்க்கமான கோரிக்கை.
    • குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள் என்பதே எங்கள் குற்றச்சாட்டு.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து பா.ஜனதா சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்கள். ஆனால் பல இடங்களில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஜனநாயக முறைப்படி போராட்டத்தில் ஈடுபடும் உரிமையை கூட தமிழக அரசு பறித்து விட்டது. இது தொடர்பாக கவர்னரை சந்தித்து முறையிடுவோம்.

    மேலும் கள்ளச்சாராய விற்பனையில் ஆளும் கட்சிக்கு தொடர்பு இருப்பதால் சி.பி.ஐ. விசாரணை தேவை என்பதையும் கவர்னரிடம் வலியுறுத்துவோம் என்று தெரிவித்து இருந்தார்.

    அதன்படி இன்று காலை 11 மணிக்கு அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க. குழுவினர் கிண்டி ராஜ் பவனில் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்தார்கள்.

    இந்த குழுவில் மாநில முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கார்த்தியாயினி, ஆனந்தி பிரியா, முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமி, திருப்பதி நாராயணன், ஏ.ஜி.சம்பத், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அருள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் மாநில அரசை தாண்டி அவர்கள் எதையும் கண்டு பிடிக்க போவது இல்லை. அதனால் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்பதுதான் எங்களது தீர்க்கமான கோரிக்கை. அதை கவர்னரிடம் நாங்கள் வைத்திருக்கிறோம்.

    சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் துறை அமைச்சரோ, முதல்வரோ இன்னும் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை. திராவிட மாடல் ஆட்சி மக்களை எப்படி மதிக்கிறது என்ப தற்கு இதுவே சாட்சி.

    குற்றவாளிகள் யார் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்களை பாதுகாக்கவே சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்கிறார்கள். மடியில் கனமில்லை என்றால் சி.பி.ஐ. விசாரணைக்கு சம்மதிக்க வேண்டியதுதானே.

    குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள் என்பதே எங்கள் குற்றச்சாட்டு. இந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று துறை அமைச்சர் ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
    • ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, வீரசோழபுரம், மாடூர் உள்ளிட்ட கிராமங்களை சேரந்தவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், முண்டியம்பாக்கம், புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சாராய விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும். இதற்கு உறுதுணையாக இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கண்டித்தும், காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டதிற்கு வந்திருந்தவர்கள் மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு வரவேற்புரையாற்றினார். இதில் முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி. காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், சின்னசேலம் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யம்பெருமாள், தியாகதுருகம் ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, மற்றும் நகர செயலாளர் பாபு, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கிளை கழக நிர்வாகிகள், மகளிரணியினர் கலந்து கொண்டனர். 

    • திமுக எம்.எல்.ஏ.க்கள் ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம் என்று கூறி இருந்தனர்.
    • நஷ்ட ஈடாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இருவரும் தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

    கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புள்ளதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் மீது எதிர்க்கட்சிகள் மற்றும் பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு மூல காரணமானவர்கள் என்று சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் குற்றம்சாட்டி இருந்தனர்.

    கள்ளச்சாராயம் குடித்து பலியோனோரின் குடும்பத்தை வைத்து அன்புமணி ராமதாஸ் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் என்று குற்றம்சாட்டியிருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள், ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம் என்று கூறி இருந்தனர்.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    நஷ்ட ஈடாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இருவரும் தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் எனவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் சார்பில் வக்கீல் வில்சன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    • சாராயத்தில் அதிக போதைக்காக மெத்தனால் கலந்திருந்ததால் விஷமாக மாறியது.
    • அனைவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைகள் மற்றும் புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ம் தேதி நள்ளிரவு முதல் விடிய விடிய விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி 150-க்கும் மேற்பட்டோர் குடித்தனர். அந்த சாராயத்தில் அதிக போதைக்காக மெத்தனால் கலந்திருந்ததால் விஷமாக மாறியது. இதனால் அதை குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைகள் மற்றும் புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 55 போ் உயிாிழந்தனா்.

    இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சோ்ந்த மதன் (வயது 46) என்பவா் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிாிழந்தாா். தொடர்ந்து பகலில் சேஷசமுத்திரத்தை சேர்ந்த சாமுண்டி (70) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவா்களின் எண்ணிக்கை 57 ஆக உயா்ந்துள்ளது.

    மேலும் நேற்று மாலை 3 மணி நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 111 பேரும், சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 29 பேரும், புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் 12 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தம் 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 17 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    கள்ளச்சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சக்திவேல், கண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசாா், சக்திவேலின் வீட்டில் இருந்து சில பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தொிகிறது.

    • நம் நாடு, தெரு முழுக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது தவறாக தெரியவில்லையா.
    • உங்களால் பிளாஸ்டிக் பாட்டிலை ஒழிக்க முடிந்ததா... எப்படி கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்.

    நடிகர் ரஞ்சித் அவர்கள் இயக்கி நடித்திருக்கும் படம் குழந்தை C/O கவுண்டம் பாளையம். இந்த படம் ஜூலை 5 முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் கோவையில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

    தேர்தல் வர 20 மாதங்கள் தான் உள்ளது. அதனால் 10 லட்சம் என்ன போட்டி போட்டு ஒரு ஆளுக்கு 1 கோடி கூட கொடுக்க வாய்ப்பு உள்ளது.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த உயிர்களை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது.

    கள்ளச்சாராயம் குடித்து இறந்துவிட்டதாக கோபப்படுகிறீர்கள். நம் நாடு, தெரு முழுக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது தவறாக தெரியவில்லையா. இவன் இப்பவே செத்து விடுவான். இவன் 5 வருடம் கழித்து சாவான். இது ஸ்லோ பாஸ்சன்.

    உங்களால் கள்ளச்சாராயத்தை எல்லாம் ஒழிக்கவே முடியாது. உங்களால் பிளாஸ்டிக் பாட்டிலை ஒழிக்க முடிந்ததா... எப்படி கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்.

    இது யாருக்கும் தெரியாமலோ, அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களுக்கு தெரியாமலோ நடந்திருக்காது.

    இது எவ்வளவு வருத்தப்படக்கூடிய சம்பவம். இன்றைக்கு காலையில் எங்காவது விற்றுக்கொண்டிருப்பார்கள். இது முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள். இப்போதும் எங்காவது சரக்கு ஓடிக்கொண்டிருக்கும் என்று கூறினார்.

    • கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55-ஆக உயர்ந்துள்ளது.
    • கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55-ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 140 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்

    இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியான விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கச்சிராப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    சாராயத்தில் மெத்தனால் கலந்தவர்கள் என்ற அடிப்படையில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவமனையில் 140 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • கவலைக்கிடமாக இருந்த 5 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனை தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது. சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அனைத்து வித பரிசோதனைகளும் மேற்கொள்கிறோம். உரிய மனநல ஆலோசனைக்கு பிறகே வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறினார்.

    இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 140 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 56 சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கவலைக்கிடமாக இருந்த 5 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

    அரசின் ஆணைப்படி பாதிக்கப்பட்டு இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும்.

    கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று வரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் பலியாகினர்.
    • இதுகுறித்து மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

    இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்திற்கு நேரில் சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பா.ஜ.க. சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்றார்.

    இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியதாவது:

    தமிழகஅரசும் , காவல்துறையும் விசாரணை நடத்தினால் கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மை வெளிவராது. எனவே மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசும், போலீசும்தான் பொறுப்பேற்க வேண்டும். போலீசுக்கு தெரிந்தே பொதுமக்கள் புழங்கும் இடத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

    கடந்த ஆண்டு மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியாகினர். பள்ளி மற்றும் காவல்நிலையம், நீதிமன்றம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தி.மு.க.வினர் துணையுடன் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    • கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
    • கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியது.

    தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்திற்கு நேரில் சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் கூறினார். அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:

    தமிழகத்தில் சாராயம் அனைத்து இடங்களிலும் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது.

    கடந்த ஆண்டு மரக்காணத்தில் நடந்தபோது இந்த மரணம் விஷ சாராயத்தின் கடைசி மரணம் என்றார் முதல்வர்.

    மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.

    மதுவை ஒழிப்போம் என்றார்கள், ஆனால் டாஸ்மாக் கடையில் வியாபாரம் அதிகரித்து வருகிறது.

    உடனடியாக 1000 டாஸ்மாக் கடைகளை நாளைய தினமே மூட அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டியது அரசின் முதல் கடமை. பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் சந்தித்திருக வேண்டும்.

    விஷ சாராய விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப் போக்கை இது வெளிப்படுத்தி இருக்கிறது. விஷ சாராய மரணத்தை மாவட்ட நிர்வாகம் மூடி மறைக்க பார்க்கிறது. அரசை பாதுகாப்பதே ஆட்சியர்களின் வேலையாக உள்ளது.

    விஷ சாராயம் விவகாரம் தொடர்பாக விவரங்களை சேகரித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

    விஷ சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை.

    விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும்.

    குழந்தைகளின் கல்விச் செலவுக்கு நிதியுதவி கொடுக்கப்படும். கிராம பகுதியில் விஷ சாராய உயிரிழப்பு நடக்கவில்லை; நகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ.க. சார்பில் முடிந்தவரை தேவையான உதவிகளை செய்வோம் என தெரிவித்துள்ளார்.

    • தேர்தலை மட்டுமே அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது.
    • கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உருவாக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

    கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

    இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    * மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

    * குறைந்த விலையில் கிடைத்ததால் பலரும் கள்ளச்சாராயம் அருந்தி உள்ளனர்.

    * டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும் என பெண்கள் கூறுகின்றனர்.

    * தேர்தலை மட்டுமே அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது.

    * தேர்தல் அரசியல் மட்டும் தான் தமிழ்நாட்டில் நடக்கிறது. எந்த புதிய திட்டமும் இல்லை.

    * அதிகாரிகளை மாற்றி விட்டால் மட்டும் போன உயிர்கள் திரும்பி வந்துவிடுமா?

    * எந்த சம்பவம் நடைபெற்றாலும் அதிகாரிகள் தான் பலிகடாவா? அதிகாரிகளை இடம் மாற்றுவதுதான் நடவடிக்கையா?

    * கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உருவாக்கப்பட்டுள்ளது.

    * போதையில்லா தமிழ்நாடு உருவாக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவானது? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சென்ற பிரேமலதா பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் சிகிச்சை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
    • பிரேமலதாவை மருத்துவமனைக்குள் அனுமதித்து தங்களை உள்ளே விடவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார்.

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சென்ற பிரேமலதா பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் சிகிச்சை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

    இதற்கிடையே கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் போலீசார், தேமுதிகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிரேமலதாவை மருத்துவமனைக்குள் அனுமதித்து தங்களை உள்ளே விடவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

    மற்ற கட்சியினரை உள்ளே அனுமதித்த போலீசார் தேமுதிகவினரை அனுமதிக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர் வாக்குவாதத்தை அடுத்து தேமுதிகவினரை போலீசார் வெளியேற்றினர்.

    • ஆண்டும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அரங்கேறியுள்ளன.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உயிரிழப்பு காரணமாக கள்ளக்குறிச்சி முழுக்க கண்ணீர் வெள்ளம் பூண்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இதே போன்று கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அரங்கேறியுள்ளன.

    இந்த சம்பவம் தொடர்பாக கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     


    "இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது காவல்துறையின் கவனக்குறைவால் நடந்திருப்பது கண்டறியப்பட்டு, கள்ளக்குறிச்சி எஸ்.பி. உள்பட பத்து காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவவரும் கைது செய்யப்பட்டு தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். யாருக்கும் அரசு பரிவு காட்டாது," என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

     


    ஒவ்வொரு ஆண்டும் கள்ளச்சாராய மரணங்கள் மாநிலத்தை துயரத்தில் ஆழ்த்தும் நிலையில், ஒவ்வொரு முறையும் அதிகாரிகளை மாற்றுவது, நிவாரணம் அறிவிப்பது உள்ளிட்டவைகளை நடவடிக்கைகளாக எடுப்பதையே ஆளும் அரசுகள் வாடிக்கையாக கொண்டுள்ளன.

    ஏற்கனவே கள்ளச்சாராயம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதோடு, யூடியூபர் சங்கர் இந்த விவகாரம் குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றம்சாட்டி இருந்த நிலையில், அதற்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

    தொடர் குற்றச்சாட்டுகளுக்கு அரசு முறையாக செவி சாய்க்காமல் இருந்ததே, இத்தனை உயிரிழப்புகளுக்கு வழிவகுத்துள்ளதாக எதிர்க்ட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், உயிரிழப்புகளை கவனத்தில் கொண்டேனும், தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தக்க நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடையே எழுந்துள்ளது.

    ஆளும் அரசு மீது விழுந்துள்ள கறையை முதலமைச்சர் எவ்வாறு துடைத்தெறிய போகிறார். கள்ளச்சாராயமோ, விஷ சாராயமோ... எப்படி பெயர் வைத்து அழைத்தாலும் அது ஒரு உயிர் கொல்லியே. இத்தனை உயிர்கள் பறிபோனதற்கு யார் காரணம் என்று தெரிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால்....இதுவும் கடந்து போகும் என மக்கள் விடமாட்டார்கள்..காரணம், இது தொடர்கதையாகும் என்பதால். என்ன செய்ய காத்திருக்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....

    ×