search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Rains"

    • கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கேரளா மாநிலத்தில் வருகிற 22 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவர் மாயமாகி உள்ளார்.

    மழை பாதிப்பு காரணமாக 224 பேர் மீட்கப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கனமழையால் 97 வீடுகள் சேதமுற்றும், ஒரு வீடு முழுமையாக இடிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    தொடர் கனமழை காரணமாக ஆலப்புழா, இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கண்ணூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

    காங்கிரஸ் தொண்டர்கள் மக்களுக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டும் என்றும் ராகுல் காந்தி அறிவுறுத்தி உள்ளார்.
    புதுடெல்லி:

    கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. பல்வேறு சாலைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டிருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

    இந்நிலையில், கேரள மக்களை கவனமுடன் இருக்கும்படி காங்கிரஸ் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

    கனமழை பெய்து வரும் கேரளாவில் நமது சகோதர, சகோதரிகள் தைரியமாக இருக்கிறார்கள். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கவனமாக இருங்கள், அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றுங்கள்’ என ராகுல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

    காங்கிரஸ் தொண்டர்கள் மக்களுக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டும் என்றும் ராகுல் காந்தி அறிவுறுத்தி உள்ளார்.

    சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை சாத்தியமற்றது என தேவசம் போர்டு தலைவர் கூறியுள்ளார். #Sabarimala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக பம்பா உள்ளிட்ட பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சேதத்தைக் கணக்கில்  எடுத்துக்கொண்டு, நவம்பர் மாதம் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தைக்  கட்டுப்படுத்தவும், ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கவும் கேரள காவல்துறை மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.

    நாளொன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சபரிமலை கோயிலுக்கு அனுமதிக்கக் கோரியும், காவல் துறையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு  அறிமுகப்படுத்தி இருக்கும் "விர்ச்சுவல் கியூ" மூலமாகப் பக்தர்களின் பதிவைக்  கணக்கிடவும்  காவல்துறை வலியுறுத்தியது.

    இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திருவாங்கூர் தேவஸ்தானத்தின் தலைவர் பத்மகுமார், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சபரிமலையில், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உண்டாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

    ஆன்லைன் தரிசன பதிவு முறை குறித்து பல்வேறு புகார்கள் வருவதால், அந்த முறை நீக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கமான முறையிலேயே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 

    திருப்பதியை போல சபரிமலையிலும் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மகரவிளக்கு சமயங்களில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்கு வருகின்றனர். இதனை, 40 ஆயிரமாக எப்படி குறைக்க முடியும் என பத்மகுமார் கூறினார். 

    வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பம்பை - திருவேணி பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். 
    கேரள மாநிலத்தில் வரலாறு காணாத பலத்த மழை பெருமளவு சேதத்தை ஏற்படுத்திய நிலையில், வெள்ளத்தில் பாழடைந்த சாதனங்களை சரி செய்ய அசுஸ் சிறப்பு ஏற்பாடு செய்திருக்கிறது. #KeralaFloodRelief #ASUS



    கேரளாவில் வரலாறு காணாத பலத்த மழை, அம்மாநிலத்தில் பெருமளவு பொருட்சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொழில்நுட்ப நிறுவனங்களான சியோமி, ஹானர் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மீட்பு பணிகளில் உதவ முன்வந்திருக்கின்றன். இந்த நிறுவனங்கள் தண்ணீரில் பாழாகி போன ஸ்மார்ட்போன்களை குறைந்த கட்டணம் அல்லது இலவசமாக சரி செய்து வழங்குவதாக தெரிவித்தன.

    அந்த வகையில் அசுஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி தண்ணீரில் பாதிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை கூலி இல்லாமல் சரிசெய்து வழங்குவதாக அறிவிவித்துள்ளது. அசுஸ் சார்பில் மாநிலம் முழுக்க சர்வீஸ் முகாம்கள் அமைக்கப்படுகிறது. இவை அசுஸ் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் நிறுவப்படுகின்றன.

    தண்ணீரில் பாதிக்கப்பட்ட சாதனங்களை சரி செய்வதற்கான கூலி வாங்காமல் இலவசமாகவும், வாரண்டியில் உள்ள சாதனங்களின் உதிரிபாகங்களுக்கு 50% தள்ளுபடி அறிவித்துள்ளது. வழக்கமான கோளாறுகளை சரி செய்ய எவ்வித கட்டணமும் வசூலிக்காது. எனினும் பாகங்களை மாற்றுவதற்கு பாதி கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும்.

    உதிரிபாகங்களுக்கான 50% தள்ளுபடி வாரண்டியில் உள்ள சாதனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அந்த வகையில் வாரண்டியில் இல்லாத சாதனங்களை சரி செய்யும் போது உதிரிபாகங்களுக்கான முழு கட்டணத்தை செலுத்த வேண்டும். அசுஸ் சிறப்பு சர்வீஸ் முகாம்கள் ஆகஸ்டு 30-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    கேரள வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கூகுள் சார்பில் ஏழு கோடி ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloodRelief



    கேரளா மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ள சேதங்களை சரி செய்ய கேரளாவுக்கு ஏழு கோடி ரூபாய் வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

    கூகுள்.ஓஆர்ஜி (Google.org) மற்றும் கூகுளர்ஸ் (Googlers) சார்பில் ஒரு மில்லியன் டாலர்கள் கேரளாவுக்கு வழங்கப்படும் என கூகுள் தெற்காசியா மற்றும் இந்தியாவுக்கான துணை தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்தார். கேரள வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உதவியாக கூகுள் பேரிடர் மீட்பு குழு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அந்த வகையில் கூகுள் பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்யப்பட்டு இதுவரை 22,000 பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆனந்தன் தெரிவித்தார். கேரளாவில் மே 29-ம் தேதி துவங்கிய பருவமழையில் சிக்கி சுமார் 417 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 8.69 லட்சம் பேர் மாநிலம் முழுக்க அமைக்கப்பட்ட 2,787 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    முன்னதாக, கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு ஏழு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்தது. 

    “கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மனமுடைந்து போனோம். ஆப்பிள் சார்பாக கேரள முதல்வர் பொது நிவாரண நிதி கணக்கு மற்றும் மெர்சி கிராப்ஸ் இந்தியா எனும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.7 கோடி வழங்கப்படுகிறது. இந்த நிதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், வீடு இழந்தோருக்கு புதிய வீடுகள், மற்றும் பள்ளிக் கூடங்களை கட்ட உதவியாக இருக்கும்,” என ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

    மேலும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம், ஆப் ஸ்டோர் மற்றும் ஐடியூன்ஸ் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் மெர்சி கிராப்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு உதவ பிரத்யேக பேனர்களை பதிவிட்டது. ஆப்பிள் வாடிக்கையாளர்கள் மெர்சி கிராப்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு 5, 10, 25, 50, 100 அல்லது 200 டாலர்கள் வரை நிதி வழங்கலாம் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
    கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவர் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். #KeralaFlood #MKStalin #DMK
    சென்னை:

    திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கேரள மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி இதுவரை 357 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். இயற்கை பேரிடர் அம்மாநில உட்கட்டமைப்புக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்நிலையில் கேரள மாநில மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்கு உதவிடும் வகையில் திமுகவின் சார்பில் ஏற்கெனவே ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது தவிர கேரள மாநில கட்சி நிர்வாகிகளும், இங்குள்ள கட்சி தோழர்களும் நிவாரண உதவிகளையும், பொருட்களையும் வழங்கி வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக, கேரளாவில் நிகழ்ந்துள்ள இந்த மிகக் கடுமையான பேரிடரால் அம்மாநில மக்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற நேரத்தில், அம்மாநில சீரமைப்புப் பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை கேரள மாநில வெள்ள நிவாரண நிதியாக அளிப்பார்கள்'' என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    கேரளாவில் தென்மேற்கு பருபமழையால் வீடுகளை இழந்த 27 ஆயிரம் பேர் வயநாட்டில் உள்ள 219 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    கூடலூர்:

    கேரளாவில் கடந்த 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பெய்த கன மழை மாநிலத்தையே புரட்டிபோட்டது. வீடுகளை இழந்த 7 லட்சம் பேருக்கு மேல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நீலகிரியொட்டியுள்ள கேரள மாநிலம் வயநாட்டில் 219 முகாம்களில் 27 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாடு பகுதியில் கனமழையுடன், நீர் இடி, அணை திறப்பு ஆகியவைகளால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புக்குள் புகுந்தது.

    மானந்தவாடி அருகே பிலாக்காவு, பூசாரிக்கொல்லியில் நீர் இடி விழுந்தது. இதனால் 200 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். மானந்தவாடி, பனமரம், வண்டியாம்பேட்டை ஆகிய பகுதிகளில் 18 நாட்களாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    கால்நடைகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்சென்றன. தற்போது வயநாடு பகுதியில் 219 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 27 ஆயிரத்து 267 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் வெளியே வர முடியாத மற்றும் பேரிடர் மீட்புக்குழு செல்லாத மானந்தவாடி எஸ்டேட் பகுதியில் சேவா பாரதி தன்னார்வலர்கள் மீட்பு மற்றும் உணவுப்பொருட்களை வழங்கினர்.

    இந்த பகுதியில் மழை தற்போது குறைந்து காணப்பட்டாலும் நீர் இடி ஆபத்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருப்பதால் மேலும் பாதிப்படையலாம் என்று அஞ்சப்படுகிறது.

    புரட்டிபோட்ட மழையால் கேரள மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகள் சேதம் அடைந்து துண்டிக்கப்பட்டது.

    பாலக்காடு- மலம்புலா சாலை, பாலக்காடு- திருச்சூர் சாலை, பாலக்காடு பொன்னானி சாலை, மண்ணார்க்காடு- கோவை சாலை, திருச்சூர்- எர்ணாகுளம், மூணாறு- மறையூர்- உடுமலை சாலை, ஆலப்புழா- மாவேலிக்கரை சாலை என பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
    கொச்சியில் மழை வெள்ளத்தால் விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால், கொச்சி கடற்படை தளத்தில் இருந்து இன்று விமான சேவை தொடங்கியது. #KeralaRains #KochiAirport
    கொச்சி:

    கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கனமழை பெய்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அணைகள் அனைத்தும் நிரம்பி அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காணப்படுகிறது. முப்படைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து  உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் சென்ற வண்ணம் உள்ளன.



    இந்த நிலையில் கடலோர மாவட்டமான கொச்சியில் இடைவிடாமல் மழை மற்றும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் புகுந்தது. இதனால் கொச்சி விமான நிலையம் கடந்த 14-ம் தேதி மூடப்பட்டது. இதனால் கொச்சி வர  வேண்டிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் அல்லது கோழிக்கோடு விமான நிலையத்துக்கு திருப்பி  விடப்படுகின்றன.

    இந்நிலையில் கொச்சி விமான நிலைய வளாகத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் வடியாத நிலையில், கொச்சியில் உள்ள கடற்படை விமான தளத்தை, பயணிகள் விமானம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் விமானப்படை  விமானங்கள் வந்து செல்வதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.  அதன்படி இன்று முதல் கொச்சி கடற்படை விமான தளத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டது. கடற்படை தளத்தில் முதல் வர்த்தக விமானம் இன்று காலை தரையிறங்கியது. #KeralaRains #KochiAirport #KochiNavalAirStation 
    வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள கேரள மக்களின் சோகத்தில் பங்கெடுத்துவரும் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பாராட்டுகிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #KeralaRains #KeralaFloods #StandWithKerala #PMModi
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பெருஞ்சேதங்களை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி உடனடி நிவாரணமாக 500 கோடி ரூபாய் அளிப்பதாக அறிவித்தார்.

    பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்துள்ளதாவது:-

    இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பை எதிர்த்து போராடும் கேரள மக்களின் மனவலிமைக்கு தலை வணங்குகிறேன். எதிர்மறையான இந்த நிலைமையிலும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுவரும் அதிகாரிகளுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.



    மேலும், எதிர்பாராத இந்த சோகத்தில் கேரளாவுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஒருமைப்பாட்டுடன் ஒட்டுமொத்தமாக பரவலான ஆதரவை தெரிவித்துவரும் நாட்டு மக்களை பாராட்டுகிறேன்.

    அபாயகரமான இடங்களில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு முன்னுரிமை தந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், எல்லை பாதுகாப்பு படையினர், மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு தேவையான உதவிகளை விமானப்படை, ராணுவம், கடற்படை மற்றும் கடோலர காவல் படையினர் செய்து வருகின்றனர்.

    கேரளாவுக்கு உடனடி தேவையான நிதி, உணவு தானியங்கள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசியமான உள்கட்டமைப்பு பணிகளில் உதவுமாறு தேசிய நெடுஞ்சாலை துறை, தேசிய அனல் மின் நிலையம், மத்திய மின் தொகுப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பிரதம மந்திரியின் அவாஸ் யோஜானா, மகாத்மா காந்தி தேசிய புறநகர் வேலைஉறுதி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்தும் முன்னுரிமை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் உறவினர்களை இழந்த குடும்பத்தாருடன் எனது நினைவுகள் இணைந்துள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். கேரள மக்களின் பாதுகாப்புக்காகவும், நல்வாழ்வுக்காகவும் நாம் அனைவரும் பிரார்த்தித்து கொள்வோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #KeralaRains #KeralaFloods #StandWithKerala #PMModi
    தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை) மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கியது. பொதுவாக தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பெய்யும். கேரளா, கர்நாடகாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை வெளுத்து வாங்குகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை) மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தற்போது கேரளாவில் தொடர் மழை பெய்து வருவதால், அதன் தாக்கம் காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

    அடுத்த 24 மணி நேரத்திலும் (இன்றும்) இந்த 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரையில், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    சின்னக்கல்லாரில் 26 செ.மீ., வால்பாறையில் 21 செ.மீ., வால்பாறை தாலுகா அலுவலகத்தில் 17 செ.மீ., தேவலாவில் 11 செ.மீ., பெரியாரில் 9 செ.மீ., நடுவட்டம், செங்கோட்டையில் தலா 7 செ.மீ., ஜி பஜாரில் 6 செ.மீ., பழனி, பொள்ளாச்சி, கூடலூரில் தலா 4 செ.மீ., ஊட்டி, பாபநாசம், பேச்சிப்பாறை, குளச்சல், குழித்துறையில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    கேரளாவில் கனமழை நீடிப்பதால் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. #KeraraFloods #KeralaRains #KeralaSchoolHoliday
    திருவனந்தபுரம்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ளது. வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



    மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு அபாயமும் உள்ளது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 28-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டிருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

    இந்த நாட்களில் நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து  செய்யப்படுவதாகவும், தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கேரளாவில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையின் 5 குழுவினர் திருவனந்தபுரம் வந்து சேர்ந்துள்ளனர். மேலும் 35 குழுவினர் இன்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #KeraraFloods #KeralaRains #KeralaSchoolHoliday
    பெரியார் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர் மழையால் விமான நிலையத்திற்குள் தண்ணீர் தேங்கியதால் கொச்சி விமான நிலையம் 18-ம் தேதி வரை மூடப்பட்டது. #PeriyarRiverFlood
    கொச்சி:

    கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. அணைகள் திறப்பால் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து மேலும் வெள்ளக்காடாக பல்வேறு இடங்கள் காணப்படுகிறது. இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. முப்படைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், பாலக்காடு, இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடலோர மாவட்டமான கொச்சியில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பெரியார் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் புகுந்துள்ளது. தற்போது இடைவிடாமல் மழை பெய்து வருவதால் மழை நீரும் தேங்கி கடல் போல் தேங்கியுள்ளது.

    விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது. வரும் சனிக்கிழமை (18-ம் தேதி) பிற்பகல் 2 மணி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaRains #KochiAirport #PeriyarRiverFlood
    ×