search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ki veeramani"

    • தீண்டாமை ஒழிப்பு என்பது அரசியல் சட்டத்தில் ஏட்டளவில் உள்ளது.
    • முழுமையாக தீண்டாமை கொடுமை நீங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை- நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று தி.க. தலைவர் கி. வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சட்ட மாமேதை அம்பேத்கரும், பெரியாரும் இணைந்து தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு குறித்து பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

    பட்டுக்கோட்டை தாலுகா ஆழம்பள்ளம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காத விவகாரம் மூலம் தீண்டாமை ஒழிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதை காட்டுகிறது. தீண்டாமை ஒழிப்பு என்பது அரசியல் சட்டத்தில் ஏட்டளவில் உள்ளது. முழுமையாக தீண்டாமை கொடுமை நீங்க வேண்டும்.

    சில இடங்களில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு சுடுகாட்டுக்கு கூட பாதை கிடையாது. தற்போது தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி மூலம் தீண்டாமை கொடுமை படிப்படியாக நீங்கிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

    அம்பேத்கர் வகுத்த கொள்கை மற்றும் அவரை நாம் புரட்சியாளராக தான் பார்க்கிறோம். ஆனால் பா.ஜ.க.வோ அம்பேத்கர் பெயரை அரசியல் வாக்கு வங்கியாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கமல்ஹாசன் தனது கட்சி, ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தரும் என்று தனது அறிக்கை மூலம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
    • மதவெறித் தீயை அணைக்க அனைவரும் ஒன்று சேர வேண்டியது எப்படி முக்கியமோ அதனை அப்படியே உணர்ந்து அறிவித்திருப்பது சீரிய முடிவாகும்.

    சென்னை:

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தரும் என்று தனது அறிக்கை மூலம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

    மதச்சார்பற்ற ஜனநாயகத்தத்துவங்களில் நம்பிக்கையுள்ள அவரும், அவரது கட்சியும் இன்றுள்ள அரசமைப்புச் சட்ட விரோதப் போக்கினை தடுத்து நிறுத்த மதவெறித் தீயை அணைக்க அனைவரும் ஒன்று சேர வேண்டியது எப்படி முக்கியமோ அதனை அப்படியே உணர்ந்து அறிவித்திருப்பது சீரிய முடிவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேது சமுத்திர திட்டத்திற்காக யார் யாரெல்லாம் அப்பொழுது குரல் கொடுத்தார்களோ அவர்கள் மீண்டும் குரல் கொடுத்து அதற்காக போராட வேண்டும்.
    • இனி யாரும் ராமர் பாலம் இருந்தது என்கிற கதையை கூற முடியாது அதற்கு ஆதாரமாக பா.ஜ.க. அமைச்சரின் கருத்தே உள்ளது.

    திருச்சி:

    தந்தை பெரியாரின் 49-வது நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க.வின் சார்பாக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நெடுஞ்சாலை காட்டூர் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு தி.க.தலைவர் வீரமணி, தி.மு.க. முதன்மைச்செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீரமணி கூறியதாவது:- தற்போதைய தி.மு.க. அரசு பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றும் அரசாக உள்ளது. குறிப்பாக பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்த அனைத்து ஜாதி அர்ச்சகர் திட்டத்தை நிறைவேற்றி பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியது இந்த அரசு. அவருடைய ஒவ்வொரு கொள்கையையும் நிறைவேற்றி வருகிறது. சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முயற்சி செய்தார். அதற்கு அனுமதியும் பெற்று பணிகள் தொடங்கின.

    அப்பொழுது சுப்ரமணிய சாமி, ஜெயலலிதா போன்றோர் அந்த இடத்தில் ராமர் கட்டிய பாலம் உள்ளது எனக்கூறி அந்தத் திட்டத்தை செயல்படுத்த விடாமல் செய்து விட்டனர். அதனால் அது முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் பா.ஜ.க.வை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் சேது சமுத்திர திட்டப் பகுதியில் ராமர் பாலம் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறியுள்ளார்.

     இந்தத் திட்டம் நிறைவேறி இருந்தால் ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டிருக்கும். இந்த திட்டம் நிறுத்தப்பட்டதால் இதன் மூலம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பு இளைஞர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. 

    எனவே தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் ஒரு கிளர்ச்சி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை திராவிடர் கழகம் சார்பில் வைக்கிறோம்.

    சேது சமுத்திர திட்டத்திற்காக யார் யாரெல்லாம் அப்பொழுது குரல் கொடுத்தார்களோ அவர்கள் மீண்டும் குரல் கொடுத்து அதற்காக போராட வேண்டும். இனி யாரும் ராமர் பாலம் இருந்தது என்கிற கதையை கூற முடியாது அதற்கு ஆதாரமாக பா.ஜ.க. அமைச்சரின் கருத்தே உள்ளது. பெரியாரின் நினைவு நாளில் சேது சமுத்திர திட்டத்தை தொடங்க வேண்டும் என குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ஏன் மனுதர்மத்தை எரித்தார்கள்? பல ஆண்டுகளுக்கு முன்?
    • இந்த பிறவி இழிவை நிலை நாட்டும் - பாதுகாத்து சட்டத்திலும் பரப்பும் மூல வித்து அது என்பதால்தானே!

    சென்னை:

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை பெரியார் திடலில் கடந்த 6.9.2022 அன்று 'விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆ.ராசா எம்.பி.யின் உரையைத் திரித்து, வெட்டி, பா.ஜ.க.வும், சில ஏடுகளும் வேறு பிரச்சினைகளை வைத்து தி.மு.க.விற்கு எதிராக களம் காணுவதில் அடைந்த தோல்வியை மறைக்க, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். - பார்ப்பன மற்றும் அவர்களது அடிவருடிகளின் கூட்டணி ஆ.ராசா எதிர்ப்புப் பிரசாரம் என்ற போர்வையில் தி.மு.க.வுக்கு எதிராகத் திட்டமிட்ட கோயபல்ஸ் பிரசாரத்தை சமூக வலைதளங்களிலும், சில ஏடுகளிலும் தொடர்ந்து எழுதியும், பேசியும், நடத்தியும் வருகின்றன.

    தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் தோழர் ஆ.ராசா எம்.பி.யின் பேச்சு பதிவிலிருக்கிறது; சொல் மாறாது 'விடுதலை' யிலும் (12.9.2022) வெளிவந்துள்ளது.

    மனுதர்மத்தில் உள்ள ''சூத்திர, பஞ்சமன்'' என்ற அர்த்த விளக்கம் எவ்வளவு மானக்கேடானது; பெரும்பான்மையான உழைக்கும் நமது இன மக்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் சொல் என்பதைத்தான் அவர் சுட்டிக்காட்டிப் பேசினார்! அந்த இழிவுக்குப் பரிகாரம் தேடவேண்டாமா?

    இதற்காக, வழக்குப் போட்டு அவரை நீதிமன்றத்திற்கு அழைத்தாலும், அதை எதிர்கொண்டு மனுதர்மம், கீதை போன்ற ஜாதியை வலியுறுத்தும், பெண்களைக் கொச்சைப்படுத்தும் பல இந்து மத சாஸ்திரங்கள், தர்ம விளக்கம் பற்றி நீதிமன்றத்திலேயே அலசி அலசிச் சுட்டிக்காட்ட அவரும் தயார் - அவர் சார்பில் பெரியார் தொண்டர்களாகிய நாமும் தயார்!

    மீண்டும் மனுதர்மம் சாயம் வெளுப்பதற்குத் தந்த வாய்ப்புக்கு நன்றி!

    தோழர் ஆ.ராசா எம்.பி.,யின் பேச்சை வெட்டி, திரித்துக்காட்டி எழுதுகிறது.

    நோயைச் சுட்டிக்காட்டி, விஷக் கிருமிகளை அடையாளம் காட்டிவரும் டாக்டர்கள்தான் - நோய் பரப்புபவர்கள் என்று திசை திருப்பினால், அது எவ்வளவு கேவலமான கண்டனத்திற்குரியதோ, அதே பணியைத்தான் - ஏதாவது புரளி கிளப்பி அதில் புரண்டு மகிழ்கின்றனர் காவிக்கட்சியினர்.

    இதேபோலத்தான் முன்பு 'மனுதர்மம்' பற்றி பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தோழர் தொல்.திருமாவளவனின் பேச்சையும் திசை திருப்பி, பிரச்சினை புழுதி கிளப்பி, மூக்குடைப்பட்டு மூலைக்குச் சென்று முடங்கினார்கள்.

    இப்போது இப்படி ஒரு கேவலமான பொய்ப் பிரச்சாரத்தை, சில பூணூல் ஊடகங்கள், 'பொய் மயப் பிரச்சாரம்' என்ற மண் குதிரையில் பயணம் செய்கிறார்கள்!

    தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ஏன் மனுதர்மத்தை எரித்தார்கள்? பல ஆண்டுகளுக்கு முன்?

    இந்த பிறவி இழிவை நிலை நாட்டும் - பாதுகாத்து சட்டத்திலும் பரப்பும் மூல வித்து அது என்பதால்தானே!

    'இனமலர்' ஏட்டின் கற்பனை வாசகர் கடிதத்தில் ஒரு 'அறிவுக் கொழுந்து' எங்கே இருக்கிறது என்று கேட்கிறது! அட மூட ஜென்மங்களே!

    ''அசல் மனுதர்மம்'' நூலில் 1919-ல் (103 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப் பதிப்பு) திருவந்திபுரம், கோமாண்டூர் இளைய வில்லி ராமானுஜாச்சாரியார் மொழிபெயர்ப்பு - அத்தியாயம் 8 - சுலோகம் 415 -ல் உள்ள வாசகங்களை அப்படியே தருகிறோம்.

    குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்

    குற்றத்திற்காக வேலை செய்கிறவன்'' என தொழிலாளிகள் எழுவகைப்படுவர்!

    இது போதாது என்றால், அக்னிஹோத்திரம் ஸ்ரீராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதி, 'நக்கீரன்' பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட ''இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூலிலும் பச்சையாகவே மேற்சொன்ன விளக்கம் உள்பட பலவற்றை அவர் புட்டுப்புட்டு வைத்துள்ளார்.''

    ஆதாரங்களைக் குவிக்க நாங்கள் என்றும் தயார்!

    இவற்றை நீதிமன்றத்தில் ஏற்றி, உலகம் முழுவதும் பரவிட, இந்து மதம் என்ற வேத சனாதன மதத்தின் உண்மை யோக்கியதையை 'ஸ்கேன்' செய்ய வாய்ப்புத் தந்தால் நன்றி!

    எங்களிடம் பூச்சாண்டி மிரட்டல் ஏதும் கிடையாது; 'இந்து' மதம் என்ற சொல்லே முதலில் எந்த இந்திய மொழி - சொல்லுவீர்களா?

    'அது அந்நியன் தந்த பெயர் என்பதை காஞ்சி சங்கராச்சாரியாரே பகிரங்கமாக கூறியுள்ளதற்குப் பிறகும் உங்களுக்கு ஏன் இந்த கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் புத்தி?

    கருத்தைக் கருத்தால் சந்திக்கத் திராணி இல்லாத தில்லுமுல்லு திருகுதாளப் பேர்வழிகளே - உங்கள் வித்தைகள் பெரியார் மண்ணில் எடுபடாது.

    உண்மை ஒருபோதும் உறங்காது! உலா வருவது உறுதி!!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெற்று வரும் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள இல்லம் தேடி கல்வி திட்டம் திராவிட கல்வி திட்டம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தலையீடு இருக்கக்கூடாது.

    தமிழக அரசுக்கு மட்டுமே துணை வேந்தர்கள் நியமிக்க அதிகாரம் இருக்கிறது. கடந்த 5 ஆண்டு காலங்களில் துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாட்டின் தன்மானத்தை அப்போதைய அரசு அதிகாரத்தை பறிகொடுத்து விட்டது. தற்போதைய தமிழக அரசு துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னரின் அணுகுமுறையை மாற்ற வேண்டும். பறிகொடுத்த அதிகாரத்தை மீட்க வேண்டும்.

    முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெற்று வரும் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. சட்டம் தன் கடமையை செய்கிறது. கொடநாடு வழக்கில் பல உண்மைகள் விரைவில் வெளிவரும்.

    தமிழ்நாடு தினம் நவ 18-ந்தேதி கொண்டாடுவதே சிறப்பானது. நவ.1-ல் கொண்டாடுவது ஏற்புடையதல்ல. ஓய்வுபெறும் நாளில் அரசு அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யக்கூடாது என கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் சிறந்த சட்டமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் கூறிய கருத்து சரிதான் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார்.

    பின்னர் அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் கூறியது பற்றி வீரமணியிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ‘கமலின் கருத்து சரிதான்’ என்று பதில் அளித்தார்.

    தனக்கு பின்னால் திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார் என தஞ்சை மாநாட்டில் கி.வீரமணி அறிவித்துள்ளார். #KVeeramani #KaliPoongundran
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனக்கு பின்னால் திராவிடர் கழக தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும். மாநிலம் மற்றும் மத்தியில் ஆளும் கட்சிகள் தொழிலாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம், 6 ஆயிரம் கொடுக்கின்றனர். அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஆட்சியை பிடிக்க முடியாது.

    பாம்பு வந்தால் எப்படி தடியைகொண்டு அடித்துவிரட்டுவோமோ அதேபோல் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். எனும் பாம்பை அடித்துவிரட்டவேண்டும். பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிஉள்ளார்.



    40க்கு 40 என அ.தி.மு.க. கூறிவருகிறது. ஆனால் ஒரு தொகுதியில் கூட அவர்களால் டெபாசிட் வாங்க முடியாது. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணிதான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாது. ஆனால் யார் வரவேண்டும் என வெளிச்சம்போட்டு காட்டுவோம். இந்த மாநாடு சாதி, மத ஓழிப்பு குறித்த மாநாடு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KVeeramani #KaliPoongundran
    ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல் தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சி செய்து வருகிறது என கும்பகோணத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.
    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கும்பகோணம் அரசினர் கல்லூரியில் முன்பு பார்ப்பன மாணவர்களுக்கு தனி பானை, மற்ற சாதி மாணவர்களுக்கு தனி பானை இருந்த போது அந்த தண்ணீர் பானையினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மிகப்பெரிய அளவிலே நடைபெற்று அதற்கு தீர்வு காணப்பட்டது. பின்னர் பெரியார் அனுமதி பெற்று 1943-ம் ஆண்டு திராவிட கழகம் சார்பில் பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட திராவிடர் மாணவர் கழகம் இன்று 75 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய பவள விழாவை கொண்டாடுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் இதில் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    மாணவர்களின் கல்வியை பாதிக்கக்கூடிய வகையில் மத்திய அரசு தன்னுடைய பணிகளை செய்து வருகிறது. நீட் தேர்வு என்பது எவ்வளவு குளறுபடியாக இருக்கிறது. அதேபோல் ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு அம்சம் திட்டம் என்று கூறி வேதங்கள் மற்றும் பழைய புராணங்கள் முன்னிலை படுத்தப்படுகிறது.

    மத்திய அரசை பற்றி ஆழ்ந்த முடிவெடுக்கக்கூடிய மாநாடாக இந்த மாநாடு உள்ளது. இந்த மாநாட்டில் சில புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளோம். நீட் தேர்வை மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டும். ஆனால் தற்போது நடைமுறையில் மத்திய அரசு மாநில அரசுகளை மரியாதைக்கு கூட கவனிப்பதில்லை. நீட் தேர்வு தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கவில்லை. அனைத்து மாநிலத்திலும் உள்ள ஒடுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களை வெகுவாக பாதித்துள்ளது.


    எனவே நீட் தேர்வு மற்றும் கல்வித்துறையிலே இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் மிகப்பெரிய பிரசாரத்தை நடத்த உள்ளது. அரசியல் சட்டத்தையே தற்போது அரசு மதிப்பதாக தெரியவில்லை. ஆளுநருடைய ஆட்சி இருந்தால் மட்டுமே ஆளுநருக்கு வேலை. அல்லது நெருக்கடி நிலை ஏற்படும்போது டெல்லிக்கு தகவல் கொடுப்பது மட்டும் தான் அவருடைய வேலை. ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று போட்டி அரசாங்கம் நடத்துவது அவருடைய வேலை அல்ல.

    ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல் தமிழகத்தில் பா.ஜ.க தற்போது ஆட்சி செய்து வருகிறது. முட்டை ஊழலுக்கு 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது கேவலமாக இருக்கிறது. பசுமை வழிச்சாலையால் யாருக்கு பலன் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KiVeeramani #BJP
    ×