என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money cheating"

    • டாக்டர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பாக விவரங்களை கூகுள் மூலம் தேடியுள்ளார்.
    • மர்ம நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் பண்டாரு மகந்த். தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பாக விவரங்களை கூகுள் மூலம் தேடியுள்ளார்.

    இந்தநிலையில் அவரை மர்ம நபர் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.

    இதை உண்மை என்று நம்பிய அவர் ரூ.32 லட்சத்து 92 ஆயிரத்தை முதலீடு செய் தார். இதன்மூலம் கிடைத்த லாபம் மற்றும் முதலீடு செய்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றார்.

    ஆனால் அது முடியவில்லை. அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

    மேலும் அவரை மீண்டும் தொடர்பு கொண்ட மர்மநபர் டெல்லி போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார்.

    சிறுமிகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் பார்த்ததாகவும், இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் தருமாறு மிரட்டியுள்ளார்.

    அதை நம்பி அவரும் ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். அதன்பின்னரே அவர் ஒட்டுமொத்தமாக ரூ.48 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்தது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக அவர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனது பெற்றோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.5 லட்சம் முதல் 25 லட்சம் வரை வாங்கினார்.
    • ஐதராபாத் ஜுபிலி ஹில்சை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் ரூ. 11 லட்சம் கடனாக பெற்று திருப்பி தரவில்லை.

    ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திரவரத்தை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா (வயது 33). இவர் பி.டெக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கடந்த 2014-ம் ஆண்டு ஐதராபாத் வந்தார்.

    ஐதராபாத்தில் உள்ள வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இளைஞர்களுக்கு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக போலீசார் வம்சி கிருஷ்ணாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ஜெயிலில் இருந்து வெளியே வந்த வம்சி கிருஷ்ணா ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. போட்டோவை தனது வாட்ஸ்அப் டி.பி.யாக வைத்தார்.

    பின்னர் திருமண தகவல் வலைதளங்களில் தன்னுடைய தாய் அமெரிக்காவில் டாக்டராக வேலை செய்கிறார். நான் உள்ளூரில் வியாபாரம் செய்து வருகிறேன். 2-வது திருமணம் செய்ய விரும்பும் பெண்கள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என பதிவு செய்தார்.

    மேலும் தனது தாய் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியிருந்தார். இதனை உண்மை என நம்பி ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வம்சி கிருஷ்ணாவை தொடர்பு கொண்டனர்.

    பழக்கம் ஏற்பட்ட பெண்களிடம் தனது நிறுவனத்தில் ஐடி அதிகாரிகள் சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்துவிட்டனர். தனது பெற்றோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.5 லட்சம் முதல் 25 லட்சம் வரை வாங்கினார். இதன் மூலம் ரூ.2½ கோடி மோசடி செய்தார்.

    வம்சி கிருஷ்ணாவிடம் பணத்தை இழந்த பெண்கள் பணத்தை திருப்பி கேட்ட போது அவர்களது போட்டோவை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்துள்ளார்.

    ஐதராபாத் ஜுபிலி ஹில்சை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் ரூ. 11 லட்சம் கடனாக பெற்று திருப்பி தரவில்லை. இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார்.

    பல்வேறு பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூருவில் பதுங்கி இருந்த வம்சி கிருஷ்ணாவை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • அழகிய குரல் வளம் கொண்ட பெண்களை வேலைக்கு சேர்த்து அவர்கள் மூலம் வாடிக்கையாளர்களை இழுத்துள்ளனர்.
    • இப்படி பண ஆசை, பெண்களின் கவர்ச்சியான பேச்சுக்கு மயங்கி பலரும் பணம் முதலீடு செய்ய வந்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் இருப்பார்கள் என்பது முதியோர் வாக்கு.

    குறுகிய காலத்தில் செல்வந்தர் ஆக வேண்டும் என்று விரும்புவோர் அதற்கான வழிகளையே யோசிப்பார்கள். அத்தகையோரை குறிவைத்து மோசடி நபர்கள் பணம் பறிக்கும் செயல்களை அரங்கேற்றி வருகிறார்கள்.

    இதுபற்றி சமூக ஊடகங்கள், பத்திரிகைகளில் பலமுறை எச்சரிக்கை செய்தி வந்தாலும் இன்னும் ஏமாறுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். கன்னியாகுமரியில் அப்படி நடந்த ஏமாற்று செயல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    கன்னியாகுமரி அருகே வடக்கு குண்டல் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த சில நாட்களாக வெளியூர் நபர்கள் வருகை அதிகமாக இருந்தது. வருபவர்கள் கன்னியாகுமரியை சுற்றி பார்க்க செல்வதற்கு பதில் லாட்ஜூக்கு வருவதும், சிறிது நேரத்தில் திரும்பி செல்வதுமாக இருந்தனர்.

    இது அந்த பகுதி மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி.ராஜா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீரென அந்த லாட்ஜூக்கு சென்றனர்.

    போலீசாரை கண்டதும் அந்த கும்பல் லாட்ஜ் அறைகளில் இருந்து தப்பியோடினர். சிலர் அருகில் இருந்த புதருக்குள் புகுந்து மறைந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    ஆண்கள், பெண்கள் என சுமார் 35 பேரை பிடித்த போலீசார் அவர்கள் அனைவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    போலீசாரின் விசாரணையில் தான் அந்த லாட்ஜூக்கு வந்து சென்றவர்கள் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதாவது பணம் கொடுப்பவர் இந்த கும்பலிடம் ஒரு ரூபாய் கொடுத்தால் அடுத்த மாதம் அந்த கும்பல், பணம் கொடுத்தவர்களுக்கு 2 ரூபாயாக திருப்பி கொடுப்பார்கள்.

    இப்படி ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரே மாதத்தில் ரூ. 2 ஆயிரம் திரும்ப கிடைக்கும். இதுவே ஒரு லட்சம் கொடுத்தால் அடுத்த மாதம் ரூ.2 லட்சம் கிடைக்கும். இப்படி பணத்தை முதலீடு செய்தால் ஒரே வருடத்தில் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்று இந்த கும்பல் கூறியுள்ளது.

    இதற்காக இந்த கும்பலை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஏஜெண்டுகளை நியமித்து உள்ளனர். அவர்கள் மூலம் அந்த மாவட்டத்தில் பணம் வைத்திருக்கும் நபர்களை தெரிந்து கொண்டு அவர்களிடம் பணம் இரட்டிப்பு குறித்து பேசி அதனை தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய கூறியுள்ளனர்.

    இதற்காக அழகிய குரல் வளம் கொண்ட பெண்களை வேலைக்கு சேர்த்து அவர்கள் மூலம் வாடிக்கையாளர்களை இழுத்துள்ளனர். இப்படி பண ஆசை, பெண்களின் கவர்ச்சியான பேச்சுக்கு மயங்கி பலரும் பணம் முதலீடு செய்ய வந்துள்ளனர்.

    அதிக வாடிக்கையாளர்களை இழுத்து வரும் ஏஜெண்டுகளுக்கு நிறுவனத்தினர் சொகுசு கார்களை பரிசாக வழங்கி உள்ளனர். இதற்கு ஆசைப்பட்ட பல ஏஜெண்டுகள், பணம் மோசடிக்கு துணை போய் உள்ளனர்.

    போலீஸ் விசாரணையில் தெரியவந்த இந்த தகவல்களை தொடர்ந்து இந்த மோசடிக்கு துணை போனவர்கள் உள்பட அனைவரையும் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிரசாத் உத்தரவிட்டார்.

    இதையடுத்து கன்னியாகுமரி லாட்ஜில் கொஞ்சும் குரலில் பேசி வாடிக்கையாளர்களை வளைத்த 2 பெண்கள் மற்றும் பண இரட்டிப்பு மோசடிக்கு மூளையாக செயல்பட்ட மதுரை பேரையூரை சேர்ந்த சுந்தரபாண்டியன், ராஜாமணி உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சத்து 4 ஆயிரத்து 810 ரொக்க பணம், 3 சொகுசு கார்கள், 32 செல்போன்கள், 2 லேப் டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இந்த கும்பல் தமிழகத்தில் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டினார்கள் என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

    • தங்களது நிறுவனத்தில் ரூ.15லட்சம் முதலீடு செய்தால் வாரம் தோறும் ரூ.90 ஆயிரம் பணம் கிடைக்கும் என்று ஆதவன் ஆசை வார்த்தை கூறினார்.
    • நம்பிய சுந்தரேசன் ரூ.15லட்சம் பணத்தை செலுத்தினார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட ஆதவன் கூறியபடி பணம் கொடுக்கவில்லை.

    போரூர்:

    கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன். டாக்டரான இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வந்த சாலிகிராமத்தை சேர்ந்த ஆதவன் என்பவர் அறிமுகமானார்.

    அப்போது தங்களது நிறுவனத்தில் ரூ.15லட்சம் முதலீடு செய்தால் வாரம் தோறும் ரூ.90 ஆயிரம் பணம் கிடைக்கும் என்று ஆதவன் ஆசை வார்த்தை கூறினார்.

    இதை நம்பிய சுந்தரேசன் ரூ.15லட்சம் பணத்தை செலுத்தினார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட ஆதவன் கூறியபடி பணம் கொடுக்கவில்லை.

    இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டாக்டர் சுந்தரேசன் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட ஆதவன், மேலாளர் சுபாஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் மேலாளர் சுபாசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஆதவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • வங்கி மேலாளர் பேசுவது போல் நடித்து கூலித்தொழிலாளியிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
    • மேட்டுப்பாளையம் போலீசில் கூலித்தொழிலாளி அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை குரும்பாபேட் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 44). கூலித்தொழிலாளி. இவரது செல்போன் எண்ணுக்கு தேசிய மாயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து மானேஜர் பேசுவதாக ஒருவர் கூறினார்.

    அவர், ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டதாகவும், அதை புதுப்பிக்க அண்ணாதுரை செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும். அதை தெரிவிக்கும் படியும் கூறியுள்ளார்.

    அதை நம்பி அண்ணாதுரை அவரது செல்போன் எண்ணுக்கு பலமுறை வந்த ஓ.டி.பி.யை அந்த நபரிடம் கூறினார்.

    அடுத்தடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.96 ஆயிரத்து 250 எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணாதுரை, தனது வங்கிகணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுத்ததை அறிந்தார்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அப்துல் ரகுமான் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தை என்பதும், என்னை ஏமாற்றி பண மோசடி செய்ததும் தெரியவந்தது.
    • புகாரின் பேரில், போலீசார் முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணிடம் ரூ. 40 லட்சம் மோசடி செய்த அப்துல்ரகுமான் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 31 வயது இளம்பெண்.

    இவர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் பட்டப்படிப்பை முடித்து விட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தேன். அதற்காக கடந்த 2019-ம் ஆண்டு கோவை வந்து காந்திபுரத்தில் தங்கி அங்குள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் படித்து வந்தேன்.

    அப்போது காந்திபுரம் 2-வது வீதியில் செல்போன் கடையில் வேலை பார்த்த அப்துல்ரகுமான் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. பின்னர் இருவரும் கடந்த ஜூலை 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு யாருக்கும் தெரியாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

    குடும்பம் நடத்தும் போது பல முறை எங்களுக்குள் தாம்பத்திய உறவு நடந்தது. இந்த நிலையில் சொந்த தொழில் செய்வதற்கு பணம் தேவைப்படுவதாக கூறி என்னிடம் ரூ. 40 லட்சம் பணம், 4.5 பவுன் தங்கம் மற்றும் வைர மோதிரத்தை அப்துல் ரகுமான் வாங்கினார்.

    ஆனால் அவர் தொழில் தொடங்காமல் புதிய வீடு கட்டியதாக தெரிகிறது. இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தற்போது நான் 7 மாத கர்ப்பிணியாக உள்ளேன். ஏற்கனவே நான் 2 முறை கருக்கலைப்பும் செய்துள்ளேன்.

    இந்நிலையில், அப்துல் ரகுமான் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தை என்பதும், என்னை ஏமாற்றி பண மோசடி செய்ததும் தெரியவந்தது. இது குறித்து கேட்டபோது எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    என்னை ஏமாற்றிய அப்துல்ரகுமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    புகாரின் பேரில், போலீசார் முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணிடம் ரூ. 40 லட்சம் மோசடி செய்த அப்துல்ரகுமான் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து தீபாவளி பண்டு சீட்டுக்கு பணத்தை வசூலித்தார்.
    • தீபாவளி நெருங்கியும் பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் இருந்தார்.

    திருவள்ளூர்:

    வெங்கல் அடுத்த மாலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜே.பி.ஜோதி. இவர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் தீபாவளி சீட்டு நடத்திவந்தார்.

    மாதம் ரூ.1000 செலுத்தினால் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள் மளிகை பொருட்கள் வழங்குவதாகவும், மாதம் 500 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் ஏனைய பொருட்களும் வழங்கப்படும் என்றும் அறிவித்து பணம் வசூலித்தார்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து தீபாவளி பண்டு சீட்டுக்கு பணத்தை வசூலித்தார். தீபாவளி நெருங்கியும் பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் இருந்தார்.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இதனால் ஜே.பி.ஸ்டார் ஏஜென்சி கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு உரிமையாளர் ஜே.பி.ஜோதி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சி அப்பாசாமி சாலையில் உள்ள ஜே.பி.ஜோதிக்கு சொந்தமான கடையில் இருந்து இரவு நேரத்தில் பொருட்களை வேனில் ஏற்றுவதை அறிந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருவள்ளூர் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் முகவர்களாக செயல்பட்டவர்கள் மற்றும் தீபாவளி சீட்டு போட்டவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தனர்.

    அதில், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.25 கோடி ரூபாய் வரை மோசடி செய்தவர் மீது புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் முகவர்களாக செயல்பட்ட எங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. தலைமறைவான ஜே.பி.ஜோதியை கைது செய்து பணத்தை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பல தவணைகளாக ரூ.7 லட்சத்து 14 ஆயிரத்து 393 வரை வாலிபர் செலுத்தினார்.
    • அப்படியும் சொன்னப்படி எதுவும் நடக்காததால் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை வாலிபர் உணர்ந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் புதிய ஐ போன் வாங்க முடிவு செய்தார்.

    இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ரூ. 63 ஆயிரம் மதிப்புள்ள ஐ போனை ரூ.33 ஆயிரத்துக்கு தருகிறோம் என விளம்பரம் செய்யப்பட்டிருந்ததை பார்த்து அதில் உள்ள லிங்கை திறந்தார்.

    அதில் வாட்ஸ்அப் எண் ஒன்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நம்பரை தொடர்பு கொண்டபோது உங்களுக்கு குறைந்த பணத்தில் ஐ போன் வேண்டுமென்றால் முன்பணமாக ரூ.13 ஆயிரம் கட்ட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து குறிப்பிட்ட வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் ரூ.13 ஆயிரம் கட்டினார். ஆனால் ஐ போன் வரவில்லை. இதனால் அந்த நம்பரை தொடர்பு கொண்டு எனக்கு ஐ போன் வேண்டாம். நான் செலுத்திய பணத்தை திருப்பி தாருங்கள் என வாலிபர் முறையிட்டார்.

    அதற்கு மர்மநபர், உங்களது பணம் மற்றும் ஐ போன் வேண்டுமென்றால் மீண்டும் பணம் செலுத்துங்கள் என கூறினார். இதனால் வேறு வழியின்றி குறிப்பிட்ட வங்கி கணக்கில் மீண்டும் அந்த வாலிபர் பணம் செலுத்தினார். தொடர்ந்து இவ்வாறாக பல தவணைகளாக ரூ.7 லட்சத்து 14 ஆயிரத்து 393 வரை வாலிபர் செலுத்தினார். அப்படியும் சொன்னப்படி எதுவும் நடக்காததால் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை வாலிபர் உணர்ந்தார்.

    இது குறித்து அவர் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோசடி குறித்து மகாலிங்கம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்:

    நெல்லை பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 53). விருதுநகர் மாவட்டம் மாத்தி நாயக்கன்பட்டி பவித்ரா நகரை சேர்ந்த அற்புதராஜ் (74) என்பவர் தனக்கு சொந்தமாக நெல்லை டவுனில் இடம் உள்ளது என மகாலிங்கத்திடம் கூறி உள்ளார்.

    இதனை நம்பிய அவர் அந்த நிலத்தை கிரையம் பேசினார். அற்புதராஜ் அதற்கு ஒப்புக்கொண்டதையடுத்து முன்பணமாக அவரது வீட்டில் வைத்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை மகாலிங்கம் கொடுத்துள்ளார்.

    அதன் பின் ஒரு செண்டுக்கு ரூ.8 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை மகாலிங்கம் காசோலை மூலம் அற்புதராஜூக்கு கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் இடத்தை கிரையம் செய்து தர முன்வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த மகாலிங்கம், நெல்லை சார்பதிவாளர் அலுவலகம் சென்று விசாரித்தபோது, குறிப்பிட்ட இடம் வேறொருவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், பணத்தை திருப்பி தருமாறு அற்புத ராஜிடம் கேட்டபோது, அப்போது அவர் ரவுடியை வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியதோடு பணத்தை திருப்பித்தர மறுத்து விட்டார். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.

    இந்த மோசடி குறித்து மகாலிங்கம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பழைய பீரோ ஒன்றை ஆன்லைனில் விற்க முயன்ற தாய், மகளிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலத்தை சேர்ந்த தாய், மகள் தங்கள் பழைய பீரோ ஒன்றை விற்க ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தனர். அதன் விலை ரூ.6 ஆயிரம் ஆகும்.

    இந்த விளம்பரத்தை பார்த்து ஒரு வடமாநில வாலிபர் அந்த பெண்ணிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் உங்கள் பீரோவை வாங்கிக் கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இதனையடுத்து கூகுள் பே மூலம் உங்களுக்கு பணம் அனுப்பி விடுகிறேன் என்று கூறி முதலில் அந்த நபர் கியூ ஆர் கோர்டை அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு அனுப்பி உள்ளார்.

    அந்த பெண்ணை முதலில் ஒரு ரூபாய் போட சொல்லியுள்ளார். பின்னர் அந்த நபர் 2 ரூபாய் போட்டு உள்ளார். பின்னர் அந்த பெண் 100 ரூபாய் அனுப்பி உள்ளார். அந்த நபர் ரூ.200 அனுப்பி உள்ளார்.

    பின்னர் அந்த பெண் 6000 ரூபாய் அனுப்பி உள்ளார். அந்த நபர் ரூ.12000 அனுப்ப வேண்டும். ஆனால் அந்த நபர் அனுப்பவில்லை. இது குறித்து அந்த பெண் அந்த நபரிடம் கேட்டபோது பணம் அனுப்புவதில் ஏதோ பிரச்சனை உள்ளது. உங்கள் செல்போன் எண்ணிற்கு ஒரு ஓ.டி.பி. வரும் அந்த நம்பரை பார்த்து கொஞ்சம் கூறுங்கள் என்று கூறியுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பி அந்த பெண் 243869 என்ற ஓ.டி.பி. எண்ணை கூறியுள்ளார். அடுத்த நிமிடமே அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 43 ஆயிரத்து 869 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அந்த பெண் அந்த நபரிடம் கேட்டபோது ஒன்றும் பிரச்சனை இல்லை பணம் திரும்பவும் வந்துவிடும். உங்கள் செல்போன் எண்ணிற்கு தற்போது ஒரு ஓ.டி.பி. நம்பர் வந்துள்ளது அதை கூறுங்கள் என்று கூறியுள்ளார்.

    இதனையடுத்து அந்த பெண்ணும் 485000 என்ற நம்பரை கூறியுள்ளார். அடுத்த நிமிடம் அவரது வங்கி கணக்கிலிருந்து 4 லட்சத்து 85 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக வந்தது. இவ்வாறாக அந்த பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.11 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து அந்த பெண் அந்த நபரை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இது குறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏமாற்றம் அடைந்த ரேவதி மோசடி குறித்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மோசடி தொடர்பாக விசாரணை நடத்தினார்.

    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது 47) அ.தி.மு.க.வில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக உள்ளார்.

    இவர் ரங்காபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சக்திவேலன் மனைவி ரேவதி என்பவரிடம் கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

    இதற்காக ரூ‌.8 லட்சத்து 25 ஆயிரம் கேட்டுள்ளார். அதன்படி ரேவதி சுகுமாரிடம் பணம் கொடுத்தார்.

    ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு சுகுமார் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது அவர் தர மறுத்தார்.

    இதனால் ஏமாற்றம் அடைந்த ரேவதி இதுகுறித்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா இது தொடர்பாக விசாரணை நடத்தினார்.

    இதில் ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க. பிரமுகர் சுகுமாரை கைது செய்தனர்.

    மோசடி வழக்கில் அ.தி.மு.க பிரமுகர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சுகுமார் ஏற்கனவே பணத்தகராறில் தலைமறைவாக இருந்தார். அப்போது தற்கொலை செய்யப்போவதாக அவர் செல்போனில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நண்பரின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மகளின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் குண்டூர் போலீஸ் சூப்பிரண்டு ஆரிப் அபீசிடம் புகார் செய்தனர்.
    • போலீசார் மாணவியின் செல்போன் எண்ணை வைத்து அவரை கண்டுபிடித்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது முழு விவரத்தையும் மாணவி போலீசாரிடம் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பிரஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் குண்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    தன்னுடைய தந்தை பீரோவில் வைத்திருந்த ரூ.80 ஆயிரத்தை தந்தைக்கு தெரியாமலேயே எடுத்து வந்து தன்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு செலவு செய்துள்ளார்.

    இந்த நிலையில் தந்தைக்கு தெரியாமல் எடுத்து வந்த பணத்தை மீண்டும் பீரோவில் வைக்க வேண்டும் என்பதற்காக தனது கிட்னியை விற்பனை செய்வதாக ஆன்லைனில் பதிவிட்டு இருந்தார்.

    இதனைக் கண்ட பிரவின் ராஜ் என்பவர் தான் அமெரிக்காவில் இருப்பதாகவும், அங்குள்ள ஒருவருக்கு இந்தியாவில் உள்ள ஒருவரின் கிட்னி அவசரமாக தேவைப்படுவதாகவும், சிறுநீரகம் கொடுத்தால்ரூ.7 கோடி தருவதாகவும் மருத்துவமனையின் பெயர், விலாசம், டாக்டரின் போட்டோ மற்றும் வாட்ஸ்அப் எண்ணை பதிவிட்டு இருந்தார்.

    இதற்கு சம்மதம் தெரிவித்த கல்லூரி மாணவி தனது தந்தையின் வங்கி எண்ணை பிரவீன் ராஜ் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து பிரவீன் ராஜ் மாணவியின் தந்தை வங்கி கணக்கில் ரூ 3.50 கோடி அனுப்பியதாகவும், அதனை செல்போனில் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து மாணவிக்கு அனுப்பி இருந்தார். மேலும் அமெரிக்காவில் இருந்து டாலரில் பணம் அனுப்பி இருப்பதாகவும் அதை இந்தியாவின் ரூபாய் நோட்டுக்களாக மாற்ற வேண்டுமென்றால் ரூ.16 லட்சத்தை அனுப்பி வைக்குமாறு தெரிவித்து இருந்தார்.

    இதனை உண்மை என நம்பிய மாணவி தனக்கு தெரிந்தவர்களிடம் ரூ.16 லட்சத்தை கடனாக பெற்று பிரவீன் ராஜ் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து மாணவி அவரது தந்தையின் வங்கி கணக்கை சரிபார்த்த போது பணம் எதுவும் வரவில்லை என தெரிய வந்தது. மீண்டும் மாணவி பிரவீன் ராஜை அணுகி தந்தையின் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை என தெரிவித்தார். அதற்கு அவர் நீ டெல்லிக்கு வந்தால் நேரடியாக பணத்தை தருகிறேன் என்று கூறினார்.

    இதையடுத்து மாணவி விமானத்தில் டெல்லிக்குச் சென்று பிரிவின் ராஜ் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அவர் சிறிது நேரத்தில் வருகிறேன் என கூறி கடைசி வரை வராமல் ஏமாற்றி விட்டார்.

    வீட்டிற்கு சென்றால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்பார்கள். வாங்கிய பணத்தை எப்படி திருப்பி தருவது என விரக்தி அடைந்த மாணவி தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வீட்டிற்கு செல்லாமல் என்.டி.ஆர் மாவட்டம் கன்சிகா சர்லா என்ற ஊருக்கு சென்று விட்டார்.

    நண்பரின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மகளின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் குண்டூர் போலீஸ் சூப்பிரண்டு ஆரிப் அபீசிடம் புகார் செய்தனர்.

    போலீசார் மாணவியின் செல்போன் எண்ணை வைத்து அவரை கண்டுபிடித்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது முழு விவரத்தையும் மாணவி போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து பட்டாபிபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியிடம் பணத்தை ஏமாற்றியவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×