என் மலர்
நீங்கள் தேடியது "Northeast monsoon"
- செங்கோட்டையில் இரவு 1 மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை வெளுத்து வாங்கியது.
- நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், பாளை உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது.
செங்கோட்டை:
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதலே தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.
செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியான புளியரை, கற்குடி, தவணை, கண்ணுபுள்ளிமேடு, வல்லம், பிரானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. செங்கோட்டையில் இரவு 1 மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 32.6 மில்லிமீட்டர் மழை பதிவானது. மேலும் தென்காசியில் 31 மில்லிமீட்டரும், குண்டாறில் 29.4 மில்லிமீட்டரும் பெய்தது. மேலும் ஆய்க்குடி, கடனாநதி, குண்டாறு உள்ளிட்ட மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், பாளை உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது. எனினும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் போதிய அளவில் மழை பெய்யாததால் குற்றாலம் அருவிகளுக்கு பெரிய அளவில் தண்ணீர் வரத்து வரவில்லை.
மெயினருவியில் மட்டும் மிதமான அளவில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று குற்றாலம் அருவிகளில் மிகக்குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.
- வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மேகம் மந்தமாக காணப்பட்டது. இரவில் கடும் பனி கொட்டியது.
- ஓச்சேரி முதல் நாட்டறம்பள்ளி வரை சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.
திருவண்ணாமலை:
தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை செய்யாறு, வெம்பாக்கம் வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.
செய்யாறு நகர பகுதிகளில் மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது.
மழையின் காரணமாக செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
காலையில் மழையையும் பொருட்படுத்தாமல் பள்ளிகளுக்குச் சென்ற மாணவ-மாணவிகள் விடுமுறை அறிவித்த பிறகு வீடு திரும்பினர்.
நகரப் பகுதிகளில் சில மாணவர்கள் ஆரவாரம் செய்து சென்றதை காண முடிந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மேகம் மந்தமாக காணப்பட்டது. இரவில் கடும் பனி கொட்டியது.
ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை மட்டும் பெய்தது. கடும் பனி காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
ஓச்சேரி முதல் நாட்டறம்பள்ளி வரை சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் காலையில் வாகனங்கள் விளக்கு போட்டபடி சென்றன.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
- கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ந்தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது.
- சிலையில் உள்ள உப்புத் தன்மையை அகற்றுவதற்காக சிலையை சுற்றிலும் காகிதம் ஒட்டும் பணி நடைபெற்றது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவே கடந்த 2000-ம் ஆண்டு 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
இதன்படி உப்புக்காற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சிலையில் உள்ள உப்புத்தன்மை நீக்கப்பட்டு பின்னர் ரசாயன கலவை பூசப்படும். இதன் மூலம் உப்புக்காற்றினால் சிலை சேதமடையாமல் நீண்ட காலம் நீடித்து நிற்கும். இதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ந்தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது. சிலையை சுற்றிலும் இரும்பு சாரங்கள் அமைக்கப்பட்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தினமும் இந்த பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிலையில் உள்ள உப்புத் தன்மையை அகற்றுவதற்காக சிலையை சுற்றிலும் காகிதம் ஒட்டும் பணி நடைபெற்றது. ஒட்டப்பட்ட காகிதத்தை ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தி உப்பு படிந்திருக்கும் அளவு கண்டறியப்படும். பி.எச். மதிப்பு 7 என்ற அளவில் இருந்தால், அதன் பின்னர் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன கலவை சிலையின் மீது பூசப்படும்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை காரணமாக சிலையின் மீது ஒட்டப்பட்டு இருந்த காகிதங்கள் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டன. இதன் காரணமாக மழை குறைந்த பின்னர் மீண்டும் காகிதம் ஒட்டப்பட்ட பின்னர் பராமரிப்பு பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இந்த மாதம் 6-ந்தேதி முடிய வேண்டிய சிலை பராமரிப்பு பணி மேலும் ஒரு மாத காலம் தாமதமாகலாம் என்று சுற்றுலா வளர்ச்சிக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கன்னியாகுமரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த 5 மாதங்களாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட மேலும் ஒரு மாதம் தாமதமாகலாம் என்று தெரிய வருகிறது.
- சென்னை புளியந்தோப்பில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
- புளியந்தோப்பு டிமெல்லர்ஸ் சாலையில் கே.பி. பூங்கா அருகே இன்று காலையிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கி கிடந்தது.
சென்னை:
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்யத் தொடங்கியது.
7 மணி அளவில் தூறிக் கொண்டிருந்த மழை இரவு 10 மணிக்கு பிறகு பலத்த மழையாக மாறியது. சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.
இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் இரவில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் வாகனங்களில் சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மந்தவெளி, ராஜா அண்ணாமலைபுரம், சைதாப்பேட்டை, வேப்பேரி, பூக்கடை, புளியந்தோப்பு, பெரம்பூர், கொடுங்கையூர், அண்ணாநகர், சூளைமேடு, கோடம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம், மதுரவாயல், போரூர், கே.கே.நகர், கிண்டி உள்ளிட்ட சென்னையின் அனைத்து பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய மழை பெய்தது.
இரவில் பெய்த பலத்த மழையால் சாலையில் மழை நீர் தேங்கினாலும் சில இடங்களில் மழைநீர் உடனடியாக வடிந்தது. ஆனால் சென்னையில் சில இடங்களில் இன்று காலையிலும் வெள்ளம் வடியாமல் தேங்கி கிடந்தது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
சென்னை புளியந்தோப்பில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. புளியந்தோப்பு டிமெல்லர்ஸ் சாலையில் கே.பி. பூங்கா அருகே இன்று காலையிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கி கிடந்தது.
இதனால் இன்று காலையில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். புளியந்தோப்பு, பெரம்பூர், அயனாவரம், சென்ட்ரல், பாரிமுனை, வேப்பேரி போன்ற இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் இந்த சாலையையே பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
இன்று காலையில் தண்ணீர் சற்று வடியத் தொடங்கியது. அங்கு மோட்டார் பம்பு மூலம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை பட்டாளம் பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களிலும் மழைநீர் தேங்கி கிடந்தது. பட்டாளம் பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் இந்த வழியாக சென்ற வாகனங்கள் பழுதானது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை தள்ளிக்கொண்டே சென்றனர்.
ராயப்பேட்டை மருத்துவமனை முன்பு நேற்று இரவு பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது. அந்த தண்ணீர் உடனே அகற்றப்பட்டது. ராயப்பேட்டை ஜி.பி. சாலையிலும் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதேபோல் சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை பகுதியிலும் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.
ராயபுரம் ராஜகோபால் தெரு, லோட்டஸ் ராமசாமி தெரு, புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி.நகர், திருவள்ளூர் குடியிருப்பு, இளையதெரு ஆகிய இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.
பழைய வண்ணாரப்பேட்டை சி.பி.சாலை ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் பம்புகள் மூலம் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வ.உ.சி.நகர் 28-வது குறுக்குத்தெரு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கீழ் தளத்தில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளில் இருக்கும் மழைநீரை வாளிகள் மூலம் பொதுமக்கள் எடுத்து வெளியே ஊற்றி வருகின்றனர்.
அதேபோல் பெரம்பூர் சுரங்கப்பாதையிலும் இன்று காலையில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. வியாசர்பாடி கணேசபுரம் மேம்பாலத்தில் நேற்று இரவு மழை பெய்தபோது தண்ணீர் தேங்கியது. இன்று காலையில் வடிந்தது.
சென்னை மந்தவெளி சி.ஐ.டி. காவலர் குடியிருப்பில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக குடியிருப்பு வளாகத்தில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு மோட்டார் பம்பு மூலம் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் மழைநீர் வடிகால்வாய் வழியாக அப்புறப்படுத்தப்படுகிறது.
திருவொற்றியூர் மேற்கு பகுதி ஆதிதிராவிடர் காலனியில் மழை வெள்ளம் இடுப்பு அளவு தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கின்றனர்.
திருவொற்றியூர் ராஜா சண்முகபுரம், ராஜா சண்முகம் நகர் பகுதிகளில் மழைநீர் நூற்றுக்கணக்கான வீடுகளை சூழ்ந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உடனுக்குடன் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்படுகிறது.
எண்ணூர் கத்திவாக்கம் மேம்பாலம் அருகே சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மணலியில் கண்ணபிரான் தெரு, வேலு தெருக்களில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதே போல் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.
சென்னையில் தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்துவதற்காக மோட்டார் பம்புகள் தயார்நிலையில் உள்ளன. தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்குவது பற்றிய தகவல் கிடைத்தவுடன் உடனுக்குடன் அவற்றை வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் மழை காரணமாக மரம் விழுந்தாலும், கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டாலும், மின்வெட்டு, மின் கசிவு ஏற்பட்டாலும் அதை சரி செய்யவும், சீரமைக்கவும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
இதற்கிடையே சென்னையில் இன்று காலையிலும் பல இடங்களில் மழை பெய்தது. சென்னை தேனாம்பேட்டை, அண்ணா சாலை, கோடம்பாக்கம், கே.கே.நகர், அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய இடங்களில் இன்று காலை 8 மணி அளவில் மழை பெய்தது.
இதேபோல் மீனம்பாக்கம், ஆலந்தூர், போரூர், நந்தம்பாக்கம், வளசரவாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் ஆகிய இடங்களிலும் இன்று காலையில் மீண்டும் மழை பெய்தது.
இதனால் இன்று காலையில் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும், நீலகிரி, கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை செங்குன்றத்தில் 12.7 செ.மீ, நுங்கப்பாக்கத்தில் 7 செ.மீ, மீனம்பாக்கத்தில் 3 செ.மீ, நாகர்கோவிலில் 2 செ.மீ மழை பெய்துள்ளது.
4 நாட்கள் மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
- புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 967 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 500 மி.கன அடி முழுவதும் நிரம்பி உள்ளது.
திருவள்ளூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை விடிய விடிய கன மழையாக கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின.
தாழ்வான இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இதேபேல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கன மழை கொட்டித் தீர்த்தது.
இன்று காலையும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 967 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. இதில் 2,536 மி.கன அடி தண்ணீர் உள்ளது. மொத்த உயரமான 21 அடியில் 17.66 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 2,675 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 150 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 20.29 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மி.கன அடி. இதில் 194 மி.கன அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 66 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. இதில் 797 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 53 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 500 மி.கன அடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 70 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளில் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் தற்போது 6 ஆயிரத்து 702 மி.கன அடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 23 அடியை தொட்டதும் உபரி நீர் வெளியேற்றப்படும். தற்போது நீர்மட்டம் 21 அடியை நெருங்கி உள்ள தால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் ஏரிகளுக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
- பெரும்பாலான இடங்களில் உதவியாளர் பணியிடமே நிரப்பப்படவில்லை.
- தற்காலிக பணியாளர்களை வைத்துதான் மின்வாரியம் இயங்கி வருகிறது.
திருப்பூர்:
வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில் மின் கம்பிகள் அறுந்து விழுவது,மின்கம்பம் சாய்வது, மின் கம்பிகள் மீது மரக்கிளை, மரங்கள் விழுவது போன்ற காரணங்களால் மின் சப்ளை தடைபடும். இத்தகைய பிரச்சினைகளை உடனுக்குடன் எதிர்கொண்டு தடையில்லா மின் சப்ளை வழங்க ஒவ்வொரு மின் பகிர்மான கழக வட்டத்திற்கும் செயற் பொறியாளர் தலைமையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மேற்பார்வையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து திருப்பூர் மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், குறிப்பிட்ட ஒரு பிரிவிற்கு உட்பட்ட இடத்தில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு கூடுதல் பணியாளர்களின் உழைப்பு தேவைப்படும் போது, அருகேயுள்ள பிரிவில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படும் என்றனர்.
திருப்பூர் தனி மாவட்டமாக இருந்தாலும் கோவை மண்டல மின் வாரிய கட்டுப்பாட்டில் தான் உள்ளது. கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், உடுமலை, பல்லடம், நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியத்தால் ஒரு பிரிவிற்கு 14 கம்பியாளர், 14 உதவியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஒவ்வொரு பிரிவிலும் அதிகபட்சம் 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதிலும் பெரும்பாலான இடங்களில் உதவியாளர் பணியிடமே நிரப்பப்படவில்லை.
ஒட்டு மொத்த கோவை மண்டலத்தில் மின்வாரியம் அனுமதித்துள்ள கம்பியாளர், உதவியாளர்கள் எண்ணிக்கை 5,921 பேர். ஆனால் பணியில் இருப்பவர்கள் வெறும் 482 பேர் மட்டுமே. 92 சதவீதம் காலி பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது என்ற புள்ளி விபரத்தை மின்வாரிய தொழிற்சங்கத்தினர் வெளியிட்டு பணியாளர் பற்றாக்குறையால் ஊழியர்கள் படும் சிரமத்தை விளக்கும் வீடியோவை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். தற்காலிக பணியாளர்களை வைத்துதான் மின்வாரியம் இயங்கி வருகிறது.
இது குறித்து மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கூறுகையில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மின் ஊழியர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பணிச்சுமையால், பணிபுரியும் ஊழியர்களுக்கு மன உளைச்சல அதிகரித்துள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
- காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
- 40 ஏரிகள் 76 சதவீதமும், 122 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பி காணப்படுகிறது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஏரிகளை பொதுப்பணித்து றையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. இதில் 17 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. 40 ஏரிகள் 76 சதவீதமும், 122 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பி காணப்படுகிறது. மீதமுள்ள 329 ஏரிகள் 25 சதவீத கொள்ளளவை எட்டி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பருவ மழையையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் 21 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வருவாய்த்துறை, மின்சாரம், காவல்துறை, தீயணைப்பு துறை என 11 துறையை சேர்ந்தவர்கள் அடங்கிய 21குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அந்தந்த பகுதிகளிலேயே பருவ மழை வரை தங்கி பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.
- மாமல்லபுரம் மற்றம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
- கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது.
பின்னர் மாலை முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இது விடிய விடிய நீடித்தது. பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதியில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 12.7 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதேபோல் கும்மிடிப்பூண்டி, பொன்னேரியில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.
பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு காரனோடை, தச்சூர், சோழவரம் பஞ்செட்டி தடப்பெரும்பாக்கம் திருப்பாலைவனம் அத்திப்பட்டு, வல்லூர் மணலி புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தெருக்களில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி காணப்படுகிறது. பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்டத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியதால் பள்ளம், மேடு தெரியாமல் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொன்னேரி, மீஞ்சூர் நெடுஞ்சாலை வேண்பாக்கம் மின்சார அலுவலகம் அருகில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால் நெடுஞ்சாலை நீண்ட தூரத்திற்கு வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. அதை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமல்லபுரம் மற்றம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மழையின் காரனமாக விடுதிகளில் முடங்கினர். வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து சுற்றுலா வேன், பஸ்களில் வந்தவர்கள் வாகனங்களில் இருந்தபடியே புராதன சின்னங்களை பார்த்துவிட்டு சென்றனர்.
கல்பாக்கம் அணுமின் நிலையம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பேரிடர் வருவதை முன்னரே கண்டறியும் நவீன வானிலை ஆய்வு ரேடார் மூலம், சர்வதேச தகவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அணுமின் நிலைய வானிலை ஆய்வு நிபுணர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
கும்மிடிப்பூண்டி - 102
சோழவரம் - 79
பொன்னேரி - 99
ஜமீன் கொரட்டூர்- 9
பூந்தமல்லி - 32
பூண்டி - 13
தாமரைப்பாக்கம் - 44
திருவள்ளூர் - 6
ஊத்துக்கோட்டை - 43
ஆவடி - 46.
- கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது.
- அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையை ஒட்டிய பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் தமிழக பகுதிகளில் நிலவுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்குன்றத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னை பெரம்பூரில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை இன்று பெய்யக்கூடும். மேலும் டெல்டா மாவட்டங்கள் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
கடந்த 72 ஆண்டுகளில் சென்னை நுங்கம்பாக்கத்தில் கனமழை (8 செ.மீ.) 3-வது முறையாக பதிவாகி உள்ளது. 30 ஆண்டுகளில் முதல்முறையாக அதிகபட்சமாக இன்று மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை தொடர் நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்எச்சரிக்கை தொடர் நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசித்தார்.
சென்னை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்த மழை 4 நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை தொடர் நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் துறை உயர் அதிகாரிகள் எஸ்.கே.பிரபாகர், குமார், ஜெயந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
காணொலி வாயிலாக தலைமை செயலகத்தில் இருந்தபடி அமைச்சர்கள் துரைமுருகன், தலைமை செயலாளர் இறையன்பு, உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தீப் சக்சேனா, ராமன், பிரதீப் யாதவ், சிவதாஸ் மீனா, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகிய அதிகாரிகள் காணொலியில் இணைந்திருந்தனர்.
இதேபோல் மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி ஆகியோரும் 23 மாவட்ட கலெக்டர்கள் அந்தந்த மாவட்டங்களில் இருந்தபடி முதல்-அமைச்சருடன் காணொலியில் இணைந்திருந்தனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்எச்சரிக்கை தொடர் நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசித்தார். பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக சிதம்பரம் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
- மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளானர்கள்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதன்படி பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நேற்று முதல் பெய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய கொட்டிதீர்த்தது. இன்று காலையும் மழை பெய்தபடி காணப்பட்டது. இதேபோல மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக சிதம்பரம் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளானர்கள்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் சூழும் பகுதிகளுக்கு செல்ல படகு தயார் நிலையில் உள்ளது. இதுதவிர மாநகராட்சி, நகராட்சி பகுதியில் வெள்ளத்தை தடுக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரிகள் மற்றும் குளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் புவனகிரியை சுற்றியுள்ள ஆதிவராக நத்தம், மஞ்சகுழி, பெருமாத்தூர், சுத்துக்குழி, பூதவராயன்பேட்டை, வண்டு ராயன்பட்டு, உடையூர், கீரப்பாளையம், வடகறி ராஜபுரம், ஒரத்தூர், தெற்கு திட்டை, வடக்குதிட்டை, பு.சித்தேரி, சாத்தப்பாடி ஆகிய பல்வேறு கிராமங்களில் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது.
- தொடர்ந்து கன மழை பெய்ததால் 5 இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன.
- விடிய விடிய மாநகராட்சி ஊழியர்கள் எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.
சென்னை:
சென்னையில் நேற்று மாலையில் இருந்து கனமழை பெய்தது. இந்த மழை இரவு வரை நீடித்தது. தொடர்ந்து கன மழை பெய்ததால் 5 இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன.
தி.நகர் கோட்ஸ்ரோடு, 184-வது வார்டு சரவணன் நகர், ராமச்சந்திரன் தெருவில் உள்ள மரம், நங்கநல்லூரில் 165-வது வார்டு, 174-வது வார்டில் கற்பகம் கார்டன், 192-வது வார்டில் ராஜா நகர் ஆகிய இடங்களில் மரங்களும், கிளைகளும் முறிந்து விழுந்தன.
அவற்றை விடிய விடிய மாநகராட்சி ஊழியர்கள் எந்திரம் மூலம் வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.
மேலும் மழை நீர் தேங்கினாலோ, வெள்ளம் புகுந்தாலோ, மரம் மற்றும் கிளைகள் முறிந்து விழுந்தாலோ மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.