search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway worker"

    • பெரம்பூரில் உள்ள பணிமனை கோட்டை வளாகத்தில் முதல் மாநாடு நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.
    • பல்வேறு பிரச்சினைகளை குறித்து கலந்தாய்வு செய்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

    பெரம்பூர்:

    அனைத்திந்திய இதர பிற்படுத்தப்பட்ட ரெயில்வே தொழிலாளர்கள் நல சங்கத்தின் ஏ.ஐ.ஓ.பி. சி.ஆர்.இ.ஏ. சார்பில் தென்மண்டல பொது செயலாளர் டாக்டர் ஆர். அப்சல், தலைமையில் பெரம்பூரில் உள்ள பணிமனை கோட்டை வளாகத்தில் முதல் மாநாடு நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. மாநாட்டில் இந்திய ரெயில்வே துறையில் தனியார் மயம் அதிகரிப்பால் இட ஒதுக்கீட்டில் ஏற்படும் பாதிப்புகள், ஓபிசி தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் ரெயில்வே துறையில் ஓ.பி.சி. தொழிலாளர்களுக்கு ரெயில்வே போர்டு வழங்கி உள்ள சலுகைகள் மற்றும் உரிமைகள் சரியாக நடை முறைப்படுத்தப்படுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை குறித்து கலந்தாய்வு செய்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

    மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பா. ம. க. தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், பா. ம. க. துணை பொதுச் செயலாளரும் , முன்னாள் ரெயில்வே துறை இணை அமைச்சருமான ஏ. கே. மூர்த்தி, மூத்த வழக்கறிஞரும் அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவருமான எஸ். பிரபாகரன், ஏ.ஐ.ஓ.பி. சி தென்மண்டல தலைவர் சுல்தான், நிர்வாக தலைவர் பி. வினோத், ஆர். செந்தில் குமார், தென்மண்டல பொருளாளர் ஏ. சீனிவாச ராவ், துணை பொது செயலாளர் கே. விஜயகுமார், சென்னை கோட்ட செயலாளர் பி. திரு குமரன், பணிமனை கோட்ட செயலாளர் ஆர். ஏழுமலை, கூடுதல் கோட்ட செயலாளர் நாசர்கான், கோட்ட தலைவர் ஏ. ஹென்றி, கூடுதல் கோட்ட தலைவர் ஆர். தயாநிதி ரிச்சர்ட், பணிமனை கோட்ட பொருளாளர் ஆர். செந்தில்குமார், பணிமனை கோட்ட நிர்வாக தலைவர் ஆர். ராம்ஸ்வரூப், பணிமனை கோட்ட நிர்வாக தலைவர் யூ. ராகவேந்திரா, பணிமனை கோட்ட அமைப்பு செயலாளர் சி. மோகன், ஓ பி சி துணை பொது செயலாளர் உ. அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள். மேலும் தென் மண்டல நிர்வாகிகளும், சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம், ஆகிய கோட்ட நிர்வாகிகள், பணிமனை கோட்ட நிர்வாகிகள், அனைத்து கிளை நிர்வாகிகள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில்வே தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

    கன்னியாகுமரியில் ரெயில் டிக்கெட் கவுண்டருக்குள் பாம்பு புகுந்ததாக ஊழியர் அலறியதையடுத்து டிக்கெட் எடுக்க காத்திருந்த பயணிகள் இடையேயும் பாம்பு பீதி ஏற்பட்டது.
    கன்னியாகுமரி:

    கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் தற்போது அதிக அளவு வருகை தருகிறார்கள்.

    வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலோர் ரெயில் மூலம் கன்னியாகுமரிக்கு வருவதால் ரெயில் நிலையத்தில் அதிக கூட்டம் காணப்படுகிறது. மேலும் டிக் கெட் எடுக்கவும் பயணிகள் டிக்கெட் கவுண்டர்களில் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

    பயணிகள் வசதிக்காக கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது. இன்று காலை வழக்கம்போல ஊழியர்கள் பணியில் இருந்தனர். டிக்கெட் எடுக்க பயணிகளும் வரிசையில் காத்திருந்தனர்.

    அப்போது சிறப்பு டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் தனது காலை ஏதோ கடித்ததை உணர்ந்தார். பாம்புதான் தன்னை கடித்துவிட்டது என்று பீதி அடைந்த அவர் பாம்பு.... பாம்பு.... என்று அலறியபடி கவுண்டரில் இருந்து வெளியே ஓட்டம்பிடித்தார். அவருடன் பணியில் இருந்த மற்ற ஊழியர்களும் பதட்டத்துடன் வெளியே ஓடினார்கள்.

    இதைப் பார்த்ததும் டிக்கெட் எடுக்க காத்திருந்த பயணிகள் இடையேயும் பாம்பு பீதி ஏற்பட்டது. மேலும் இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் ரெயில் டிக்கெட் கவுண்டருக்குள் சென்று பாம்பை தேடினார்கள். நீண்ட நேரம் சோதனை நடத்திய பிறகும் பாம்பு எதுவும் சிக்கவில்லை. அப்போது அங்கிருந்த பொந்து ஒன்றில் இருந்து எலி வெளியே வந்து ஓடியது. இதனால் ரெயில்வே ஊழியரை அந்த எலிதான் கடித்திருக்க வேண்டும். அவர் பயத்தில் தன்னை பாம்பு கடித்துவிட்டதாக பீதி அடைந்து உள்ளார் என்பதை தீயணைப்பு வீரர்கள் உறுதி செய்தனர்.

    பாம்பு பீதி காரணமாக கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
    தூத்துக்குடியில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருநங்கையை ரெயில்வே ஒப்பந்த ஊழியர் திருமணம் செய்துகொண்டார். மணமக்களுக்கு கல்லூரி மாணவிகள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். #TransgenderMarriage
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் அருண்குமார் (வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ரெயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    தூத்துக்குடி-எட்டயபுரம் ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீஜா (20). திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார்.

    இவரும், அருண்குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு அருண்குமார் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜாவை திருமணம் செய்ய அருண்குமார் முடிவு செய்தார்.

    அதன்படி, அக்டோபர் 31-ந் தேதி (நேற்று) தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர்.

    இதையடுத்து, மணமக்கள் நேற்று காலை சிவன் கோவிலுக்கு வந்தனர். அவர்களுடன் ஸ்ரீஜாவின் கல்லூரி தோழிகள், அருண்குமாரின் சில உறவினர்கள் மற்றும் நண்பர்களும், ஏராளமான திருநங்கைகளும் வந்து இருந்தனர். அருண்குமாரின் பெற்றோர் வரவில்லை.

    மணமக்கள் கோவில் அலுவலகத்துக்கு சென்றபோது, இந்த திருமணத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்று அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இந்து திருமண சட்டப்படி ஒரு ஆண், பெண்ணைத்தான் திருமணம் செய்ய முடியும் என்றும் திருநங்கையை திருமணம் செய்ய முடியாது என்றும் அவர்கள் திட்டவட்டமாக கூறினர்.

    ஆனால், திருநங்கையை திருமணம் செய்ய அரசு அங்கீகாரம் அளித்து உள்ளதாகவும், எனவே சட்டப்படி இந்த திருமணத்தை நடத்தலாம் என்றும் கூறி திருமண வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திடீரென திருநங்கைகள் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். பின்னர் அவர்கள், திருமணத்தை வேண்டுமானால் கோவிலில் நடத்திக் கொள்ளுங்கள். அதற்கான பதிவு சான்றிதழை தரமுடியாது என்று கூறினார்.

    ஆனால், அதனை ஏற்க மறுத்த திருநங்கைகள் இந்த திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்றும் முறைப்படி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அருண்குமாரிடம், திருநங்கையை திருமணம் செய்ய அரசு அங்கீகாரம் அளித்ததற்கான அரசாணை நகல் இருந்தால் கொடுங்கள், அதிகாரிகளிடம் பேசி திருமணத்தை நடத்த அனுமதி பெறலாம் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் அருணிடம் அதற்கான நகல் ஏதும் இல்லை.

    அதே நேரத்தில் முகூர்த்த நேரம் முடியும் சூழல் உருவானது. எனவே திருமணத்தை முதலில் முடித்துவிட்டு, சான்றிதழ் விவகாரத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என மணமக்கள் முடிவு செய்தனர்.



    அதன்படி காலை 11.40 மணிக்கு மணமக்கள் மாலை மாற்றினர். பின்னர் திருநங்கை ஸ்ரீஜா கழுத்தில் அருண்குமார் தாலி கட்டினார். அப்போது அங்கு கூடி இருந்த திருநங்கைகள் உற்சாகமாக ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மணமக்களுக்கு கல்லூரி மாணவிகள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருநங்கைகள் கூறும்போது, ‘தற்போது திருமணம் நடந்து உள்ளது. இந்த திருமணத்தை முறைப்படி பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம்’ என்று தெரிவித்தனர்.  #TransgenderMarriage

    ×