search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • ரோகித் சர்மா தினேஷ் கார்த்திக் 14 முறை டக் அவுட் ஆகியுள்ளனர்.
    • பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், பார்தீவ் படேல், ரகானே, அம்பதி ராயுடு ஆகியோர் 13 முறையும் டக் அவுட் ஆகியுள்ளனர்.

    ஐபிஎல் 2023:

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டம் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் பெங்களூர் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் சரிவை சந்தித்தாலும் கடைசி அதிரடியாக விளையாடி 204 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 123 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

     இந்த போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் கொல்கத்தா வீரர் மந்தீப் சிங் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களாக இருந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக்கை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை மந்தீப் சிங் பிடித்துள்ளார்.

    15 முறை மந்தீப் சிங் டக் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா தினேஷ் கார்த்திக் 14 முறையும் பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், பார்தீவ் படேல், ரகானே, அம்பதி ராயுடு ஆகியோர் 13 முறையும் டக் அவுட் ஆகியுள்ளனர்.

    • ஐபிஎல் தொடரில் வீரர்கள் விளையாடுவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது.
    • ஐபிஎல் நிர்வாகம் அணி உரிமையாளர்களுக்கு ஸ்பெஷல் சலுகையை வழங்க வேண்டும்.

    ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் மார்ச் 31ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் 10 அணிகளில் பல்வேறு இந்திய நட்சத்திர வீரர்கள் தங்களது அணிகளுக்காக விளையாட தயாராகி வருகின்றனர்.

    இருப்பினும் வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி நடைபெறுகிறது. அதில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.

    முன்னதாக கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் இதே போல் ஒரு வாரம் முன்பாக இங்கிலாந்து பயணித்து வலை பயிற்சிகளை மட்டும் செய்து நேரடியாக களமிறங்கிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை நியூசிலாந்து தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்களை 2023 ஐபிஎல் தொடரில் குறிப்பிட்ட சில போட்டிகளில் ஓய்வு பெறுமாறு ரோகித் சர்மா அறிவுறுத்தியிருந்தார். சொல்லப்போனால் மும்பை அணியில் சில போட்டிகளில் ரோகித் சர்மா ஓய்வெடுப்பார் என்றும் அவருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக வழி நடத்துவார் என்றும் நேற்று செய்திகள் வெளியானது.

    இந்நிலையில் பல கோடி ரூபாய்களை கொடுக்கும் ஐபிஎல் நிர்வாகங்கள் ஏன் அது போன்ற ஓய்வு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்த வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

    இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-

    ஐபிஎல் தொடரின் வெற்றி பெரும்பாலும் வீரர்களின் ஃபிட்னஸை அடிப்படையாக கொண்டுள்ளது. அதில் அனைவரும் தங்களுடைய முழு திறமைக்கேற்றார் போல் விளையாடுகிறார்கள்.

    அதனாலயே ரசிகர்கள் விரும்பும் இந்த தொடர் மிகவும் பிரபலமாக இருக்கிறது. எனவே உலகக்கோப்பை போன்ற தொடர்களில் விளையாட வேண்டும் என்பதற்காக முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுவதை விரும்பும் ஒருவராக நான் இருப்பதில்லை. ஏனெனில் சர்வதேச அளவில் விளையாடும் போதும் காயத்தை சந்தித்து நிறைய முக்கிய வீரர்கள் வெளியேறுகிறார்கள் என்பதால் எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

    எனவே ஐபிஎல் தொடரில் வீரர்கள் விளையாடுவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது. ஏனெனில் நிறைய பணத்தை செலவழிக்கும் அணி உரிமையாளர்களுக்கு தாங்கள் வாங்கும் வீரர்களை முழுமையாக தேவைப்படும் அளவுக்கு பயன்படுத்தும் சுதந்திரத்தை பெற வேண்டும். அதில் ஐபிஎல் நிர்வாகம் அணி உரிமையாளர்களுக்கு ஸ்பெஷல் சலுகையை வழங்க வேண்டும்.

    என்று கூறியுள்ளார். 

    • டுவிட்டரில் ரோகித்சர்மா என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது.
    • 16-வது ஐ.பி.எல். திருவிழா நாளை தொடங்குகிறது.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்தப் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது. பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியது ஆகியவற்றின் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

    இதுவரை 15 சீசன்கள் நடைபெற்றுள்ளன. 16-வது ஐ.பி.எல். திருவிழா நாளை தொடங்குகிறது.


    இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்பு அனைத்து அணியின் கேப்டன்களும் ஐபிஎல் கோப்பையுடன் புகைப்படம் எடுப்பது வழக்கமான ஒன்று. அதை போன்று இந்த ஐபிஎல் போட்டிக்கான கேப்டன்கள் கோப்பையுடன் உள்ள புகைப்படத்தை ஐபிஎல் வெளியிட்டது. அதில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இல்லாதது மும்பை அணி ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதனை தொடர்ந்து டுவிட்டரில் ரோகித்சர்மா என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது.

    • ஒரு வீரர் முதல் பந்தை தாண்டவில்லை என்பதற்காக அவர் நல்ல ஆட்டத்திறனுடன் இல்லை என்று சொல்ல முடியாது.
    • அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்று நம்புகிறேன்.

    மும்பை:

    10 அணிகள் இடையிலான 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தனது முதல் ஆட்டத்தில் வருகிற 2-ந்தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பெங்களூருவில் எதிர்கொள்கிறது. கடந்த சீசனில் கடைசி இடத்தை பெற்று விமர்சனத்திற்குள்ளான மும்பை அணி இந்த முறை எழுச்சி பெறும் உத்வேகத்துடன் தயாராகி வருகிறது.

    இதையொட்டி மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். மட்டுமல்ல, நாங்கள் எப்போது களம் இறங்கினாலும் எதிர்பார்ப்பு இருக்கத் தான் செய்யும். பல ஆண்டுகள் விளையாடி விட்ட எனக்கு இத்தகைய எதிர்பார்ப்பால் பிரச்சினை இல்லை. அது பற்றி கவலைப்படுவதும் இல்லை. கோப்பையை வெல்வதற்கு எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது தெரியும். அது குறித்தே எல்லாநேரமும் சிந்திப்பதால் அது எங்களுக்குள் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இளம் வீரர்களுக்கு குறிப்பாக இதற்கு முன்பு ஐ.பி.எல்.-ல் ஆடாத வீரர்களுக்கு அதிக அளவில் நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. முதல்தர கிரிக்கெட் அல்லது கிளப் கிரிக்கெட்டுகளில் எந்த மாதிரி விளையாடினீர்களோ அதே போன்று இங்கு ஆடும்படி அவர்களிடம் சொல்வேன். அதில் இருந்து ஐ.பி.எல். கிரிக்கெட் வேறுபட்டது தான். ஆனாலும் அவர்களை அந்த மனநிலைக்கு கொண்டு வர முயற்சிப்பேன்.

    காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகி இருப்பது எங்களுக்கு இழப்பாகும். ஆனால் இது இன்னாரு வீரருக்கு வாய்ப்பாக அமையும். இதே அணியில் கடந்த 2 ஆண்டுகள் விளையாடும் ஓரிரு பவுலர்கள் அவரது இடத்தை நிரப்புவதற்கு தயாராக உள்ளனர். பும்ரா இல்லாததால் சில இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வருகை தந்துள்ளார். கடந்த ஆண்டு அணியில் இடம் பெற்றிருந்தாலும் காயத்தால் விளையாட முடியாமல் போனது. அவர் எப்படிப்பட்ட பவுலர் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

    மும்பை அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறுகையில்:-


    முக்கியமான சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டி இருப்பதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவுக்கு லீக் சுற்றின் போது ஓய்வு அளிக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். அவர் மும்பை அணியின் கேப்டன். அவர் ஓய்வை விரும்பமாட்டார் என்று நம்புகிறேன். எதுவாகினும் சூழலுக்கு தக்கபடி முடிவு செய்வோம். ஒரு வேளை அவர் ஒன்றிரண்டு ஆட்டங்களுக்கு ஓய்வு தேவை என்று கேட்டால், ஓய்வு அளிக்கப்படும். அதில் எந்த பிரச்சினையும் இல்லை.

    வீரர்களின் பணிச்சுமை குறித்து இப்போது நிறைய பேசுகிறார்கள். எங்கள் அணிக்குரிய போட்டி அட்டவணையை பார்த்தால், ஒவ்வொரு ஆட்டத்திற்கும் இடையே ஓரளவு ஓய்வு கிடைப்பது தெரியும். அதனால் எங்கள் அணியில் வேலைப்பளு என்பது பெரிய பிரச்சினையாக இருக்காது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடும் போது உடலுக்கு கடினமாக இருக்கும். ஆனால் 20 ஓவர் போட்டி குறுகிய நேரத்தில் முடிந்து விடும். எனவே 20 ஓவர் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான பணிச்சுமை குறித்து நாம் பேசுவது தேவையற்றது.

    சூர்யகுமார் நன்றாக இருக்கிறார். அவர் எத்தகைய மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள அவரிடம் பேசினேன். அப்போது அவர் 'நான் பந்தை நன்றாக அடித்து ஆடுகிறேன்' என்று கூறினார். அதற்கு நான், 'பதற்றமின்றி அமைதியாக இருங்கள்' என்று சொன்னேன். ஒரு வீரர் முதல் பந்தை தாண்டவில்லை என்பதற்காக அவர் நல்ல ஆட்டத்திறனுடன் இல்லை என்று சொல்ல முடியாது. துரதிர்ஷ்டவசமாக அவர் 3 ஆட்டங்களிலும் முதல் பந்திலேயே வெளியேறி விட்டார். ஐ.பி.எல்.-ல் அவர் முதல் பந்தை சந்திக்கும் போது, ஒட்டுமொத்த ரசிகர்கள் கூட்டமும் அவரை உற்சாகப்படுத்தும். அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்று நம்புகிறேன். தற்போது உலகின் மிகச்சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரராக அவர் விளங்குகிறார்.

    என்று அவர் கூறினார்.

    • பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 3 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் ரஷித்கான் 2-ல் இருந்து முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.
    • ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பரூக்கி 12 இடங்கள் எகிறி தனது சிறந்த தரநிலையாக 3-வது இடத்தை ஆக்கிரமித்துள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான வீரர்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர்கள் சுப்மன் கில் 5-வது இடத்திலும், விராட்கோலி 7-வது இடத்திலும் தொடருகின்றனர்.

    இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒரு இடம் உயர்ந்து 8-வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடர்நாயகன் விருது பெற்ற ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் 4 இடங்கள் உயர்ந்து 51-வது இடத்தை எட்டியுள்ளார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் முதலிடத்தில் மாற்றமின்றி தொடருகிறார். டிரென்ட் பவுல்ட் (நியூசிலாந்து) 2-வது இடத்திலும், முகமது சிராஜ் (இந்தியா) 3-வது இடத்திலும் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 10 இடங்கள் ஏற்றம் கண்டு 76-வது இடத்தை பெற்றுள்ளார்.

    20 ஓவர் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் நீடிக்கிறார். தென்ஆப்பிரிக்க வீரர் ரிலீ ரோசவ் 3 இடங்கள் ஏற்றம் பெற்று 6-வது இடத்தை பிடித்துள்ளார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு மீண்டும் முதலிடத்தை தனதாக்கி இருக்கிறார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 3 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் அவர் 2-ல் இருந்து முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். முதலிடத்தில் இருந்த இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 2-வது இடத்துக்கு சரிந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பரூக்கி 12 இடங்கள் எகிறி தனது சிறந்த தரநிலையாக 3-வது இடத்தை ஆக்கிரமித்துள்ளார்.

    • டோனியின் கடைசி சீசன் இதுவாக இருக்கும் என்று கடந்த 2-3 ஆண்டுகளாக நான் கேள்விப்பட்டு வருகிறேன்.
    • இன்னும் சில சீசன்களில் விளையாடும் அளவுக்கு அவர் தகுதியானவர்.

    2023 ஐபிஎல் போட்டிக்காக டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தாண்டுதான் டோனியின் கடைசி ஐபிஎல் என பலரும் கூறிவருகின்றனர். வாட்சன் உள்பட சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்கள் டோனியின் பயிற்சியை பார்த்துவிட்டு இவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என கூறினர்.

    இந்நிலையில் எம்எஸ் டோனி இன்னும் 2-3 சீசன் வரை ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என இந்திய அணியின் கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    டோனியின் கடைசி சீசன் இதுவாக இருக்கும் என்று கடந்த 2-3 ஆண்டுகளாக நான் கேள்விப்பட்டு வருகிறேன். இன்னும் சில சீசன்களில் விளையாடும் அளவுக்கு அவர் தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன். இதுதான் அவருக்கு கடைசி வருடம் என சொல்ல முடியாது.

    அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு இன்னும் சில சீசன்கள் விளையாட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    என்று ரோகித் சர்மா கூறினார்.

    • தேசிய முகாமில் ரோகித் மிகவும் சிறப்பான வீரர் என்று எல்லோரும் சொன்னார்கள்.
    • அவர் அதிகமாக பேசியதில்லை. ஆனால் விளையாடும்போது ஆக்ரோஷமாக இருப்பார்.

    முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா ரோகித் சர்மாவுடன் தனது ஆரம்ப உரையாடல்களில் ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    15 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய முகாமில் தான் ரோகித்தை முதலில் சந்தித்தேன். அவர் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கிரிக்கெட் கிட் வாங்க பால் பாக்கெட் விற்பனை செய்ததாக எங்களுக்குள் நடந்த விவாதங்களின் போது உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்திருக்கிறார்.

    தேசிய முகாமில் ரோகித் மிகவும் சிறப்பான வீரர் என்று எல்லோரும் சொன்னார்கள். அங்கு அவருக்கு எதிராக விளையாடி விக்கெட்டை வீழ்த்தினேன். அவர் அதிகமாக பேசியதில்லை. ஆனால் விளையாடும்போது ஆக்ரோஷமாக இருப்பார். 

    உண்மையில், நாங்கள் ஒருவரையொருவர் அறியாதபோது அவர் ஏன் என்னிடம் இவ்வளவு ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறார் என்று நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஆனால் அதன் பிறகு எங்கள் நட்பு வளர ஆரம்பித்தது.

    இப்போது அவரைப் பார்க்கும்போது, எங்கள் பயணம் எப்படி ஆரம்பித்தது, எப்படி வளர்ந்திருக்கிறோம் என்பதை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

    இவ்வாறு ஓஜா கூறினார்.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 269 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 248 ரன்களில் ஆல் அவுட்டானது.

    சென்னை:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

    முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து ஆடிய இந்தியா 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. விராட் கோலி அரை சதமடித்து 54 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இந்தப் போட்டியில், ரோகித் சர்மா 17 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆசியாவில் 10,000 ரன்களை கடந்த 8-வது இந்தியர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.

    • மும்பையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு விமானம் வாயிலாக வந்த அவரை நிறைய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
    • ஒரு ரசிகர் ஒற்றை ரோஜா பூவை கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தார்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டியில் இந்தியா வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் மிட்சேல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 11 ஓவரிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.

    முன்னதாக தனது உறவினர் திருமணத்திற்காக சென்றதால் முதல் போட்டியில் பங்கேற்காத கேப்டன் ரோகித் சர்மா 2-வது போட்டியில் இந்திய அணியுடன் இணைந்து விளையாடினார்.

    அந்த போட்டியில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு விமானம் வாயிலாக வந்த அவரை நிறைய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.


    அங்கிருந்த சிலர் ரோகித் சர்மாவுக்கு பூக்கள் கொடுத்து வரவேற்ற நிலையில் ஒரு ரசிகர் ஒற்றை ரோஜா பூவை கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தார். ஆனால் அப்போது அந்த ரசிகர் பூ கொடுப்பதற்கு முன்பாக ஏற்கனவே சில ரசிகர்களிடம் பெற்று தனது கையில் வைத்திருந்த ரோஜா பூவை "இதை வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறி அந்த ரசிகரிடம் ரோகித் சர்மா கொடுத்தார். அப்போது அந்த ரசிகர் மிகவும் நன்றி என்று ஆனந்தமாக தெரிவித்ததார். ஆனால் அதற்கு நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று அந்த ரசிகர்களிடம் வேடிக்கையாக விளையாட்டுக்கு கலகலப்பாக சொல்லிக் கொண்டே ரோகித் சர்மா அங்கிருந்து சென்றார்.

    அந்த ஆனந்தத்துடன் அந்த ரசிகர் பதிவிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் ஒரு ரசிகரிடம் இப்படியா சொல்வது என்று சிரிப்பதுடன் ரசிகர்களிடம் பாகுபாடின்றி விளையாட்டாக பழகும் கேப்டன் ரோகித் சர்மாவை மனதார பாராட்டுகிறார்கள்.

    • இந்தியா - ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அறிவிக்கப்பட்டிருந்தது.
    • தனது மனைவியுடன் இணைந்து ரோகித் சர்மா உற்சாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    குடும்ப நிகழ்ச்சி காரணமாக இந்தியா - ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்திய அணி விளையாடியது.


    இந்த நிலையில், மைத்துனரின் திருமண நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் இணைந்து ரோகித் சர்மா உற்சாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 17,000 ரன்கள் கடந்தார்.
    • 17 ஆயிரம் ரன்களைக் கடந்த 6-வது இந்திய வீரர் ஆனார் ரோகித் சர்மா

    அகமதாபாத்:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா 21 ரன்கள் எட்டியபோது சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்து 17,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய 6-வது இந்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

    ரோகித் சர்மா தனது 438-வது சர்வதேச இன்னிங்சில் இதனை செய்திருக்கிறார். ரோகித் சர்மா இதுவரை 48 டெஸ்ட் போட்டிகள், 241 ஒருநாள் போட்டிகள் மற்றும் 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    அதில் 9,782 ரன்களை ஒருநாள் போட்டிகளிலும், 3,853 ரன்களை டி20 போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து 3,350 ரன்கள் டெஸ்ட் போட்டிகளிலும் எடுத்துள்ளார்.

    ஏற்கனவே சச்சின், விராட் கோலி, டிராவிட், சவுரவ் கங்குலி மற்றும் எம்.எஸ்.டோனி ஆகியோர் 17000 ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் இரண்டு ஆட்டங்களில் நாங்கள் எப்படி விளையாடினோம் என்று நாம் பார்க்க வேண்டும்.
    • ஒரு போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் அனைவரும் இணைந்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.

    இந்தூர்:

    பார்டர் கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் அடைந்த மூன்றாவது தோல்வி இதுவாகும்.

    கேப்டனாக ரோகித் சர்மா சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக தோல்வியை தழுவி இருக்கிறார்.

    தோல்வி அடைந்ததற்கு பிறகு ரோகித் சர்மா பேசியதாவது:-

    முதல் இன்னிங்ஸில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. முதலில் பேட்டிங்கில் இருந்து சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் மோசமாக விளையாடினோம். முதல் இன்னிங்சில் அதிக ரன்களை அடிக்க வேண்டிய முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆஸ்திரேலியா எங்களை விட 80, 90 ரன்கள் முன்னிலை பெற்றபோது நாங்கள் மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும்.

    ஆனால் எங்களால் அதுவும் முடியவில்லை. நாங்கள் வெறும் 75 ரன்கள் தான் இலக்காக நிர்ணயித்திருந்தோம். நாங்கள் முதல் இன்னிங்சில் மட்டும் நன்றாக விளையாடி இருந்தால் ஆட்டத்தின் முடிவு வித்தியாசமாக மாறி இருக்கலாம். இன்னும் நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து யோசிக்கவில்லை. அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. தற்போது எங்களுடைய குறிக்கோளெல்லாம் அகமதாபாத் டெஸ்டில் என்ன செய்ய வேண்டும் என்பதுதான்.

    நாங்கள் ஒரு அணியாக மீண்டும் இணைந்து என்ன தவறு செய்தோம் என்பதை புரிந்து விளையாட வேண்டும். ஆடுகளத்தை குறை கூறவே கூடாது. ஆடுகளம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் நீங்கள் உங்களுடைய பணியை சரியாக வந்து செய்ய வேண்டும். சவாலான ஆடுகளத்தில் விளையாடும் போது நீங்கள் கொஞ்சம் தைரியமாக விளையாட வேண்டும்.

    நாங்கள் ஆஸ்திரேலிய வீரர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதி அளித்து விட்டோம். அவர்கள் ஒரே இடத்தில் பந்தை செலுத்தி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். அதற்காக ஆஸ்திரேலியா வீரர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. அதுவும் லயான் எங்களுக்கு தொடர்ந்து சரியான லென்தில் பந்து வீசி சவால்களை கொடுத்துக் கொண்டே இருந்தார். ஒரு பந்துவீச்சாளர் அப்படி செயல்படும் போது நீங்கள் கொஞ்சம் தைரியமாக விளையாடி இருக்க வேண்டும்.ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்.

    முதல் இரண்டு ஆட்டங்களில் நாங்கள் எப்படி விளையாடினோம் என்று நாம் பார்க்க வேண்டும். ஒரு போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் அனைவரும் இணைந்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். எங்கள் அணியில் சில வீரர்கள் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு கை கொடுக்க வேண்டும். நாம் வகுத்த திட்டத்தை பின்பற்றவில்லை. அதுதான் தற்போது நடந்திருக்கிறது. ஆடுகளத்திற்கு ஏற்றார் போல் நாங்கள் எங்களை மாற்றிக்கொண்டு விளையாடவில்லை.

    என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    ×