என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Single Leadership"
- ஜூன் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட உள்ளது
- அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன
சென்னை:
அதிமுகவில் மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில், இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஜூன் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட உள்ள நிலையில், ஒற்றை தலைமை விவகாரம் கட்சியில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் ஆதரவு கருத்துக்களை பகிரங்கமாக கூறி வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இத்தகைய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. போஸ்டர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
- அரசை காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்ததாக ஓபிஎஸ் பேட்டி
- ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என பொதுக்குழுவில் முடிவு
சென்னை:
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுப்பெற்றுள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுகவில் தொண்டர்களால் தேர்தல் மூலமாகவே பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்பது விதி. தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளால் பொதுச்செயலாளரை உருவாக்க முடியாது என்றார் கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர். ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச்செயலாளர் என்ற பதவி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது.
டிடிவி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது, அரசை காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்தோம்.
தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பதற்காகவே நாங்கள் இருவரும் இணைந்து செயல்பட்டோம். எனக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. அது அதிகாரமற்ற பதவி. இருந்தபோதும் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த பதவியை ஏற்றுக்கொண்டேன்.
இப்போது ஒற்றைத் தலைமை பேச்சு ஏன் எழுந்தது என்று எனக்கே தெரியவில்லை. 6 ஆண்டு காலம் நன்றாக கட்சியை வழிநடத்திச் சென்ற நேரத்தில் இந்த பிரச்சனை எழுந்தது சரியல்ல. எதிர்க்கட்சியாக நாம் இருக்கும் இந்த நேரத்தில் இந்த பிரச்சனை தேவையில்லை. நானோ, எடப்பாடி பழனிசாமியோ இதுபற்றி பேசியது இல்லை.
ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என பொதுக்குழுவில் முடிவு செய்திருந்தோம். பொதுச்செயலாளர் என ஜெயலலிதாவுக்கு கொடுத்த பதவியில் யாரும் வரக்கூடாது. மீண்டும் ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொண்டர்களுக்காகவே கட்சியில் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்ததாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
- ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்த முடியாது.
சென்னை:
அதிமுகவின் ஒற்றைத் தலைமை கோஷம் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே ஏற்பட்ட சலசலப்புக்கு மத்தியில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கட்சிக்கு ஒற்றை தலைமை தேவையில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். அவர் பேசியதாவது:-
பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு இருவரின் ஒப்புதலும் தேவை. அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை தேவையில்லை. கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவையா, இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும். 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவின் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி உடன்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமியுடன் எப்போதும் அமர்ந்து பேச தயாராக உள்ளேன்.
ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்த முடியாது. என்னை தொண்டர்களிடம் இருந்து பிரிக்க முடியாது. நானும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்தபோது எந்தப் பதவியையும் நான் கேட்டதில்லை. தொண்டர்களுக்காகவே கட்சியில் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தேன். தொண்டர்களின் மனதில் குழப்பத்தை உருவாக்கக் கூடாது என்பது எனது நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், இந்த விவகாரத்தில் தலைமை நிர்வாகிகளே முடிவு செய்வார்கள் என்றார்.
- தூத்துக்குடி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் டூவிபுரம் மெயின் ரோட்டில் நடைபெற்றது.
- அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி தான் செய்தது போல் நாடாகமாடி வருகிறார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் டூவிபுரம் மெயின் ரோட்டில் நடைபெற்றது. மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் ஜோதிமணி தலைமை தாங்கினார்.
சண்முகநாதன்
இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், சேவியர், முருகன், ஜெய்கணேஷ், மாநகராட்சி எதிர்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், பத்மாவதி, ஜெயராணி, ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் கவுன்சிலர் செண்பக செல்வன் வரவேற்றார். கூட்டத்தில தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஸ்டிக்கர் ஒட்டி
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி தான் செய்தது போல் நாடாகமாடி வருகிறார். சோதனையை கடந்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாதனையை படைப்பார். அவரது பக்கம் 99 சதவீதம் பேர் இருக்கின்றனர். ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்.
தமிழக மக்களுக்காக பாடுபடும் கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது. எதிர்வரும் தேர்தலையும் எதிர்கொண்டு எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆவார். அண்ணாவின் வழியில் அவரது கொள்கைகளை தாங்கி வெற்றிக்கனியை பறிப்போம். தமிழக அரசு எந்த திட்டத்தையும் புதிதாக செய்யவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இலவச சேலை
பின்னர் 250 பேருக்கு இலவச சேலை வழங்கினார். தொடர்ந்து தலைமை பேச்சாளர்கள் தீப்பொறி முருகேசன், வைகை பாண்டி, ஞானதாஸ் உள்பட பலர் பேசினார்கள்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மருத்துவ அணி செயலாளர் ராஜசேகர், அவைத்தலைவர் திருபாற்கடல், மாவட்ட துணை செயலாளர் சந்தனம், இணைச்செயலாளர் செரினா பாக்கியராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், வக்கீல் பிரிவு செயலாளர் சேகர், தொழிற்சங்க செயலாளர் ராஜா, இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாணவரணி செயலாளர் விக்ணேஷ், சிறுபான்மைபிரிவு செயலாளர் பிரபாகர், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அருண்ஜெபக்குமார், இளைஞர் -இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர்கள் சத்யாலட்மணன், முருகன், இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் வலசை வெயிலுமுத்து, வக்கீல் பிரிவு தலைவர் சுகந்தன் ஆதித்தன், இணைச்செயலாளர் கோமதி மணிகண்டன், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, நிர்வாகிகள் வக்கீல் செங்குட்டுவன், முனியசாமி, சரவணபெருமாள், குமார், உதயகுமார், வட்டச் செயலாளர்கள் உலகநாதன், வெங்கடேஷ், திருச்சிற்றம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி செயலாளர் நட்டார்முத்து நன்றி கூறினார்.
- பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றும் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
- கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? என நீதிபதி கேள்வி
சென்னை:
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு நகலை ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தது. பின்னர் விசாரணை தொடங்கியது.
தற்போது பொதுக்குழு கூட்டியதே செல்லாது என்பதே எங்கள் வழக்கு என்றும், இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காகவே இந்த பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 5 ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளரை ஓரங்கட்டிவிட முடியாது என்று குறிப்பிட்ட அவர் பல கருத்துக்களை முன்வைத்தார்.
பொதுக்குழு கூட்டம் நடத்தும் உரிமையை பறிக்கக் கூடாது என்றும், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றும் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். கட்சி நலனுக்காக வழக்கு தொடுத்திருப்பதாக கூறும் ஓபிஎஸ் தன்னையே எதிர்மனுதாரராக சேர்த்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டார்.
கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்படவேண்டும்? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய நீதிபதி, நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டடார். வழக்கு விசாரணையை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார்.
- பொதுக்குழுவுக்கு தேவை இல்லாத வகையில் 3-வது நபர்கள் மற்றும் சமூக விரோதிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்களால் பிரச்சினை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
- போலீஸ் தரப்பில் எங்களது மனுவை ஏற்றுக் கொண்டு உரிய பாதுகாப்பு வழங்க உறுதி அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் இன்று டி.ஜி.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி வருமாறு:-
வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு சட்ட ரீதியாக நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.
பொதுக்குழுவுக்கு தேவை இல்லாத வகையில் 3-வது நபர்கள் மற்றும் சமூக விரோதிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்களால் பிரச்சினை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில் எங்களது மனுவை ஏற்றுக் கொண்டு உரிய பாதுகாப்பு வழங்க உறுதி அளித்துள்ளனர்.
இதன்படி சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் வகையில் காவல்துறையினர் உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி:-சமூக விரோதிகள் ஓ.பி.எஸ். ஆட்களா?
பதில்:- கட்சியின் சட்ட விதிகளின்படி பொதுக்குழு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சமூக விரோதிகளாக யார்? வருவார்கள் என்பதை எல்லாம் குறிப்பிட்டு சொல்ல முடியுமா? பிரச்சினை ஏற்படாமல் பொதுக்குழு நடைபெற வேண்டும் என்கிற எண்ணத்திலேயே பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
கேள்வி:-கொரோனா பரவல் காரணமாக பொதுக்குழு கூட்டத்தை காணொலியில் நடத்த வாய்ப்புகள் உள்ளதா?
பதில்:-தற்போது வரை சூழல் ஏற்படவில்லை. இருப்பினும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.
கேள்வி:-15 நாட்களுக்கு முன்பே பொதுக்குழு கூட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்றும், அது கடைபிடிக்கப்படவில்லை என்றும் ஓ.பி.எஸ். தரப்பினர் கூறியுள்ளனரே?
பதில்:-23-ந்தேதியே பொதுக்குழுவுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி பார்த்தால் 15 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
கேள்வி:-அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன் என்று சசிகலா கூறி வருகிறாரே?
பதில்:-இது வீண் முயற்சி. தினகரன் ஒரு பக்கமாக வண்டியை தூக்கிக் கொண்டு செல்கிறார். சசிகலா ஒரு பக்கமாக வண்டியில் போகிறார். இருவரும் நேரத்தைதான் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். பெட்ரோல் விலை உயர்ந்துள்ள நிலையில் அவர்கள் பயன்படுத்தும் பெட்ரோலும் வீணாகி கொண்டே இருக்கிறது.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
- ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார்.
- இந்த ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தர்மர் எம்.பி. ஆகியோரும் ஈடுபட்டனர்.
சென்னை:
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வற்புறுத்தினர். ஆனால் அதை ஓ.பன்னீர் செல்வம் ஏற்றுக்கொள்ளாததால் பிரச்சினை எழுந்தது.
கடந்த மாதம் 23-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றி தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்திருந்தனர். இதனால் ஓ.பன்னீர் செல்வம் ஐகோர்ட்டில் வழக்கு போட்டார்.
தீர்ப்பு சாதகமாக வராததால் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கை விடிய விடிய விசாரித்த ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் பொதுக்குழுவில் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம். புதிய தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றக்கூடாது என்று உத்தரவிட்டது.
பரபரப்பான சூழ்நிலையில் நடந்த அந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை பற்றி தீர்மானம் கொண்டு வர முடியாததால் ஒட்டுமொத்தமாக தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஒற்றை தலைமை பற்றி விவாதிக்க மீண்டும் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மொத்தம் உள்ள 2,660 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,400 பேருக்கு மேலாக எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிறார்கள். எனவே 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பற்றி முடிவு செய்யவும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் 23-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கோர்ட்டு உத்தரவை மீறிவிட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை கேட்டும் முறையிட்டனர். ஆனால் பொதுக்குழுவுக்கு தடை கேட்டு டிவிசன் பெஞ்சில் வழக்கு தொடர முடியாது. சம்பந்தப்பட்ட தனி நீதிபதியிடம் முறையிடலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.
இந்த நெருக்கடிகளுக்கு இடையேயும் 11-ந்தேதி பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மும்முரமாக செய்து வருகிறார்கள். அதேநேரம் சட்ட நடவடிக்கை மூலம் அதை முடக்குவதற்கான வேலைகளில் ஓ.பி.எஸ். தரப்பினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
பொதுக்குழுவுக்கு தடை கேட்டு தனி நீதிபதியை அணுகுவது தொடர்பாக நேற்று இரவு சட்ட நிபுணர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் விவாதித்தார். அப்போது மீண்டும் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு பொதுக்குழுவுக்கு தடை கேட்டு இன்று வழக்கு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டே ஓ.பி.எஸ். தனது மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் 11-ந்தேதி பொதுக்குழுவை கூட்டுவதற்கு என்னிடம் அனுமதி பெறவில்லை. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக எனக்கு நேற்று மாலையில் தான் அழைப்பிதழ் கிடைத்துள்ளது. பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பே அழைப்பு விடுக்க வேண்டும் ஆனால் 11-ந்தேதி பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே உரிய முறைப்படி கூட்டப்படாத இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை (6-ந்தேதி) விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.
ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வருவதால் 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தர்மர் எம்.பி. ஆகியோரும் ஈடுபட்டனர்.
- ஐகோர்ட்டில் இன்று ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு தடை கேட்டு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு வழக்கு தாக்கல் செய்தார்.
- 11-ந்தேதி பொதுக்குழு நடக்க உள்ளதால் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் முறையிடப்பட்டது.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரங்கள் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோர்ட்டு அவமதிப்பு தொடர்பான விசாரணையை 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
விசாரணையின் போது வருகிற 11-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும்படி ஓ.பி.எஸ். தரப்பில் முறையிடப்பட்டது. அது தொடர்பாக தனி நீதிபதியை அணுகும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.
இதையடுத்து தனி நீதிபதியை அணுகுவது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் மூத்த வழக்கறிஞர் கள்கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டில் இன்று ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு தடை கேட்டு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு வழக்கு தாக்கல் செய்தார். அதில் 11-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழுவுக்கு தனக்கு நேற்று மாலைதான் அழைப்பு வந்ததாகவும் முறைப்படி பொதுக்குழு நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு அழைப்பு அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 11-ந்தேதி பொதுக்குழு நடக்க உள்ளதால் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் முறையிடப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.
- ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது என எம்ஜிஆர் பேரன் ராமச்சந்திரன் தெரிவித்தார்
- இப்போது ஒற்றை தலைமை வேண்டும் என்று சொல்வது ஏன்? என ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்
சென்னை:
ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர். ஓ.பி.எஸ். பக்கம் மிக குறைவான ஆதரவாளர்களே உள்ளனர். இந்நிலையில், கட்சியில் ஒற்றை தலைமை என்பதை தவிர்க்க வேண்டும். அப்படியே ஒற்றை தலைமை அவசியம் என்றால் அதில் ஒபிஎஸ்தான் தலைமை ஏற்க வேண்டும் என்று எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் கூறியதாவது:-
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது. என் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கே. இதனால் என் பதவி பறிபோனாலும் கவலையில்லை. ஓ.பன்னீர்செல்வத்தை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடியும். எடப்பாடி பழனிசாமியை சாதாரணமாக சந்திக்க முடியாது.
கட்சி இரண்டாக பிரியக்கூடாது. உடையக்கூடாது என என் தாத்தா (எம்ஜிஆர்) நினைத்தார். அவர் கட்டிக்காத்த இயக்கம் இது. இப்போது ஒற்றை தலைமை வேண்டும் என்று சொல்வது ஏன்? என்று எங்களுக்கு புரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. அதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இன்றி வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கட்சியின் சட்ட விதிகளை திருத்தி ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செயற்குழு, பொதுக்குழுவை சேர்ந்த 2,441 பேரின் ஆதரவுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என 2,441 பேரும் தனித்தனியே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக ஜெயக்குமார் பேட்டி
- 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என்கிறார்.
சென்னை:
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினடையே பிளவு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இன்றைய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தலைமை நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும், 75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டதாகவும் கூறினார்.
'அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்தவர் ஓபிஎஸ். துரோகத்தின் அடையாளம் ஒ.பி.எஸ். எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்டமாட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார். 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்' என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
சட்ட ரீதியாக இந்த கூட்டம் நடைபெற்றது என்றும், கூட்டத்தை கூட்ட தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் உள்ளது என்றும் பொன்னையன் கூறினார்.
- அதிமுக தலைமை அலுவலகத்தில் 75 தலைமை நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
- பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
சென்னை:
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர்சல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினடையே பிளவு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. இன்றைய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், 75 தலைமை நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின் முடிவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, புதிய பொருளாளராக கே.பி.முனுசாமி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்